Home » Articles » தன்னம்பிக்கை வளர தாய்மொழி

 
தன்னம்பிக்கை வளர தாய்மொழி


கோ.பெ. நா.
Author:

ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் பலவும் தமிழ்மொழியைச் சீரழிக்கின்றன. தொடங்கும்போதே பல தனியார் ஊடகங்கள், குட்மார்னிங், ஆல்தி பெஸ்ட், ஓ.கே. என பூபாளம்  பாடுகின்றன.

சில ஊடகங்களில் ஒரு மணி நேரத்தில் நூறு சொற்கள் மொழியில் கலப்படம் செய்து பேசப்படுகின்றன.  அவை மட்டுமல்ல, சில அறிவாளிகளும் கூட தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசினால்தான், ஆங்கிலம் கற்க முடியும் என்கிறார்கள்.

ஆங்கிலம் கற்க வேண்டிய மொழிதான். இன்னும் திறமையை ஒட்ட எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்கலாம்.  ஆனால் தொடக்க நிலையில் தாய்மொழிவழிக் கல்விதான்.  அதன்பின் ஆங்கிலத்தை ஆங்கிலமாகக் கற்க வேண்டும். தமிழைத் தமிழாகக் கற்க வேண்டும். மொழிக கற்க, அதனதன் இயல்புக்கேற்ப,கற்கும் முறைகள் உண்டு.  கலப்படம் செய்து கற்பது வழியாகாது. தமிழ் வாக்கிய அமைப்புமுறை வேறு. ஆங்கில (இந்தோ ஆரிய )  மொழியின் வாக்கிய அமைப்பு முறை வேறு. தமிழ் வாக்கிய அமைப்பில் ஆங்கிலம் கலந்து பேசுவது  கேலிக்கூத்தாகிவிடும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் வடமொழி சரிக்குச்சரியாக கலக்கப்பட்டு மணிப்பிரவாளம் பேசுவது நாகரிகம் எனக் கருதப்பட்டது.  ‘வேட்டி’ என்ற தமிழ்ச்சொல்லை ‘வேஷ்டி’ என்பது நாகரிகம் என்று கருதினர். முட்டி என்பதை முஷ்டி என்றனர். இன்று மொழியில் வடமொழிக் கலப்பு விலகி ஆங்கிலம் குடியேறிக்கொண்டது.

மூவாயிரம் ஆண்டுகட்குமுன் செம்மைப் படுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியாம் தமிழ், இன்று அரசினரால் செம்மொழி அங்கீகாரம் பெற்றுவிட்டது. அப்படி அங்கீகாரம் பெற மொழிக்கலப்பின்றி இயங்குதலும் ஒரு விதி.

அந்த விதியையே சிதைக்கும் வகையில், தமிழைச் சீரழித்தால் எதிர்காலத் தலைமுறையினர் தமிழ்மொழிமீது நம்பிக்கை இழப்பர்.

ஏழு மொழிகளைக் கற்ற பாரதி, ‘என் தந்தை என்னை ஆங்கிலக் கல்விக்கு அனுப்பியதால் ஆயிரக்கணக்கில் அவருக்குப் பணம் செலவானதுதான் மிச்சம்.  எனக்குப் பயனில்லை’ என்கிறார். அவர் கோயிலில் ஒளிந்து கண்டு கற்ற தமிழே உதவியது.

‘ஊமையராய் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற்கேளீர்
சேம்முற வேண்டுமெனில் தெருவெல்லாம
தமிழ்முழக்கம் செழிக்கச் செல்வீர்!

என்று கூறி தெருவெல்லாம் தமிழ்வழிப் பள்ளிகளை விரும்பினார்.

இன்றைய நிலை?

காந்தியடிகள் தம் தன் வரஆலாற்றைத் தன்  தாய்மொழியாகிய குஜராத்தியில் எழுதினார்.  அவரை ஒரு நண்பர் ஆங்கில நாட்டில் படித்து ஆங்கிலம் அறிந்த தாங்கள், ஏன் குஜராத்தியில்  எழுதினீர்கள்?’ என்று கேட்டார்.  அதற்கு அடிகளார், “நான் என் தாய்மொழியில்  சிந்திக்கும்போதுதான், முழுமையாக உணர்ந்து எழுத முடிகிறது.  நான் எதை எழுதினாலும் தாய்மொழியில் சிந்தித பின்னரே இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் எழுதுகிறேன்”

நமது முன்னாள் தலைமை அமைச்சர் நேரு அவர்களும், தம் மகளுக்கு எழுதும்போதும் இதையே கூறுகிறார்.

மெக்காலே கல்விக் கொள்கையை ஆங்கிலேயர், நடைமுறைப் படுத்தும் முன் பள்ளியில் ஆங்கிலம், அத்துடன் வடமொழியை இந்தியா முழுதும் கற்பிக்கலாம் என சில அறிஞர்கள் பரிந்துரை செய்தபோது, சென்னைப் பல்கலைக்ககச் சார்பில் பரிதிமாற் கலைஞர, ஆங்கிலத்துடன் அவரவர் தாய்மொழியையே கற்பிக்க வேண்டும், என்று தில்லிக்கு எழுதினார்.  காரணம் தாய் மொழி வழியாகத்தான் அறிவு கிடைக்கும் என்று கருதியதால்தான். இது அன்றை ஆங்கிலேயே வைசிராயால் ஏற்கப்பட்டதும் ஒரு சிறப்பாகும்.

வடலூர் வள்ளலார் அன்றைய காஞ்சி சங்கராச்சாரியாரிடம் வாதிட்டதும், விவேகானந்தர் கடிதங்கள் உரைப்பனவும் தாய்மொழிவழிக் கல்வியே.  மறைமலையடிகளாரும், தமிழ்த் தென்றல் திரு. வி. கவும், இன்னும் பல அயல்நாட்டு அறிஞர்களும் இளமையில் தாய்மொழி கற்பதுதான் அறிவு பரவலாகச் செய்யும் என்று கூறுகின்றனர்.

‘செந்தமிழே உயிரே நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!’

எனும்பாவேந்தர் பாடல் தமிழையே மூச்சுக் காற்று என்கிறது.

‘தமிழை என் உயிர் என்பேன் கண்டீர்’
‘தமிழ் எங்கள் உயிர் என்பதாலே!’

என்பார் பாவேந்தர்.

அதாவது தாய் மட்டுமே அன்பும் ஆருயிரையும் தருபவள்.  தாய் மட்டுமே சுவாசக் காற்றை நமக்கு அளித்தவள். பக்கத்து வீட்டுக்காரி நல்லவள்தான்!  அவளை ‘ஆருயிரே’ என்பது எத்தனை இழிவு.

குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர தாய்மொழிவழி கற்றல் வேண்டும். எந்த மொழியையும் கற்கலாம். அந்தந்த வயதில், அதற்குரிய பாட முறையில் (உளவியல் முறையில்) கற்க வேண்டும்.

இத்தாலி, பிரான்சு உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் தாய்மொழிவழிக் கல்வியே முதன்மை. ஆங்கிலமல்ல.  எல்லா பாடங்களையும் தாய்மொழிவழி  அளித்துக் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர உதவுங்கள். நாடு எல்லாத்துறைகளிலும் வளரும் !  மக்கள் உயர்வார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்