Home » Articles » உறவுகள்… உணர்வுகள் …

 
உறவுகள்… உணர்வுகள் …


செலின் சி.ஆர்
Author:

தொடர்
சி.ஆர். செலின்
மனநல ஆலோசகர், சென்னை.

ஹலோ சார், எப்படியிருக்கீங்க…?

” ம் ஏதோ இருக்கேங்க…”

” வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?”

” ஏதோ போயிட்டுருக்கு …”

‘ ஏதோ இருக்கேன், ஏதோ போயிட்டிருக்கு, பிரமாதமா ஒன்னுமில்லேங்க’ என்ற பதில்களைத்தான் பெரும்பாலும் எதிர்நோக்கியிருப்போம். எந்த ஒரு விஷயத்திலும் திருப்தியில்லாமல் எப்போதும் ஒருவித அதிருப்தியுடனிருக்கும் மனநிலையைத்தான் இத்தகைய பதில்கள் பிரதிபலிக்கின்றன.

” உண்மையைத்தானேங்க சொல்கிறோம். தேவையான வசதிகளோட இருந்திட்டா நாங்க ஏன் இப்படி பதில் சொல்லப்போறோம். மனசிலிருக்கிற குறைகள்தானே வார்த்தையா வெளிவருது… ” – இது உங்கள் பதிலா?

அப்படியென்றால், தேவையான என்ற வார்த்தைக்கு என்ன அளவு, எது என்பதையும் கொஞ்சம் வரையறுத்து சொல்லப்போறோம். மனசிலிருக்கிற குறைகள்தானே வார்த்தையா வெளிவருது… ” இது உங்கள் பதிலா?

அப்படியென்றால், தேவையான என்ற வார்த்தைக்கு என்ன அறிவு, எது என்பதையும் கொஞ்சம் வரையறுத்து சொல்லுங்களேன். நீங்கள் எவ்வளவு யோசித்தாலும் அந்த வார்த்தையின் எல்லையை வரையறுக்க முடியாது. அப்படியே ஒரு பதிலைத் தீர்மானித்து கூறி விட்டாலும், அது எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்கும் என உறுதியளிக்க முடியாது.

காரணம் தேவைகள் என்பது எப்போதும் ஒரே மாதிரியாக நிலைத்து நிற்கும் விஷயமல்ல. இன்றைக்கு உங்களுக்கு அதிமுக்கியமாகத்தோன்றும் விஷயம் நாளைக்கே எதற்கும் பிரயோஜனமில்லையென்றும் நீங்கள் நினைக்கும் விஷயம் சில காலம் கழித்து அத்தியாவசிய மானதாக மிக மிக முக்கியமான ஒன்றாகி விடலாம்.

தேவை என்பது காலத்தையும், சூழலையும், சுற்றியிருக்கும் உறவுகளையும் பொறுத்து அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும். ஆறு ஓரிடத்தில் நிற்காமல் அசுர வேகத்தில் பாய்ந்து கொண்டேயிருப்பதால் ஒரு நொடி நாம் பார்த்த நீரை அடுத்த கணம் பார்க்க முடியாது. அப்படித் தான் தேவைகளும் சதா மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், ‘ திருப்தி ‘ என்பது நிரந்தரமாக நம் மனதில் குடிகொண்டிருக்க வேண்டிய அடிப்படை ஆதார சுருதி. கணத்திற்கு கணம் மாறிக் கொண்டேயிருக்கும் ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து நிரந்தரமான குண நலனை உருவாக்கி உள்வாங்கிக் கொள்ளுதல் என்பது எப்படி சாத்தியமாகும்…?

” எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு முடிக்கிறதுக்கு ஒரு வழி கிடைச்சா போதுங்க. அதுக்கப்புறம் அந்தப் படிப்பு சோறு போடும்…” மனத்திற்குள் பொங்கிக் கொண்டிருக்கும் வேதனையும் வலியும் முகத்தில் தெரிய சோகம் வழியும் கண்களோடு நின்று கொண்டிருந்தண அதே இளைஞன், ” படிச்சு முடிச்சு ரெண்டு வருஷமாச்சு சார், இன்னும் ஒரு நல்ல வேலை கிடைக்க மாட்டேங்குது. என்ன செய்றது, எல்லாம் தலையெழுத்து, இன்னும் எத்தனை நாள் இப்படி நாயா பேயா இந்த பிளாஸ்டிக் பொருள்களைத் தூக்கிட்டு அலையணுமோ, தெரியலே….”

ஓரிரு வருடங்கள் கழித்து அதே இளைஞனைக் கடைத்தெருவில் பார்க்கும் போது ” என்சார் வாழ்க்கை இது. ஆபிசுக்கு போனோமா வந்தோமான்னு ஒரு ஜீவனே இல்லாம லைப் ஓடுது. பொறந்தா சம்பளப் பணத்தைக் கண்ணால பார்க்கறதோட சரி. அடுத்த செகண்டை பால்காரி, மளிகை, வாடகைன்னு பணம் பஞ்சாப்பறந்துடறது. நடுத்தர வர்க்கத்திலே பொறந்துட்டாலே இப்படித்தான் காலம் தள்ளனும்ங்கறது விதி. அனுபவிச்சுத்தானே ஆகணும்…” அதை விரக்தியுடன் பேசுவான்.

பத்து இருபது வருடங்கள் கழித்து ஒரு வேளை அவன் பெரிய பணக்காரனாகி விடுகிறான் என வைத்துக் கொள்வோம். ( அப்படி ஆவதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் ஒரு வேளை என்ற வார்த்தை ஏன் ஆகமுடியாது என அடித்துச் சொல்கிறேன் என்ற காரணத்தைப் பிறகு சொல்கிறேன். ) அப்போதுமட்டும் முழு திருப்தியோடு இருக்கப்போகிறானா என்ன?

‘ காசு பணம் இருந்து என்ன சார் பிரயோ ஜனம்? வாழ்க்கைல நிம்மதியும் சந்தோஷமும் தானே ரொம்ப முக்கியம். வேணுங்கற அளவுக்கு பணம் இருக்கு. ஆனா மனசுக்குப் புடிச்சதை சாப்பிட முடியுதா? நமக்குன்னு நேரம் ஒதுக்கி ரிலாக்ஸ்டா இருக்க முடியுதா? உடம்புக்கு இது வந்துருமோ, அது வந்துருமோ, பார்த்து பார்த்து சாப்பிட வேண்டியிருக்கு. எப்பப்பார்த்தாலும் வேலை வேலைன்னு அபிசுக்கும், பேக்டரிக்குமா அலைய வேண்டியிருக்கு. என்ன பொழைப்பு சார் இது? கூலி வேலை பார்க்கவன் நிம்மதியா மனசுக்குப் புடிச்சா மாதிரி ஒரு கவலையுமில்லாம வாழ்ந்துட்டு இருக்கான்.

இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த அதே விரக்தியும், நிம்மதியின்னமையும் வார்த்தைகளில் தொனிக்கும்.

இதுபோல் எவ்வளவோ மனிதர்களை சந்தித்திருப்போம். ஏன் பெரும்பாலான சமயங்களில் நாமே இப்படி யாரிடமாவது நம் ஆதங்கத்தை வெளியிட்டிருப்போம். உங்களுக்குத் தெரிந்த பத்து நண்பர்களின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதுங்கள். அவற்றில் எத்தனை பேர் உங்களிடம் அதிருப்தியான ஸ்டேட்மென்ட்டைக் கூறியிருக்கிறார்கள் என்பதை டிக் செய்து கொள்ளுங்கள்.

ஒரே ஒரு முறைதான் இப்படி பேசியிருக்கிறார் என்றா டிக்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அடிக்கடி இத்தகைய மனநிலைக்கு உள்ளாகிறவர்களின் பெயருக்கருகில் பெருக்கல் குறி ( X ) போட்டுக் கொள்ளுங்கள். இதே போல் உங்கள் பெயரையும் எழுதி, அருகில் mark செய்து கொள்ளுங்கள். எல்லாம் குறித்து முடித்தவுடன் பேப்பரைப் பாருங்கள். நிச்சயம் தலை சுற்றும். எல்லாருடைய பெயருக்கு நேராகவும் X mark இருக்கும். அட்லீஸ்ட், டிக்காவது இடம்பெற்றிருக்கும். பதினொரு பெயர்களில் ஒருவருடைய பெயராவது இக்குறியீடுகளின்றி காலியாக இருந்தால் அது அதிசயம்தான்.

‘ அதிருப்தி ‘ என்பது எவ்வளவு பொதுவான மனநிலையாகி விட்டது. சர்வ சாதாரணமான விஷயமாக மலிந்து போய் விட்டது என்பதை இந்தப் பயிற்சியின் முடிவில் உணர்ந்து கொள்வீர்கள். சொல்லப்போனால் அப்படி இருப்பதுதான் மிகவும் natural ஆன விஷயம் என்ற முடிவுக்குப் பலர் வந்துவிட்டார்கள். இந்த ‘ அதிருப்தி ‘ மனநிலை ஏன் உருவாகிறது? எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மனதை ஆட்கொள்கிறது… ?

குழந்தைப் பருவத்திலயே இப்பிரச்சனை துவங்கிவிடுகிறது. சதா சர்வகணமும் சிரித்துக் கொண்டு, வெள்ளை உள்ளத்துடன் எவ்வித பாரங்களுமின்றி, லேசான மனதோடு துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மனதில் அதிருப்தையை விதைத்து அப்படியொரு விஷயத்தையே அறிமுக்படுத்தி வைப்பது பெரியவர்கள்தான்.

பக்கத்துவீட்டு ஷ்யாமைப் பாரு, செகன்ட் ரேங்க் வாங்கியிருக்கிறான். நீ இன்னும் பத்துலேயே இரு. ஏதாவது வேண்டுதலா? பத்தை விட்டு தாண்டக்கூடாதுன்னு. அடுத்த மிட்டெர்ம்ல அவனுக்கு equal ஆ மார்க் வாங்காம அவன் வீட்டுக்கு போகக்கூடாது புரியுதா…?

அடுத்த வீட்டுப் பையனுடன் ஒப்பிட்டு பேசி தான் வாங்கியிருக்கும் பத்தாவது ரேங்க் குறித்த சந்தோஷத்துடனிருக்கும் குழந்தையின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் சுத்தமாய் துடைத்துவிட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் ‘ அதிருப்தி ‘ என்ற கல்லைத் தூங்கி வைத்து விடுவோம்.

பத்தாவது ரேங்க் வேஸ்ட், இரண்டாவது இடத்திற்கு வா என்று சாட்டையை விளாசிக் கொண்டேயிருப்போம். பெரும்பாலும் பள்ளிக்குச் செல்லும் காலகட்டத் தில்தான் அதாவது ஒன்றாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு படிக்கும் 5 – 6 வயதில்தான் ‘ அதிருப்தி ‘ என்ற உணர்வைக் கழந்தைகள் முதன்முதலாக உணர ஆரம்பிக்கிறார்கள்.

அப்போது சுமத்தப்படும் இந்த உணர்வு வளர்ந்து வளர்ந்து நாளாவட்டத்தில் யார் உதவியின்றி தனக்குத்தானே அதிருப்திபட்டுக் கொள்ளுமளவிற்கு உருவாகி, பிறகு அத்தியாவசியான குணநலன்களுள் ஒன்று என்பது போல இதுவும் இரத்தத்தோடு கலந்த இயல்பான குணமாக மனதிற்குள் தேங்கி விடுகிறது. இயல்பாடு இரண்டறக் கலந்து விடுகிறது.

அதன் விளைவுதான், இப்போது பேப்பரும் கையுமாய் உட்கார்ந்திருக்கும் நீங்கள், ‘ என்ன இது, ஒருத்தர்கூட விதிவிலக்கா இல்லையே…’ என்று குழம்பிக் கொண்டிருப்பது.

‘ சரி, பெற்றோர் மூலமாகவோ, உறவினர்களின் புண்ணியத்தாலோ இப்படியொரு மனநிலைக்கு முழுமையாக ஆட்பட்டுவிட்டோம். இதனால் அப்படியென்ன பெரிய பிரச்சனை வந்து தலை மூழ்கிவிடப்போகிறது? அதிருப்தி மனநிலைக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? போனால் போகட்டும். அதுவும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து விட்டு போகட்டுமே… ‘ என்று நீங்கள் யோசிக்கலாம்.

‘ அதிருப்பதி ‘ மனநிலையின் பிரத்யேக குணமே இதுதான். கோபப்படுவது தப்பு, அடி உதை என்று மற்ற எதிர்மறையான குணங்களெல்லாம் கெடுதலில் முடிபவைதான் என்று அடித்துச் சொல்ல முடியும். அதனால் அத்தகைய விஷயங்களைப் பற்றி அதீத கவனத்துடனிருப்போம். அதுபோன்ற சூழலுக்குள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கையுடனிருப்போம். ஆனால், இந்த ‘ அதிருப்தி ‘ விஷயத்தில் மட்டும் இப்படி எந்தவொரு முடிவுக்கும் சட்டெனவந்து விட முடியாது.

‘ ப்ச் ‘ வாழ்க்கைன்னா கவலைகள் சகஜம்தான். எல்லாரும் சந்தோஷமா இருக்க முடியாது. அதைப் பகிர்ந்துக்கறதுல என்ன தப்பு இருக்கு. நான் நல்லா இல்ல ஆனா, நான் சந்தோஷமாயிருக்கேன்னு சிரிச்சு போலியா நடிக்க முடியுமா என்ன? உண்மையைத்தானே சொல்கிறேன்… ‘ என நமக்கு ‘ நாமே சமாதானமாகிக் கொள்வோம். ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழம்புவோம்.

ஆனால், ‘ அதிருப்ருதி ‘ மனநிலை என்ற இந்த மிகநுட்பமான விஷயம்தான் மரத்தை செல்லரிப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதை அரித்து உள்ளே ஊடுருவி, தவிர்க்க வேண்டிய குணங்கள் என்று நாம் கருதும், ஏற்றுக்கொள்ளும் கோபம், அடி உதை, பொறாமை, திருட்டு போன்ற சகல குணங்களுக்கம் ஆதார காரணமாகி விடுகிறது.

ஒருவன் முரடனாயிருக்கிறானா, திருடுகிறானா, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறானா, குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்றி தவிக்கிறானா… அவன் மனதை போஸ்ட்மார்ட்டம் செய்து அலசி ஆராய்ந்து பாருங்கள்… அனைத்திற்கும் அடிப்படை ‘ அதிருப்தி ‘ யாகத் தானிருக்கும். எப்படி?

(அடுத்த இதழில் பார்ப்போம்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்