Home » Articles » தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….

 
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….


விஜயராகவன்
Author:

பேராசிரியர் ஆர். விஜயராகவன்

வேளாண்மை – வானத்தை நம்பி, பூமியை வணங்கி உழுது வருவது மட்டுமல்ல நண்பர்களை..

உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்திலுள்ள பத்துப்பேர் – இவர்களின் அனுபவப்பூர்வமான சிந்தனையையே நம்பி, கிராம ஒற்றுமை எனும் மூலதனத்தைப் போட்டு, வளர்த்து வருகின்ற மேலான தொழில் வேளாண்மை. தமிழ்ப் புத்தாண்டில் இதுகுறித்த சிந்தனைக்கு ஆழமாக அடித்தளம் போடுவது நமது தலையாய கடமை.

பல்வேறு பண்ணை உத்திகள் – விதைப்பது முதல் அறுவடை வரை – பலருடைய ஒட்டுமொத்தமான உழைப்பு ஒரே நேரத்தில் தேவைப்படுகின்றது. இதுவே இன்றைய கிராமங்களில் தங்கியிருக்கிற ஒற்றுமை எனும் மூலதனத்திற்கு வித்து, இந்த அடிப்படைச் சிந்தனை நம்மிடையே கருக்கொள்ள வேண்டும்.

பெருகிவருகின்ற நகர வாழ்வின் புரியாத நெரிசலில், குறுகி வருகின்ற சார்பற்ற வாழ்க்கை முறை தனிமனிதனுக்கும் ஒவ்வாது, கூட்டுச் சமுதாய வளர்ச்சிக்கும் பெரிய தடை.

அறிவியல் வேளாண்மையில் உங்களுக்கு ஒரு புது நுணுக்கம் தெரிந்தால் பலருக்கும் கூறுங்கள். நீங்கள் எடுத்துக்கூறி, அதனால் ஒருவரைடைய விளைச்சல் ஒரு பங்கேனும் அதிகமானால் உங்களுக்கும் பெருமையன்றோ! நமக்குத்தெரிந்த நல்ல செய்திகளைப் பிறரோடு பங்கிட்டுக் கொள்கின்ற பரந்த சிந்தனையை வளர்த்துக் கொள்வோம்!

இணைத்தொழில்கள்

சோர்ந்து போயிருக்கின்ற மானாவாரி உழவர்களின் உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றினைப் பெருக்க வேண்டும் என்பதுவே தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது சிந்தனையாக அமைய வேண்டும்.

பயிர்த்தொழிலை மட்டுமே நம்பியிராமல், சார்புடைய இணைத்தொழில்களிலும், நமது சிந்தனையைப் பிசகாமல் செலுத்த வேண்டும். இணைத்தொழில்களாக பால்பண்ணை, ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு, பன்றி, முயல்,வாத்து, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பட்டுபூச்சி வளர்த்தல் – என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

சூழ்நிலையையும், வாய்ப்புக்களையும் முதலீட்டு வசதிகளையும் சிந்தனையில் தேக்கி, ஒன்றிரண்டு இணைத் தொழில்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

வறட்சியில் பயிர்த்தொழில் வெற்றிகரமாக அமையாதபோது இணைத் தொழில்கள் கை கொடுக்கும் அல்லவா? அதிக பால் உற்பத்தித் திறன் கொண்ட பசுக்களையும், ஆடுகளையுமே தெரிந்து, தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவையான வைக்கோல் மற்றும் பசும்புல் – பண்ணை நிலத்திலிருந்தே பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

பால் விற்பனை தற்போது சிறுசிறு கிராமங்களில் கூட லாபகரமாகச் செயல்படுவது நீங்கள் அறியாத புதிரல்ல. வெள்ளையார்க்சையர் போன்ற சீமை வெண் பன்றிகள் வளர்க்க உகந்தவை. வாத்துக்களை இறைச்சிக்காவும், முட்டை உற்பத்திக்காகவும் வளர்க்கலாம். குறைந்த செலவில் தேனீப்பெட்டிகள் அமைத்து தேனீக்களை வளர்த்துப் பயன்பெற வேண்டும்.

மண்வளமும், மனவளமும்

மண்வளத்தையும் உழுபவனின் மனவளத்தையும் பெருக்குவதே 21-ம் நூற்றாண்டின் இனிய சிந்தனைப் பெட்டகமாக அமைய வேண்டும். மனம் உரமோடு அமைய வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. மண் உரமோடு இருக்க வேண்டும் என்பது இந்நாள் தேவை.

உரமூட்டி வளர்க்கின்ற பயிரும், உரமேற்றி மணிச்சத்து, சாம்பல்சத்து உரிய அளவு தேவைப்படுவதைப் போன்றே, மனதின் வளமைக்குப் பெற்றோர்கள், அசிரியர்கள், நண்பர்கள் பெருமளவில் அவசியப்படுவர்.

இரசாயன உரங்கள், தமிழக மண்ணிலே முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வேளாண் குடிமக்கள் ”வேண்டாம்” என்று அடம்பிடித்தது வரலாற்று உண்மை.

அந்த சூழ்நிலையில், விரிவாக்கப் பணியாளர்கள் உழவர்களுக்கு உணரவைக்கும் உயர்ந்த நோக்கத்துடனும், தங்கள் குறியீடுகளை எட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துடனும், விவசாயிகளின் தோட்டங்களில், உரங்களைக் கொட்டிவிட்டு வந்தனர். மண்ணின் செழுமையை மாந்தருக்கு உணர்த்த வேண்டுமல்லவா!

பதினாறும் பெற்று…

மண்ணின் வளமைக்கு, கார்பன் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீஷியம், கந்தகம், இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு, மாலிப்டினம், குளோரின் எனப்படும் பதினாறு வகை மூலங்கள் தேவைப்படுகின்றன. மனித வாழ்க்கையின் மாண்பிற்கும் பதினாறு பேறுகள் தேவை. என்னே ஒற்றுமை!

பயிருக்குத் தேவையான இம்முலகங்கள் மண்ணில் தேவையான அளவு இருப்பதில்லை. எனவே, உரங்கள் மூலமாகப் பயிர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். சத்துகள் நிலத்தில் இருந்தால் மட்டும் போதாது. அவை பயிர்களினால் எடுக்கப்படும் தன்மையிலும், நிலையிலும் இருக்க வேண்டும்.

அதிக விளைச்சல் தரும் இரகங்கள் (சாதாரண இரகங்களைவிட) மண்ணிலுள்ள சத்துப்பொருள்களை அதிகமாகக் கிரகித்துக் கொள்கின்றன. அதனால்தான் அவை அதிக விளைச்சலைக் கொடுக்கின்றன. எனவேதான், அதிகமான ஊட்டச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் வித்து இரகங்கள் அதிக உற்பத்தித் திறனுடையனவாக விளங்குகின்றன.

அளவுக்கு மிஞ்சினால்…

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! தழைச்சத்து தேவையான அளவை விட அதிகமானால் பயிருக்குப் பல தீங்குகள் நேரும். தாயின் அன்பும் அளவுக்கு அதிகமானால் ( செல்லம் ) பிள்ளைக்குப் பல தீங்குகள். பயிரின் தழைவளர்ச்சி அதிகமாகி சாய்ந்து விடும். பிள்ளையின் தலைக்கனம் பெருகிக் காய்ந்து விடுவான். பயிர், பூச்சி நோய்களுக்கு எளிதாக இலக்காகும். பிள்ளை கெட்ட பழக்கங்களுக்கு எளிதில் இலக்காவான்.

மண்ணில்…

உயிரணுச் சுவர்கள் தோன்றுவதற்குத் தேவை – சுண்ணாம்புச் சத்து.

பச்சையங்கள், புரதப்பொருட்களின் உற்பத்திக்கு கந்தகம் தேவை.

ஸ்டார்ச் உற்பத்திக்குக் கிரியா ஊக்கியாகவும்,

ஒளிச்சேர்க்கைக்கும் தேவைப்படுவது – சாம்பல் சத்து.

தாவர உயிரணுக்கள் சுவாசிப்பதற்கு ” இரும்பு ” அவசியம் தேவை.

மாந்தரில்…

நல்ல புத்தகங்கள் – நல்ல உள்ளங்களை உருவாக்கும்

நல்ல உணவுமுறை – உடலை உறுதிப்படுத்தும்

நல்ல அனுபவங்கள் – உள்ளத்தை உறுதியாக்கும

நல்ல நண்பர்கள் – வாழ்க்கையின் கிரியா ஊக்கிகள்.

பரிசோதனை…

மண்ணைப் பரிசோதனை செய்வதால், நிலத்தின் களர், உவர் மற்றும் அமில நிலையை அறிந்து கொள்ளலாம். அதற்கேற்றவாறு, சீர்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தி, நிலத்தில் உயர்விளைச்சல் பெறும் சிந்தனையை வளர்க்க வேண்டும்.

மனதைப் பரிசீலிப்பதால், மனதில் இருள்பகுதி, வஞ்சகம், கேடு முதிலயவை அகற்றலாம். மண்ணைப் பரிசோதிப்போர் விஞ்ஞானிகள், மனதைச் சீர்படுத்துவோர் மெய்ஞானிகள்!

மண்ணில் களைகள் தேவையற்ற இடத்தில் உதிப்பன. இவை இயற்கையிலேயே பயிரைவிட வேகமாக வளர்கின்றன. களைகள், பயிருடன் போட்டியிடும் சூழ்நிலையில் இருப்பதால் அவை ஏராளமான விதைகளை உற்பத்தி செய்து, தம் இனம் அழியாமல் காத்துக்கொள்கின்றன.

உதாரணமாக, நெல், சோளம் போன்ற பயிர்களில் செடி ஒன்றுக்கு சில நூறு விதைகளே உற்பத்தியாகின்றன. ஆனால், இவற்றுடன் வளரும் களைகள் ஒவ்வொன்றும் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்கின்றன.

மூக்கின் மேல் விரல் வைக்காதீர்கள்! ஒரு பருத்திச் செடிக்கு விடும் இடைவெளியில் சுமார் 100 முதல் 400 வரை களைகள் முளைத்து விடுகின்றன. இவை பயிருக்கு இடப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்து அகியவற்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு சத்துக்களை தம்முடைய வளர்ச்சிக்கு எடுத்துக்கொண்டு, பயிரின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கின்றன.

மனித மனதிலும் களைகள் தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். அவை நம்முடைய நல்ல பண்புகளுக்கு எதிரி. நமக்கு மட்டுமின்றி, நமது பெற்றொர்களுக்கும் அவப்பெயரைத் தேடித் தந்துவிடும். அதனால், மனதிலுள்ள களைகளை வேருடன் அழித்துவிட வேண்டும். வழிமுறை களுக்கெல்லாம் வள்ளுவத்தை நாடலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்