– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
கனவுகள் மிகவும் ஆற்றல் மிக்கவை. உங்களின் ஆழ்மனதில் நிழலாடும் காட்சிகள் கனவுகளாகின்றன. மேலும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மனதில் வெள்ளோட்டம் பார்க்க வெண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு உங்கள் தொழில் வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும் என்றும், சமுதாய சேவையில் நீங்கள் என்னென்ன சாதித்து இருக்க வேண்டும் எனவும் உங்கள் மனதில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு எண்ணிப் பார்த்து, மனக்காட்சிகளை வரைய வேண்டும். இவ்வாறு மனச்சாட்சிகளை வரையும் போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உங்கள் இலட்சியக் கனவுகள் பதிவாகின்றன. பின்னர், அப்பதிவுகளே உங்களை இயக்கும் ஆற்றலாகவும் மாறிவிடுகிறது.
இவ்வாறு உள்ளத்தில், ஆற்றலும் இலட்சிய வேட்கையும் ஊற்றெடுத்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு வாழ்வில் சலிப்புத் தோன்றாது. அத்தோடு மனச்சோர்வோ, மனத் தளர்வோ ஏற்படாது. முகத்தில் மலர்ச்சியும், செயலில் உத்வேகமும், சொல்லில் தெளிவும் தோன்றிவிட்டால் உங்கள் செயலில் வெற்றி மலர்ந்து விடும்.
இலட்சியப் பிடிப்பு
அவ்வாறு எண்ணிப் பார்க்கும்போது மனதில் தோன்றும் நிகழ்வுகள் முழுமையாகத் தெரிகின்றனவா அல்லது தெளிவில்லாமல் தெரிகின்றனவா என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
தெளிவாகத் தெரிந்தால், உங்கள் மனம் தெளிந்த நீரோடையாகவும், உங்கள் இலட்சியத்தில் நீங்கள் உறுதியாகவும் இருக்கிறீர்கள் என்று பொருள்.
மனக்காட்சிகள் தெளிவில்லாமல் இருந்தால், உங்கள் சிந்தனைகள் தெளிவாக இல்லை எனவும் உங்களுக்கு இலட்சியப் பிடிப்பு குறைவாகவே உள்ளது எனவும் பொருள்.
மேலும் உங்கள் மனக்காட்சிகளே பின்னாளில் உண்மை நிகழ்வுகளாக நடந்தேறுகின்றன என மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, உயர்ந்த இலட்சியத்தைக் கனவுகளாக காணுங்கள்.
இலட்சியக் கனவுகள்
உங்கள் கனவுகள் பகற்கனவுகளாவே உள்ளனவா அல்லது இலட்சியக் கனவுகளாக மாறுகின்றனவா? என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதை உணர்வது மிகவும் எளிது, அதாவது செயலோடு இணைக்கப்பட்ட கனவுகள் இலட்சியக் கனவுகள், அவ்வாறு செயலோடு இணைக்கப்படாத கனவுகள் பகற்கனவுகள்.
உங்கள் கனவுகளை நோக்கி நீங்கள் செயல் ரீதியாக பயணப் படத் தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ” நீங்கள் தொழிலதிபராக உயர்ந்திருக்கிறீர்கள் எனவும், உங்கள் கம்பெனியின் வியாபாரம் ரூபாய் நூறு கோடியை எட்டியுள்ளது எனவும், நீங்கள் கம்யூட்டருக்குத் தேவையான உபரி பாகங்களைத் தாயாரிப்பதாகவும் கனவு காண்கிறீர்கள்” என்றால் வெறும் கணவோடு நின்று கொண்டால் அது பகற்கனவு. இதையே செயலோடு இணைந்தால் அது இலட்சியக் கனவாகிறது.
செயலொடு இணையுங்கள்
ஒரு கனவை செயலோடு இணைப்பதுதான் மிகவும் முக்கியம். அதற்காக, உங்கள் கனவுகளை ஒரு வெள்ளைத்தாளில் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுங்கள். பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றாக எடுத்து அதன் குறை நிறைகளை ஆய்வு செய்து தீர்க்கமான செயல் திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்யுங்கள்.
உங்கள் கனவை நனவாக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவையும் கணக்கில் கொள்ளுங்கள். மேலும், அந்தக் கால அளவை மாதங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்ய வேண்டிய பணிகளையும், நீங்கள் அடைய வேண்டிய நிலையையும் பட்டியலிடுங்கள். அதன் பிறகு ஒவ்வொரு மாத்த்தின் பணிகளையும் எடுத்துக்கொண்டு, அதை வாரப் பணிகளாகவும், தினப்பனிகளாவும் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளையும் உங்கள் இலட்சியத்தை நோக்கி நீங்கள் முன்னேற வேண்டிய அளவையும் பட்டியலாக தாயாரித்துக் கொள்ளுங்கள்.
நிமிட வாரியாக செயல் திட்டம்
இவ்வாறு நிமிட வாரியாக செயல் திட்டம் இருக்கும்போது உங்களுக்கு சோர்வு ஏற்படாது, பெரும் தூக்கம் உங்களை நெருங்காது, உங்கள் மனம் விழிப்புணர்வோடு செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
உங்களின் வெளிமனம் சோர்வடைந்தாலும் உங்களின் ஆழ்மனம் சோர்வடையாது. அது வெளிமனத்தை இயக்கிக் கொண்டே இருக்கும். அப்பொழுது உங்களின் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் உங்கள் இலட்சியத்தோடு கலந்துவிடும்.
அவ்வாறு மூச்சும், பேச்சும், செயலும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டபின் நீங்கள் வெற்றி பெறுவது உறுதியாக விட்டது.
இவ்வாறு திட்டமிட்டு செயல்படும்போது உங்கள் கனவு மெய்ப்படுகிறது, கவலைகள் பறந்து விடுகிறது. மனதில் இலட்சியச் சுடர் எந்நேரமும் எரிந்து கொண்டே இருக்கும்.
இலட்சியச் சுடரை அணையாமல் காப்பதற்கு புதிய புதிய கருத்துக்களையும் செயல் உத்திகளையும் மனதில் சேகரியுங்கள்.
வெற்றியின் திசை
உங்களின் ஒவ்வொரு செயலும் வெற்றியின் திசையை நோக்கி, இலட்சியப் பாதையில் முன்னேறிச் செல்வதால் மனதில் தன்னம்பிக்கை நிரந்தரமாக பரவி விடுகிறது.
உங்களின் சொல்லும் செயலும் இணைந்து சாதனை படைக்கத் தொடங்கி விடுகிறது. ஒருவருடைய சொல்லும் செயலும் இணைந்து விட்டால் இப்பிரபஞ்சமே அவர்களுக்கு வெற்றி மகுடம் சூட்டத் தயாராகிவிட்டது என்று பொருள்.
வெற்றி பாதை
வெற்றிக் கனவுகள் உங்கள் ஆழ்மனதில் நிறைந்து உள்ளபோது உங்களைச் சோர்வு நெருங்காது. சுறுசுறுப்பு நெருப்பில் சோம்பல் சாம்பலாகும். நிமிடங்கள் தோறும் வெற்றியின் பாதையில் நீங்கள் வரைந்து சென்று கொண்டே இருப்பீர்கள்.
மற்றவர்களைப் பற்றி குறை கூறவோ, வீண் விவாதங்களில் ஈடுபடவோ, உங்களுக்கு நாட்டம் இருக்காது. எதைச் செய்வதாயினும் அச்செயலுக்கு உங்களின் இலட்சியத்திற்கும் எந்த வகையில் தொடர்பு உள்ளது, அதாவது அச்செயலைச் செய்வதால் உங்கள் இலட்சியத்தை அடைய அது உதவுமா? என சிந்திக்கத் தொடங்கி விடுவீர்கள்.
இந்த மாற்றமே முன்னேற்றமாக மலர்கிறது. ஆகவே, இலட்சியக் கனவு காணுங்கள்!

April 2003






























No comments
Be the first one to leave a comment.