Home » Articles » தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு

 
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு


admin
Author:

மூலதனம் போதாமை

ஒரு செயலைத் தொடங்கும் முன்பே இத்தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நம்மிடம் எவ்வளவு உள்ளது, இன்னும் எவ்வளவு நிதி ஆதாரத்தை வங்கியிலோ பிற வகையிலோ திரட்ட முடியும் என்பதைத் தீர்க்கமாக அறுதியிட்டு அறிந்த பின்பே செயலில் இறங்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் இருப்பதைக் கொண்டு தொழிலைத் தொடங்கிவிட்டு, பிறகு அதை முழுமையாகச் செய்திட மூலதனம் இல்லாமல் பாதியில் தொழில் நின்றுபோவதால் தோல்வியே மிஞ்சும்.
கிரேனைட் கற்கள் வெட்டியெடுத்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்தார்கள்.

அவர்களிடம் இருந்த முதலீட்டைப்போட்டு ஆந்திர மாநிலத்தில் சித்தூர் பகுதிக்குச் சென்று கிரேனைட் கற்கள் இருக்கும் தனியார் நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். பிறகு மண்ணைப் பறித்து கற்களை வெட்டி எடுத்தார்கள். ஓரிரு மாதத்திற்குள் அவர்களிடம் இருந்த மூலதனம் கரைந்து போனது.

அதன் பிறகு பணியைத் தொடர பணம் இல்லை. பணம் இல்லையே என்று வேறு ஒருவரைக் கூட்டுசேர்த்து அவரது பங்கை வாங்கி பணியைத் தொடங்கினார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறு உடனே கல் விற்பனையாகி கப்பல் ஏறவில்லை.

மூன்றாம் நபர் போட்ட மூலதனமும் வறண்டுவிடவே கல்வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. மூன்று மாதத்தில் கல்விற்பனை ஆகி கப்பல் ஏறிவிடும். நான்காவது மாதத்தில் நான்கு சக்கர வாகனம் வீட்டில் நிற்கும் என்று ஆசைப்பட்டதெல்லாம் வெறும் கனவாகவே போய்விட்டது.

வெட்டியெடுத்த கல்லை விற்பனையாக்க, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலையை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டது. போட்ட மூலதனம் திரும்ப வந்து சேர்ந்தால் போதும் என்று ஆகிவிட்டது அவர்களுக்கு.

ஒன்று, இருக்கின்ற மூலதனத்திற்கு ஏற்ப தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அல்லது உற்பத்தியான பொருள் விற்று பணம் வரும் வரை வேண்டிய அளவு மூலதனத்தை திரட்டும் சக்தியாவது இருக்க வேண்டும்.

இப்படி, இரண்டும் இல்லாமல் பற்றாக்குறை மூலதனத்தைக் கொண்டு ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவதிப்படுகிறவர்கள் தோல்வியைச் சந்தித்துதான் ஆகவேண்டும்.

போதிய உழைப்பும் ஆர்வமும் இன்மை

உயர்ந்த பதவிக்குப் போகவேண்டும். ஆனால் கடுமையாக உழைக்கத் தயாரில்லை. கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வேண்டும் இலாபம், ஆனால், கடுமையாக உழைக்கத் தயாரில்லை. சரிவில்லாத வளர்ச்சி வேண்டும், ஆனால் சலிக் காமல் உழைக்கத் தயாரில்லை. இத்தகையவர் களிடம் தோல்வி தோழமை கொண்டாடும்.

தகாத பண்புகளும், பழக்க வழக்கங்களும்

அரம்போலும் கூர்மய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்

நாம் ஏற்கத்தக்க நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாதவர், சமூகத்தில் பொல்லாதவர் என ஒதுக்கப்பட்டு, எப்போதும் வெல்லாதவர் ஆகிவிடுவார்.

சிலருக்குத் தொழில் நுட்பத்திண்மை இருந்தும், திறமையிருந்தும், நா வன்மை இருந்தும், வலிமை இருந்தும், பிறரிடம் பழகும் தன்மையில் இனிமை இன்மையால், எப்போதும் எரிகொள்ளி போல் எரிந்து விழுவார்கள். எடுத்தெரிந்து பேசுவார்கள். கோபப்படுவார்கள். இவர்கள் ஏராள மாக எதிரிகளை சம்பாதித்து கொள்வார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். பிறரைப் பற்றி குறை சொன்னால் அவர்களுக்கு கோடை யில் குளிர் பானம் குடித்த நிறைவு இருக்கும். எவர் ஒருவருக்கு பிறரைப் பற்றிக் குறைகூறும் பழக்கம் உள்ளதோ அவர் எளிதில் வெற்றிபெற முடியாது.

குறை சொல்லாத உயர்ந்த பண்பும், பிறரிடத்தில் உள்ள நிறைகளைக் காணும் மிகச் சீரிய பண்புகளாகும். இவை தோல்விகளைத் துரத்தும், வெற்றிக்கு வழிவகுக்கும்.

மானுட நாகரிகத்தின் அடையாளம் கூடி வாழ்வதே ஆகும். அலுவலகம், தொழில்கூடம் மற்றும் எவ்விடமாயினும் கூடிவாழ்தல் நிகழ வேண்டுமாயின் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை தேவை.

ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர் கள் என்பதால் அவரவர் கருத்து அவரவர்க்கு உயர்வானதே. எனவே, தம் கருத்தே தரமானது என்று பிறர்மீது திணிப்பதும், விட்டு கொடுக்காமல் விடாப்பிடியாக இருப்பதும், தோல்விக்கே வழிவகுக்கும்.

வெட்டிப்பேச்சும் வீண் அரட்டையும், வெற்றிக்கு விரோதிகள், தோல்விக்குத் தோழர்கள்.

எத்தனை கூர்ந்த மதி நிறைந்தவராயினும், வெட்டி வரச்சொன்னால் கட்டிவருமளவுக்கு கெட்டிக்காரத்தனமும் அவரிடம் கொட்டிக் கிடந்தாலும், வெட்டிப்பேச்சு அவரைத் தோல்விக்கே இட்டுச்செல்லும்.

பொதுவாக, இவை அனைத்தும் தோல்விக் கான காரணங்களாகக் கொள்ளலாம்.

ஒருவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டு மானால் அவர் தோற்றம், நடை, உடை, பாவனைகள், பிறரோடு பழகும் பாங்கு, தன் கருத்துக்களைப் பிறரிடம் நளினமாக எடுத்துரைக் கும் விதம், பிறருடைய கருத்துக்களை நயமாக அவர் மனம் புண்படாமல் மறுக்கும் மாண்பு இவை அனைத்தும் மிகவும் இன்றியமையாத பண்புகளாகும்.

செயல் சிறியதோ

பெரியதோ, தம்மால்

செய்யக் கூடியதைச்

சலிப்பின்றிச் செய்பவர்களே

வெற்றி பெறுகிறார்கள்.

இனி செய்ய வேண்டியது என்ன?

1.    காரணத்தைக் கண்டறிதல்

தோல்விக்கான காரணம் எதுவென அறிந்திட வேண்டும்.

எவ்வகைத் தோல்வியாக இருந்தாலும், இதற்கு நாம் எந்த வகையில் காரணமாக இருந்தோம் என்பதை அறிந்து தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சற்று திறந்த மனதுடன் கவனித்தால் நாமே நம்மை கவிழ்த்துக் கொண்டிருப்பது தெளிவாகும். அறிந்து தெளிந்தவுடன் இனி எப்படிச் செய்தால் வெற்றிகரமாக எடுத்த காரியத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்து செயலில் இறங்க வேண்டும்.

2.    தோல்வியைத் துரத்துக

தோல்வியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

மனதில் உறுதியான முடிவுடனும், தெளிவுட னும், நிலைகுலையாது இருப்பவனே தோல்விக் கான காரணங்களைக் கண்டு, தனது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு, தனக்கேற்ற வகையில் உலகையே மாற்றியமைத்து வெற்றி காண்கிறான்.

3.    எண்ணியது எண்ணியாங்கு எய்துக

எடுத்த செயலை விடாது தொடர்க. வாழ்க்கையில் சாதனையாளர்களாகி சரித்திர மானவர்கள் எல்லோரும் தங்களுக்கு அடாது தோல்விகள் வந்தாலும் விடாது தொடர்ந்து பன் மடங்கு முனைப்புடன் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகண்டுள்ளார்கள்.

எதிர்ப்படும் தோல்வி கண்டு, எடுத்த செயலை விட்டுவிட்டு, முடங்கிவிடுவதோ அல்லது அதை விடுத்து மற்றொன்று என்று விலகிப் போவதோ வெற்றிக்கு ஆற்றுப்படுத்தாது.

புதிய வேகத்தோடும், புதிய திட்டத்தோடும், எந்நேரமும் எடுத்த செயலில் முனைப்புடன் ஈடுபட்டால் வெற்றி பெறலாம். பல சாதனை யாளர்களுடைய வரலாறு நமக்கு அறிவிக்கும் பாடம் இதுதான்.

எடிசனின் வாழ்க்கை இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு.

இரண்டாயிரம் சோதனைகள் நடத்தி அதில் ஒன்றில்கூட அவர் வெற்றியடையவில்லை. அப்போது அவரைப் பார்த்து “தங்களின் நேரமும் உழைப்பும் வீணாவதைக் கண்டு மனம் தளர்ந்து போய்விட்டீர்களா?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு எடிசன் “செயலாற்ற இயலாத இரண்டாயிரம் வழிகளை அல்லவா நான் அறிந்து கொண்டேன். ஆயிரக்கணக்கான இந்த வழிகளில் எல்லாம் மின்சாரம் வேலை செய்யாது என்று கண்டுபிடித்தேன்” என்றார்.

சிறுசிறு தோல்விகளைக் கண்டு சளைத்து விடாமல், குறிக்கோளை மாற்றிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் அனுபவங்களாக எடுத்துக் கொண்டு தொடர் முயற்சியால் தோல்வியைத் துரத்தி வெற்றி கண்டார். மின்சார விளக்கைக் கண்டுபிடித்தார்.

உலக மகா யுத்தத்தில் சில களங்களில் தமது படைகள் தோற்றபோது “சில களங்களை இழக்கலாம், ஆனால் போரில் இறுதி வெற்றி நமக்கே” (We may lose some battle but we will win the war) என்று சர்ச்சில் சொன்னார்.

சின்னச்சின்ன தோல்விகளில் அவர் துவண்டு விடவில்லை. இறுதியாக வெற்றி பெற்றார்.

செயல் சிறியதோ பெரியதோ, தம்மால் செய்யக் கூடியதைச் சலிப்பின்றிச் செய்பவர்களே வெற்றிபெறுகிறார்கள். துணிவைத் துணையாகக் கொண்டால் தோல்விகளைத் துரத்த முடியும் என்பதற்கு இவை சான்றாகின்றன.

4.    தோல்வியை ஓர் அனுபவமாய் கொள்க

அனுபவம்தான் நல்ல குரு என்பார்கள். “கு” என்றால இருட்டு என்று பொருள். குரு என்றால் இருட்டை விரட்டுபவர். அறியாமை இருட்டை அகற்றி, அறிவு ஒளி ஏற்றுபவர் என்பது பொருள். நமக்கு தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும் விளக்காகும்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்