Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

முன்னேற மூன்றே சொற்கள்

வாழ்வில் சிலர் வெற்றி பெறுகிறார்கள், பலர் தோல்வி அடைகிறார்கள், மிகச் சிலர் மட்டும் சாதனைகள் புரிகிறார்கள். அவர்கள் சாதனை புரிவதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அடிப்படையான மூன்று உண்மைகளை உணரலாம்.

மூன்று பண்புகள்

ஒன்று தீர்மானமான முடிவு (Determination) இரண்டு, இடைவிடாத பெருமுயற்சி (Persistence) மூன்று அதற்கேற்ற கடின உழைப்பு (Hard work) இந்த மூன்றும் சாதனையாளர்களிடம் அடிப்படைப் பண்புகளாக இருக்கக் காண்கிறோம்.

சில காரணங்கள்

அதிலும் குறிப்பாகச் சிலர் இளமையில் வறுமையாலோ, தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தாலோ, பிறர் குறைவாக மதிப்பிட்டதாலோ அல்லது இயற்கையாகவே நேர்ந்த குறைபாட்டாலோ தாக்குண்டிருந்தால் அவர்களது வாழ்வில் சாதனை நிகழ்வது மிக உறுதியாகிவிடுகிறது. காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கமே வீறுகொண்டு எழச் செய்து வெற்றிக் கொடியை நாட்ட வைக்கிறது.

படிப்பினை

பல்வேறு துறையிலும் உள்ள சாதனையாளர்களை மனதில் நிறுத்திக் கணித்துப் பார்த்ததில் சில உண்மைகள் புலனாகியது. இன்றைய இளைஞர்கள் அவற்றைத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். இளைஞர்கள் தத்தமது வாழ்வில் அரிய செயல்களைச் செய்ய இவை பெரிதும் பயன்படும். அது படிப்பினையாகவும் அமையும்.

எது தேவை?

பலபேருக்கு, தங்களுக்கு எது தேவை? எந்தத் துறையில் செல்வது என்பதை முடிவு செய்வதற்குள்ளேயே அவர்கள் தலையில் வழுக்கை விழுந்து விடுகிறது. அதற்குப் பிறகு இவருக்குத் தைரியம் வரும்போது இவரைச் சார்ந்தவர்களுக்கு இவர் மேல் நம்பிக்கை போய்விடுகிறது.

அதனால், எதையும் செய்ய முடியாமலேயே பலரது வாழ்க்கை வீணாகிப் போய்விடுகின்றது. பிறந்தோம், இருந்தோம், முடித்தோம் என்பதே பெரும்பாலோரின் கதையாகி விடுகின்றது.

சாதனையாளர்கள் தங்கள் தேவையை முதலில் முடிவு செய்துள்ளார்கள். இளமையிலேயே அவர்கட்கு இந்தத் தெளிவு ஏற்பட்டுவிடுகின்றது.

தேவையற்றவை

இம் முடிவை மேற்கொள்ள, எது எது நமக்குத் தேவையில்லை என்பதைக் கழித்துக்கட்டிவிட வேண்டும். சாதனையாளர்களின் வரலாறுகளை புரட்டிப் பார்த்தால் அவர்கள் இதைத்தான் முதலில் செய்திருக்கிறார்கள். தேவையில்லாதவற்றை நீக்கும்போது தேவையானதில் அதிகம் கவனம் செலுத்தும் வாய்ப்பு இயல்பாக ஏற்படுகின்றது.

எல்லாக் குப்பைகளையும்இ சேர்த்துக் கொண்டு தங்களைச் சுமைதாங்கி ஆக்கிக் கொள்கின்றவர்கள் – அப்படியே கல்லாகவே இருந்துவிட வேண்டியதுதான்.

ஒரு துறை போதும்

ஒரே ஒரு விளையாட்டை மட்டும் எடுத்துக் கொண்டு உலகச் சாதனை புரிந்த வீர்ர்களை எண்ணிப்பாருங்கள். இரண்டு துறையை எடுத்துக் கொள்கின்றவர்கள் ஒருவேளை வெற்றிபெறலாம். ஆனால், சாதனைகள் நிகழ்த்துவதில்லை. மலை ஏற்றத்தை மட்டும் எடுத்துக்கொண்ட ஹில்லரி ட்ன்சிங் சாதனையை எண்ணிப்பாருங்கள்.

நாட்டின் விடுதலைதான் எனது இலட்சியம் என்று கொண்ட காந்தியடிகளை எண்ணிப் பாருங்கள். இலக்கியம்தான் எனது துறை என்று கொண்ட தாகூரை நினைவுகூருங்கள். இவர்கள் எல்லாம் அவரவர் துறையில் சாதனையாளர்கள்.

இலட்சியத்தால்தான் உயிர்

சாதனையாளர்கள் ஏதோ அதிர்ஷவசமாக சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை. எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காக தங்களையே அர்பணித்துவிடுகிறார்கள். தங்கள் இலட்சியம் தான் அவர்களுக்கு உயிர் மூச்சு. அதற்காக அவர்கள் எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.

19 வயதில் உலக டென்னிஸ் கோப்பையை வென்ற ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபிகிராபை 16 வயதில் வென்று சாதனை நிகழ்த்தியுள்ள யூகோசிலோவியா வீராங்கனை மோனிகாவை எண்ணிப்பாருங்கள். மோனிகாவின் உயிரான லட்சியம் மற்றவர்களைவிட இளம் வயதிலேயே உலகக் கோப்பையைப் பெறுவது என்பதுதான்.

தியாகம் செய்கிறீர்கள்

சாதனையாளர்கள் தங்கள் சுகங்களைத் தியாகம் செய்கிறார்கள். உணவு, உடை, உறையுள் என்பவற்றில் அவர்கள்மிகுதியாக்க் கவனம் செலுத்துவதும் கவலைப்படுவதும்கூட இல்லை. பிறர்புகழ்ச்சி இகழ்ச்சிகளைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. தங்களைக் குறை கூறியவர்களுக்கு அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும், மறுப்பு எழுதிக் கொண்டிருப்பதும் இல்லை.

தோல்விகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
.

சாதனையாளர்களுக்கு எடுத்தவுடன் வெற்றி கிட்டுவதில்லை. இறுதி வெற்றிக்காக, இணையற்ற சாதனைக்காக, தொடக்கத்தில் தோல் – தோல்வி – தோல்வி என்று பல தோல்விகளை ஏற்க வேண்டியிருக்கும். இத்தனைத் தோல்விகளுக்கும் மனம் தளராத, சலிக்காமல் தொடர்ந்து போராடும் மனிதன்தான் சாதனைகளை நிகழ்த்த முடியும். இதைத்தான் இடைவிடாத பெருமுயற்சி (Persistance) என்கிறோம்.

வாழ்க்கை முழுவதும் தோல்வி

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க நாட்டிலிருந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக – வாழ்க்கை முழுவதும் தோல்விகளை ஏற்றார். இறுதியில்தான், முப்பது ஆண்டுகட்கு மேலாக இடைவிடாத முயற்சிக்குப் பிறகுதான் வெற்றி கண்டார்.

தோல்வியே சாதனையாவதுண்டு

பலர் வெற்றி காணாமலேயே மடிந்துவிடவும் கூடும். ஆனால், அந்தத் தோல்வியேகூட சாதனையாகிவிடுகின்றது. ஒரு கிழவனும் கடலும் ((Old man and the sea) என்ற நோபல் பரிசு பெற்ற நாவலில் அந்தக் கிழவன் நடுக்கடலுக்கு மேல் சென்று இறுதியில் ஒரு சுறா மீனைப் பிடித்துக்கொண்டு வருகிறான். ஆனால், கரைக்கு வரும்போது அதன் சதைப் பற்றெல்லாம் மற்ற கடல் மீன்கள் தின்றுவிடுகின்றன. கரைக்கு வந்தபோது சுறா மீனின் வெறும் எலும்புக்கூடு மட்டுமே உள்ளது. இருந்தாலும் சுறாமீனைப் பிடிக்க வேண்டும் என்ற அவனது இலட்சியம் நிறைவேறிவிடுகிறது.

மனிதன் இறக்கலாம். அழியலாம். ஆனால், அவன் இலட்சியங்கள் இறப்பதில்லை என்று ஆசிரியர் ஹெமிங்வே கதையை முடிக்கின்றார். (Man can be destroyed but not his ideas).

சாதனை புரிய விரும்புகின்றவர்களுக்கு இத்தகைய அரிய கருத்துக்கள், வரலாற்று உண்மைகள் துணை புரிகின்றன. தன்னுள் ஓர் அழுத்தம் உந்து சக்தி (driving force) உண்டாகிறது.

தொழிலுக்கு ஏற்ற திறமையை வளர்த்தல்

சாதனையாளர்கள் ஒன்றில் சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அதில் ‘அ’ முதல் ‘ன்’ வரை, ‘ஏ’ முதல் ‘இசட்’ வரை (A to Z) அவர்கள் அறிந்து கொண்டே வருகிறார்கள். முரட்டுத்தனமான உழைப்பு மட்டும் போதாது. அவரவர்கள் துறையில் நேர்ந்துள்ள அனைத்தையும் அவ்வப்போது கற்றுத் தேர்கிறார்கள். அதனைத் தம்தம் தொழிலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

பெரிய அளவில் படிப்பு இல்லாமல் இருக்கலாம். அது தேவையுமில்லை. சாதனைக்குத் தொழில் அறிவும் சமுதாய அறிவும் இருந்தால்அது போதுமானது. அதுதான் தேவையானதும் கூட. கடினமான உழைப்பால்தான் (Hardwork) இவற்றைப் பெறமுடியும்.

பழக்கமே பண்பாகிறது

தெளிவான முடிவும் தேவைக்கேற்றபடி திறைமையை வளர்த்துக்கொள்வதும், தொடர்ந்து கடின உழைப்புமே ஒருவனைச் சாதனையாளனாக ஆக்குகிறது. இந்த அன்றாடப் பழக்கங்களே – அவனைச் சாதனைக்குரிய பண்பாளனாக மாற்றுகிறது.

தெளிவான முடிவு + இடைவிடாத முயற்சி+ கடின உழைப்பு = சாதனை

இப்போது ஒரு சாதனையாளரை மனதில் வைத்துக்கொண்டு பாருங்கள். இந்த பண்புகள் அவரிடம் இருப்பதைக் காணலாம். பண்புகள் என்பது பிறவிக் குணமல்ல. நாமாக வளர்த்துக் கொள்வது. நம்மை வளர்த்துக் கொள்ள முன்னேற, இந்த மூன்றே சொற்கள் போதும். சாதனைகளை நிகழ்த்தக்கூடத்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்