Home » Articles » மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை

 
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை


ஜெயச்சந்திரன்
Author:

பத்து ஆண்டுகளில் நீங்கள் விரும்பும் துறையில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு உங்கள் சூழ்நிலை மாற வேண்டுமானால் உங்கள் எண்ணம் மாற வேண்டும்; பேச்சு மாற வேண்டும்; உங்கள் நடவடிக்கை மாற வேண்டும்.

வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள், தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக்கொண்டிருக்கலாமா? நீங்களும் மற்றவரும் கடந்த காலத்தில் அடைந்த தோல்விகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கலாமா? தோல்விக்கு ஏதுவான முறையிலேயே தொடர்ந்து செயல்படலாமா?

உங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால் முதலில் நீங்கள் மாற வேண்டும். மாற வேண்டும் என்று சொல்லும்போது கடந்த காலத் தோல்விகளுக்குக் கைகாட்டுகிறீர்கள். மாற வழியில்லாமல் கடந்த காலக் கஷ்ட நஷ்டங்கள் கவிழ்த்தி விடுவதாகப் புகார் சொல்கிறீர்கள்.

உலகில் பலர் தொழிலில், வணிகத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பலர் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், வீழ்ச்சியைச் சந்திக்காமல் வெற்றியை மட்டுமே ருசித்தவர்கள் வெகு சிலர்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சோதனையான காலகட்டம் வருகிறது. அவர்தம் அறிவு, திறமை, சக்தி எல்லாவற்றுக்கும் மேற்பட்ட சவால்களைச் சந்திக்க வேண்டி நேர்கிறது.

சவால்கள் வரும்போது அவற்றை தம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சந்தர்பங்களாகக் காண்பவர் சிலர். ஆனால், பலர் சவால்களைச் சந்திக்க முடியாமல் தங்களை அழித்துக் கொள்கின்றனர்.

வாழ்க்கையின் சவால்களைக் குறித்து மனிதர்களின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது எது? வாழ்க்கையைக் குறித்த அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டம்தான்.

மனிதர்களில் சிலர் மட்டும் பெரும் வீழ்ச்சிக்குப் பிறகும் எழுச்சி பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் மாறியதால்தான்.

பலர், ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ முடியாமல் முற்றிலும் வாழ்ந்து விடுவது எதனால். தோல்வி நிலையானது, என்றும் தனக்கு மட்டுமே வருகிறது, என்றும் எண்ணுவதால்தான்.

வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவத்தை வைத்து சிலர் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவதற்கும் பலர் வாழ்கையில் தாழ்ந்து போவதற்கும் காரணம் என்ன? வெற்றி பெறுபவர்க்கும் தோல்வி அடைபவருக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?

அவர்களின் – குணம் – நடத்தை – கண்ணோட்டம் -மனப்பான்மை, ஆகியவற்றில் அவர்கள் முற்றிலும் வேறுபடுவதை உற்று நோக்கினால் உங்களால் உணர முடியும்.

1. நம்பிக்கை மாற்றம்: உங்கள் வாழ்கை நீங்கள் விரும்புகிறபடி மாற வேண்டுமென்றால்,முதலில் உங்கள் நம்பிக்கை அமைப்பை மாற்ற வேண்டும்.

நீங்கள் என்ன நம்புகிறீர்ளோ, சாத்தியம் அல்லது சாத்தியமில்லை, என்று எதை நம்புகிறீர்களோ அந்த எண்ணம்தான் நீங்கள் அதைச் சய்ய முடியுமா, இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது.

ஒன்றை முடியாது என்று நினைக்கும்போது உங்கள் மூளைக்கு,நரம்பு மண்டலத்திற்கு முடியாது, முடியாது என்னும் செய்தியைத் தொடர்ந்து அனுப்புகிறீர்கள். அந்தச் செய்திதான் அதைச் செய்து முடிக்கும் திறமையை, சக்தியைக் கட்டுப்படுத்துகிறது. அல்லது அழித்து விடுகிறது. நீங்கள் நம்பியபடியே செய்ய முடியாமல் போகிறது.

இதற்கு மாறாக என்னால் முடியும் என்னால் முடியும். எதையும் சாதிக்க என்னால் முடியும் என்னும் நம்பிக்கைச் செய்தியை அனுப்பினால் முடிப்பதற்குத் தேவையான திறமையும், சக்தியும் உங்களிடம் பெருகுவது மட்டுமின்றி, உங்கள் சூழ்நிலையில் முடிப்பதற்குச் சாதகமான சம்பவங்களும் உருவாகின்றன.

நம்பிக்கை என்பது வெறும் கொள்கை அன்று. அது செயல் பிறக்கும் ஊற்றுகண், நம்பிக்கை தானாகவே குறிக்கோளை நோக்கி உங்களைச் செயல்படத் தூண்டும். அத்துடன் எதை உணமை என்று தொடர்ச்சியா நம்புகிறீர்களோ அது உண்மையாக மாறத் தொடங்குகிறது.
“ஆர்வமுள்ள தொண்ணூற்றொன்பது பேருக்கு, நம்பிக்கை உள்ள ஒருவன் சமமாவான்” என்று ஜான் ஸ்டுவர்ட் மில் கூறுகிறார்.

நம்பிக்கை நம் மூளைக்கும், நரம்பு மண்டலத்திற்கம் நேரடியாகக் கட்டளை இடுகிறது. அக்கடளைக்கேற்ப உடல் இயக்கம் தொடங்குகிறது.

நம்பிக்கை உங்கள் குறிக்கோளை அடைவதற்கு வழியைக் காட்டுவது மட்டுமின்றி, அதை அடைய முடியும் என்னும் உறுதியையும் வலுவாகுகிறது. அது உங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டிக் கொடுப்பதுடன் அதை அடைவதற்குத் தேவையான சக்தியையும் உருவாக்கித் தருகிறது.

நம் குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் நம் நடத்தைகள் மாற வேண்டும். நடத்தைகள் மாற வேண்டுமென்றால், முதலில் நம்பிக்கைகள் மாற வேண்டும்.

நடந்தே தீரும் நம்பிக்கை உண்டு. நடந்தே தீரும் நம்பிக்கை உண்டு என்னும் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து மனதில் பதியம் செய்வதற்கு அடுத்து உங்கள் பேச்சில் மாற்றம் வரவேண்டும்.

2. சொற்களில் மாற்றம்: சொற்களின் ஆற்றலை நீங்கள் முழுமையாக அறிவது நல்லது. உங்கள் மனமாகிய சட்டியில் என்ன இருக்கிறதோ? அதுதான் பேச்சு என்னும் அகப்பையில் வரும்.

ஆகவே, நீங்கள் பேசும் பேச்சை நீங்களே ஆராய வேண்டும்.உங்கள் சொற்கள் அவநம்பிக்கை, பயம், கவலை அடிப்படையில் தொடர்ந்தால் அதற்கேற்ற வாழ்க்கைதான் அமையும்.

நீங்கள் உடனடியாக உங்கள் பேச்சை நம்பிக்கை,துணிவு, மகிழ்ச்சி என்னும் அடிப்படையில் மாற்ற வேண்டும். அவநம்பிக்கையான, பயப்படுகிற , கவலைப்படுகிற பொருள்தரக்கூடிய சொற்களை வாய்தவறிக் கூடச் சொல்லக்கூடாது.

உங்கள் சொற்களில் நம்பிக்கையும், துணிவும், மகிழ்ச்சியும் வெளிப்பட வேண்டுமென்றால் முதலில் அவைதான் எண்ணத்திலும் இடம் பெற வேண்டும்.

எண்ணத்திலும் பேச்சிலும், நம்பிக்கை துணிவு, மகிழ்ச்சி ஆகியவற்றை நிலைக்கச் செய்வதற்கு ஆட்டோ சஜசன், மனச்சித்திரம் ஆகிய இரு உத்திகளைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.

பலர் ஆட்டோ சஜசன், மனச்சித்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வற்புறுத்துவதில்லை. அதனால், அவற்றின் பயனை பலர் அடைய முடியவில்லை.

மிகப்பெரிய குறிக்கோள் கொண்டிருக்கும் நீங்கள், சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பதனாலும், பயிற்சிகளில் கலந்துகொள்வதானாலும் பல செய்திகளை அறிந்துகொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளலாம். அதனால் உங்கள் எண்ணத்தில் செயல்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படாது.

மாபெரும் வெற்றிக்குத் தேவையான மாற்றத்திற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. அவைதான் ஆட்டோ சஜசன். மனச்சித்திரம். நீங்கள் உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் முதலில் ஆட்டோ சஜசனை ஆரம்பிக்க வேண்டும்.

“என்னால் முடியும் என்னால் முடியும் எதையும் சாதிக்க என்னால் முடியும்” போன்ற ஆட்டோ சஜசனை அதிகாலையிலும் இரவிலும், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதும் சொல்லிக் கொண்டே வந்தால் உங்கள் எண்ணம் நம்பிக்கை அடிப்படையில் மாறிவிடும்.

“வெற்றி பெறுவேன், சாதித்து முடிப்பேன், வெல்லும் வரையில் ஓயமாட்டேன் என்னும் ஆட்டோ சஜசன், முதலில் எண்ணத்தை மாற்றி, பேச்சை மாற்றி அமைத்து, செயல்பாட்டில் பிரதிபலிக்கத் தொடங்கிவிடும். நீங்கள் தொடர் முயற்சி உடையவராகவும், விடாமுயற்சி உள்ளவராகவும் மாறிவிடுவீர்கள்.

ஆட்டோ சஜசனைத் தொடர்ந்து செய்யும் போது, இன்றைய நிலையில் முடியாது என்று உண்மையாவே உங்களுக்குத் தோன்றுகிற ஒரு காரியம், முடியும், முடியும் என்னும் செய்தியைத் தொடர்ந்து உங்கள் ஆழ் மனதிற்குள் செலுத்தினால், முடிக்கக் கூடிய வாய்ப்புகளும வசிதகளும் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.

நடக்கும். ஆகும், முடியும், கிடைக்கும் ஆகிய நம்பிக்கைச் சொற்கள் மட்டுமே உங்கள் வாயிலிருந்து வரும்.

எதிர்மறைச் சொற்களையே பேசிக் கொண்டிருந்த நீங்கள், முற்றிலும் புதிய மனிதராக, நேர்முக மனிதராக மாறிவிடுவீர்கள்.

3. செயல்பாட்டில் மாற்றம் : இதுவரை செயல்படுவதில் உங்களைத் தடுத்து வந்தவை எது என்று யோசித்து பாருங்கள்.

தயக்கம், கூச்சம், பயம், தள்ளிப் போடுதல், தாழ்வு மனப்பான்மை, சோம்பல் ஆகியவை உங்கள் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன.

அதனால், எடுத்த காரியம் எதிலும் மிஞ்சியது. இருப்பினும் முன்னேற வேண்டும் என்னும் ஆசையின் காரணமாக மீண்டும் மீண்டும் புதிய புதிய துறையில், தொழிலில், வணிகத்தில் இறங்கியிருப்பீர்கள்.

உங்கள் செயல்பாட்டில் பலவீனங்கள் உள்ளன. அவை உங்கள் செயல்திட்டங்களைப் பாதிக்கின்றன. செயல்திட்டம் பலவீனமாக இருக்கும்போது, விளைவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் தோல்வி வருகிறது.

தோல்வி வரும்போது பீதியோடும், கவலையோடும் புற உலகத்தை உற்று நோக்குகிறீர்கள். சிலர் மட்டும் வெற்றிகரமாகச் செயல்படுவதை ஏக்கத்தோடு பாக்கிறீர்கள்.

ஜோதிடம் பார்க்கலாமா? பெயரின் எழுத்துக்களை மாற்றி எண்ணை மாற்றலாமா? கையெழுத்தை மாற்றி அமைக்கலாமா? வாஸ்து முறைப்படி வீட்டை மாற்றி அமைக்கலாமா? என்று குழப்பமடைகிறீர்கள்.

தெளிவு வராதபோது உங்கள் புறத்தில் வாழ்கிற மற்றவரின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு அவர்கள் இழுப்புக்கெல்லாம் நீங்கள் இணங்கி விடுகிறீர்கள்.

உண்மையில் உங்கள் தோல்விக்குக காரணம் ஆழ்மனதில் பதிந்துள்ள நம்பிக்கைக் குறையும், உங்கள் அவநம்பிக்கைப் பேச்சும், அவநம்பிக்கை அடிப்படையிலான செயல்பாடும், செயல்திட்டங்களும்தான்.

தினமும் பதினைந்து நிமிடங்கள் தனியே அமைதியான இடத்தில் கண்களை மூடி அமருங்கள். உங்கள் செயல்பாட்டில், நடவடிக்கையில் தயக்கம் இருக்கிறதா? என்று எண்ணிப்பாருங்கள். இந்த நிமிடத்திலிருந்து எதிலும் தயக்கம் இன்றிச் செயல்படுவேன் என்று உறுதியோடு உணர்ச்சியோடு சபதம் எடுங்கள்.

அதுபோன்ற கூச்சம் இருக்கிறதா? பயம் இருக்கிறதா? தள்ளிப் போடும் வழக்கம் இருக்கிறதா? தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? சோம்பல் இருக்கிறதா? என்று சுய பரிசோதனை செய்யுங்கள். ஒவ்வொரு பலவீனத்தையும், அன்றிலிருந்து நீங்கிவிட்டதாக நம்புங்கள். பவீனங்கள் படிப்படியாக உங்களை விட்டு நீங்குவதை நீங்களே மகிழ்ச்சியுடன் உணர்வீர்கள்.

சுயபரிசோதனை முறையில் உங்கள் செயல்பாடுகளில், செயல்திட்டங்களில் உள்ள அனைத்து எதிர்மறை அம்சங்களையும் அடையாளம் கண்டு அழித்துவிட முடியும். உங்கள் செயல்திட்டம் குறையற்றதாக அமையும்போது, அதன் அடிப்படையிலான முயற்சியும், உழைப்பும் வெற்றியை மட்டுமே தருகின்றன.

கடந்த காலங்களில் நீங்கள் பல தோல்விகளை அடைந்திருக்கலாம். இழப்புகளைச் சந்தித்திருக்கலாம். சோர்ந்து போயிருக்கலாம். மனமுடைந்து போயிருக்கலாம்.

ஆயினும், மீண்டும் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக்கொண்டு, எண்ணத்தையும், பேச்சையும், செயல்பாட்டையும் மாற்றி அமைத்து, மாபெரும் வெற்றி அடைய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஆகவே, மீண்டும் உங்கள் முயற்சியைத் துவக்குவதற்கு முன் வெற்றியின் இரண்டாவது இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்… அது…

மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்