Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க


சண்முக வடிவேல் இரா
Author:

ஒரு பூங்கா, உள்ளே ஒரு பெஞ்ச். ஒரு ஓரத்தில் ஒருவரும் மற்றொரு ஒரத்தில் இன்னொரு வரும் அமர்ந்திருக்கிறார்கள். இவர் கிழக்கே பார்த்தால், அவர் மேற்கே பார்க்கிறார். ஒரு மணி நேரம் ஆனபிறகு இனிமேலும் மௌனம் கடைப் பிடிக்க முடியாது என்று எண்ணிய ஒருவர், ‘அந்த ஓர’ மனிதரிடம் மெதுவாகப் பேசத் துவங்கனார்.

“என்னங்க ரொம்ப சோகமா இருக்கீங்க? ஏதாவது பிரச்னைன்னா எங்கிட்ட சொல்லுங் களேன்”.

“ஒன்னும் இல்லீங்க. இன்னக்கி மனைவி கிட்ட சின்ன தகராறு. அவளுக்கு ரொம்ப கோபம் வந்திட்டுது. ‘இன்னும் ஒரு வாரத்துக்கு என்கூடப் பேசாதீங்க’ ன்னுட்டா. ஒரு வாரத்துக்கு எப்படிங்க பேசாம இருக்க முடியும்? அதான் கவலையா இருக்கேன்” அந்த ஓரம் தன் கவலையைக் கதவு திறந்தது.

இந்த ஓரம் ‘கல கல’ வென்று சிரித்துவிட்டுச் சொன்னது, “இதுக்காய்யா பெரிசா கவலைப் படுறே? என் பெண்டாட்டி ஒரு வாரத்துக்கு முந்தி ஏற்பட்ட சண்டையிலே இதே மாதிரி ‘இன்னும் ஒரு வாரத்துக்குப் பேசக்கூடாது’ ன்னு கண்டிஷன் போட்டா. இன்னியோட அந்த ஒருவாரம் முடியுது. சாயங்காலம் பேசியாகனுமேன்னு நான் கவலையா இருக்கேன். உம்பாடு பரவாயில்லே. இன்னும் ஒருவாரம் உனக்கு கொண்டாட்டந்தான்.”

அந்த ஓரத்து மனிதருக்கும் இந்த ஓரத்து மனிதருக்கும் பெஞ்சில் மட்டுமா இடைவெளி? இல்லை. வாழும் வாழ்க்கையிலேயே பெரிய இடைவெளி இருக்கிறது.

மனைவியுடன் பேசாமல் இருக்கவேண்டிய நிலைமையை எண்ணி வருந்துவதும், மனைவியு டன் பேசியாக வேண்டுமே என்று கவலைப்படு வதும் வாழ்வின் நிறைவையும் குறையையும் காட்டும் அடையாளங்கள் அல்லவா!

கணவனும் மனைவியும் ஒரு வீட்டுக்குள் மகிழ்ச்சியிலும் அயர்ச்சியிலும் இணைந்து வாழும் இணைப் பறவைகள்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்வதே ஒரு மகிழ்ச்சி. கண்ணால் காண்பது களிப்பு. தொட்டுக் கிள்ளினாலும் கன்னத்தில் இடித்தாலும் எல்லாமே எண்ணத்தில் பதிந்து என்றென்றும் இனிப்பவை.

அதை இழக்க நேருகிறதே என்று ஏங்கு பவன்தான் நிறைவான வாழ்வில் திளைப்பவன்.

அதைப் பெறவேண்டியிருக்கிறதே என்று வருந்துபவன் வாழ்வில் சுகம் காணக் கொடுத்து வைக்காதவன்.

இரண்டு வகையாகவும் இன்று குடும்பங்கள் இருக்கின்றன. நிறைவாழ்வாக இல்லறத்தைச் சுவைக்கும் கணவனும் மனைவியும் குறைகளே இல்லாத தெய்வப்பிறவிகளா?

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்கி வாழும் நிலைபெற்றவர்கள் என்ன, நற்குணம் என்று எதையுமே பெற்றிராத சாத்தான்களா?

மகிழ்ந்து வாழும் அவர்களிடம் குறைகள் இல்லாமலில்லை. வருந்திக் கிடக்கம் இவர்களிடம் நிறைகள் இல்லாமலும் இல்லை. பார்க்கும் பார்வையில் தான் குறைபாடு.

கண் டாக்டரிடம் சென்ற ஒருவன்,

“டாக்டர் எனக்கு ஒருவகையான குறைபாடு கண்ணில் இருக்கிறது. ஏதாவது மருந்து கொடுத்துச் சரிப்படுத்துங்கள்” என்று கூறிவிட்டுக் குறை பாட்டை விளக்கினான்.

“தூரத்தில் போகிற பெண்களைத் தெளிவாகத் தெரிகிறது. பக்கத்தில் நடக்கிற ஆண்கள் தெரியவே இல்லை.” இதைக் கேட்ட டாக்டர் ஒரு சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்தார். அதில் ‘உடனடியாகத் திருமணம் செய்துகொள்’ என்று எழுதியிருந்தது.

பெண் தெரிகிறது; ஆண் தெரியவில்லை என்றால் கண்ணிலா குறைபாடு இல்லை. மனத்தில் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்.

கணவனிடம் குறைகாணும் மனைவி என்ன சொல்லுகிறார்? “குடிக்கிறார்; பொய் சொல்கிறார்; என்னைத் திட்டுகிறார்; நேரத்தில் வீடு திரும்புவதில்லை; என் சமையலை ருசித்துச் சாப்பிடுவதே இல்லை. கல்யாணம் செய்தாயிற்றே என்பதற்காக என்னோடு குடும்பம் நடத்துகிறாரே தவிர, விருப்பத்தோடு என்னிடம் பழகுவதில்லை.”

ஏன் இந்தக் கணவன் இப்படி இருக்கிறார்? அவர் என்ன சொல்கிறார். தன் மனைவியைப் பற்றி?

“எதையோ பறிகொடுத்தது போல இருக் கிறாள். முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. எப்போதும் சண்டைக் கோழி போல சிலிர்த்துக்கொண்டு நிற்கிறாள். வீட்டுக்குப் போனால் அவளைப் பார்க்கவேண்டி வருமே என்று மனம் கவலைப் படுகிறது. சமைத்ததைப் பரிமாறுவதில் ஓர் அன்பே இல்லை. தண்டமே என்று எல்லாம் செய்கிறாள்.”

என்னம்மா. உங்கள் கணவரிடம் உங்களைக் கவரும் அம்சங்கள் என்று எதுவுமே இல்லையா? என்று கேட்டால்,

அந்தப் பெண் கூறுகிறார், “ஏன் இல்லை? ஆஜானுபாகுவான உடல், கம்பீரமான தோற்றம், எந்தப் பெண்ணும் சற்று நின்று பார்க்கும்படியான அழகர். ஊரில் உள்ள எல்லோருமே இவருடைய வியாபாரத் திறமையைப் பாராட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது வாங்கிவந்து கொடுக்காமல் ஒருநாளும் இருக்கமாட்டார். தூய்மையான உடைகளையே உடுத்துவார். ‘இந்தா’ ‘வா’ ‘போ’ ‘ஏ, கழுதை’ என்றெல்லாம் அழைக்கமாட்டார். அழகாக என் பெயரைச் சொல்லி ‘ரம்யா!’ன்னு தான் கூப்பிடுவார்”.

“உங்கள் மனைவியிடம் முழுவதுமே வெறுக் கத்தக்க தன்மைகள்தானா? நல்லது என்று எதுவும் கிடையாதா?” என்று கணவரிடம் கேட்டால், “அதெல்லாம் இல்லை. என் மனைவி அழகானவள். இனிமையாகப்பாடுவாள். அருமையாகச் சமைப் பாள். என் தாய் தந்தையரை மதிப்போடும் மரியாதையோடும் பேணுகிறாள். ஓய்வு நேரத்தை நல்ல புத்தகம் படிப்பதிலும் கைத்தொழில் கற்றுக் கொள்வதிலும் செலவிடுகிறாள். தெருவிலுள்ள பெண்களோடு சேர்ந்து ஊர்க்கதை பேசுவது கிடையாது” என்பார்.

ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொள்ளும் கணவன் மனைவியரின் கவனத்தை நல்லதன் பக்கமாகத் திருப்பிவிட்டுக் கேட்கும்போதுதான் இவர்கள் அடுத்தவரிடமுள்ள நல்ல குணங்களை நினைத்துப் பார்த்துக் கூறுகிறார்கள்.

குடிப்பது கெடுதல்; குடிப்பவரைப் பெண்கள் விரும்பமாட்டார்கள்; என்பது சரிதான். மனைவி நினைத்தால் இதனை மாற்றிவிட முடியாதா? நண்பர்களுடன் இருந்து அனுபவிக்கும் நட்பைவிட மேலானதொரு நட்பைத் தருவதற்கு வீட்டில் மனைவி இருக்கிறாள் என்ற எண்ணத்தைக் கணவனுக்கு ஊட்டவேண்டியவள் மனைவி அல்லவா!

நட்பைத் தரும் மனைவி கிடைத்துவிட்டால் நண்பர்களையும் புறக்கணித்துவிட்டு நேரத்தோடு – நேரத்தோடு என்ன நேரத்தோடு? அதற்கு முன்னதாகவே – வந்துவிடமாட்டானா கணவன்?

வீட்டிற்கு வரும் கணவனை சிநேகத்தோடு பார்க்கும் குளிர்பார்வை இல்லாதவர்களா பெண்கள்? அவர்களுக்கு அப்படிப் பார்க்கத் தெரியும். வெறுப்பானது, குளிர்பார்வையையும் சுடுநோக்காக்கி விடுகிறது.

சமைப்பதில் கைதேர்ந்தவர்கள் கூடப் பரிமாறுவதில் பக்குவம் பெறாமல் போவதுண்டு. தட்டில் அடிக்கடி கணவன் எடுத்துண்ணும் உணவை மறுபடியும் வைக்கலாம். அன்பான உசாவல்களால் அடுப்பங்கரையையும் உண்ணு மிடத்தையும் கூட மகிழ்வுபொங்கும் மாளிகை யாக்க முடியுமே!

சமைத்த உணவை சமைத்த சட்டியிலேயே கொண்டுவந்து பரிமாறாமல் அதை அழகாக ஒரு பாத்திரத்தில் அடுக்கிவைத்துக் காட்டமுடியுமே! அதுவும்கூட மனத்தை வசீகரிக்கும் மற்றொரு கலையாயிற்றே! பெரிய ஓட்டல்களில் பாருங்கள் தயிர் வடையைக் கூட வெறும் தயிர்வடையாகத் தராமல் அதன்மேல் கொஞ்சம் காரட் துணுக்குகளையும் கொத்து மல்லித் தழையையும் வைத்து அதை ஏதோ தேவலோகத்து அமுதத்தைத் தருவதுபோல் தருகிறார்களே! அதில் ஒரு கலை நுணுக்கம் இருக்கிறதே!

ஒரு மனைவி இதைச் செய்து காட்டினால் கணவன் ஓட்டல் பக்கம் தலை வைத்தும் பார்க்க மாட்டானே! உணவு, அதன் சுவையில் மட்டுமல்ல, அதன் அழகில், அதன் மணத்தில், அதைக் கொண்டுவந்து வைப்பவரின் அன்பு வெளிப் பாட்டில் என்று எல்லாமாக சேர்ந்தல்லவா மனத்தை ஈர்க்கிறது!

அதனால்தான், ஓட்டலில் சாப்பிட்டதற்குப் பணம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பரிமாறி யவருக்குத் தனியாக பணம் கொடுக்கிறோமே, அது எதற்கு? அவர் நம்மிடம் பரிவோடு பரிமாறிய பாங்கிற்கு நாம் தரும் வெகுமதி அல்லவா அது?

ஓட்டல் சர்வருக்குத் தனியாகப் பணம் கொடுத்து கௌரவிக்கும் நாம், மனைவியிடம் அந்த மாண்பைக் கண்டால் பணமா கொடுப்போம்? மனமெல்லாம் அவள் நிறைந்திருப்பாள். கணவன் மதுவருந்தி மனம் நோவானா? மனைவிக்கேற்ற மணாளனாகச் சுற்றிச் சுற்றி வருவானே!

கணவனும் மனைவியை மதித்துப் போற்ற வேண்டும். அவள் செய்யும் பணிகளைப் பாராட்டிப் பரிவோடு அவளை மகிழ்விக்க வேண்டும். வெளியில் அதிகமாக வேலை இருப்பவர்கள் அதன் அவசியம் பற்றி மனைவி யிடம் பேசவேண்டும். தான் அதிகநேரம் வெளியில் இருக்கவேண்டியிருப்பதை அவன், சொல்லும் முறையில் சொல்லி, உணர்த்த வேண்டும். தீய பழக்கங்களை அகற்றிட வேண்டும்.

திருமணம் ஆகிய அன்று மாலை அவள் தனித்து ஒரு அறையில் அமர்ந்திருந்தாள். அது கணவன் வீடு. அவளுடைய புக்ககம். எதிர்வீட்டி

லிருந்து வந்த நாற்பது வயதுக்கார ‘மாதரசி’ ஒருத்தி, மணமகளிடம் சொன்னாள், “நீ புதுப்பொண்ணு உனக்கு நான் ஒரு அட்வைஸ் தரேன் கேட்டுக்கோ. புருசனை எப்பவும் கைக்குள்ளே வச்சிக்கனும்” .

“அது எப்படிக்கா கைக்குள்ளேயே வச்சிக்க முடியும். அவரு கடைத்தெரு கிடைத்தெருவுக்குப் போய்வர வேணாமா?” வெகுளிப்பெண்ணாக மணமகள் கேட்டாள்.

“அடிபோடி அசடே! கையிலே வச்சிக் கிறதுன்னா, நாம சொல்றதை கேட்கிற மாதிரி வச்சுக்கனும்னு அர்த்தம்.”

“அது எப்படின்னு சொல்லுங்க அக்கா”

“15 வருசத்துக்கு முந்தி எனக்குக் கல்யாணம் ஆச்சு. அன்னைக்கே அவருகிட்டே நான் சொல்

லிட்டேனே. அங்க இங்க போயிட்டு நேரங்கழிச்சு வந்தீங்கன்னா காலை ஒடிச்சுடுவேன். சீட்டு கீட்டு ஆடினீங்க… கையை ஒடிச்சிடுவேன். தண்ணி கிண்ணி அடிச்சீங்கன்னா, அவ்வளவுதான் வாயைக் கிழிச்சிடுவேன்னு கறாராச் சொன்னேன் தங்கச்சி. நீயும் அதே மாதிரி இன்னிக்கே உன் புருசன்கிட்டே சொல்லிப்புடு”.

“நீங்க சொன்னது சரிக்கா. அதைக்கேட்டு உங்க ஊட்டுக்காரரு திருந்திட்டாரா?”

“அதை ஏன்டி கேக்கறே? அன்னக்கி போனவருதான் இன்னமும் ஊட்டுக்கே வரல்லே”.

“அடப்பாவமே அப்படின்னா எனக்கும் அந்த மாதிரி யோசனை சொல்றீங்களே ஏனக்கா?”

“ம்… நான் ஒன்ட்டியா இருக்கேன்ல. நீயும் வந்து உட்கார்ந்தா பேச்சுத்துணை கிடைக்கு மேன்னுதான்”.

நாம் நடந்துகொள்ளும் முறையில் மற்றவர் மனம் திருந்த வேண்டுமே தவிர, கடிந்து

சொல்லித் திருத்திவிட முடியாது. அதிலும் கணவனும் மனைவியும் கருத்துக்களைப் பேசாமலே உணர்த்திவிட முடியுமே!

இரவு உணவெல்லாம் முடித்தபின் பக்கத்தில் வந்தமரும் மனைவியிடம் நாம் ஏதும் சொல்லாமல், அவள் கையை எடுத்து நம் கையில் வைத்துக் கொண்டு அதில் ஓர் அழுத்தம் கொடுக்கும்போது, அவள் ஒரு மாதிரி தலையைச் சாய்த்து ஓரப்பார்வை பார்த்து “ஆமா. உங்களுக்கு வேற வேலையே இல்லை” என்கிறாளே. நாம் ஏதாவது சொன்னோமா?

இதுதான் இல்லறம். இவர்கள்தான் கணவன் மனைவி. இங்குதான் சொக்கவைக்கும் சொர்க்கம் உருவாகிறது.

– தொடரும்…

 

1 Comment

 1. aruna says:

  வணக்கம் ஐயா
  உங்கள் இந்த சேவை தம்பதியினருக்கு தேவை.
  எனக்கு இதே பிரச்னை தான்.
  என்னால் எங்கே இருந்தாலும் சந்தோஷமாக வாழ முடியவில்லை.

  எனக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. என் மாமியார் வீட்டில் சிலுமிஷம் போருக்க முடியாமல் இரண்டு வருடம் அம்மா வீட்டில் கழித்து விட்டேன். கணவருடன் போனில் மட்டும் பேச்சுக்கள் .(என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்பவர்) என் பெற்றவரின் புத்தி மதியால் கடந்த எட்டு மாதமாக என் மாமியார் வீட்டில் வசிக்கிறேன். அனால் இப்போழுத்ம் என்னால் என் மாமியார் செய்யும் சிலுமிஷங்களை போருக்க முடியவில்லை என் கணவரும் இங்கே இல்லை. என் கணவரிடம் என் மன வருத்தங்களை சொன்னால் நீ உன் அம்மா வீட்டுக்கு போகர்துனா போய்விடு . இதோடு என்னை மறந்து விடு என்கிறார் . நான் என்ன செய்வேன். எனக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான் அவன் எதிர்காலம் கருதி தான் இங்கே வந்தேன். ஆனால் என் மாமியார் என் மகனையே கஷ்ட படுத்து வதால் என்னால் தாங்க முடிய வில்லை.

  என் துன்பம் போக வழி உண்டா ஐயா

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி