Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


ஷிவ் கெரா
Author:

தன்னம்பிக்கை உள்ளவன் தனிமனித ராணுவம்

நிரம்பி இருந்தது, கோவை நேரு விளையாட்டரங்கம். கோவை டெக்ஸிட்டி சுழற்சங்கத்தின் ஏற்பாட்டில் “இந்தியாவின் இளைய சக்தி” என்கிற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் இளைஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலதரப்பினரும் வெல்லும் வழி சொல்லும் ஷிவ் கெராவின் உரை கேட்க உற்சாகமாகக் காத்திருந்தனர்.

“பள்ளி கல்லூரிகளில் படித்து, நீங்கள் மூளைக்குள் சேகரிக்கும் தகவல்களைக் காட்டிலும் வாழ்க்கை குறித்தும், சக மனிதர்கள் குறித்தும் உங்களுக்கு இருக்கிற பார்வையும், அணுகுமுறையுமே உங்களை வெற்றியாளர் ஆக்கும். ஒரு துறையில் முன்னேறியவர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ததில், அவர்களின் அணுகுமுறை 85% தகவல் சேகரிப்பு 15% பங்கெடுத்து அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது தெரியவருகிறது” என்றார் ஷிவ் கெரா.

வாழ்க்கை என்பது வாய்ப்புகளும் சமரசங்களும் நிரம்பிய விளையாட்டுத்தளம். பெற்றோரைத் தேர்ந்தெடுப்பதோ, பிறப்பைத் தேர்ந்தெடுப்பதோ, உங்கள் கையில் இல்லை. ஆனால் கையில் தரப்படும் வாழ்க்கையை உங்களால் நிர்ணயிக்க முடியும். வாழ்வை எதிர் கொள்வதில் கூட உங்கள் அணுகுமுறையைப் பொறுத்தே அனைத்தும் இருக்கிறது. சுத்தியல் கண்ணாடியை சிதறடிக்கிறது. ஆனால் இரும்பை சீரமைக்கிறது.

எப்போதெல்லாம், எங்கெல்லாம் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் ஒரு தனிமனிதர் அதனை ஏற்படுத்தியிருப்பார். தன்னம்பிக்கை உள்ள மனிதன், தனிமனித ராணுவம். பல மாற்றங்களை அவனால் கொண்டு வர முடியும் என்று சொன்ன ஷிவ் கெரா, அவரது புகழ் பெற்ற வாசகமான “வெற்றியாளர்கள் புதுமையான விஷயங்களைச் செய்வதில்லை. விஷயங்களைப் புதுமையாக செய்கின்றனர்” என்பது குறித்து விரிவாக விளக்கினார்.

“தோல்வியடைந்தவர்கள், செய்ய விரும்பாதவற்றை செய்ய வெற்றியாளர்கள் பழகிக்கொள்கிறார்கள்” என்ற ஷிவ் கெரா, உதாரணமாக அதிகாலையில் எழும் வழக்கத்தைக் குறிப்பிட்டார். தோல்வியாளர்கள் அதிகாலையில் எழுவதை விரும்புவதில்லை. இதனை வெற்றியாளர்களும் விரும்புவதில்லை. ஆனால், எழுகிறார்கள். வெறும் அதிர்ஷ்டத்தில் வெற்றியாளர்கள் வெல்வதில்லை. அளவுக்கதிகமான பயிற்சியும் முயற்சியுமே அவர்கள் தங்கள் இலக்குகளை எட்ட காரணம் என்கிறார்கள்.

ஒட்டப்பந்தய வீரர்களைப் பாருங்கள். 15 நிமிட பந்தயத்திற்காக 15 ஆண்டுகள் கடும் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். வெற்றியாளர்கள், தங்கள் பலவீனங் களை உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால் பலன் களில் மேல் கவனம் செலுத்துகிறார்கள். தோல்வி யடைபவர்கள் தங்கள் பலங்கள் தெரிந்திருந்தும் பலவீனங்களிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

“மனித மனம் ஒரு நந்தவனம் போல. நல்ல விதைகளைத் தூவினால் நல்ல செடிகள் முளைக் கும். ஒன்றும் தூவாமல் விட்டுவிட்டால் களைகள் தானாகவே முளைக்கும்” என்றார் ஷிவ்கெரா. கோவை மாவட்டத்தில் மிகவும் நேர்மறை வாய்ந்த தாக்கத்தை ஷிவ் கெராவின் வருகை ஏற்படுத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதோ அவரது “உங்களால் வெல்ல முடியும்” நூலிலிருந்து சில பகுதிகள்.

தவறுதலைத் தோல்வியோடு குழப்பிக் கொள்வது

ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வெற்றியடையத் தவறினால், பெரும்பாலோர் மனச்சோர்வடைந்து, தங்களைத் தாங்களே தோல்வியாளர்களாகப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். தவறுவது என்பது தோல்வியாகாது என்பதை இவர்கள் உணரவில்லை. நான் வெற்றி யடையத் தவறி இருக்கலாம். ஆனால், நான் ஒரு தோல்வியாளன் அல்ல. நான் முட்டாளாக்கப் பட்டிருக்கலாம். ஆனால், நான் ஒரு முட்டாள் அல்ல.

வெற்றிக்கு இலக்குகள் சமச்சீராய் இருக்க வேண்டும்

நமது வாழ்க்கை என்பது ஆறு கம்பிகள் உள்ள சக்கரமாகும்.

1. குடும்பம் – நாம் வாழ்வது, பிழைப்பை நடத்துவது நம்முடைய அன்பைப் பெற்றவர் களுக்காகத்தான்.

2. பொருளாதார நிலை – நமது வேலையையும், பணத்தால் வாங்கமுடிந்த பொருள்களையும் குறிக்கும்.

3. உடல்நிலை – நமக்கு உடல் நலம் இல்லை என்றால் எதற்குமே பொருளில்லை.

4. மனநிலை – அறிவையும், ஞானத்தையும் பிரதிபலிக்கிறது.

5. சமுதாய நிலை – ஒவ்வொருவருக்கும், நிறுவனத்திற்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. அது இல்லாவிட்டால் சமுதாயம் மெல்லச் சாகத் தொடங்கிவிடும்.

6. ஆன்ம நிலை – நமது பண்பு அமைப்பு நெறியையும், நடத்தையையும் பிரதிபலிக் கிறது.

இந்த ஆறு கம்பிகளில் ஏதாவது ஒன்று கோணலாகி விட்டால், நமது வாழ்க்கையையும்

தடம் புரண்டுவிடும். சற்று நேரம் நிதானித்து எண்ணிப் பாருங்கள். இந்த ஆறு கம்பிகளில் ஒன்றை நீங்கள் இழந்து விட்டால், வாழ்க்கை என்னவாக இருக்கும்?

உங்களுடைய இலக்குகளை ஆராய்ந்து பாருங்கள்

எதையுமே குறிவைக்காதவன், ஒருபோதும் குறி தவறுவதில்லை. தாழ்ந்த இலக்கை அமைத்துக் கொள்வது மாபெரும் தவறாகும். வெற்றி யாளர்கள் குறிக்கோளைப் பார்ப்பார்கள்; தோல்வியாளர்கள் தடைகளைப் பார்ப்பார்கள்.

நமது இலக்கு நம்மைத் தூண்டிவிடும் அளவிற்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதே சமயம், மனச்சோர்வைத் தடுத்திடும் அளவிற்கு யதார்த்தமாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற எதுவும், ஒன்று நம்மை இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் அல்லது அதிலிருந்து வெகு தூரம் விலக்கிக் கொண்டு போய்விடும்.

ஒவ்வொரு இலக்கும் கீழ்க்கண்ட முறைகளில் மதிப்பிடப்பட வேண்டும்.

1. இது உண்மையானாதா?

2. இது சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் நியாயமானதாக இருக்குமா?

3. இது எனக்கு நல்லெண்ணத்தைப் பெற்றுத் தருமா?

4. இது எனக்கு உடல் நலத்தையும், செல்வ வளத்தையும், மன அமைதியையும் பெற்றுத் தருமா?

5. இது என்னுடைய பிற இலக்குகளோடு மாறுபடாமல் ஒத்து வருகிறதா?

6. என்னால் இதில் முழுமூச்சுடன் ஈடுபட முடியுமா?

ஒவ்வொரு இலக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டும். எல்லா இலக்குகளும் ஒன்றுக்கொன்று முரண் படாமல் ஒத்துப்போக வேண்டும்.

ஒரு நல்ல தரமான புகைப்படத்தை எடுப்பதற்கு எப்படி ஒரு கேமராவிற்கு ஃபோகஸ் அவசியமோ, அதுபோன்றே ஒரு தரமான, அர்த்தமுள்ள வாழ்வை நடத்த நமக்கு இலக்குகள் அவசியமாகும்.

நூற்றுக்கணக்கானவர்களோடு மூன்று நபர்கள் மராத்தான் பந்தயத்தில் ஓடினார்கள். பதக்கத்தை வென்றதோ நான்காவது நபர். அதற்காக இந்த மூவரும் தோல்வியடைந்து விட்டார்கள் என்று பொருளாகுமா? இல்லவே இல்லை.

அந்த மூவருமே வெவ்வேறு குறிக்கோள் களுடன் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். முதலாமவர், தன் நீடித்த உறுதிப்பாட்டைச் சோதிக்க ஓடினார், அதனையே நிகழ்த்திக் காட்டினார். அவருடைய எதிர்பார்ப்பைவிட சிறப்பாகவே வந்தார்.

இரண்டாமவர், முன்னர் தான் நிகழ்த்தியதை விட முன்னேற்றிக் காட்ட விரும்பினார்; அதனையே செய்தார். மூன்றாமவர், தன் வாழ் நாளில் அதற்கு முன்னால் மராத்தானில் ஒடியதே இல்லை. அவரது குறிக்கோள் பந்தயத்தில் முழுமையாக ஓடி இலக்குக் கோட்டை அடைந்துவிட வேண்டும் என்பதேயாகும். அதனையே அவரும் செய்தார்.

இவை நமக்கு என்ன சொல்கின்றன? வெவ்வேறு குறிக்கோள்களை உடைய அந்த மூவரும் அவற்றை நிறைவேற்றினார்கள். ஆகவே, யார் பதக்கத்தை வென்றிருந்தாலும் அவர்கள் எல்லோருமே வெற்றியாளர்களே.

(முகங்களின் சந்திப்பு தொடரும்….)

 

2 Comments

  1. ananth says:

    நன்றி

  2. raajsekaran says:

    its informative…

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி