Home » Articles » கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?

 
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?


முத்தையா ம
Author:

குவைத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்

ஏப்ரல் 10. குவைத் நேரப்படி காலை 8.30 மணி. குவைத்தில் தரையிறங்கத் தயார் நிலையில் விமானம் இருக்கையின் முன்புறத்திலிருந்த புத்தகங்களை எடுத்தபோது கையோடு வந்தது. அழகிய வண்ண உறையொன்று BALSAM என்று முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது.

குவைத் ஏர்வேஸ், குவைத் வங்கி, குவைத் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக நடத்தும் திட்டமே BALASAM போரில் பாதிக்கப்ப்ட குடும்பங்கள் – அகதிகள் – குழந்தைகளுக்கான உதவி நிதித்திட்டமே அது.

“இனிமேல் போரே வேண்டாம்” என்கிற பிரார்த்தனையை ஒவ்வொரு உள்ளத்திலும் தூண்டுகிற உணர்ச்சிக் குறிப்ப அது. ON BEHALF OF THOUSANDS OF THANNAMBIKKAI READERS IN TAMIL NADU @ INDIA என்கிற குறிப்புடன் அதில் ஒரு சிறு தொகையை வைத்து தரையைத் தொடவும் சரியாக இருந்தது.

நாவுக்கரசர் டாக்டர் சோ. சத்திய சீலன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குவைத்தில் செல்படுகிற தமிழ்நாடு பொறியாளர்கள் கழகம் என்கிற அமைப்பின் ஆண்டு விழாவில் பேசுவதற்காக மேற்கொண்ட பயணம் அது.

வழக்கறிஞர் சுமதி, பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர் உடன் வந்திருந்தனர். செல்வச் செழிப்பின் சிகரத்திலிருக்கிற குவைத்நாட்டின் வழவழப்பான சாலைகளில் வழுக்கிக் கொண்டு போனது கார்.

“கட்டிடக் கலையின் களஞ்சியம்” என்று குவைத் நாட்டைக் சொல்லலாம். அத்தனை அற்புதமான கட்டிடங்கள் சாலைகளெட்டும் காவியங்கள் போல் கம்பீரமாய் நிற்கின்றன.

இத்தனை மகிழ்ச்சிக்கு மத்தியிலும், மனதை உறுத்தியது, அப்பாவித் தமிழர்களுக்கு அங்கே அடிக்கடி நேர்கிற சோகம். வலிய அழைத்து, விமானத்தில் வரவழைத்து, வேலை இல்லையென்று விரட்டுவானேன்?

பல்லாண்டுகளாய் குவைத்தில் பணி புரியும் நண்பர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல் அதிர்ச்சியளிப்பதாய் இருந்தது.

எண்ணெய் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே மனித வளத்திற்கு மகத்தான தேவை குவைத்தில் ஏற்பட்டது. குவைத்தில் இப்போதுள்ள மக்கள் தொகையில் பெரும்பகுதி அந்நியர்கள்தான்.

சுரங்கப்பணிக்காகவும் கட்டுமானப் பணிக்காகவும் ஒப்பந்த அடிப்படையில் மக்கள் வளம் தேவைப்படும் குவைத் நாட்டிற்கு ஒப்பந்ததார்ர்கள தமிழ்நாட்டில் விளம்பரப் படுத்தி வேலைக்கு ஆட்களை வரவழைக்கிறார்கள்.

இதில் துணை ஒப்பந்ததாரர் சரியானவராக இல்லாதபோது, அளவுக்கதிகமாகப் பணம் வாங்குவதும், அதற்காகவே அளவுக்கதிகமாக ஆட்களை பணிக்கு அழைப்பதும் நடக்கிறது. நம்பி வந்த மனிதர்கள் நடுத்தெருவில் நிற்கிற அவலம் நிகழ்கிறது.

தற்போது உலகளாவிய முறையில் நிகழும் ஆள்குறைப்பு குவைத் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. எனவே, முன்பு போல் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடப்பதில்லை. குவைத் நாட்டில் !

குவைத் நாட்டிற்கு வேலை தேடிப் போவது ஒரு ரகம் வேலை கிடைத்துப் போவது இன்னொரு ரகம். வேலை கிடைத்துப் போகிறவர்கள் தவறான ஒப்பந்ததாரரை நம்பி ஏமாந்ததால் சிரமம்தான்.

சமீபத்தில் கூட கைவிடப்பட்ட 1400 தமிழர்கள் தெருவோரங்களில் தத்தளித்திருக்கின்றனர். குவைத் நாட்டின் தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி நிதி திரட்டி ஊருக்கு அனுப்பி வைத்திருக்கின்றன.

அப்படியானால், நம்பகமான ஒப்பந்ததாரரைக் கண்டுபிடிக்க என்ன வழி? ஏதுமில்லை என்பதே உண்மை. “தீர விசாரிப்பதே மெய்” என்கிற பழமொழிதான் இங்கே பொருந்தும். ஆம்! ஏமாற்றும் ஆட்கள் பெரும்பாலும் குவைத்தில் இல்லை! தமிழ்நாட்டில் உள்ள துணை ஒபந்த தார்ர்களில் சிலர்தான் இந்தத் திருப்பணியைச் செய்கிறார்கள். எனவே, நம்பகமானவர்கள் என்று நன்றாகத் தெரிந்தால் மட்டுமே பெயர் கொடுப்பதோ, பணம் கொடுப்பதோ புத்திசாலித்தனம்.

குவைத்தில் நிறைய தமிழ்க் குடும்பங்கள் உண்டு. பெரும்பாலான தமிழர்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். குவைத் நாட்டின் சட்ட திட்டங்கள் மிக்க் கடுமையானவை. அங்கேபெண்களக்கு ஓட்டுரிமை கிடையாது. ஆண்களில் மிகச் சிலருக்கு மட்டுமே ஓட்டுரிமை உண்டு.

குவைத் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வேற்று நாட்டவர் யாராவது குவைத்தில் தொழில் தொடங்குவதாக இருந்தால் குவைத் நாட்டுக் குடிமகன் ஒருவர் பங்குதாரராக இருக்க வேண்டும். அவருக்கு 51% பங்கு அவசியம்.

குழந்தைகள் – பெரியவர்கள் என்று பேதமின்றி எப்போதும் கையில் அடையாள அட்டை இருக்க வேண்டும். இல்லையென்றால் போலீஸ் அள்ளிக்கொண்டு போய்விடும். குழந்தைகள்பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் கொண்டுபோக மறந்தாலும் அடையாள அட்டை கொண்டு செல்ல மறப்பதில்லை.

இந்தனைக்கும் மத்தியில் தமிழர்கள் ஒற்றுபை உணர்வுடன் வாழ்வதும் தமிழ்ச் சூழல் மாறாமல் இல்லங்களை உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சி தருகிற விஷயம்.

தமிழ்நாடு பொறியாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவில், தொழில் தகவல் அடங்கிய சிடி ரோம் ஒன்று வெளியிட்டனர். குவைத் நாட்டு பொறியாளர்கள் தலைவர் அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழ்நாடு பொறியாளர் கழகம் போலவே இருக்கிறது. அதற்கு, திரு. வேணுகோபால் என்கிற தமிழர்தான் தலைவர். திரு. வேணுகோபால், தமிழ்நாடு பொறியாளர் கழகத்தலைவர் திரு. வரத ராஜன் செயலாளர் திரு. கல்யாண வெங்கடேஷ்வரன் போன்றோர் தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாகப் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு முக்கிய நிகழ்ச்சி 12.04.2002 அன்று குவைத் தமிழ்நாடு பொறியாளர் கழக ஆண்டு விழாவில் அரங்கேறியது. குவைத் பொறியாள் அமைப்பு எந்தப் பல்கலைக் கழகத்தைப் பரிந்துரை செய்கிறதோ, அந்தப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டதாரிகளுக்கு குவைத் நாட்டில் பொறியாளர் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இதற்காக குவைத் நாட்டு பொறியாளர் கழகத் தலைவரை ஒரு திரு. வேணுகோபால் நமது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சமீபத்தில் அழைத்து வந்தார்.

பல்கலைக் கழகத்தின் வசதிகளைப் பார்த்து பெரிதும் வியந்த அந்த குவைத் நாட்டுப் பொறியாளர் தலைவர், உடனடியாக அண்ணா பல்கலைக் கழகத்தை அங்கீகரிக்க பரிந்துரை தந்துள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுள்ள இந்த வேளையில் இந்த அங்கீகாரம், பொறியியல் பட்டதாரிகளுக்கு நம்பிக்கை தருகிற நல்ல செய்தி.

தொடர்ந்து நிகழந்த விவாத மேடைக்குத் தலைமையேற்றுப் பேசும்போது மேற்கண்ட நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு “திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ய வேண்டும்” என்ற பாரதியின் கனவை குவைத் நாட்டுத் தமிழர்கள் நிறைவேற்றியிருப்பதாக நெகிழ்ச்சியோடு பாராட்டினேன்.

இந்தியர்களுக்கு குவைத்தில் தனி மரியாதை எப்போதும் இருக்கிறது. 1962 வரை இந்தியக் கரன்சிதான் குவைத் நாட்டின் கரன்சியாக இருந்திருக்கிறது. பிறகுதான் தினார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்த்தத்தில் சொல்வதென்றால் குவைத் நாட்டில் வேலைவாய்ப்பு என்பது பொன் முட்டை இடும் வாத்து. பொறுமையாக இருப்பவர்கள் புதையல் எடுக்கிறார்கள். அவசரப்படுபவர்கள் ஆபத்தை சந்திக்கிறார்கள்.

அடுத்த இதழில், குவைத் நாட்டில் தன்னம்பிக்கையால் தலையெடுத்த மனிதர்கள் சிலரைச் சந்திப்போம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்