Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

அழகு –

எளிமையான சிறிய வார்த்தைதான். ஆனால் கணவன் – மனைவி – குடும்பத்தினருக்கிடையே நெருக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் சக்தி இதற்குண்டு.

அழகுணர்ச்சி நம் எல்லோருக்குள்ளும், இயல்பாகவே ஊற்றெடுக்கிறது. ஆனால், பல சமயங்களில் அதைப் பயன்படுத்தாமல், நடைமுறைப்படுத்தாமல் துருப்பிடிக்கச் செய்து விடுகிறோம்.

சிலரின் வீட்டுக்குள் நுழையும்போதே இதமான வாசனை நம்மை வரவேற்கும். அளவான வீடாயிருந்தாலும் சுத்தமும், பொருட்களை சரியான இடங்களில் வைத்திருக்கும் நேர்த்தியும், காற்றில் தலையாட்டும் செடிகளும் நம்மை பரவசப்படுத்தும்.

வேலை, பணம் என பல்வேறு காரணங்களுக்காக வெளியே சுற்றித் திரிந்தாலும் நாம் அடைக்கலம் தேடி ஓடிவரும் இடம் நம் வீடுதான்.

‘இல்லம்’ என்பது எந்த அளவிற்கு நம் உணர்வோடு சம்பந்தப்பட்ட பின்னிப் பிணைந்த விஷயம் எனபதை ஏற்கனவே ஆராய்ந்திருக்கிறோம்.

கடுமையாக உழைக்கும்போதும், வெளியில் அலையும் போதும் நம் மனம் ஒரு சீரான அலைவரிசையில் இல்லாமல், ஏற்ற இறக்கங்களோடு இயங்குகிறது. அமைதியான, தூய்மையான இல்லத்திற்குள் நுழையும்போது ‘டென்ஷன்’ குறைந்து மனம் ஆசுவாசமடைகிறது.

கணவனும், குழந்தைகளும் அலுவலகம், பள்ளியிலிருந்து சோர்வாக வீடு திரும்புகிறார்கள். உள்ளே நுழைந்ததும் தரையில் காபிக்கறை, சோபா முழுவதும் சிதறிக்கிடக்கும் பேப்பர் புத்தகங்கள், அறையின் மூலையில் அழுக்குத் துணிகள், டீப்பாயில் கழுவப்படாத தம்ளர்கள் இவற்றுக்கு நடுவே தூங்கி எழுந்த முகத்துடன் இல்லத்தரசி..!

இத்தகைய சூழ்நிலையை கற்பனை செய்து பார்க்கவே பிடிக்கவில்லை. இல்லையா? குழந்தைகள் பெற்றோரைப் பார்த்து தான் பல விஷயங்களக்கற்றுக் கொள்கிறார்கள். அதிலும் நல்ல விஷயங்களைவிட, கெட்ட விஷயங்கள் மிக எளிதாக, வேகமாக அதி ஆழமாக அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது.

ஆரம்பத்திலேயே நம்முடைய சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைக்க பழக வேண்டும் இல்லையென்றால் இந்த குணம் வளர்ந்து வளர்ந்து மனநோய் ஏற்பட வழி வகுத்துவிடும்.

சில வருடங்களுக்கு முன்னால் செய்தித் தாளில் வெளியான இச்செய்தியே ஒரு உதாரணம்.

ஐம்பது வயதுப் பெண் ஒருத்தி வட மாநில நகமொன்றில்தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சில மாதங்களாக அந்த வீட்டிலிருந்து ஏதோ நாற்றம். அகம் பக்கத்திலிருப்பவர்களுக்கு ஒன்றம் புரியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு நாற்றம் சகிக்க முடியாமல் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சில நிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்த அலவலக ஆட்கள் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் கண்ணால் பார்த்த காட்சியை நம்ப முடியாமல் திகைத்துவிட்டனர்.

ஒரு அறை முழுவதம் மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. ஒன்றரை வருடங்களாக அவள் குப்பையைக் கொட்டவே இல்லையாம். விரக்தி சோம்பேறித்தனம் என ஆரம்பித்த இந்தப் போகு அவளது முனநிலையையே பாதிக்குமளவிற்கு தீவிரமாகி விட்டிருக்கிறது.

பொருட்களை அவ்வப்போது இடம் மாற்றி வையுங்கள். ஒட்டடை, தூசிகளை உடனுக்குடன் சுத்தப்படுத்துங்கள். யூடி கொலான், ரூம் ஸ்பிரே, ஊதுபத்தி இவற்றைப் பயன்படுத்துங்கள்.

சாக்லேட் சாப்பிட்டு முடித்த பின்னும் அந்தக் காகித்த்தை தூக்கிப்போட மனம் வராமல் பென்சில் பாக்சில் குழந்தைகள் பத்திரப்படுத்தி வைப்பதுபோல நம்மில் பெரும்பாலானோர் டிவி, பிரிட்ஜ் இவற்றின் அட்டைப் பெட்டிகளை தூக்கி எறிய மனமில்லாமல் பரணிலோ, கட்டிலுக்கடியிலோ பத்திரமாய் வைத்திருப்போம்.

வீடும் மாறும் போது உபயோகப்படும் என்று காரணம் சொல்லிக் கொண்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு மழைத்தண்ணீர், தூசி படிந்து அலங்கோலமான நிலையிலிருக்கும். தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்துங்கள். அல்லது யாருக்காவது தேவைப்பட்டால் முழுமனதுடன் கொடுத்து விடுங்கள்.

இந்த அழகுணர்ச்சி உடை விஷயத்திலும் அவசியம். சுத்தமான உடையும், பொருத்தமான அலங்காரமும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி மனச்சோர்வை அகற்றும்.

கல்யாணம் தான் ஆகிப்போச்சே இனி என்ன வேண்டியிருக்கிறது அலங்காரமும் ஆர்ப்பாட்டமும்…? என்ற மனநிலையை மாற்றுங்கள். திருமணத்தோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. காமா, சோமா, என்றில்லாமல் நேர்த்தியாய் பளிச்சென்றிருங்கள்.

உலக அழகிகளெல்லாம் அழகாயிருப்பதற்குக் காரணம் அழகல்ல. அவர்களின் மனநிலைதான். வெளிச்சம் கண்ணாடியில் பட்டு பிரதிபலிப்பதுபோல்தான் இதுவும். நான் அழகு என்ற எண்ணமும், கர்வமும் அவர்களன் அடி மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பி வெளிப்படுத்துகிறது. அப்படி வெளிப்படும் அந்த எண்ணம் நம்மையும் தாக்குதன் விளைவாகத்தான், நாம் அவர்கள் அழகிகள் என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.

மனதை ஒருமுகப்படுத்தி உற்றுப் பார்த்தால் அவர்களின் அந்த கர்வம் நம் கண்ணுக்குத் தெரியும். அதைக் கடந்து பார்த்தோமானால் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைவிட ‘ஐஸ்வர்யா ராய்’ ஒன்றும் அழகியல்ல என்பது புரியும்.

எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையைத் துடைத்தெரிந்து நான் அழகிதான், அழகன்தான் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உடுத்தும் உடை, இருப்பிடம் இவை அனைத்தையும் விட அதி முக்கியமான விஷயம் நம் மனம். பல சமயங்களில் மனம் ஒன்றிருப்பதையே மறந்து விடுகிறோம். நம் மனதிற்குள் சேர்ந்து கிடக்கும் அழுக்குகளைப் பற்றி கவனிக்க மறந்து விடுகிறோம்.

வீட்டிற்குள் சேர்த்து வைத்த குப்பை எப்படி நாற்றமடிக்கிறதோ, அதே போல் நம் மனதிற்குள்ளிருக்கும் அடைசல்கள் என்றாவது பீறிட்டு வரும்போது விளைவு விபரீதமாயிருக்கும்.

தாழ்வு மனப்பான்மை, பொறாமை, சந்தேகம், அடுத்தவரை அழித்தல், துரோகம் செய்தல் இப்படி ஒவ்வொரு குப்பையாகச் சேர்ந்து சேர்ந்து நம் மனமே குப்பைக் தொட்டியாகிவிடுகிறது.

தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதைப் போல், தினமும் யோகா, தியானம் மூலம் உங்கள் உள்ளுறுப்புகளையும், மனதையும் சுத்தம் செய்யுங்கள். வாரம் ஒரு முறை ஒட்டடை அடிப்பதுபோல், வாரம் ஒருமுறையாவது புனிதக் காரியங்களில் ஈடுபடுங்கள். மனதை பரிசுத்தமாக அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.

நம் மனம்தான் வார்த்தைகளாக வெளிவருகிறது. நம் எண்ணங்களை வார்த்தைகளின் வாயிலாகத்தான் வெளிப்படுத்துகிறோம். நாவு என்று ஒன்றில்லாமலிருந்தால் உலகில் பல பிரச்சனைகளுக்கே இடமிருந்திருக்காது.

ஒரு நாளில் ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறோமென்றால் அதில் பத்து வார்த்தைகளாவது நல்ல விஷயங்களைப் பற்றினதாய், அடுத்தவர்க்கு ஆறுதலிக்கும் விதமாய், நம்பிக்கையூட்டக் கூடியதாய் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

வார்த்தைகளைக் கொட்டும் முன் யோசியுங்கள். உங்கள் வார்த்தைகள்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டக்கூடிய அளவுகோல். மூடி வைத்திருக்கும் உங்கள் மன விகாரம் ஒரு வார்த்தையில் வெளிப்படுவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்துங்கள். கடிந்து கொள்வதைக் கூட கச்சிதமான வார்த்தைகளால் அறிவுறுத்துங்கள்.

சிலுக்கு வாயைத் திறந்தாலே சர்வ சாதாரணமாய் கெட்ட வார்த்தைகள் புரளும். பிறகு, வெறும் வார்த்தைதானே சொன்னேன். கெட்ட வார்த்தையில் திட்டினேங்கறதால அப்படி நினைச்சேன் என்று அர்த்தமா? என்று சமாதானம் செய்வார்கள். இது வெட்டி வேதாந்தம். எப்படி நினைத்துப் பேசினாலும், கேட்பவரின் மனதைப் பாதிக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. தயவு செய்து வக்கிரமான வார்த்தைகளைப் பேசாதீர்கள். குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத் துணையிடத்தில்.

உங்களது வார்த்தைகள் மருந்தாக இல்லாவிட்டாலம், குறைந்தபட்சம் ரணமாக்காமலாவது இருக்கட்டும்.

உங்களது அன்பை அழகான வார்த்தைகளாய், கவித்துவமான செயல்களால் வெளிப்படுத்துங்கள்.

இல்லம், உடை, மனம், வார்த்தைகள் இவற்றில் பொங்கி வழியும் அழகுணர்ச்சி. உங்கள் காதலை வளர்த்து குடும்பத்தை குதூகலமாக்கும்.

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்