Home » Articles » வணக்கம் தலைவரே!

 
வணக்கம் தலைவரே!


முத்தையா ம
Author:

அறிவியல் யுகத்தின் அசுர வளர்ச்சி. ஒவ்வொரு தனிமனிதனையும் தனக்குள் இருக்கும் ஆற்றலை, உணரச் செய்வதன் மூலம் தனி மனிதர்கள் மீதான மோகத்தையும், மயக்கத்தையும் பெருமளவு தணித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 21-ம் நூற்றாண்டின் ஆரம்பம், இளைஞர்களிடம் தங்களைக் குறித்த அக்கறையை, கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் கண்மூடித்தனமாக தலைவர்களைப் பின் பற்றும் போக்கு குறையும் என்றே எதிர் பார்க்கலாம். இன்னொரு முக்கிய காரணம், சமூகம் முழுதையும் ஒரே பிள்ளியில் குவிக்கின்ற தீவிரத் தன்மை வாய்ந்த பொதுச் சிக்கல் எதுவும் பெரியதாய் எழவில்லை.

பொதுவாகவே, நெருக்கடிகள் இல்லாத நேரத்தில் ஒரு தலைவர் உருவாக வாய்ப்பில்லை. அதுவும், பொருளாதார மேம்பாடு என்கிற பெரு வெள்ளத்தில் மனித சமூகம், அடித்துச் செல்லப்படும் நேரத்தில், சமூகம் சரித்திர புருஷர்களை உருவாக்குவதில்லை.

எனவே, தனக்குள்ளிருக்கும் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதே ஒவ்வொரு தனி மனிதனையும் மேம்படுத்தும். தலைமை என்றால், தெளிவு, துணிவு, இயல்பாக இருத்தல், கூர்மையாக முடிவெடுத்தல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

எதிரும் புதிருமான, இரண்டு சம்பவங்களை இங்கே நாம், நினைவு கூறலாம். இந்திய விடுதலைக்கு முன் காந்தியடிகள் இங்கிலாந்து சென்றிருந்தார். அகிம்சை நெறியே விடுதலைக்கு வழி என்பதை அவர் பெரியதும் வலியுறுத்தி வந்த நேரமது. தீவிரவாத்தின் வழியாகத்தான் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தர முடியும் என்று கருதிய தலைவர்கள் சிலர் காந்தியடிகளை ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராய் அழைத்திருந்தார்கள்.

சிரித்த முகத்துடன் ஏவப்பட்ட எல்லா வேலைகளையும், செய்து முடித்தார் காந்தியடிகள். ஏற்பாடு செய்திருந்தவர்கள் வந்த பிறகு தான், சேவகம் புரிந்தவரே சிறப்பு விருந்தினர் என்கிற செய்தி தெரியவந்தது.

மற்றவர்களின் தொண்டுக்கு முன், தானும் ஒரு தொண்டர்தான் என்ற உணர்வோடு, தான் தலைமை விருந்தினர் என்கிற தன் முனைப்பே இல்லாமல், தொண்டு புரிவதில் ஆர்வமுடன் ஈடுபட்ட காந்தியடிகள் தன்னலமற்ற, தலைமையின் தன்னிகரற்ற உதாரணமாய் இன்றும் திகழ்கிறார்.

இதேபோல இன்னொரு சம்பவம், சோனி நிறுவத்தை உருவாக்கிய அக்கியோ மெரிடா, Made in Japan என்கிற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார். (இந்நூல் தமிழில் , “சோனி நிறுவனம் வளர்ந்த கதை” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது). அதில் ஒரு நிகழ்ச்சியை அக்கியோ மெரிடா குறிப்பிடுகிறார்.

ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன் அவர் சார்பாக ஒரு நிபுணர் ஜப்பான் வந்திருந்தார்.

ஜப்பான், போர் கப்பல்களை உருவாக்கி அமெரிக்காவிறகு வழங்க வேண்டும் என்கிற ஆலோசனையை அவர் சொன்னார். ஜப்பானிய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி போருக்கு எதிரானது என்பதால் அதை செய்ய இயலாது என்று ஜப்பான் மறுத்தது. உடனே, அந்த அமெரிக்க நிபுணர் ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்கினார். அப்படியானால், உங்கள் அரசியல் சட்டத்தை மாற்றுங்களேன் என்று.

தன்னலத்தின் உச்சத்திலிருந்துதான் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எழ முடியும். பொதுவாழ்க்கை என்பது ஆதாயம்தேடும் சூதாட்டம் என்பதை மக்கள் எப்போதும் ஏற்பதில்லை.

தமிழ்நாடு, முற்போக்கு எழுத்தாளர் சங்க, நிகழ்ச்சிகளில் கரிசல் குயில்கள் என்னும் இசைக்குழுவினர் பாடும் பாடல்களில் மிகவும் பிரபலமான ஒரு பாடல், “எட்டய புரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பார்த்தியா மாடத்தி” என்கிற பாடல். இதில், ஒரு இடம்,

– “பாரதி எழுதிய பாரத ஜாதகம் பலனளிக்காததேன் மாடத்தி – இன்று.

சாரதியாய் நின்று தேரை நடத்துவோர் தன்னலம் மிக்கவர் மாடத்தி”

என்பது அந்த வரி.

எனவே, இதன் மூலம் நாம் புரிந்துகொள்கிற உண்மையே, தலைமைப் பண்பின் 26 வது விதியாகிறது.

தன்னல மறுப்பு என்பது பொது வாழ்க்கைக்கான தியாகமல்ல, தகுதி!

(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்