Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

அதிகாலை 4 மணிக்கே எழுவோம்

அதிகாலை எழுதல் மிகவும் நல்லது. அப்போது மனம் அமைதியாக இருக்கும். உயர் நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலக்கழக மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து படிக்கத்தொடங்கிவிடுதல் மிகவும் பயனுள்ளதாகும்.

படித்தவை மனதில் பதியும், மனப்பாடப் பகுதிகளை இந்த நேரத்தில் படித்தால் விரைவில் மனப்பாடம் செய்து விடலாம்.

இவ்வாறு தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கே எழுந்து தங்கள் கடமையில் கருத்துச் செலுத்துகின்றவர்களில் உங்களுக்குத் தெரிந்த சிலரை எண்ணிப்பாருங்கள்.

அவர்கள் வாழ்வில் உறுதியாக வெற்றி பெற்றிருப்பார்கள். குடும்பத்திலும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் இத்தகையவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும்.

“அதிகாலையில் எழுதுபவனை வெல்வது அரிது” என்பது நீங்கள் அறியாதது அல்ல.

உறங்கி ஓய்வுகொண்டபின் உடம்பு புதுத்தெம்போடு செயல்படுகின்றது.

அதிகாலையில் உலகம் அமைதியாக இருக்கிறது. மனமும் சலனமற்று இருக்கிறது.

அமைதி தவழும் இடத்தில் ஈர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். தூய எண்ணங்கள் மலர்கின்றன.

புதிய ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் உருவாகின்றன.

அவரவர் இலட்சியங்களை அடைவதற்கான வெளிச்சம் மின்னல்போல் தோன்றுகிறது.

உழைப்பு – உழைப்பு – ஓயாத உழைப்பு என்று மனிதன் உழைப்பில் மூழ்கிவிடுகிறான்.

அதிகாலை நேரமோ அதிசயமான ஆற்றல் வாய்ந்த நேரம். இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுவதால் குடும்பமே சுறுசுறுப்படைகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கின்றது.

அதிகாலையில் ஓர் இரண்டு நிமிடம் நாதசுர இசை அல்லது உயர்வான பாடல்களைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் உயர்ந்து நிற்தை உணரலாம்.

சில இல்லங்களில் குழந்தைகளை எழுப்ப இசையையே பயன்படுத்துகிறார்கள். மாறான குடும்பங்களும் உண்டு.

அதிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லையா?

உங்கள் இலடசியத்தை மனக்கண் முன் நிறுத்துகள் இலட்சியத்தின் முடிவில் நீங்கள் அடையப் போகின்ற நன்மைகளை, உயர்வுகளை எண்ணிப்பாருங்கள்.

உங்கள் இலட்சியத்தை அடைய முடியாதபோது நீங்கள் அடையவிருக்கும் தோல்வியை, துன்பத்தை ஒருகணம் எண்ணிப்பாருங்கள். எழுந்திருக்கத் தோன்றும்.

நீங்கள் அதிகாலையில் எழுந்ததால் அண்மையில் பெற்ற நன்மையை, பெற்ற பாராட்டை எண்ணிப்பாருங்கள். எழுந்திருக்கத் தோன்றும். உங்கள் இலட்சியத்தை அடைய நீங்களே தடையாக, உங்கள் தூக்கமே தடையாக இருக்கக்கூடாது.

முதலில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கப் பழகுங்கள். பல மாதங்களுக்குப்பின்னர் அலாரம் கூடத் தேவையில்லை. எத்தனை மணிக்குப் படுத்தாலும் 4 மணிக்கு விழிப்புத்தோன்றிவிடும். இப்படி நீண்ட நாள் பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் எழுந்திருக்கும் நேரம் சரியாக 4 மணியாக இருக்கும்.

எழுந்த பிறகும் தூக்கம் வருகிறதா?

சிலர் எழுந்திருப்பார்கள். சிறிது நேரம் படிப்பார்கள். மீண்டும் படுத்துக்கொள்வார்கள். எழுந்தபிறகு நாம் எடுத்துக்கொண்ட வேலையில் ஈடுபாடு இல்லாவிட்டால் இடையில் தூக்கம் வருவது இயல்புதான்.

அதனால் எழுந்தவுடன் பல் துலக்கி, குளிர்நீரில் முகம் கழுவி, ஒரு டம்ளர் குளிர்நீர் குடித்து விட்டால் தூக்கம் அறவே போய்விடும்.

மாணவர்கள் சோர்வின்றி ஆறு மணிவரை நன்றாகப் படிக்கலாம். மற்றவர்கள் அவரவர் பணியினைத் தொடரலாம். அதற்கு மேலும் ‘தூக்கம் வந்தால் சற்று நேரம் எழுந்து படிக்கலாம். அல்லது படிப்பதை விட்டு எழுதிப் பார்க்கலாம். அல்லது இரண்டு மூன்று முறை உட்கார்ந்து எழுந்திருக்கலாம். தூக்கம் போய் விடும்.

கற்பனைகள் தோன்றும்

சிலர் படிக்கும்போது படிப்பில் மனம் ஈடுபடாவிட்டால் வெவ்வேறு நினைவுகள் தோன்றும். அந்த நினைவிலிருந்து கிளைத்துப் புது புது எண்ணங்களில் மனம் அலைபாயும். இவர் விழித்திருப்பாரே தவிர, நேரத்தைப் பயனுள்ள வழியில் கழிக்கமாட்டார்.

அதானல் இத்தகையர்கள் வீட்டில்தூங்கின்ற மற்றவர்களுக்குத் தொல்லையில்லாத வகையில் வாய் விட்டுப்படிப்பது நல்லது. வாய்விட்டுப் படிப்பதால் கவனம் சிதாறது. கவனம் படிப்பில் இருக்கும்.

பள்ளிகளில் கூட வாய் விட்டுப் படிக்கும் பழக்கம் இல்லாமையினாலேயே இன்று பலருக்கு உச்சரிப்பும் சரியாய் இருப்பதில்லை – பேசவும் வருவதில்லை. வாய்விட்டுப் படிக்காதவர்கள் இதை நிச்சயம் உணர்வார்கள்.

அதனால் நமது நோக்கம் விழித்திருக்க வேண்டும் என்பது அல்ல. நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

காலை நேரமே சிறந்த நேரம்

ஒரு நாளில் மிகச் சிறந்த நேரம் எது என்றால் அது அதிகாலை நேரம்தான்.

சிலருக்கு மாலை, மதியம், முன்னிரவு, பின்னிரவு என்றுகூட இருக்கலாம். அவை விதிவிலக்கானவை. அதிகாலை நேரத்தில் தான் மனித ஆற்றல் முழு வீச்சில் செயல்படுகிறது.

மாலை நேரத்திலும் இரவு எட்டு ஒன்பது மணிக்கும் நமது உடல் உழைத்து, உள்ளம் களைத்து, ஓரளவு சோர்ந்த நிலையை நாம் அடைந்து விடுகிறோம். அது நமக்கே நன்றாகத் தெரிகிறது.

யாராவது ஏதேனும் சொன்னால்கூட அதை நாம் முழு ஈடுபாட்டோடு கேட்க முடிவதில்லை. ஆனால் காலை, அதுவும் அதிகாலை நேரம் நமது ஆற்றல், அறிவின் தெளிவு சிறப்பாகச் செயல்படுகின்ற நேரம், சுறுசுறுப்பாக இயங்க முடிகின்றது.

இயற்கை கண் விழிக்கும் நேரம்

காலை நேரம் இயற்கைப் பொருள்கள் எல்லாம் மலர்ந்து மணம் வீசும் நேரம். அனைத்து உயிர்களும் விழித்தெழுந்து தமது கடமையை ஆற்றும் நேரம். நாம் மட்டும் ஏன் சோம்பிக் கிடக்க வேண்டும்?

அதிகாலை 4 மணிக்கு எழுவதை இலட்சியமாக்க் கொள்வோம். அந்த இரண்டு மணிநேரம் நமது வாழ்க்கையில் கிடைத்தற்கரிய நேரம் என்பதை உணர்ந்து பயன்படுத்துவோம்.

இந்த இலட்சியத்தில் வெற்றி பெற்றால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுகிறீர்கள். இது உறுதி.

இன்று முதல் அதிகாலை 4 மணிக்கு எழுங்கள். இதுவே உங்கள் வெற்றிக்கு முதல்படி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்