Home » Articles » ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்

 
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்


admin
Author:

‘மனிதன் மேல்நிலைக்குச்செல்லமுற்படும்போது, அவன் உயர்வுக்குபெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல்’ என்று ஜக்கி வாசுதேவ் அவர்க் எழுதியுள்ளதைக் கடந்த இதழில் படித்திருப்பீர்கள்.

‘மலச்சிக்கல் இல்லாமல் விடிகிற பொழுது மனச்சிக்கல் இல்லாமல் முடிகிற பொழுது இதுதான் மனிதனுடைய அடிப்படைத் தேவை’ என்று வைரமுத்து வாய்மலர்ந்துள்ளதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? உடலோம்பலின் முக்கியத்துவத்தையல்லவா. திரைகடலோடி திரவியம் சேர்க்கவும், தேர்ந்த அறிவியல் ஞானம் பெறவும், ஆய்வுகள் நடத்தி அற்புதம் படைக்கவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் எவரும் உன்னதம புரிய அடிப்படையான உடலைப் போற்றிட தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயாரிக்கத் தெரிந்திருப்பது நல்லது.

ஆஸ்திரேலியாவில் இருந்த அந்த ஒரு மாதம், புதிய சூழ்நிலையில் உடல் நலம் குறையாமல், சென்ற நோக்கம் நிறைவேறும் வகையில் வெற்றிகரமாக முடித்துவர இயன்றதென்றால் அதற்கு பள்ளிப் பருவத்திலே என் தாய் சமையலையும் பயிற்றுவித்திருந்தது பெரிதும் உதவியது.

தாய்க்குத் தலைமகன் நான். வயல் வேலை முடித்து மாலையில் என் தாய், வீடு வந்து சேர்வதற்குள் தம்பிமார்கள் பசியால் வாடிவிடக்கூடாதே என்று இரவு சமையல் என்பது பள்ளிப்படிப்பு முடியும் வரை எனது பணியாக இருந்தது. சனி, ஞாயிறு நாள்களில் அழுக்குத் துணிகளை வெளுப்பதும், அடுத்த ஒரு வாரத்திற்குத் தேவையான துணிகளை தேய்த்து மடித்து வைப்பதும் வாடிக்கை.

துள்ளி விளையாட வேண்டிய பள்ளிப் பருவத்தில், அப்போது சற்று சுமையாகத்தான் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம் உணவுக்கு சிக்கலின்றி உடைவெளுக்க செலவின்றி சுகமாகக் கழிந்ததை எண்ணிப்பார்த்தால் உண்மை புரியும்.

எந்த சூழ்நிலையிலும் எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்து இல்லாமல் தன்னம்பிக்கையுடன் தனித்து நிமிர்ந்து நிற்க இளமைக்காலத்தில் அன்னையிடம் பயின்றவை துணைபுரிந்தன.

எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருக்க பழகிவிட்டவர்கள் ஒரு போதும் சாதனையாளர்களாக ஆகமுடியாது. அதவும் இப்போதெல்லாம் தாய்மார்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், நமது பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே, புகுந்த வீட்டில் சமைக்காமல், கூட்டாமல் உட்கார்ந்து கொண்டு சுகமாக இருக்கும் வகையில் வீட்டு வேலைக்கு ஆள் இருகிற இடமாகப் பார்க்கிறார்கள். உழைப்பதைக் கேவலம் என்று யார் எண்ணுகிறார்களோ அவர்கள் ஒரு போதும் வளர்ச்சி அடைய முடியாது.

ஆஸ்திரேலியாவில் நான் அறிந்த வரையில் 15 வயதுக்குப் பிறகு பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆனால் இங்கே ஒருவர் உழைக்க ஒன்பது பேர் உட்கார்ந்து உண்டு களிப்பதைப் பார்க்கிறோம். பதினைந்து வயதில் பெரும்பாலான அஸ்திரேலிய பெண்களும் ஆண்களும் பகுதிநேர வேலை பார்த்து உழைத்துச் சம்பாதித்துதான் தங்கள் படிப்பைத் தொடர்கிறார்கள்.பெற்றோரைவிட்டு வெளியேறி, விடுதிகளில் தங்கி வாழ்கிறார்கள்.

நான் தங்கி இருந்த இல்லத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவரும் தங்கி இருந்தார். உங்கள் பெற்றோர்கள் உங்கள் படிப்புச் செலவுக்கு பணம் அனுப்புகிறார்களா என்று கேட்டேன். “அவர்கள் எதற்காக அனுப்ப வேண்டும். எனது தேவைகளுக்கு நானே ஓய்வு நேரத்தில் வேலை செய்து சம்பாதிக்கிறேன். படிப்பதற்கு அது தடையாக இல்லை” என்றார்.

ஒரு பக்கத்தில் உழைப்பைப் போற்றுகிற சமுதாயமாக இருந்தாலும் பெற்றோர்களின் அன்பை, பாசத்தை, வழிகாட்டுதலை, கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார்கள். இதனால் பிஞ்சிலே பழுத்து விடுகிறார்கள்.

நமது குடும்ப அமைப்பும், சமூக ஒழுக்கமும் எவ்வளவு சிறந்தது, மேலானது என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது. அறிந்ததை, வாழ்க்கைக்குத் தேவையானதை, சமூக ஒழுக்கங்களை எல்லாம் பயிற்றுவித்த பெற்றோர்கள் இப்போது அதைச் செய்யத் தவறுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இதற்கு மாறாக நமது பண்பாட்டை இன்னும் உயர்த்திப் பிடிக்கிற பண்பாட்டுப் பெட்டகங்களாகத் திகழ்கின்ற பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பக்கம் கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து + படிக்கும் ஒரு மாணவி எழுதிய கடிதம் தன்னம்பிக்கை அலுவலகத்திறகு வந்தது. தொழிற் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறவும் சோம்பலை அகற்றவும் வழிகாட்டும்படி அந்தக் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எப்படியெல்லாம் படித்தா வெற்றிப்படியை எட்டிப் பிடிக்க முடியும் என்று நான் எண்ணியபடி அவர்களுக்கு கடிதத்தில் எழுதியிருந்தேன். அதன் பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து அந்த மாணவியின் தாயாரிடமிருது எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.

‘உங்கள் கடிதம் என் மகளிடம் நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. முன்பெலாம் வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள். இப்போது வீட்டு வேலைகளைச் செய்கிறாள். வாழ்க்கைக்கு அவசியமானதையும் கற்றுக்கொள்கிறாள். பெரிதும் உதவியாக இருக்கிறாள். முன்பைவிட நன்கு படிக்கிறாள்’ என்று நன்றி சொல்லி எழுதி இருந்தார்கள்.

நான் என்ன எழுதியிருந்தேன் என்றால், அதிக மதிப்பெண்கள்பெறவேண்டும் எனில் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல உடற்பயிற்சியும் தேவை. அதற்காக ஆடுகளத்திற்குச் சென்று விளையாட வேண்டும் என்ற அவசியமில்லை. உடல் உழைப்பை செலவிடும் வகையில் வீட்டை சுத்தம் செய்வது, வீட்டுக் காயகறிதோட்டத்தில் களை எடுப்பது, அதற்குத் தண்ணீர் ஊற்றுவது, சமையல் கூடத்தில் அம்மாவுக்கு உதவியாக இருப்பது கூட உடற்பிற்சிதான் என்று எழுதியிருந்தேன்.

தங்களுடைய பெண் மதிப்பெண் மட்டுமல்ல, மற்றவர்களை மதிக்கிற பண்பையும், மற்றவர்கள் மதிப்பைப் பெறுகிற பண்புகளையும் அறிந்தவளாக வளர்ந்திட வேண்டும் என்று நினைக்கிற உன்னதமானவர்களுக்கு இந்த தாய் ஓர் உதாரணம்.

தமிழ்நாடு கலைநடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இப்போதைய துணைவேந்தர் டாக்டர் பிரபாகரன் தமிழகத்தில மிக இளைய வயதில் ஒரு சாதனையாளர். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் எனது நண்பர் ஒருவருடன் துணைவேந்தரது இல்லம் சென்றிருந்தேன்.

துணை வேந்தருடன் காலை உணவு உண்ண வாய்ப்பு நேர்ந்தது. எங்களுக்கு அவரது துணைவியார் உணவு தயாரித்து பரிமாறிக் கொண்டிருந்தார். இடையிடையே வீட்டிலே இருந்த முதியவர் மாமனார் மற்றும் பிள்ளைகளுக்கு சுறுசுறுப்பாக பணிவிடை செய்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட எனது நண்பர், ‘ஏம்மா இன்றைக்கு பணியாள் யாரும் வரவில்லையா? எல்லாவற்றையும் நீங்களே செய்கிறீர்களே!’ என்று கேட்டார். அதற்கு துணைவேந்தர் ‘வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதில் என் துணைவியாருக்கு உடன்பாடு இல்லை.எல்லாப் பணிகளையும் என் துணைவியாரே செய்து வருகிறார் என்ற கூறினார்

உழைப்பை உயர்வாகக் கொள்ளுகின்ற நமது பண்பாடு பட்டுப்போய்விடாமல் பாதுகாக்கிற இத்தைகய உயர்ந்த குணவதிகளும இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனவே சமைப்பதும், உழைப்பதும் தாழ்வானதல்ல. குறிப்பாக படிக்கவும், பயிற்சி பெறவும் அயல் நாடுகளுக்குச் செல்லுகின்றவர்கள் உடலை ஓம்பிட அவசியம் அந்தக் கலையை ஓரளவேணும் அறிந்திருத்தல நல்லது.

உணவு தயாரிப்பதை எளிதாக்கிக் கொள்ளவும், உடலை சிக்கல் இல்லாமல் வைத்துக் கொள்ளவும் இயற்கை உணவை உண்ணப் பழகிக் கொண்டால் நல்லது.

குடலில் சிக்கல் இல்லை என்றால் உடலில் சிக்கல் இராது. செரிப்புமண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள இயற்கை உணவு உதவும். இதனால் சமைக்க ஆகும் உழைப்பு, நேரம், எரிபொருள் எல்லாம் மிச்சம். பிரிஸ்பனல் இருந்த அந்த ஒரு மாதமும் எனது இரவு உணவு முழுக்க இயற்கை உணவாகவே இருந்தது.

அனுக்குமார் அறைக்குச்சென்ற போது அவர் சமைத்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தார் என்று கடந்த இதழில் எழுதியிருந்தேன். உரையாடிக் கொண்டே சமைத்து முடித்து, காலை உணவை அருந்தி மீதி இருந்ததை ஒருடப்பாவிலபோட்டு எடுத்துக் கொண்டுபுறப்பட்டார். கமல், மற்றும் நண்பர்களும் புறப்பட்டார்கள். ‘எங்கு கிளம்பி விட்டீர்கள்’ என்று கேட்டேன். ‘பல்கலைக்கழகத்திற்கு’ என்கிறார்கள்.

சனி, ஞாயிறு நாட்களில் வெள்ளையர்கள் உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள். ஒருவரையும் அவர்கள் விட்டில் பார்க்க முடியாது. ஆனால் நமது தமிழ் இளைஞர்கள் விடுமுறை நாட்களிலும் கடுமையாக உழைக்கிறார்கள்.

பல்கலைக்கழக உதவித் தொகை பெற்று படிக்கிறவர்கள் மிகச்சிலரே. மற்றவர்கள் வளர்ந்த நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்து ஆராய்ச்சி செய்து சாதிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு வந்த நமது இளைஞர்கள், தங்கள் செலவுகளை ஈடுகட்ட படிக்கின்ற, ஆராயச்சி செய்கின்ற நேரம் போக மற்ற நேரத்தில் பகுதிநேர வேலை பார்க்கிறார்கள். அங்கே 15 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் ஒரு மணி நேரம் வேலை செய்வதால் 6 ஆஸ்திரேலிய டாலரும் பெரியவர்களுக்கு ஒரு மணிக்கு 14 டாலரும் ஊதியம் கொடுக்கிறார்கள்.

அந்த வேலை இந்த வேலை என்று இல்லாமல் எல்லா வகையான பணிகளையும் நமது இளைஞர்கள் செய்கிறார்கள். சிலர் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுகிற பணியையும் சிலர் கடைகளில் விற்பனையாளராகும், சிலர் வீடுகளில் துப்புரவு செய்வதையும், சிலர் பல்கலைக்கழகத்திலும் மற்ற அலுவலகங்களிலும் DTP செய்தும் தங்கள் ஓய்வு நேரத்தில் உழைத்துப் பெறும் ஊதியத்தைக்கொண்டு எப்படியும் தங்கள் குறிக்கோளை வென்றெடுப்போம் என்று தன்னம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள்.

பழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவர் இந்தியாவில் வேளாண்மையில் பட்டம் பெற்று அங்கு பூச்சிய்யல் துறையில் ஆராய்ச்சி செய்கிறார். பல்கலைக்கழகத்துக்குரிய கட்டணத்தை மட்டும் அவரது உறவினர் ஒருவரிடம் பெற்று கட்டி விடுகிறார். அவர் தங்கவும், உணவுக்கும் இதர செலவுகளுக்கும் நான் பயிற்சி பெறச் சென்ற அந்தத் துறையில் உள்ள பேராசிரியரிடம் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வாரத்தில் மூன்று நாள்கள் மாலை நேரத்தில் வந்து பணியாற்றுகிறார். இரவு பகலாக உழைக்கிறார்.

‘இந்த ஆண்டு பட்ட மேற்படிப்பு முடித்து அடுத்து அமெரிக்காவில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை தொடருவேன்’ என்று அவர் என்னிடம் சொன்னபோது அவர் கண்களில் தன்னம்பிக்கை ஒளி வீசியது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்