Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


மெர்வின்
Author:

(திரு. மெர்வின் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்களில் ஒருவர். 40 ஆண்டுகளாக இந்தத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருபவர். இதுவரை 80க்கும் அதிகமான சுயமுன்னேற நூல்களை எழுதியுள்ள திரு. மெர்வின் அவர்களை தன்னம்பிக்கை இதழுக்காக பேட்டி கண்டோம்.)

ஏராளமான சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறீர்கள். இந்தத்துறை நூல்களை எழுத்த் தூண்டியது யார்?

61 ஆம் ஆண்டில் என்னுடைய தந்தை உடுமலைப் பேட்டை தாசில்தாராக இருந்தபொழுது அப்துற்றகீம் எழுதிய “கவலைப்படாதே” என்ற நூலைப்படிக்கத் தந்தார். அதனைப் படித்ததும் எனக்குப் புது உணர்வு ஏற்பட்டது. புதிய பாணியில் எழுதப்பட்டதாகத் தெரிந்தது.

பள்ளியில் படிக்கும் பொழுதே ஓய்வு நேரத்தில் நூலகத்திற்குச் சென்று வரலாறு, வாழ்வியல் நூல்களை விரும்பிப்படிப்பேன். நான் படித்த பல நூல்களின் ஆசிரியர்களைவிட அப்துற்றகீம் மாறுபட்டவராகத் தெரிந்தார்.

கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்கியதும் அப்துற்றகீம் எழுதிய அனைத்து நூல்களையும் கன்னிமாரா, குரோம்பேட்டை, பல்லாவரம் நூலகங்களில் தேடிப்பிடித்தேன்.

அப்பொழுதுதான் இந்த மாதிரி வாழ்வியல் நூலை எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து என் தந்தையிடம் கேட்டேன். உன்னால் எழுத முடிந்தால் எழுது” என்றார். அவருடைய உந்துதல் காரணமாக “வாழ்க்கை உன் கைகளிலே” என்ற கட்டுரையை எழுதினேன்.

அந்தக் கட்டுரை நானும் டாக்டர் இ.ஜே. சுந்தரம் நடத்திய மாணவர் மாத இதழ் “பூச் செண்டில்” வெளியிட்டேன். அந்தக் கட்டுரையை நூலாக வெளியிட முயன்றேன். ஒவ்வொரு பதிப்பகமாகச் சென்று கேட்டேன்.

நான் மாணவனாக இருந்ததால் எந்தப் பதிப்பாளரும் புத்தகமாக வெளியிட முன்வரவில்லை. சில பதிப்பாளர்கள் என்னைத் திட்டினார்கள். மாணவனுக்கு என்ன எழுதத்தெரியும் என்று கிண்டல் செய்தனர்.

ஆனாலும், நான் முயற்சியை விடவில்லை. தொடர்ந்து முயன்றபோது சைதை ஓடையான் நன்செய் பதிப்பாளர் என் கட்டுரையை வெளியிட முன் வந்தார்.

1969 ஆம் ஆண்டு நன்செய் பதிப்பகத்தின் மூலமாக என்னுடைய முதல் நூல் வெளி வந்தது. என் கல்லூரி முதல்வர் டாக்டர் சந்திரன் தேவநேசன் ‘கல்லூரி மாணவனாக இருக்கும் பொழுதே நூலாசிரியராகி விட்டாய்” என வாழ்த்தினார்.

இது எனக்கு பெரிதும் உற்சாகம் தந்தது. தொடர்ந்து இதேபோன்று வாழ்வியல் நூல்களை எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. இதற்கு அடிப்படையான காரணம் அப்துற்றகீம் நூல்களைப் படித்ததுதான்.

மற்றவர்களுக்கு உற்சாகம் தந்து எழுதுகிற, பேசுகிற நீங்கள் அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது எப்படித்தேடிப் பெறுகிறீர்கள்?

உற்சாகம் வெளியில் எங்கும் கிடைக்காது. அது என்னிடமேதான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தவன் நான். எனக்கே நான் உற்சாகத்தை ஊட்டிக் கொள்வேன். அதனைத் தேடிப்ப பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

சோர்வு கொள்ளாமல் இருக்கப் பழக்கப்படுத்திக் கொண்டேன். அடிக்கடி அப்துற்றகீம் நூல்களைப் படிக்கிறேன். நானே சோர்வு அடைந்து விட்டால் எப்படி வாழ்வியல் நூல் எழுத முடியும்?

நான் தெளிவாகவும் துடிப்பாகவும் இருந்தால் தான் எழுத முடியும். எழுத்தும் அவ்விதமே அமையும். நானே சோக கீதம் பாடினால் எழுத்திலும் சோகம்தான் பிரதிபலிக்கும்.

தன்னம்பிக்கை நூல்களைப் படிப்பதன் மூலமும் தன்னம்பிக்கை பேச்சைக் கேட்பதன் மூலமும் வெற்றி பெற முடியுமா?

தன்னம்பிக்கை கொண்டு இருந்தாலே வெற்றியை பெற்று விட முடியும். இது உந்து சக்தியாக இருந்து செயல்புரிய தூண்டிக் கொண்டே இருக்கும்.பேச்சும் படிப்பும் செயலைச் செய்து முடிக்க வைக்கும் பேச்சை கேட்டுத்தான் பல பேர்கள் வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

அப்துற்றகீம் பேச்சைக் கேட்டு உயர்ந்தவர்கள் பலர் உயர்வு பெற்றிருக்கிறார்கள். அவருடைய நூலை படித்ததன் பயன்தான் நானும் வாழ்வியல் எழுத்தாளராக மாறினேன்.

உங்கள் நூல்களைப் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற சிலரைச் சொல்லுங்களேன்?

வாழ்வியல் நூலைப் படிப்பவர் எவருமே ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றவர்களாத்தான் இருப்பார்கள். என்னுடைய நூலைப் படித்து உயர்வு பெற்றவர்கள் ஏராளமாக இருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சிதம்பரத்தில் எம்.ஏ.படித்த இளைஞர் சேகர் என்னுடைய உயர்வு உன்னிடமே நூலைப் படித்து சிறிய அளில் ரொட்டிக்கடை ஆரம்பித்து இன்று பெரிய அளவில் சேசினோ பேக்கரி, ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

முன்னேற்ற நூல்களைப் படிக்கும் பலர் இன்றைய நிலையிலிருந்து மாறுபட்டு உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. ஜி.டி. நாயுடு எனது நூல்களைப் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே பாராட்டியதில் இருந்து அதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்ள முடியும். சிறிய வேலையை , தொழிலைச் செய்தவர்கள் என் நூலைப் படித்து அதன்படி நடந்து வெற்றி பெற்றிருப்பதை நான் கண்டு இருக்கிறேன்.

தன்னம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள எனன வழிகள் உள்ளன?

படிப்பதன் மூலம் வாழ்க்கைப் பாதையை சரியாக அமைத்துக் கொண்ட பிறகு அதன் வழியிலே தொடர்ந்து செல்ல வேண்டும். அங்கும் இங்கும் அலைபாயும் தன்மை வரக்கூடாது வெற்றி என்பது எளிதில் கிடைத்து விடாது எனறு உணர்ந்து செயல்பட வேண்டும்.

வெற்றி நம்மிடம் அடைக்கலம் ஆனதும் அதனை விரிவுபடுத்த தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். சுய ஆராய்ச்சியே சுய வளர்ச்சியாக மாறும்.

அதுதான் வெற்றியை நிரந்தரமாக்கும்.

ஆராய்ந்து பார்க்கும் பொழுதுதான் நிறைகுறைகள் வெளிப்படையாகத் தெரியவரும். குறையை அகற்றிவிட்டால் நிறைவு ஏற்படும்.

மனித ஆற்றல் அற்புதமானது விரிவானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆற்றல்தான் இருக்கும். அந்த ஆற்றலின் சக்தி என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆற்றலின் தன்மைக்கு ஏற்ப அதற்கு உண்டான வழிகளைத் தேடிப்பிடிக்க வேண்டாம். மற்றவர்களுடைய அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளவதும் நல்லது.

காலையில் எழுந்தவுடன் இறைவனிடம் வேண்டும்பொழுது, என் ஆற்றலைப் பெருக்கித்தர அருள் புரிவாயாக என்று பத்து தடவை கேட்டால் மனதில் உள்ள சக்தி அதிகமாகும். தனக்குத்தானே உயர்வாக எண்ணுவதே ஆற்றலை அதிகப்படுத்தும்.

வெற்றி வரவர ஆணவம் சிலருக்கு அதிகம் ஆகிறதே ஏன்?

தோல்வி என்பது முயற்சியின் முதல்படி. எதுவும் செய்ய முடியும் என்பது உறுதி. அதிகமான உறுதியினால் நிச்சயம் தவறு ஏற்பட முடியாது. ஆணவம் அதிகமாகும் பொழுது தோல்வி ஏற்படும்.

எடிசனிடம் எப்படி மின்சார ஒளியை கண்டு பிடித்தீர்கள் என்று கேட்ட பொழுது, ஆயிரம் முறை முயற்சி செய்தேன் என்றார். அது தோல்வி இல்லையா? என்று மீண்டும் விணவிய போது, நிச்சயமாக அது தோல்வி இல்லை. ஒளியை உண்டாக்க ஆயிரம் முறை சரியானது அல்ல. ஆயிரத்து ஒன்றாவது தடவைதான் சரியானது என்றார்.

உலகத்திற்கே ஒளி கொடுத்த எடிசனே அடக்கமாக இருந்திருக்கிறார் என்றால் ஒன்றுமே கண்டுபிடிக்காத நாம் எவ்வளவு அடக்கமாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது.

வெற்றியே எப்பொழுதும் இருக்க வேண்டுமானால் கட்டாயம் பொறுமை, அடக்கம், தாழ்மை இருக்க வேண்டும். ஒரு செயலில் தவறு ஏற்பட்டால் அதனைத் திருத்திக்கொள்ள மனப்பக்குவம் தேவை. தோல்வியே அடைய மாட்டேன் என்ற மமதை மட்டும் கூடாது.

உறுதி அவசியம்தான். ஆனால் அதுவே அகங்காரமாகிவிடாமல் இருக்க வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் தேவையில்லை. இது வெற்றியை தங்க வைக்காது.

பேட்டியின் நிறைவில் தன்னம்பிக்கை இதழை மனமுவந்து பாராட்டினார் திரு. மெர்வின்.

“தமிழ்நாட்டில் தன்னம்பிக்கை என்ற சொல்லை நிறையப்பேர் உச்சரிக்கச் செய்த இல.செ.க. அவர்களின் பணி மிகவும் போற்றத் தக்கது. இன்று மனிதருக்கு வேண்டிய சய முன்னேற்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்த இதழின் சிறப்புக்கு அளவே இல்லை. மனித மேம்பாட்டு வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை ஆற்றிவரும் பணி மகத்தானது, மாண்பு பெறத்தக்கது. தொடரட்டும் இதழின் பணி, மலரட்டும் புதிய அணி” என்றார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்