Home » Articles » வணக்கம் தலைவரே

 
வணக்கம் தலைவரே


முத்தையா ம
Author:

“தலைவர்களை உருவாக்குபவர்களே நல்ல தலைவர்கள் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன்.புதிய தலைவர்கள் உருவாவது, இருக்கிற தலைமை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகிவிடாதா என்று சிலர் கேட்டார்கள். ஆகாது! தன் மீது நம்பிக்கையுள்ளத் தலைவர்கள், தனக்கு இணையானவர்களை உருவாக்குதில்தான் அக்கறை காட்டுவார்கள்.

தன் நாற்காலி ஆட்டம் காணுவதாய் அஞ்சுகிறவர்களுக்கு, உண்மையான தொண்டன் கூட உயிர்குடிக்கும் எதிரியாய்த்தெரிவான். ஆனால் நல்ல தலைவர்கள், ஒவ்வொரு தொண்டனுக்குள்ளும் எதிர்காலத்தலைவன் இருக்கிறானா என்று தேடுவார்கள்.

மேல் நாடுகளில் “ஒருதலைவர் உருவாவது எப்படி?” என்று ஆராய்ச்சி நடத்தியவர்கள், மூன்று காரணங்களை அடிப்படையாக கொண்டு ஒரு நல்ல தலைவர் உருவாக முடியும் என்கிறார்கள்.

1) இயற்கையான தலைமைப்பண்பு
-இது 10% மட்டும்தான்
2) ஏதாவதொரு நெருக்கடி
-நம்மூர் பாஷையில் ‘காலத்தின் கட்டாயம்’

-இது 5% மட்டும்தான்.

3) இன்னொரு தலைவரால் ஏற்பட்ட பாதிப்பு இதுதான் 85%

யாராவது ஒருவர் வழியில் கட்சி ஆட்சி நடத்துவதாகத்தான் நிறைய தலைவர்கள் சொல்கிறார்கள்.இது நிறுவனத் தலைமைக்கும் பொருந்தும்.

இயற்கையான தலைமைப்பண்பு வெளிப்படுதற்கு சில சந்தர்ப்பங்கள் தேவைப்படும். நெருக்கடியான சூழ்நிலையை சமாளிப்பது கூட அப்படித்தான். அந்த நெருக்கடி தீர்ந்த பிறகு அந்தத் தலைமைக்கு அதே அளவு செல்வாக்கு இருப்பது சந்தேகம் தான்.

எல்லா நேரங்களிலும் தன் தலைமைப்பண்பை வெளிப்படும் தலைவர்களை முன்னுதாராணமாகக் கொள்பவர்கள், தங்களையும் அதே பண்புகளுடன் வளர்த்துக் கொள்கிறார்கள்.

சராசரித் தலைவர் தொண்டர்களின் தலைவர் மட்டும்தான். தலைவர்களை உருவாக்குபரே “தலைவர்களின் தலைவர்”.

பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்கத் தெரிந்தால்தான் மற்றவர்களை உருவாக்கத் தெரியும். ஒரு பொது நல மன்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு தலைவர். வசூலும் அவரே செய்வார். பேனரும் அவரே கட்டுவார். அழைப்பிதழ் விநியோகமும் அவர்தான். வாசலில் நின்று வரவேற்பது விழாவிற்குத் தலைமை தாங்குவது கூட்டம் முடிந்தபின் நாற்காலிகளை மடக்கிப் போடுவது என்று எல்லாமே செய்வார்.

அவர் தன்னைத் தவிர யாரையுமே நம்பவில்லை என்று அர்த்தம். ஒரு தலைவராயிருக்கும் தகுதி அவருக்கு இல்லை. தனக்கு நம்பிக்கைக்குரியவர்கள் யாருமில்லை என்று எண்ணுபவர். எந்தக் காலத்திலும் தலைவராகப் போவதில்லை.

பொறுப்புகளைப் கிர்ந்து தருபவரே நல்ல தலைவர்.

இது தலைமைப் பண்பின் ஒன்பதாவது விதி.

பொறுப்புகளை யாரிடம் எப்படி பகிர்ந்து கொடுப்பது இது முக்கியமான கேள்வி. தன்னைச் சுற்றியுள்ளவர்களை எடைபோடுகிற வல்லமை இதயத் தராசுக்கு இருக்க வேண்டும். தகுந்தவர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஒரு திருக்குறள் உண்டு.

இதனைஇதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

என்கிறார் திருவள்ளுவர்.

இந்தப்பணியை, இந்த இந்தத் தகுதிகள் காரணமாய், இன்னார் செய்து முடிப்பார் என்று கணித்து அந்தப் பணியை அவரிடம் ஒப்படையுங்கள் என்கிறார். சபைக் கூச்சம் உள்ள ஒருவரை செய்தித் தொடர்பாளராகவும், எல்லோரிடமும் எரிந்து விழுபவரை மக்கள் தொடர்பு அலுவலராகவும், கை நீளமாக உள்ள ஒருவரை பொருளாளராகவும் போட்டால் இயக்கமோ, நிறுவனமோ என்னாகும்?

எனவே, உரியவர்களுக்கு உரிய பொறுப்புகளைப் பகிர்ந்து தருவதே பக்குவமான தலைருக்கு அழகு. ஒரு மனிதரை எப்படி நாம் நம்புவது? அதற்கு அருமையானதொரு வழியை மகாகவி பாரதி நமக்குச் சொல்கிறார். நம்பத் தகுந்த இன்றைய தொண்டனுக்கு அதாவது நாளைய தலைவருக்கு மூன்று இலக்கணங்கள் இருக்குமாம்.

“கட்டுறுதி உள்ள உடல், கண்களிலே நல்ல குணம் ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல்” இவைதான் அந்த அளவுகோல்கள்.

ஒவ்வொரு தனி மனிதனிடமும் மிக நிச்சயமாக ஒரு தகுதி இருக்கும். அந்தத் தகுதியை அடையாளம் கண்டு வளர்ப்பதன் மூலம் அடுத்தகட்டத் தலைவர்களை உருவாக்க முடியும். அதிகார மமதை, பதவி போதை போன்றவற்றால் மற்றவர்களின் நல்ல பண்புகளைப் பார்க்கத் தவறும் தலைவர்கள் தங்கள் தலைமையையும் தக்க வைத்துக் கொள்ள இயலாது.

காட்டில் தேர்தல் நடக்கிற காலம். நல்ல குளிர்மாதம். ஒருரவுண்ட் பிரச்சாரம் போகலாம் என்று தொண்டர்களைக் கூப்பிட்டது சிங்கம். துள்ளித் போகிற புள்ளி மானைப் பார்க்க கூட்டம் கூடும் என்பதால் அழைப்பு விடுத்த சிங்கத்திடம், குளிர்தாங்க முடியாததால் வர இயலாது என்று சொல்லிவிட்டது மான்.

“மான் எதுக்கு தலைவரே! என்னைப்பாருங்க, கடவுளே என்னை ஸ்வெட்டரோடு பிறக்கவிட்டிருக்கிறார். நான் வரேன் போகலாம்” என்றது கரடி.

சிரித்துக்கொண்டே சிங்கம் சொன்னது, “குளிர் காலத்தில் நீ சுகமாய் இருப்பாய், கோடைகாலம் வந்தால் உன் கம்பளித் தோலைக் கழற்றி வைக்கவா முடியும்? மற்றவர்களை பயமுறுத்த நீ, பரவசப்படுத்த மான் இரண்டு பேருமே எனக்கு வேண்டும். மான் கோடைக்காலப் பிரச்சாரத்திற்கு வரட்டும்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டது சிங்கம்.

(தேர்தல் கூட்டங்களில் சில குட்டித் தலைவர்கள் கரடியாய் கத்தும்போது இந்தக்கதை உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை)

தலைமைப் பண்பின் பத்தாவது விதி கூட இருப்பவர்களின் பலம், பலவீனம், இரண்டையும் தெரிந்து வைத்திருபவர்களே நல்ல தலைவர்கள்.

அதிர்ஷ்டத்தாலோ, அனுதாப அலையாலோ தலைமைக்கு வந்து சேர்ந்தவர்கள், மற்றவர்களைக் கீழே தள்ளுவதிலேயே குறியாக இருப்பார்கள். மற்றவர்களைக் கீழே தள்ளும் போதெல்லாம், தானும் கொஞ்சமாவது குனிய நேரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

மற்றவர்கள் வளராமல் பார்த்துக் கொள்வதில் மும்முரமாய் இருப்பவர்கள், தங்களையும் அறியாமல் தங்கள் வளர்ச்சியையும் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆபிரகாம் லிங்கனை பகிரங்கமாக எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தவர்கள். எதிரிகளை அவ்வளவு தூரம் நம்பினார். ஆபிரகாம் லிங்கன் என்று நமக்கு கேள்வி எழலாம். அதைவிட அவர் எதிரிகளுக்குப் பதவி தந்தாலும் தன்னை அவர்களால் கவிழ்த்து விட முடியாது என்கிற அளவுக்கு தன்னை நம்பினார். அதுதானே முக்கியம்.?

தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்