Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

தொடர்..

வெற்றிப்படி எங்கே?

இண்டர் நெட் ஜோக் ஒன்றைப் பார்ப்போம்.

புதியதாக கார் வாங்கிய அந்த கோமாளிக்கு படு குஷி. காரை படுவேகமாக ஓட்டிக் கொண்டு நீண்ட தூரம் வந்து விட்டான்.

எதிரில் ஒருமலை குறுக்கிட்டது. அம்மாவை செல்போனில் கூப்பிட்டான்.

“எங்கே போயிட்டே? ரெண்டு மணி நேரமாச்சேன்னு மனம் பதறிப்போயிட்டேன்”
-அம்மா

“ஐந்நூறு கிலோ மீட்டர் தாண்டி வந்துட்டேன். இனிப்போக வழியில்லை. ரிவர்ஸ் எடுக்கறேன்” – கோமாளி

திரும்பி வருவதாச்சொன்ன கோமாளி இரண்டு நாள் வரவில்லை. மூன்றாவது நாள் களைப்புடன் திரும்பியதும் அம்மா கேட்டாள். “ஏன் இவ்வளவு லேட்?”

“ரிவர்ஸ் கியர் ஒண்ணு மட்டும்தான் இருக்குது. அவ்வளவு வேகம்தான் வர முடிஞ்சது.”

“அடப்பாவி ரிவர்ஸ் கீர்லயா இவ்வளவு தூரமும் வந்தே?” – அம்மா.

இனி நடைமுறைக்கு வருவோம்.

நம்மில் பரும் வெகுவேகமாக முயற்சித்து செயல்படுகிறோம். எங்கேயாவது ஒரு தடை வந்தால் அதே வேகத்தில் ரிவர்ஸ் ஆகி விடுகிறோம்.

நம் இயலாமைக்கு நாம் சொல்லுகின்ற காரணங்களை சற்று பார்ப்போம்.

“பணமில்லாம ஒண்ணுமே முடியல!!!”

தோல்வி வருமோன்னு பயம்; அதனால் விட்டுட்டேன்.

நெனச்சதுக்கு மாறா எல்லாம் நடந்து போச்சு.

குடும்ப சுமைகள் ரொம்ப அதிகம்; வேற என்ன செய்யறது?

அப்புறம் செய்யலாமுன்னு தள்ளிப் போட்டேன். பல சிக்கல்ல மாட்டிட்டேன்.

பல பொறுப்புகளுக்கு மத்தியில் நெனச்சதை செய்ய முடியல.

எதுக்கு வம்புன்னு கம்முனு இருந்துட்டேன்.

அதுக்கு மேலே தொடர்ந்து கஷ்டப்பட பொறுமையில்லை.

என் கவுரவத்தை விட்டுக் கொடுக்க முடியல.

யாருமே எனக்கு ஒத்துழைக்கல.

என்னோட மூச்சை புடிச்சு செஞ்சேன். இவ்வளவுதான் செய்ய முடிஞ்சது.

இப்படி நம் இயலாமைக்கு பல காரணங்கள் சொல்கிறோம். உருவாக்குகிறோம், நம்மை நியாயப்படுத்துகிறோம்.

பல சமயங்களில் தடைகளைப் பார்த்தும் எல்லா முயற்சிகளையும் ஒதுக்கிவிட்டு சமாதானத்தில் இறங்கி விடுகிறோம். மேலும் ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

ஒரு இளைஞன் வேலைதேடி அலைந்தான். கடைசியாக ஒரு குறிப்பிட்ட விடுதியில் வேலை காலி இருந்தது.

எப்படியாவது இந்த வேலையைக் கொடுங்கள், என்று மன்றாடி நின்றான்.

எழுதப்படிக்கத் தெரியாத உனக்கு இந்த வேலையைக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

மனமுடைந்த அவன் வேறு வழியில்லாமல் சொந்தத் தொழிலைத் தொடங்கினான்.

அடுத்த பத்தாண்டுகளில் கோடீஸ்வரனாகிவிட்ட அவனிடம் பேட்டி கண்டார்கள்.

“நீங்கள் மட்டும் படித்திருந்தால் இந்த உலகையே விலைக்கு வாங்கியிருப்பீர்கள் அல்லவா?”

“இல்லை இல்லை ஒரு விபச்சார விடுதியில் குமாஸ்தாவாகத்தான் இருந்திருப்பேன் என்றார்.

பெரும்பாலும், சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும்.

நோயாளி மனைவியோடு பெரும்பகுதி திருமண வாழ்கையை வாழ்ந்த அந்த கணவன் எந்தச் சூழ்நிலைகளையும் சமாளித்து சுயமாக வாழ்கையை நடத்தும் திறமை, அந்த கஷ்டத்திற்கு பிறகுதான எனக்கு இடைத்தது. அதனால்தான இன்று சாதனைகளில் உயர்ந்து நிற்கிறேன் என்றார்.

பொறுமையின் உச்சியில் நின்று பிரச்சினைகளைத் தீர்க்கும் அந்த பெண் நிர்வாகி, என் கணவர் எப்போதுமே சிடுசிடுன்னு இருப்பார். என்ன பண்ணறதுன்னு சகிச்சிட்டு, குடும்பம் நடத்தினேன். அதுவே சகிப்புத்தன்மையை எனக்குள் உருவாக்கியது. அந்த சகிப்புத் தன்மையால் தான் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிர்வகிக்கும் திறமை எனக்கு உருவாகியது என்றார்.

யாரிடம் பேசினாலும் விரட்டிக் கொண்டே இருந்த அந்த சந்தேகப்பிராணியான முதலாளியிடம் என் ஆரம்ப காலத்தில் மூணு வருஷம் வேலை செஞ்சேன். எப்படி நிதானித்து பேசுவது என்ற பழக்கமே அதிலிருந்துதான் உருவாகியது என்றார் ஒரு சிந்தனைவாதி.

ஆகவே, தடைகள் நமக்கு உணர்த்துவது என்ன? பதிலுக்கு வருமுன் மேலும் ஒரு உதாரணம்.

ஒரு தவளை பள்ளத்தில் இழுந்து விட்டது. ஐயோ! ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கூக்குரலிட்டது.

அவ்வழியாக சென்ற மான் அதை எட்டிப்பார்த்தது. தவளை கெஞ்சியது. மான் தன்னால் இறங்கி வர முடியாது என்று சொல்லிவிட்டு போய்விட்டது.

அடுத்தாக, ஒரு பூனை வந்தது. அதனிடமும் அந்தத் தவளை கெஞ்சியது. அதுவும் உதவவில்லை.

இப்படி பல நாட்கள் கெஞ்சிப் பார்த்த தவளை ஒரு நாள் பள்ளத்திலிருந்து வெளியே குதித்து வந்து விட்டது.

இதைப்பார்த்த மற்ற மிருகங்களுக்கெல்லாம் பெரிய ஆச்சர்யம். “எப்படி மேலே வந்தாய்?” என்றன.

“ஒரு பாம்பு பள்ளத்தில் இறங்கி என்னை சாப்பிட வந்துச்சு. வேற வழியில்லை. ஒரே தம் புடிச்சி மேலே தாவிட்டேன்” என்றது தவளை.

தடைகள் நமக்கு உணர்த்துவது இதுதான்.

தடைகள் புதிய வாழ்க்கையை காட்டும் கைகாட்டி தடைகளே புதிய ஆற்றலை சொல்லித்தரும் ஆசிரியர்.

தடைகளே புதிய சக்தியை கொடுக்கும் டானிக்.

தடைகளே புதிய ஞானத்தைக் உண்டாக்கும் போதி மரம்.

தடைகளே புதிய மாற்றங்களை உருவாக்கும் மந்திரம்.

தடைகள் இல்லாமல் வெற்றி இல்லை.

அந்தத் தடை வரும்போது மனம் சோர்ந்து விடாதீர்கள். உடனே ரிவர்ஸ் கியர்ல பின்வாங்கி விடாதீர்கள். சற்று நில்லுங்கள். ஆழச்சிந்தியுங்கள் வெற்றியின் சூட்சுமம் அங்கே தென்படும். அதுதான் வெற்றிப்படி.

-தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்