Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும்

சிலர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அதனை நிரந்தரமாக்கிக்கொண்டு வளம் பெறுகிறார்கள். வாழ்கிறார்கள். வேறு சிலரும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், அந்த வெற்றியை நிலையானதாக ஆக்கிக்கொள்ளாமல் மீண்டும் கீழே விழுந்து விடுகிறாகள்.

பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையை வெற்றியுடையதாக ஆக்கிக் கொள்வதே இல்லை. கேட்டால், ஏதோ சுமாராக இருக்கிறோம் என்பார்கள். இன்னும் பலரோ “ஏதோ நாளைக் கடத்திக்கொண்டு இருக்கிறோம் என்ன செய்யறது” என்று நம்மையே கேட்பார்கள்.

இப்படி, பலதரப்பட்ட வாழ்க்கையை உடைய மனிதர்களைக் காண்கின்றோம். நாம் ஒதுங்கி நின்று சிலரைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம். சிலரைப் பார்த்து அனுதாபப்படுகிறோம் ஆனால் நம்மை, நமது நிலையை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

எத்தனை பேர் நம்மைப் பார்த்து அனுதாபப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. மாறாக, நாம்தான் புத்திசாலித்தனமானவர்கள் என்று எண்ணிக்கொள்கிறோம். அந்தத் தவறான நினைப்பாலேயே பலர் தோல்வியைத் தழுவிக் கொள்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்றுதான். ஆனால் வாயப்புகளும் வசதிகளும் வேறு வேறாக அமைவதால் முன்னேற்றங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நமக்கு வாய்ப்பும், வசதியும் முன்னோர்கள் தேடி வைக்கவில்லையே அல்லது இயல்பாக அமையவில்லையே என்று சோம்பி இருப்பதில் பயனில்லை. இங்கேதான் நமது அறிவைப் பயன்படுத்திச் செயல்படவேண்டும். முன்னேறியவர்கள் எல்லோருமே முன்னரே வசதி படைத்தவர்கள் அல்ல என்பதை உணரவேண்டும்.

வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

நாம் முன்னேற நாம்தான் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். உங்கள் வீட்டின் முன் ஒரே நாளில் முட்கள் நிறைந்த செடிகள் முளைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்.

செடிகளை வெட்டி அப்புறப்படுத்தித்தடம் அமைப்பீர்களா? அல்லது என்ன செய்வது? முட்கள் முளைத்து விட்டனவே என்று சோர்ந்து போய் உட்கார்ந்து விடுவீர்களா? அது போலத்தான் எல்லாச் செயல்களிலும் தடத்தை வழியை வாய்ப்பை நாமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவாக கதவைத் தட்டி நம்மை எழுப்பாது.

எப்படி உருவாக்குவது?

வாய்ப்புகளை உருவாக்கிக் கொளவு அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால், அதே நேரத்தில் முடியாததும் அல்ல. முயன்றால் முடியாதது ஒன்றில்லை என்பது வெறும் வேதாந்தம் அல்ல. இது அனுபவ மொழி.

முதலில் நமது திறமைகள் என்ன? நமக்கு உண்மையான ஆர்வம் எதில் இருக்கிறது? என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். விருப்பமில்லாத ஒரு தொழிலில் இறங்கி வாழ்நாள் முழுவதும் துன்பப்படக்கூடாது. ஆதலின், நம்மை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டு, செயலில் இறங்க வேண்டும்.

இரண்டாவது, எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். அரை குறை மனதோடு ஈடுபடும் எந்தத் தொழிலிலும் வெற்றி பெற முடியாது. திறமையும், தகுதியும் இருந்தும் அரை குறையான போக்கால் தோல்வி கண்டவர்களே அதிகம்.

மூன்றாவது, ஒன்றைத் தொடங்கிய பிறகு கடுமையாக இருக்கிறது. சிரம்மாக இருக்கிறது என்று சோர்ந்து விடக்கூடாது. தொடர்ந்து செயலாற்றும் விடா முயற்சியும் மிகவும் வேண்டும்.

நாம் எடுத்துக் கொண்ட தொழிலில், நமக்குத் தொழில் நுட்ப அறிவு, மூலதனம் இவைகளில் கவனம் செலுத்தி என்ன செய்தால், என்ன எதிர்பார்க்கலாம். வேண்டாத விளைவுகள் என்னென்ன நிகழும், இவைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வை வேண்டும்.

இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதுணையாக இருப்பது, நாம் தொடங்கும் தொழிலை முன்னரே தொடங்கி வெற்றி தோல்வி கண்டவர்களைப் பற்றி அறிய வேண்டுவது. அவர்கள் எப்படி வெற்றி கண்டார்கள்? எதனால் தோல்வி நிகழ்ந்தது? இவற்றையெல்லாம் நமக்குப் பாடமாக எண்ணிக்கொள்ளவேண்டும்.

ஒன்றுமே இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மிக உயர்ந்தவர்களாக விளங்கி உள்ளார்கள். இந்த உலகமும் உயர்ந்து உள்ளது.

வேர்களை எண்ணிப் பாருங்கள்

பலர், சிலருடைய வசதியான வாழ்கையை மட்டும் பார்த்துவிட்டு நமக்கும் அப்படி இல்லையே என்று ஏங்குகிறார்கள். அது தவறான பார்வையேயாகும். மலர்களை மட்டும் பார்த்துப் பயன் இல்லை. அந்த மலர்கள் மலரவும், மலர்ந்தவை வாடாமல் இருக்கவும் எத்தனை வேர்கள் நிலத்தின் அடியில் புதைந்து கிடக்கின்றன. எத்தனை வேர்கள் தண்ணீரை உறிஞ்சி அந்தச்செடியை, மலர்களை மலர்விக்கப் பாடுபடுகின்றன. நாம் வேராக இருந்தால் நம் வாழ்க்கை மலராக மலரும், மணம் வீசும்.

ஒரு முன்னோடியை மனதில் கொள்ளுங்கள்

நமக்கு ஒரு வழிகாட்டி தேவை. ஒரு முன்னோடி தேவை. அவரை மனதிற்குள் முன்னிலைப்படுத்திச் செயல்படவேண்டும். அதற்குப் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்குத் துணையாக இருக்கும்.

கட்டடங்கள் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படுவதில்லை. காவியங்கள் ஒரே நாளில் எழுதி முடிக்கப்படுவதில்லை. பலருடைய வாழ்க்கையில் அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் ஒரு வரலாறு அடங்கி இருக்கும். அதனால், கட்டடத்தை மட்டும் பார்க்காமல் ஒவ்வொரு செங்கல்லையும் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

அண்மையில் ஏற்பட்ட சந்திப்பு

அண்மையில் நான் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் சொன்னது எனது காதுகளில் இன்னும் வேதவாக்காக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

எனது 15 -வது வயதல் 8 ரூபாய்க்கு (1940) ஒரு மில்லில் வேலை செய்தேன். என் தம்பி தினம் 2 அணா (12 பைசா) கூலிக்கு வீடுவீடாகச் சென்று பேப்பர் போடுவான். பதினைந்து ஆண்டுகள் இப்படிச் சிரமப்பட்டோம். அதற்குப் பிறகு ஒரு சினிமாக் கொட்டகை முன்னால் ஒரு பெட்டிக் கடை வைத்தோம். இரவு பகலாக உழைத்தோம். எங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது. இப்போது எங்களிடத்தில், எங்கள் நிறுவனத்தில் 650 பேர் வேலை செய்கிறார்கள். எங்கள் வியாபாரம் இரண்டரை கோடியை எட்டியுள்ளது. நாம் அதிகம் படித்தவன் இல்லை. ஆனால் படித்துக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். அதுதான் “உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது” என்றார்.

அவருடைய வாழ்க்கையின் சாரம் இந்த ஒரு வரியில் அடங்கி உள்ளது. அந்த மனிதரின் சொல் வேதவாக்காக என் மனதில் பதிந்துவிட்டது. என் காதில் எப்போதும் தாரக மந்திரமாக அது ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்”.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?