Home » Articles » தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்

 
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்


admin
Author:

கிராமத்துப் பள்ளிகளில் நன்கு படித்து; மிகுந்த மதிப்பெண்கள் பெற்று, தொழிற்கல்லூரிகளில் பயில இடம் பிடித்து, புதிய தடத்தில் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்குகின்ற பலரிடமிருந்தும் நமக்கு வரும் கடிதங்களில் காணப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கவே இந்தக் கட்டுரை.

கடந்த ஆண்டு தொடர் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் அடுத்துவரும் மாதத்தில் இரண்டாம் பருவத் தேர்வை (Second Semester) எழுதப் போகிறீர்கள். அந்தச் சமயத்தில் இக்கட்டுரையை படிப்பது பயனுடையதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இரண்டு கடிதங்கள்

சான்றாக இரண்டு கடிதங்களை மட்டும் இங்கே பார்க்கலாம். ஞென்னையில் தொழிற் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பட்டப்படிப்பை பயிலும் ஒரு மாணவி எழுதியுள்ளது…

“பேராசிரியர் அவர்களுக்கு, நான் பள்ளியில் தமிழில் படித்ததால் இங்கு வகுப்புகளில் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது. கடந்த தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற முடிந்தது.

எங்கள் கல்லூரியில் படிக்கும் மூத்த சகோதர சகோதரிகளில் சிலர் (தமிழ் வழி பயின்றவர்கள்). முதலாமாண்டில் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் இருப்பது எனக்கு மிகுந்த பயத்தை அளிக்கிறது. எங்கே எனக்கும் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்று தோன்றுகிறது.

பட்ட மேற்படிப்பும், அதற்கு மேலும் படிக்க வேண்டும் என்று மிகுந்த நம்பிகையடு இங்கு வந்தேன். ஆனால் முடியாமல் போய்விடுமோ எனத் தோன்றுகிறது. கடிதம் எழுதி வழிகாட்ட வேண்டுகிறேன். இது எனக்கு மட்டும் எழுதும் கடிதமல்ல என்னைப் போன்ற பலருக்கும்”.

இன்னொரு கடிதம் ஈரோடு கல்லூரி ஒன்றில் படிக்கும் புதியாம்பதியைச் சேர்ந்த மாணவரிடமிருந்து,

“மதிப்பிற்குரிய ஐயா, நான்.. கலூரியில்B.E., Automobile இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். நான் D.M.E. முடித்து விட்டு Late entry முறையில் நேரடியாக இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்துள்ளேன்.

கல்லூரியில் சேர்ந்தது முதலே என் மனதில் ஒரு விதமான பயம் இருந்து வந்தது. நான் சேரும்போதே பாதிப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தன. அது மட்டும் இல்லாமல் நான் தமிழ்வழிக் கல்வி பயின்ற சென்றதால், இங்கு ஆங்கிலத்தில் படிக்க கஷ்டமாகவும், எதுவும் புரியாத நிலையிலும் இருந்தது. இதனால் தற்கொலை செய்யும் நிலைக்குக்கூட போய்விட்டேன்.

நான் D.M.E. யும் தமிழ் வழியில்தான் படித்தேன். இந்தக் காரணங்களால் நான் சரியாக கல்லூரிக்குச் செல்லவில்லை. மொத்தமாக நான் கல்லூரியில் சேரும் பொழுதே தேர்வுக்கு ஒரு மாதம் இருந்தது. இந்தக் கால அவகாசத்தில் எட்டு பாடங்களை படித்து எழுத வேண்டும். இந்த நிலையில் செய்வதறியாது உள்ளேன்.

எனக்கு B.E. படிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் உள்ளது. எனது மனதில் தெளிவில்லை. தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

இவர்களுக்கு இருக்கிற சிக்கல் – தாய்மொழி தமிழில் பள்ளிக் கல்வியைப் படித்ததால் கல்லூரியில் பயிற்று மொழி ஆங்கிலம் என்பதால் ஆங்கில வழியில் பயின்று வந்தவர்களுடன் போட்டி போட்டு நாமும் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறமுடியுமா என்பதுதான்.

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக பள்ளியில் படித்திருப்பதால் நம்மால் ஆங்கிலத்தில் பாடங்களை எல்லாம் படிக்க முடியுமா? என்று அஞ்சத் தேவையில்லை. நானும் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்து பிறகு சென்னை கால்நடைமருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை ஆங்கிலவழி பயின்றவன்தான்.

உங்களுக்கு இருக்கிற இந்தச் சிக்கல் தமிழில் படித்து பிறகு கல்லூரிப் படிப்பை ஆங்கிலத்தில் தொடர்கிற எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அது ஒரு சில மாதங்களுக்குத்தான்.

உங்களுக்கு நன்கு படிக்கிறதிறன் இருக்கிறது. ஆனால், தாழ்வு- மனப்பான்மைதான் உங்களைத் தடுமாறச் செய்கிறது. ஆங்கிலம் உங்களுக்குத் தெரியாமல் இல்லை, தெரியும். அதுவும் ஆங்கில மொழிப்பாடத்திலும் தேர்ச்சி பெற்றுதான் இந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளீர்கள்.

இந்த வயதில் எந்த மொழியையும் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ந்திட முடியும். நீங்களோ ஆங்கிலத்தைப் பள்ளியில் பத்தாண்டுகள் படித்து விட்டு வந்துள்ளீர்கள். ஆனால் சிலர் +2 வரை இங்கே படித்து விட்டு மருத்துவப் பட்டப் படிப்புக்கும் மற்ற பட்டப்படிப்புகளுக்கும் உருஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு உருஷ்ய மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் படித்து பட்டம் பெற்று வருகிறார்களே எப்படி?

அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? முதல் ஆறு மாதங்கள் அந்த மொழிகளைக்கற்றுக்கொண்டு பிறகு அந்த நாட்டின் மொழியிலேயே படித்து பட்டம் பெற்று திரும்புகிறார்கள்.

உங்களை ஏன் நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பத்தாண்டுகள் படித்தது மனதுக்குள் பதுங்கி இருக்கிறது. முடியாது என்னும் தாழ்வு மனப்பான்மையை முதலில் தகர்த்தெரியுங்கள். தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் இருக்குமானால் எந்த மொழியும் விரைவில் உங்களிடம் சொந்தம் கொண்டாடும்.

ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிற வரை அது தள்ளியே நிற்கும். திறந்த உள்ளத்தோடு அதை அள்ளிக் கொள்ள முனைந்தால் அஃது உங்களுக்குள் அங்கமாகிவிடும். தயவுசெய்து ஆங்கிலத்தின் பின் போகாதீர்கள். ஆங்கிலம் உங்கள் பின்னால் வரட்டும்.

ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்கள் பேசுவதைப் பார்த்து அடடா நம்மால் அப்படிப் பேச முடியவில்லையே என்று தாழ்வுமன்பான்மையை வளர்த்துக் கொள்ளாடீர்கள். அவர்களை விட அற்புதமாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. அதை விட, அவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறப் போவதும் நீங்கள்தான்.

மிகப்பெரிய உண்மை என்னவென்றால், ஆங்கில வழியில் பள்ளியல் பயின்று கல்லூரியில் பயிலும் மாவணர்களைவித தாய் மொழியில் பள்ளியில் பயின்று கல்லூரிப் படிப்பை ஆங்கிலத்தில் பயில்கின்றவர்கள்தான் பெரும்பாலும் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்.

தாய் மொழியில் அடிப்படைக் கல்வியை பயில்கின்றவர்களுக்கு அறிவு வளர்ச்சி அற்புதமாக உள்ளது. எமது அனுவபத்தில்பார்த்தது. எமது மாணவர்களில் கூர்ந்த அறிவு மிக்கவர்களாகவும், வகுப்பில் முதல் மதிப்பெண் பெறக்கூடியவர்களும் பெரும்பாலும் தாய்மொழியில் பள்ளிப்படிப்பை படித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கடந்த 1993 இல் இருந்து எமது மாணவர்களுக்கு IAS, IPS, TNPSC Group – I தேர்வுகளுக்கு ஊக்கப்படுத்தி வழிகாட்டி இருக்கிறேன். சிலர் அதிகாரிகளாக, சிலர் IAS, IPS மாவட்ட துணை ஆட்சியாளர்களாக இன்றைக்குப் பதவி ஏற்று இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே தமிழ் வழிகல்வி பயின்றவர்கள்தான். எனவே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நமது பெற்றோர் நம்மையும் ஆங்கில வழிப்பள்ளியில் சேர்த்திருந்தால் இப்படி சிரம்ப்பட வேண்டி இருக்காதே என்று நீங்கள் கலங் வேண்டியதில்லை. உங்கள் பெற்றோர் சரியானதையே செய்திருக்கிறார்கள்.

“அந்நியமொழி, பயற்சி மொழியாக இருப்பதனால் நமது குழந்தைளின் மூளை வளர்ச்சி தடைபடுகிறது. அது நரம்புத்தளர்ச்சியை உண்டாக்குகிறது. நெட்டுருப்போட்டு ஒப்பிப்பதற்கும், சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளையாக மாற்றுவதற்கும் அந்நிய மொழிப் பயிற்சி காரணமாகிறது. சுய சிந்தனையை அழித்து விடுகிறது.” என்று நமது தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

எனவே நீங்கள் உங்களைத் தாழ்வாக மதிப்பிட வேண்டாம். நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.

நீங்கள் இப்போது செய்ய வேண்டியது… வகுப்புக்கு தவறாமல் செல்ல வேண்டியதும், ஆசிரியர் சொல்வதை நன்கு வகனிப்பதும் முக்கியம். மாலையில் விடுதியி இருக்கும்போது மற்ற மாணவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம். அல்லது மூத்த மாணவர்களிடம் கேட்டும் தெளிவு பெற்று படிக்கலாம்.

மேலும் ஆங்கில அறிவை வளப்படுத்திக்கொள்ள தினமும் சிறிது நேரம் ஆங்கில நாளிதழ் படிக்கலாம்.. அதில் வரும் கட்டுரைகளை ஆரம்பத்தில் படிப்பது கடினமாக இருக்கும். எனவே தொடக்கத்தில் Letters to the editor பகுதியைப் படிக்கலாம். மற்றச் செய்திகளைப் பிறகு படிக்கலாம்.

அப்படிப் படிக்கும் போது பொருள் தெரியாத சொற்கள் இருந்தால் அதைத் தனியாக ஒரு சிறு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு அகராதிகளைப் பார்த்து சரியான பொருளை அறியலாம். அவ்வப்போது அந்தக் குறிப்பேட்டைப் புரட்டி நினைவில் நிறுத்திக் கொள்வதும் வாய்ப்பு நேரும்போது அவற்றை பயன்படுத்துவதும் முக்கியம்.

ஆங்கிலத்தில் பேசுகின்ற ஆற்றலையும், சரியான உச்சரிப்புகளையும் கற்றுக்கொள்ள, வானொலி தொலைக்காட்சி ஆங்கிலச் செய்திகளை தினமும் கேட்டுவரலாம். வாய்ப்பு நேரும் போதும், வாய்ப்புகளை உருவாக்கியும், ஆங்கிலத்தில் எழுதியும், பேசியும் பழகுவதன் மூலம் நீங்கள் முதன்மை பெறலாம்.

தமிழில் படித்த அணு விஞ்ஞானி அப்துல்கலாம் இன்று தரணி புகழ உயர்ந்துள்ளார். அழகு தமிழில் அடிப்படைக் கல்வி கற்ற அறிஞர் அண்ணா, அகிலம் போற்றும் ஆங்கிலப் பேச்சாளராகவும் விளங்கினார். அதே போல ஆர். கே. சண்முகம் செட்டியார், இன்னும் ஏராளமாக சான்று கூறலாம். சிறந்த சிந்னையாளர்கள், மிகப்பெரிய மேதைகள் எல்லாம் பெரும்பாலும் தாய்மொழி மொழியில் படித்தவர்கள்தான்.

உங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் டஸ் புஸ் என்று ஏதோ ஆங்கிலத்தில் பேசுவது கண்டு மனம் தாழ்வுறத் தேவையில்லை. அது வெறும் மாயை. நீங்கள் பிரகாசிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. பட்ட மேற்படிப்பென்ன – உயர் கல்வி அனைத்தும் நீங்கள் படித்து சாதனை புரியும் வாய்ப்புகள் வரும்.

Late entry முறையில் தொழிற் கல்லூரிகளி சேருகிறவர்களுக்கு ஏற்படுகிற இயல்பான சிக்கல்தான் உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்காக சோர்ந்திடவோ, அஞ்சிடவோ தேவையில்லை.

இந்தப் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களையும் அடுத்த பருவத்தில் சேர்த்து எழதி வெற்றி பெறமுடியும். உங்களைப் போல டிப்ளமா படித்துவிட்டு பிறகு பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கிறவர்கள் மிகச் சிறப்பாக படிக்கமுடியும். ஏனென்றால் இங்கு படிக்கும் பல பாடங்களை நீங்கள் முன்பே படித்திருப்பீர்கள். இங்கு சிலவற்றை கூடுதலாகப் படிக்கப் போகிறீர்கள். எனவே மற்றவர்களைவிட நீங்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க வாய்ப்புகள் மிகுதி.

தற்கொலைக்கு முயற்சிப்பது உங்களைப் போன்ற நன்கு படிக்கக்கூடிய ஆற்றல் மிகுந்தவர்கள் செய்யக்கூடியதல்ல. நீங்கள் தகுதியற்றவராக இருந்தால் இந்த B.E. பட்டப்படிப்பிற்கு இடம் கிடைத்திருக்காது.

எனவே உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் புதைந்துகிடக்கிற ஆற்றலை கூர்மைப்படுத்துங்கள். ஒரு சில மாதங்களில் ஆங்கிலம் உங்களுக்கு அடிமையாகும். அனைத்தும் உங்களுக்கு வசப்படும். வருங்காலம் உங்களுடையதுதான்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். தாழ்வுமனப்பான்மையை தகர்த்தெரியுங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்