Home » Cover Story » நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு

 
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு


அனிதா போஸ்
Author:

(சென்னையில், “நம்பிக்கையும் நானும்” நேர்காணலுக்காக சில பிரபலங்களை சந்தித்தபோதுதான் அந்தச் செய்தி கிடைத்தது. “ஜெரிமனியிலிருந்து நேதாஜியின் மகள் வந்திருக்கிறார். நாளை புறப்படுகிறார்” என்று.)

நேதாஜி விடுதலைப்போராட்டத்தின் வீரத்திருப்பு முனை! மறைந்தும் மறையாத மகத்துவம்! அவர் மகளை “தன்னம்பிக்கை”க்காக சந்திக்க முடியுமா? வேர்விட்ட ஆசைக்கு நீர்விட்டார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்.

24-02-2001 அதிகாலை தூங்கியெழுந்த குடும்பப் பெண் போல் துலங்கியிருந்தது சென்னை. கன்னிமாரா ஹோட்டல் வரவேற்பறையில் அந்த அபூர்வ சந்திப்புக்காகக் காத்திருந்தோம். விமானத்திற்குப் போகும்முன், பதினைந்து நிமிடங்களை “தன்னம்பிக்கை” இதழுக்காக செலவிட சம்மதித்திருந்தார். டாக்டர் அனிதாபோஸ், இன்னும் சில நிமிடங்கள்தான், வந்துவிடுவார். அதற்குமுன் அவரைப்பற்றி சில விபரங்கள்…)

1933ல் நேதாஜி ஜெர்மனி சென்றிருந்த போது அவரின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்தவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி. அவருக்கும் நேதாஜிக்கும் 1938 திருமணம் நடந்தது. அவர்கள் மணவாழ்வில் 1942ல் செப்டம்பர் 17ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு “அனிதா” என்று பெயரிட்டார் நேதாஜி.

அனிதா இரண்டு மாதக் குழந்தையாக இருந்த போதே போராட்டக் களம் நோக்கிப் பிரிந்து போனார் நேதாஜி. தந்தை முகம் கண்றியாத தளிர், தாயின் அரவணைப்பில் வளர்ந்தது. கணவனைப் பிரிந்த எமிலி அஞ்சல் துறையில் பணி புரிந்து அன்பு மகளைக் காப்பாற்றி வளர்த்தார் இந்தக் காலகட்டத்திதான் நேதாஜியின் சுதந்திரப் போராட்டம் புது வடிவம் பெற்றது. அவரது குரு ராம்பராரி கோஷ் உருவாக்கிய இந்திய சுதந்திர இயக்கம் வலுப் பெற்றிருந்தது. அதன் இராணுவமாக “இந்திய தேசியப் படை” மேஜர் மோகன் சிங் என்ற மாவீரரால் உருவாக்கப்பட்டது. அது நேதாஜி வசம் ஒப்படைக்கப்பட்டது. 1943 அக்டோபர் 21ல் நேதாஜி புதிய அரசையும், அக்டோபர் 24ல் யுத்தத்தையும் அறிவித்தார். விமான விபத்தில் சிக்கிய நேதாஜி 18-8-1945 இறந்ததாக அறிவிக்கப்பட்டது. என்றாலும் இந்தச்சம்பவம் இன்னும் சர்ச்சைகுரியதாகவே உள்ளது.

இதற்கிடையில் அனிதா போஸ் பொருளாதாரம் பயின்றார். 1961, ஜெர்மனியைச் சேர்ந்த திரு. மார்டின் பார்ஃபை பெங்களூர் சந்தித்தார். 1965ல் அவரை மணந்தார். மார்டின் பார்ஃப், ஜெர்மனியில் பாராளுமன்ற உறுப்பினர் பொருளாதாரப் பேராசிரியரும் கூட! இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். அருண், குமார், மாயா, அவர்களை இந்திய முறையிலேயே வளர்த்துள்ளனர். அதோ! வந்து விட்டார் அனிதா போஸ்!

தன்னம்பிக்கை இதழுக்காக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய தேசியப்படையில் தமிழர்கள் அதிகம் பங்கு வகித்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இன்றைய தமிழ்நாடு எப்படி இருக்கிறது?

இதற்கு முன் 1961 ல் ஒரு முறையும் 1979ல் ஒரு முறையும் தமிழகம் வந்திருக்கிறேன். அன்றைய தமிழ்நாடு பற்றிய பதிவுகள் என்னில் அதிகம் இல்லை. 1979ல் நிறை கிராமங்களுக்குச் சென்றோம்.

இம்முறை சென்னையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. மற்ற மாநிலங்களை விட, தூய்மையாகவும் பசுமையாகவும் உள்ளது. உயிரோட்டமுள்ள நகரமாக சென்னை விளங்குகிறது. ஆனால், சேரிப் பகுதிகளுக்கு சென்று பார்க்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த மாநிலம் முன்னேறுவதற்கான அடையாளங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.

இது நேதாஜி நேசிக்கும் மக்கள் கொண்ட மாநிலம் என்பதை உணரமுடிந்ததா?

நிச்சயமாக! மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. தியாகிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் என் தந்தை மீது தகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். நேற்று மகாபலிபுரம் சென்றிருந்தோம். என்னை டி.வி.யில் பார்த்திருந்த சிலர் அடையாளம் கண்டு கொண்டதும் திரளாகக் கூடிவிட்டனர். ஒருவர் என்னைக் கண்ட பரவசத்தில் தரையில் விழுந்து அழுதார். (கண்கலங்குகிறார்) இவ்வளவு அன்பான மக்களா என்று வியந்தேன்.

உங்கள் தாயார் எமிலி போஸ் பற்றிச்சொல்லுங்களேன்?

என் தாய் தன்னம்பிக்கை – துணிச்சல் – சுதந்திர மனப்பான்மை போன்றவற்றின் மொத்த வடிவமாகத் திகழ்ந்தார். என் தந்தை பிரிந்த பிறகு வாழ்க்கை அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். கடைசி 6 ஆண்டுகள் எங்களுடன் வாழ்ந்தார். 62 வயது வரையில் பணி புரிந்தார். அதன் பிறகு பென்ஷன் பெற்று வந்தார். எங்களோடு வந்து தங்குவதற்கு முன்பு அடிக்கடி வந்து செல்வாரே தவிர தன்னை நம்பித்தான் இருப்பார். குறிப்பாக இரண்டாவது உலக யுத்தத்தின் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். பெரிய அளவில் அப்போது பஞ்சம், ரேஷன் வினியோகம் போன்றவை இருந்தன. ஆனால், மிகுந்த நம்பிக்கையோடு அந்த இன்னல்களைக் கடந்து வந்தார்.

உங்கள் தந்தையைப் பற்றி அவர் உங்களிடம் நிறைய பேசியிருப்பாரே?

என் தந்தை மீது அதிக அன்பும் விசுவாசமும் அவருக்கு இருந்தது. நேதாஜி இருந்தபோது தன்னால் முடிந்த விதங்களில் அவருக்குத் துணை புரிந்தார். பல சம்பவங்களை அவர் கூறியிருக்கிறார். அவற்றை என் நினைவுகளில் மட்டும் பாதுகாக்க விரும்புகிறேன்.

இந்திய சுதந்திரத்திற்கு நேதாஜி போராடினார். சுதந்திர இந்தியாவிற்கு, குறிப்பாக இன்றைய தலைமுறைக்கு அவரது வாழ்க்கை எந்த விதத்தில் வழிகாட்டும் என்று கருதுகிறீர்கள்?

இன்றைய இந்தியர்களுக்கும், விடுதலைக்கு முன்பிருந்த அதே அர்ப்பணிப்பு உணர்வும் தியாகமும் அவசியம் என்று கருதுகிறேன். அன்றைய நோக்கங்கள் வேண்டுமானால் வேறாக இருந்திருக்கலாம். அன்று இந்திய சுதந்திரம் என்கிற ஒன்று மட்டுமே இலக்காக இருந்தது. இன்று இந்தியாவிற்கு எதிரான பல்வேறு விஷயங்களை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.

இன்று இளைஞர்களில் பலருக்கு, தங்களுக்கு என்ன தேவை என்று தெரிகிறது. அவற்றைத் தருகிற நிலையில் தேசம் இல்லை. எனவே சில சமுதாய நோக்கங்களை முன் வைத்து, அதற்காகப் போராடினால் தனிமனிதத் தேவைகளும் வெற்றி பெற முடியும். மனிதர்கள் தங்கள் தேவைகளுக்குத் தனித்தனியாகப் போராடுவதைவிட பொது இலட்சியங்களுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் நேதாஜியின் வழி காட்டுதல் இன்று மேலும் அர்த்தமுள்ளதாகிறது.

எங்கள் மாத இதழ், முழுக்க முழுக்க சுய முன்னேற்றத்தை மையப்படுத்தி, தமிழில் வெளிவருகிறது. எங்கள் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

நாம் தனிமனிதர்கள் மட்டுமல்ல. நம் எல்லை, நமது குடும்பங்களோடு முடிவடைவதில்லை. நாம் வாழ்கிற சமூகத்தின் நன்மைக்காக செயல்படும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குறிப்பாக இளைய தலைமுறையினர், தங்களால் சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை முதலில் பெற வேண்டும். பொது வாழ்வில் பலர் வரத் தயங்குவதன் காரணமே சுயலம் அல்ல. தங்களால் முடியும் என்கிற தன்னம்பிக்கை இல்லாததுதான். அந்த நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அதற்குள் விமானத்திற்கு நேரமாகிவிட்டது. நேதாஜியையே நேரில் பார்த்த மன நிறைவோடு விடைபெற்றோம். திரும்புகிற வழியில்… சில ஆண்டுகளுக்கு முன் நேதாஜி பற்றி நான் எழுதியிருந்த கவிதை வரிகள் இதயத்தில் எதிரொலித்தன….

வெள்ளைக் கழுகுகள் வணிகப்போர்வையில்
உள்ளே நுழைந்த ஒரு இருட்காலம்;
அடக்குமுறையில், அன்னை நாட்டின்
துடிப்பு மெதுவாய்த் துவண்டு கொண்டிருந்தது;
அண்ணல் காந்தியின் அகிம்சை கீதம்
மண்ணில் புதுமையை மலர்த்திய போது,
எங்கோ இருந்து எழுந்த எரிமலை
பொங்கி எழுதலை போதிக்க வந்தது!
புதியபுரட்சியின் புனித முழக்கம்
அதிர்வைக்கொடுத்தது அந்நியனுக்கு!
“சபாஷ்” எனச் சொல்லி சிரித்தது வையம்
“சுபாஷ்” எனச் சொல்லி சிரித்தது தேசம்!

தன்னம்பிக்கை வாசகர்களுக்கு டாக்டர் அனிதா போஸின் பிரத்யேக செய்தி

என் தந்தை நேதாஜியின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்கள், பெண்கள் அனைவருமே நேதாஜி இந்திய தேசியப் படை மற்றும் பிற விடுதலைப்போராட்ட வீரர்கள் கொண்டிருந்த இலட்சியங்களை மறவாமல் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதோடு தங்களால் இயன்றதை இந்திய சமூகத்திற்கு மனித குல முழுமைக்கும் செய்வார்கள் என்று நம்புகிறேன்
ஜெய்ஹிந்த்!
(ஒப்பம்) அனிதா போஸ்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்