Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

தன்னம்பிக்கை உள்ளவன் தன்னைப்பற்றித் தெளிவான கருத்துக்கொண்டவனாக இருப்பான். தன்னுடைய தகுதிகள், திறமைகள், அறிவு, ஆற்றல் பற்றிய ஒரு தெளிவான கணிப்பு அவனுக்கு என்றுமே உண்டு.

அவன் தன்னால் செய்ய முடிந்த பணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை ஒதுக்கி விடுகிறான். எடுத்துக்கொண்ட பணிகளைச் செய்து முடிப்பதற்கான செயல் திட்டங்களை அங்குலம் அங்குலமாக வகுத்துக்கொள்கிறான்.

ஒரு இளம் மருத்துவரை எடுத்துக்கொள்ளுங்கள். தன் மருத்துவமனை நேரத்தில் அவர் மருத்துவ மனையிலே காத்திருக்கிறார். நோயாளிகளின் வருகை இல்லை என்றாலும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவர் அங்கேயே காத்திருக்கிறார். வருங்காலத்தில் மருத்துவத்தில் சிறந்து விளங்கமுடியும், வளமாக வாழ முடியும் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையே அவரை அவ்வாறு பொறுமையாகக் காக்க வைத்திருக்கிறது.

பொது மக்களிடம் ஒரு கருத்து பரவுகிறது. ஏதாவது ஒரு அவசரம் என்றால் “இந்த நேரத்தில் போனால் அவர் உறுதியாக மருத்துவமனையில் இருப்பார்” என்ற கருத்தில், மக்கள் வருகிறார்கள். பயன் பெறுகிறார்கள்.

தொடக்க காலத்தில் யாருமே வரவில்லை என்றாலும் தான் தன்னம்பிக்கையோடு காத்திருந்த பலனை பிறகு அவர் நிரந்தரமாக அனுபவிக்கின்றார்.

ஏன் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்களைப் பாருங்கள். ஒரு சிலர் ஆட்டோ நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே காத்து இருப்பார்கள். அல்லது வண்டியைச் சுத்தமாகத் துடைத்துக் கொண்டிருப்பார்கள். யாராவது அவசரமாக வருபவர்கள், உடனே அதில் ஏறி அமர்ந்து புறப்படு என்பார்கள். வாடகை கிடைக்கும்.

மாறாகச் சிலர் வேறு இடத்தில் சென்று பலரோடு வீண் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் பெட்ரோல் இல்லாமல் வண்டியை நிறுத்திக் கொண்டு ஆள் ஏறியவுடன் பெட்ரோல் போடுவார்கள். இத்தகையவர்களை யாரும் விரும்புவதில்லை. இவர்களை மறுமுறை யாரும் தேடிவருவதே இல்லை. மாறாகத் தயார் நிலையில் உள்ளவர்களையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

ஒரு உணவு விடுதி, ஒரு மளிகைக்கடை, ஒரு தையல் கடை இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் தயார் நிலையில் இருக்கக்கூடிய இடத்தையே மக்கள் நாடிச்செல்கிறார்கள். அவர்கள் தயார் நிலையில் இருப்பதால்தான் வெற்றியும் பெறுகிறார்கள். அவர்கள் தயார் நிலையில் இருப்பதற்கு தங்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்ற தன்னம்பிக்கையோடு காத்திருந்ததுதான் காரணம். எப்போதும் தயார் நிலையில் இருப்பதற்குத் தங்களைப் பயிற்சிக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.

இன்னும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களை ஆராய்ந்து பாருங்கள். உண்மை விளங்கும்.

அவர்கள் தினம் தினம் தவறாமல் பயிற்சி செய்கிறார்கள். எங்கே பந்தயம் என்றாலும் அவர்கள் தயாராகி விடுகிறார்கள். அதே போல களத்தில் இறங்கி ஓடத்தயாராக அவர்கள் அமர்ந்திருக்கும் நிலையைப் பாருங்கள். வெடிச் சத்தம் கேட்டவுடன் பறக்கிறார்கள்.

பந்தயத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் கிட்டத்தட்ட அதிவிரைவாக ஓடுகின்றவர்கள்தாம். ஆனாலும் தொடக்கத்தில் யார் தயார் நிலையில் இருந்தார்களோ அவர்களே வெற்றிக்குரியவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் தங்களை எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படி பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

“தளராத தன்னம்பிக்கை உள்ளவனிட்டதில் செல்வம் தானாக வழி கேட்டுக்கொண்டு வந்து சேரும் என்பது முற்றிலும் உண்மை.

வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும்போது நாம் திறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்தகையவர்கள்தான் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்.

இதோ.. உங்கள் கதவு தட்டப்படும் நேரம் வந்துவிட்டது. அதறகுள் நீங்கள் தயாராகிவிடுங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்