Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

அதனால் அதுபற்றித் தீரச் சிந்தித்துச்செயல்பட வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஒரு மனிதனின் – பல பொறுப்புகள்

மனிதனின் ஒருவன்தான், அவன் தந்தையாகவும், கணவராகவும், சமுதாயத்தில் ஒரு மனிதனாகவும், தன் பெற்றோருக்கு மகனாகவும், இன்னும் பல்வேறு பொறுப்புக்களில் கடமையாற்ற வேண்டியவனாகவும் உள்ளான். அப்போது அவன் பல்வேறு நிலைகளிலிருந்தும் புதிய புதிய சிக்கல்களை எதிர் நோக்கித் தீர்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

சிக்கலை ஏற்றுக்கொள்கிறவர்களின் மனநிலையைப் பொறுத்தே அதன் அளவுகூட சிறிதும் பெரிதுமாக அமைந்துவிடுகிறது.

வாழ்க்கையின் ஓர் அங்கம்

காலை எழுந்தது முதல் இரவு படுகைக்குப்போகும் வரை பல்வேறு சிக்கல்களைப் பெரும்பான்மையோர் சந்தித்தே தீரவேண்டி உள்ளது. திடீரென்று தண்ணீர்க் குழாயில் தண்ணீர் வரவில்லை. மின்சார விளக்கு எரியவில்லை; மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டது இப்படி அன்றாடம் வீட்டுப் பிரச்சனைகள்.

பள்ளிக்குச் சென்ற பையன் விளையாடி காலை ஒடித்துக் கொண்டு வந்து நிற்பான், பெற்றோருக்கு உடல் நலமில்லை என்று உடனே கிராமத்திற்கு வரச்சொல்லி கடிதம் – அலுவலகத்தில் இப்படி எதிர்பாராத சிக்கல்கள். அவரவர் தகுதிக்கும் தரத்திற்கும் பொறுப்பிற்கும் ஏற்பச் சிறிதும் பெரிதுமாக வரவே செய்கின்றன. அதனால் இவற்றை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இவற்றை எளிமையாகப் போக்க முடியும்.

ஏன் வருகிறது?

சிக்கல்கள் முளைத்தவுடன் அவை ஏன் வருகின்றன என்ற அடிப்படையை கோபப்படாமல் ஆராயவேண்டும். நமது கவனக்குறைவுதான் காரணமோ? என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

குழாயில் தண்ணீர் அடிக்கடி வருவதில்லை என்றால் அதற்கு மாற்றுவழி கண்டறிய வேண்டும். முன்கூட்டியே கணிப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை. பையன் காலை ஒடித்துக்கொண்டான் என்றால் அது எதிர்பாராததுதான். முதலில் மருத்துவம் பார்ப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

மண்டை உடையாமல் கால் உடைந்த அளவுக்குத் தப்பித்தோம் என்று துன்பத்தை எளிமையாகிக்கொள்ள வேண்டும். பிறகுதான் இனி விளையாடுவதைக் குறைத்துக்கொள் என்று அறிவுரை கூற வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் ஏன் வருகிறது. அதற்கு நிரந்தரத்தீர்வு என்ன என்று நிதானமாகக் கண்டறிய வேண்டும்.

நிரந்தரச்சிக்கல்

அன்றாடம் தீர்க்கக் கூடிய சிக்கல்களைத் தீர்த்துவிடலாம். சிலருக்கு நிரந்தரச்சிக்கல்கள் கூடத் தோன்றலாம். ஊனமுற்ற குழந்தை உடையவர்கள் அல்லது இயற்கையிலேயே ஊனமுற்ற குழந்தை – கண் பார்வையற்ற பெற்றோர் உடையோர் – இப்படிப் பாசத்தோடு தொடர்புடைய, உயிரோடு தொடர்புடைய, தீர்க்க முடியாத சில சிக்கல்கள் இருக்கலாம். இவையெல்லாம் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவை என்று ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அந்த மனப்பக்குவம்தான் அவர்களுடைய வாழ்க்கையை ஓரளவு மகிழ்ச்சியாக நடத்த உதவுமே ஒழிய, அதையே நினைத்து வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வதோ அல்லது நமது சுமைகளை வேறு யாரிடமாவது இறக்கிவிட்டு தப்பித்துக் கொள்வதோ அறிவுடமை ஆகாது.

ஒதுங்குவதால் பயனில்லை

பலர் சிக்கலைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். இன்னும் சிலர் ஓடி ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள். அல்லது மனைவி மக்களிடம் ஒப்படைத்து விட்டுத் தாங்கள் மகிழ்ச்சியோடு சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் எல்லாம் சுகத்தில் மட்டும் பங்கு போட்டுக் கொண்டு துன்பத்தில் பங்கு பெறாத சுயநலக்காரர்கள்.

இவர்களைக் கையாளதவர்கள் என்றோ பாவம் இயலாதவர்கள் என்றோ இவர்கள் மீது அனுதாபம் கொள்வதோ கூட தவறாகும். இவர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களில் யார் எவ்வளவு துன்பம் அனுபவித்தாலும் கூடப் பரவாயில்லை தாம் சுகமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள்.

இத்தகையவர்களை இழுத்துப்பிடித்து வேலையைப் பிரித்துக்கொடுத்துச் செய்ய வைத்துத் திருத்த வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மற்றவர்கள் உழைப்பிலேயே வாழும் அட்டைகளாகவே மாறிவிடுவார்கள்.

சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணங்கள்

எதையும் உரிய காலத்தில் செய்யாமையால் பல சிக்கல்கள் உருவாகின்றன. இன்னும் சில சிக்கல்கள் சோம்பலால் வருகின்றன. வேறு சில பொறுப்பைத் தட்டிக்கழிப்பதால் ஏற்படுவன. சிலருக்குத் தங்களைப் பற்றிய சரியான கணிப்பு இன்மையால், செய்ய முடியாத்தைத் தொடங்கி, சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு. சரியான முறையில் கடமையைச் செய்யாத பெரும்பான்மையோருக்குச் சிக்கல்கள் தான் வெகுமதி என்பதை அறிய வேண்டும்.

வரம்பு ஆர்வத்தினாலும், விரைவாக முன்னேற வேண்டும் என்ற அவாவினாலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற வேகத்தினாலும் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு.

மன வலிமையே மூலதனம்

இத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மனவலிமையே மூலதனமாகும். எது வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு இதையும் செய்து முடிப்போம் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும். அஞ்சி நடுங்கினாலோ அது பற்றிய கவலையில் மூழ்கினாலோ அதனால் ஆகப் போவது எதுவும் இல்லை. மாறாக சிக்கல்கள் மேலும் மேலும் வலுவடைந்து தீர்க்க முடியாதவையாகிவிடும்.

உடனடியாகத் தீர்க்க வேண்டும்

சிக்கல்கள் வந்தது என்றால், அது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை என்ற உணர்வோடு விரைந்து செயல்பட வேண்டும். முளையிலே கிள்ளி விடுவது எளிமையாகும். இவ்வாறு சிலவற்றைத் தீர்த்தால் பிறகு சிக்கல்கள் வருவதே குறைந்து போகும்.

தனிமனித ஒழுக்கம்

ஒருவருடைய நல் ஒழுக்கம். அவனுடைய சீரிய நடைமுறைகள், அவன் குடும்பம் நடத்துகின்ற பாங்கு, அவனுடைய சமூகத் தொடர்புகள் ஆகியவை, அவனுக்கு வருகின்ற சிக்கல்களை வரவொட்டாமல் தடுப்பவை; அல்லது இயல்பாகவே தீர்க்கக் கூடியவையாகும். நல்லொழுக்கமே வலிமை மிகுந்த ஆயுதமாகும்.

குறைவான தேவைகள் நல்லது

மனிதனுக்குத் தேவைகள் பெருகப்பெருக சிக்கல்களும் பெருகுகின்றன. அதனால் அவனுடைய தேவைகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அல்லது வரையறுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரையறுத்துக்கொள்கின்றவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

உலகின் மீது பற்றுக்கொள்ள வேண்டும்

உலகில் எத்தனையோ பேர் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் வாழ்கிறார்கள். எவ்வளவோ தாங்கவொண்ணாத் துயரங்களை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அவைகள் எல்லாம் நமக்கில்லை. அந்த அளவில், நமக்கு அவ்வப்பொது வரும் சிறு சிறு தொல்லைகளைப் பெரிதாகக் கருதாமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், பொறுப்புணர்ச்சியோடு சிக்கல்களை எதிர்கொண்டு அதனை நீக்கி வாழ கற்றுக் கொள்ளவேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்