Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

காலை டிபனுக்கு ஹோட்டலுக்குப் போனார் ஒருத்தர். ஸ்வீட், வடை சாம்பார்லே தொடங்கி நெய், மசால், ஆனியன் ரவான்னு வெளுத்து வாங்கி சந்தேகத்துக்கு சப்பாத்தி குருமா, பூரி மசால் வாங்கி சாப்பிட்டு, டிகிரி காபியோட மங்களம் பாடினார்.

பில் வந்தது மனுஷன் கவலைப்படவேயில்லை. பாக்கெட்லேயிருந்து ஒரு ரெண்டு ரூபா மட்டும் எடுத்துத் தட்டிலே வைச்சுட்டு எழுந்தார். சர்வர் சட்டையைப் பிடிச்சதும், “அதான் டிப்ஸ் கொடுத்தேனே, அமைதியாப் போயிடு” அப்படீன்னார்.

சர்வர் குரல் கொடுத்தார். அப்புறமென்ன? பழைய காலம்னா மாவாட்டலாம். ராத்திரி வரை டேபிள் துடைச்சு, இரவு ஒரு மணி வரை பாத்திரம் கழுவினார். அது இருக்கட்டும்.

நான் பொதுவாச்சொல்றேன், இந்த டிப்ஸ் விஷயம் இருக்கே, இது மனம் மகிழ்ந்து தர்ற விஷயம் மானான்னு யோசிச்சுப் பார்க்கணும். TIPS அப்படீன்னா, TO IMPROVE PROMPT SERVICE ன்னு அர்த்தம்.

இந்த டிப்ஸ், ஒவ்வொரு தொழிலிலேயும் ஒவ்வொரு விதமா வருது. நான் பொதுவாச் சொல்றேன். ஊதிய உயர்வு, சலுகைகள், இதெல்லாமே ஒரு விஷயத்திலே டிப்ஸ்தான். ஒருவருடைய பணி உண்மையிலேயே திருப்தி தர்றதுக்கு அடையாளமா, ஒரு நிர்வாகமோ, அரசாங்கமோ ஊதிய உயர்வு, சலுகைகள் எல்லாம் அறிவிக்கும்.

ஆனா, வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், இதனை மாசத்துக்கு ஒரு முறை அதிக சம்பளம், இத்தனை வருஷத்துக்கு ஒரு முறை கூடுதல் சலுகைகள்னு இருந்தா அது நம்ம செயல்திறனை அதிகமாக முடியுமான்னு கேட்கறேன்.

ஒரு காலத்துல தனியார் வேலைன்னா பொண்ணு தர மறுத்தாங்க. இப்ப அரசுத்துறைகளையே தனியார்மயமாக்கி வர்றாங்க.

இது பத்தி எழுத்தாளர் பாலகுமாரன் கூட, சமீபத்திலே சொல்லியிருக்காரு “மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அத்தனை இலாக்காக்களுமே தனியார் கைகளுக்குப் போகும்” அப்படீன்னு கேள்வி பதில்கள் பகுதியிலே ஒரு நாவல் இதழிலே எழுதியிருக்காரு.

நான் பொதுவாச்சொல்றேன், தனக்குப் பயன்படறவங்களை தலைமேல்தூக்கி வைச்சுக்கறதும், சரியா உழைக்காதவங்களை சகட்டு மேனிக்கு வெளியே அனுப்புறதும் தனியார் நிர்வாகத்திலே இருக்கு. இது சரியா தப்பாங்கிற சர்ச்சைக்குப் போகாம, உழைப்புக்குத்தக்க ஊதியம்ங்கிற விஷயத்தை நாம முதல் ஆதரிக்கணும்.

ஒவ்வொரு தடவையும் சம்பள உய்வு, சலுகைகள் வர்றபோது, இதுக்குத் தக்கபடி நாம உழைச்சிருக்கோமாங்கிற கேள்வியை நாமே கேட்கறது நல்லது. TO IMPROVE PROMPT SERVICE அப்படீன்னா, நம்மை இன்னும் சரிப்படுத்திக்க நிறைய தேவை இருக்கு அப்படீன்னு புரிஞ்சிகிட்டு அதிலே கவனம் செலுத்த ஆரம்பிக்கணும்.

நான் பொதுவாச்சொல்றேன், அளவுக்கதிகமா உழைச்சாலும் சரி, சும்மாவே இருந்தாலும் சரி சம்பள உயர்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்னு ஒரு நிர்வாக அமைப்பு இருந்தால் அது அரசு நிர்வாகமா இருந்தாலும், தனியார் நிர்வாகமா இருந்தாலும் ஊழியர்கள் அதிகமா அக்கறை காட்ட மாட்டாங்க.

ஒரு மனிதர் மேலே என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரால் நிறுவனம் நன்மை அடையறபோது தனியார் நிர்வாகங்கள் அந்தக் குறைகளைக் கண்டுக்கிறதே கிடையாது.

இது உண்மையிலேயே நடந்த சம்பவம். ஒருதனியார் நிர்வாகத்திலே, அலுவலர் ஒருத்தர், முதலாளிகிட்டே போனார். மேலதகாரி ஒருத்தர் பெயரைச்சொல்லி, அவர் மீது நிறைய புகார் சொன்னார். அந்த முதலாளி அமைதியாக ஒரு ஃபைலை எடுத்தார். “இங்கேபார்! நீ புகார் சொன்ன அதிகாரியால், இந்த வருடம் எனக்கு இத்தனை லட்சம் லாபம். ஆனால் வந்து புகார் சொன்ன உன்னால், எந்தப் பயனும் இல்லை. மாத சம்பளம் நஷ்டக்கணக்கில் எழுதியிருக்கிறது. நாளையில் இருந்து வேலைக்கு வராதே” என்றார்.

நான் பொதுவாச் சொல்றேன், பாராட்டு, பதவி உயர்வு, அங்கீகாரம், அதிகாரம் இதெல்லாம் வர்றபோது பயம் வரணும். பணிவு வரணும். “நம்ம கிட்டே எல்லாம் சரியா இருக்கா?” அப்படீன்னு ஒரு எச்சரிக்கை உணர்ச்சி ஏற்படணும். நாம் நம்மை மேம்படுத்த (To Improve) என்னென்ன செய்யணும் அப்படீன்னு யோசிக்கணும்.

சரியா இருக்கிறதுக்கான சின்னச் சின்ன அடையாளங்கள்தான் பாராட்டும் பரிசும், அதை இன்னும் செம்மையா செய்ய என்ன வழின்னு தேடிகிட்டே இருக்கணும்.

இதிலே என்ன வேடிக்கைன்னா, சம்பளத்துக்காக, தன் கடமையை செய்ய வேண்டிய நிறைய அலுவலர்கள் அதை ஏதோ உதவியா செய்யற மாதரி நினைச்சுகிட்டு இருக்காங்க.

நுகர்வோர் உலகில், “நம் முதலாளியின் முதலாளி நுகர்வோர்தான்” அப்படீன்னு ஒரு விதி இருக்கு. வாடிக்கையாளர்களின் புன்னகைதான் ஒரு நிறுவனதுக்கு லாபத்துக்கான அடிப்படை.

இதனை கவனத்தோடும் செயல்படுகிற தனி மனிதர்கள் – பொது நிறுவனங்கள் – தனியார் நிறுவனங்கள் நிச்சயமா வெற்றி பெறும். மறுபடியும் சொல்றேன். வெற்றிக்கு ஒரே குறுக்குவழி உழைப்புதாங்கிறது நூற்றுக்கு நூறு உண்மைங்க!

சலுகைகள் உழைக்க
சக்தியைக் கொடுக்கும்
உழைப்பு மட்டுமே
வெற்றியைக் கொடுக்கும்
(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்