Home » Articles » ஆயிரம் நூல்களில் எழுதிவை!

 
ஆயிரம் நூல்களில் எழுதிவை!


இளந்தேவன்
Author:

ஏர்முனை மேனியில் பட்டதும் – மண்
எத்தனை மகிழ்ச்சியில் நெளிகிறாள்
பார்வையில் உழவன் தொட்டதும் – அந்தப்
பாவி மகளுக்கு மசக்கையாம்!

மண்ணில் இருக்குது மகத்துவம் – நான்கு
மறைகளும் அறியாத் தத்துவம் – நிலப்
பெண்ணிடம் உள்ளது நித்தியம் – அது
பெரிய பரம்பொருள் தத்துவம்!

ஆசைகள் வாழ்க்கையின் வித்துகள் – அவை
ஆண்டவன் புரிகிற சித்துகள்
ஆகையினால் தினம் ஆசையைவை – இதை
ஆயிரம் நூல்களில் எழுதிவை!

துன்பத்தின் காரணம் ஆசையா? – அது
தோல்வியில் விழுந்தவன் வாசகம்
இன்பமும் துன்பமும் இறக்கைகள் – அவை
இருப்பதனால் நாம் பறக்கிறோம்!

ஒற்றைச் சிறகுடன் பறப்பது – எந்த
உலகிலும் சாத்தியம் இல்லை காண்
கற்றைச் சடைமுனி ஆயினும் – சில
கவலையும் மகிழ்ச்சியும் உண்டு காண்!

ஒற்றை விதைக்குள் உள்ளன. – அட
ஒரு நூறாயிரம் கனவுகள்
வெற்றுக் கனவுகள் ஆகுமோ – அந்த
விதையின் கனவுகள் தோழனே!

வேர்கள் இருட்டில் உழைப்பதால் – அட
வெளிச்சப் பூக்கள் செடியிலே
வேர்வை நிலத்தில் விழுவதால் – தினம்
வெற்றிப் பூக்கள் மடியிலே!

இமயக் கல்லும் தினசரி – அட
இந்தியாக் காகவே உருகுது
குமரிக் கரைவரை கோடிழு – அந்தக்
குலமகள் கங்கையைக் கொண்டுவா!

சூரிய விதையைக்கொண்டுவா – உன்
சொந்த நிலத்தில் வித்திடு
கூரிய வெப்பக் கொழுந்தினால் – ஒரு
கோப்பைத் தேனீர்ச்சாறெடு!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்