Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

ஜெயிக்கும் அஸ்திரம்

அந்தச் சிறுவன் மிகவும் நல்லவன். குடும்பமே வறுமையில் வாடியது. சாப்பிட உணவில்லாமல் சாகும் தருவாயில் இருந்த அவனைப் பார்த்த எமனுக்கு மனமிரங்கியது.

சிறுவனைப் பார்த்து, “உனக்கு ஒரு சக்தி தருகிறேன். அதன் மூலம் நீ உயர்ந்த நிலைக்குப் போகலாம். நான் யாருடைய உயிரை பறிக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளும் மாயக்கண்ணை உனக்குத் தருவேன்.

சாகும் தருவாயில் யார் இருக்கிறார்களோ அவர்களுடைய கால் பக்கம் நான் அமர்ந்தால் அவர் பிழைப்பார். தலைப்பக்கம் அமர்ந்தால் அவர் இறப்பார். யாருடைய கால் பக்கம் அமருகிறேனோ நீ அவரிடம் சென்று அவருக்கு ஒரு டம்ளர் தண்ணீரைக் கொடுத்து நீங்கள் குணமாகி உயிர் வாழ்வீர்கள் எனச் சொல்; அவரும் உயிர் பிழைத்துக்கொள்வார்.

நீ உயிர் கொடுக்கும் ஆற்றல் படைத்தவன் என எல்லோரும் போற்றுவார்கள். நிறைய பணம் தருவார்கள். பணக்கஷ்டங்களும் தீர்ந்துவிடும். ஆனால் எக்காரணங்கொண்டும் தலைப்பக்கம் உட்கார்ந்தவருக்கு தண்ணீர் கொடுக்காதே.

இனிமேல் நீ ஒருவரைப்பார்த்து உயிர் பிழைப்பாய் என்றால் அவர் பிழைப்பார். உன் வார்த்தைகளெல்லாம் அப்படியே பலிக்கும்” என்றது.

அதைப் போலவே அந்த ஊரில் யாராவது ஆபத்தான நிலையில் இருந்தால் அவனை அழைப்பார்கள. அவனும் சென்று மாயக்கண்ணால் பார்ப்பான். தலைப்பக்கம் எமன் அமர்ந்திருந்தால் தண்ணீர் தராமல் “இனி இவருக்கு பிழைக்கும் வாய்ப்பில்லை” என்று சொல்லிவிடுவான்.

ஒருநாள் அந்நாட்டு இளவரசி மரணப்படுக்கையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தாள்.

அரசனே நேரில் வந்து சிறுவனை அழைத்துச் சென்றார். “எப்படியாவது இளவரசியைக் காப்பாற்ற வேண்டும். அவள் பிழைத்தால் உனக்கே அவளை மணம் முடிக்கிறேன்” என்றார்.

இளவரசியை மாயக்கண்ணால் பார்த்த போது, எமன் தலைப் பக்கம் அமர்ந்திருந்தான். இனி இளவரசி பிழைக்கும் வாய்ப்பில்லை எனச்சொல்ல நினைத்தபோது மனதிற்குள் ஒரு சபலம். தந்திரத்தினால் அவள் உயிரைக் காப்பாற்றினால் என்ன? எனத் தோன்றியது. ஒரு புறம் இளவரசியை அடைய சபலம். மறுபுறம் தமக்கு சக்தியைக்கொடுத்த எமனுக்கு கொடுத்த வாக்குறுதி உறுத்தியது. சபலத்தின் முடிவில் இளவரசியைத் திருப்பிப் படுக்க வைத்து தண்ணீரைக் குடிக்க வைத்தான். அவளும் பிழைத்துவிட்டாள்.

எமனுக்கோ கடுங்கோபம். தன்னைத் தந்திரத்தால் ஏமாற்றி விட்டானே என்று மனதிற்குள் ஆத்திரம். இவனையும் தந்திரத்தால் வெல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அடுத்த நாள் அதிகாலை அவன் தூங்கி எழுந்ததும் சுவற்றில் ஏதோ எழுதயிருப்பதைப் பார்த்து, அருகில் போய் படித்தான்.

“இப்போது நான் இறக்கப்போகிறேன்” என்று எழுதியிருந்தது. அவனையுமறியாமல் படித்துவிட்டான். எமனும் தன்னை தந்திரத்தால் மடக்கிவிட்டான் என்பதை உணர்ந்தான். எமனுடைய தந்திரத்தால் அவனும் அழிய நேரிட்டது.

இனி, கதையைவிட்டு விஷயத்திற்கு வருவோம்.

பொதுவாக பலருடைய வாழ்க்கையில் சறுக்கலுக்குக் காரணம் அவர்களுடைய சபலமே என்பதுதான்.

சபலம் எப்படி நமது தேவைகளிலிருந்து உருவாகிறது என்பதைப் பார்ப்போம்.

அறிஞர் மாஸ்லோ நம்முடைய தேவைகளை வரிசைப்படுத்துகிறார்.

முதலில் அடிப்படையான தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை நாடுகிறோம்.

இவைகளை அடைந்ததும் அடுத்ததாக, எப்போதுமே பாஇதுகாப்பாக வாழ வேண்டிய இரண்டாவது தேவைக்குச் செல்கிறோம். (Safety). இதனால் நிலையான தொழில், நிரந்தர வருமானம் போன்றவற்றைத் தேடுகிறோம்.

மூன்றாவதாக, அன்பு, பாராட்டு முதலிய தேவைகள் நமக்குள் அரும்புகின்றன. அப்போது பிறரின் பாராட்டுக்காக சில செயல்களில் இறங்குகிறோம். பல உறவுகளையும், நண்பர்களையும் தேடுகிறோம்.

நானாகாவதாக, சுய கௌரவத் தேவை உண்டாகிறது. மற்றவர்களைவிட அதிகமான தகுதிகளையும் வசதிகளையும் பெற்றிருப்பதாக நிரூப்பிக்கும் செயல்களில் ஈடுபடுகிறோம்.

ஐந்தாவதாக, தன் முழுத்திறைமைகளையும் வெளிக்கொணர்ந்து, இவருக்கு நிகர் இவர்தான் என்கிற தனித்தன்மைத் தேவைக்காக செயல்படுகிறோம்.

இத்தேவைக்குக்காக செயல்படும்போதும் தேவைகளை அடைந்த பின்பும் அவ்வப்போது பல வகையான விருப்பு வெறுப்புகள், அடங்கா ஆசைகள் உண்டாகின்றன. அதிலும் பணம், பதவி, புகழ் போன்றவற்றுக்கான குறுக்குவழி சபலங்கள் அவ்வப்போது உண்டாகின்றன.

அந்தச் சபலங்களின் போது தான் தவறானவற்றில் மாட்டிக் கொள்கிறோம்.

அறிந்தோ, அறியாமலோ இப்படி ஈர்க்கப்பட்டு தடம் புரளுபவர்கள் பாதாளத்தில் தள்ளப்படுகிறார்கள்.

இதற்குத்தான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

நம்மையே நாம் அவ்வப்போது சில கேள்விகளைக் கேட்க வேண்டும்.

நியாயமாக செயல்படுபவர் என்ற நல்லெண்ணம் பிறருக்கு நம்மீது உண்டாகிறதா?

சிக்கல்கள் வந்தபோதிலும் எடுத்துக் கொண்ட முயற்சியில் தொடர்ந்து செயல்படுகிறோமா? வார்த்தைகளில் சொன்னதைச் செயலில் காட்டுகிறோமா?

“நான்தான் சரி” என்று எப்போதும் குறுகிய மனம் கொள்ளாமல் எது சரியோ அதை ஏற்கும் மனநிலையில் உள்ளோமா?

பிறர் கட்டாயப்படுத்தும்போதும் நியாயத்தை இழக்காமல் இருக்கிறோமா?

பிறரை அரவணைத்துச் செயல்படுகிறோமா?

நல்ல குணநலன்களையே கொண்டுள்ளோமா?

இக்கேள்விகளுக்கு “ஆம்” என்ற பதில் வருமானால்நாம் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் எனலாம்.

இத்தகைய சுயபரிசீலனை மூலமே ஒருவன் தன்னத்தானே உயர்த்திக் கொள்ள முடியும். தான் ஈடுபட்டுள்ள தகாத செயல்களிலிருந்து தம்மைத்தாமே விடுவிக்க வேண்டும். ஏனெனில் ஒருவரின் பலவீனங்கள் அவருக்கு மட்டுமே தெரியும்.

பகவத் கீதை “நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே” என்ற மாபெரும் தத்துவத்தை வலியுறுத்துகிறது.

எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ அவன் தனக்குத்தானே நண்பனாகிறான்.

யார் ஒருவன் அப்படி பலவீனங்களை வெற்றிபெறமுடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கே எதிரியாகிறான்.

யார் தனக்குத்தானே நண்பனோ அவர் தம்மை சார்ந்தவர்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் நண்பனாவார். நம்பத்தகுந்தவராவார்.

பிறருக்கு நம்பத்தகுந்தவராக திகழ்வதே ஜெயிப்பதற்கு வேண்டிய முக்கிய அஸ்திரம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்