Home » Articles » தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்

 
தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர் இல. செ. க

பொருளாதாரம் :

இன்றைய உலகில் பொருளாதாரமே முன்னேற்றத்தின் அளவு கோலாக் கணிப்படுகின்றது. அதனால் எல்லோரும் பொருள் சேர்ப்பதில் பேயாய் அலைகிறார்கள். பொருளும் சேர்க்கிறார்கள். சேர்த்த பிறகு? அதுவும் அளவுக்கு அதிகமாகப் பொருள் சேர்த்தவர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள் அளவுக்கு மீறிய பொருளால் குடும்பத்தின் அமைதி கெட்டுவிடுகிறது. மனைவி மக்கள் ஒழுங்காக இருப்பதில்லை. பொருள், அவர்களை உழைக்க விரும்பாதவர்களாகவும். ஒழுக்கமில்லாதவர்களாகவும் ஆக்கவிடுகின்றது. பணம் இருக்கும் வரை அவர்கள் செல்வாக்கு ஓடும். பணம் போய்விட்டால் அவர்கள் செல்லாக்காசாக ஆகிவிடுவார்கள்.

அறத்தின் அடிப்படையில், நியாயமான தொழிலில் வருவாய் பெறுகின்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பொருள் வந்து சேரும். உழைத்து வந்த பொருளின் மரியாதையை அவர்கள் மட்டு மல்லாமல் அவர்களைச் சார்ந்தவர்களும் மிக நன்றாக உணர்வார்கள். ஒவ்வொரு பைசாவையும் எண்ணிச் சேர்ப்பார்கள். எண்ணிச் செலவு செய்வார்கள். ஆனால் தீய வழியில் அறமில்லாத வழியில் வருகின்ற பொருள்கள் வேகமாக வந்து சேரும். அதேபோல் வேகமாகவே போய்விடும். இது இயற்கை. ( Law of Nature ) காலம் வேறுபடலாம். ஆனால் தீய வழிக்கு முடிவு அழிவுதான். பலருடைய இறுதிக் காலத்தில் அவர்களுடைய மனைவி மக்களும் ‘ நீங்கள் என்ன நியாயமாகவா உழைத்துச் சொத்து சேர்த்தீர்கள்? அநியாயமாகச் சேர்த்தீர்கள்? இப்போது அவமானப்பட வேண்டியது தான் ‘ என்று தீர்ப்புக் கூறுவதைக் பார்க்கிறோம். இத்தகைய வரலாறு நமக்கு அவ்வப்போது இந்தப் பாடத்தைப் புகட்டியே வருகிறது என்பதை உணர வேண்டும். உங்களுக்குத் தெரிந்த. தீயவழியின் பொருள் சேர்த்து ஓகோ… என்று வாழ்ந்து. பின் நம் காலத்திலேயே கெட்டுப்போன ஒரு குடும்பத்தை எண்ணிப்பாருங்கள். உண்மை விளங்கும்.

இன்றை மக்களாட்சி முறையில் பதவியும் முன்னேற்றத்தின் ஒரு அளவு கோலாக் கருதப்படுகின்றது. பதவியும் தகுதிக்கும் உழைப்புக்கும் ஏற்ற வகையில் இருந்தால்தான் அது நிலைக்கும். மாறாகத் தகுதியும். திறமையும் இல்லாத பலர் உயர்ந்த பதவியில் இருப்பது உண்மையே. இது மக்களாட்சியின் குறைபாடே ஒழிய அறத்தின் குறைபாடு அல்ல. அவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்களால் ஆதாயம் தேடுகின்றவர்கள் பதவியில் இருக்கும் போது அவர்களால் ஆதாயம் தேடுகின்றவர்கள் ‘ இந்திரன் சந்திரன் ‘ என்று புகழ்வார்கள். அவர்கள் பதவி முடிந்த பிறகு ‘ கிடக்கிறான் அயோக்கியன்’ என்பார்கள். இது அரசியல் பதவிக்கு மட்டுமல்ல. அலுவலகப் பதவிக்கும் பொருந்தும்.

நம்நாடு முன்னேறாமைக்குக் காரணம் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் உரிய பதவியில் இருப்பதற்குரிய வாய்ப்பே அமைவதில்லை என்பதுதான். அதற்காக நாம் தீயவழியைத் தேர்ந்து அழிந்துவிடக்கூடாது. நேரிய வழியில் செல்வதே நமது குறிக்கோள். அதில் கிடைப்பது எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்வோம். நாம் அத்தகைய மனநிலை பெற வேண்டும். குறிக்கோள் உடையவர்கள் முன்னேறத் துடிப்பவர்கள் இந்த விதி முறைகளிலிருந்து சிறிதும் மாறக் கூடாது. இதுவே நேரிய வழி ஒழுக்கம்.

முன்னேறத் துடிப்பவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது. தன் ஒழுக்கமாகும். ( Self Character ) ஒழுக்கத்தை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று புற ஒழுக்கம் மற்றொன்று அக ஒழுக்கம் புற ஒழுக்கம் என்பது தொழில் முறையில் நேர்மையாகவும் நடந்து கொள்வது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது போன்றவை. சில கடைகளில் பாருங்கள். எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அங்கே தரமான பொருள்கள் நியாயமான விலைக்குக் கிடைக்கும்.

நீங்கள் உங்கள் பால்காரரிடம் ஒரு நாணயத்தை எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? சிலர். சில உணவு விடுதிகள். எங்கிருந்தாலும் தேடிப் போய்ச் சாப்பிடுகிறார்களே ஏன்? அங்கே சுவை சுத்தம் விரைவான பணி இவைகள் இருக்கம். சில அலுவலர்களைப் பற்றிய கணிப்பு உங்களுக்கு ஏற்கனவே தெரிகிறது. இவர் சொன்னால் செய்வார். இவரு சொல்வார். ஆனால் செய்ய மாட்டார். இவர் பரிந்துரை இருந்தால் செய்வார். இவர் அன்பளிப்புக் கொடுத்தால் செய்வார். இப்படித் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

இது போன்ற அன்றாட நடைமுறைகளைப் பார்த்துப் பார்த்துச் சமுதாயம் நம்மைப் பற்றியும் ஒரு கண்க்குப் போட்டு வைத்திருக்கின்றது. சிலரை ‘ ஆசாடபூதி ‘ (வெளி வேசக்காரன்) என்கிறோமே இதுதான். இந்த நடைமுறைகளில் நாம் நேர்மையாக நடந்து கொள்வதே. நமது குறிக்கோளை அடைய மன வலிமையைத் தோற்றுவிக்கும்.

அக ஒழுக்கம் என்பது நமக்கு நாமே நேர்மையாளராக நடந்து கொள்வது. நான்கு சுவருக்குள் நடப்பது யாருக்குத் தெரியப் போகிறது என்ற நோக்கில் செய்யும் தவறுகள் எல்லாமே மனச்சாட்சிக்கு அப்பாற்பட்ட செயலாகும். யாருக்கும் தெரியாது என்று தன்னிடம் பணிபுரியும் பெண்களைக் கெடுப்பது. நாம்தானே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிப்பது. நாம்தானே அலுவலர் என்று அரசு வசதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது. சொந்த நலனுக்காக விதிமுறைகளையே விட்டு விட்டுச் செயல்படுவது. சிறு வெற்றிக்களுக்காக எதிர்காலப் பெரும் நன்மைகளை அழிப்பது போன்றவைகள் எல்லாம் பெரும்பாலும் பொது மக்களுக்குத் தெரியாது. நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் கூட தெரியாமல் போகலாம்.

இவ்வாறு செய்கின்றவர்களின் உண்மை நிலை ஒரு நாள் வெளிவந்தே தீரும் வெளிவந்த பிறகு, இதுநாள் வரை இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் கேவலமானதாக அருவருக்கத்தக்கதாக, வீணானதாக ஆகிவிடும். மனைவி மக்களும். நண்பர்களும் உறவினர்களும் கூடக் கைவிட்டு விடுவார்கள். எவ்வளவு உயர உயர முன்னேறி இருந்தாலும் இவர்கள் முன்னேற்றமெல்லாம் நல்லவர்களால் ஐயம் கொள்ளப்படும்.

ஓகோவென்றிருந்த அமெரிக்க அதிபர் நிக்கன் ஒட்டுக் கேட்பவர் என்று தெர்ந்ததும் அவர் வாழ்க்கை உலகின் கடைசிக் கோடியில் வாழ்ந்த சாதாரண மனிதனும் எள்ளி நகையாடும்படி ஆகிவிடவில்லையா? அழியாத பழி நேர்ந்து விட வில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபராக திருமதி அகினோ வெற்றி பெற்ற பிறகு. ஊழல் பல புரிந்துதான் வெற்றி பெற்றதாகச் சொன்ன முன்னாள் அதிபர் மார்க்கோஸ் நிலை என்னவாயிற்று என்று பாருங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டையே அண்ட அந்த மனிதன் அந்த நாட்டில் குடியிருக்கவும் தகுதி இல்லாமல் வேற்று நாட்டுக்கு ஓடிவிடவில்லையா?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1999

நம்பிக்கையும் நானும்
மரபின்மைந்தன் முத்தையா இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
அப்படியா?
ஆழ்மனச்சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மனசு விட்டு பேசுங்க
மத்திய சிறைச்சாலையில் மொட்டவிழும் தன்னம்பிக்கை
தன்னொழுக்கம் என்னும் அடிப்படை அறம்
ஞானப்பழம் உங்களுக்குத்தான்
ப்ளீஸ் சுவர் எழுப்ப வேண்டாமே