Home » Articles » துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்

 
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர் இல.செ. கந்தசாமி

துணிவு உள்ளவனே எல்லா நன்மைகளும் பெறத் தகுதி உள்ளவன். கோழை செத்துப் செத்துப் பிழைக்கிறான். வீரன் ஒருமுறை மட்டுமே மரணம் அடைகிறான் என்பார்கள். இது முழுக்க முழுக்க உண்மை என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

ஒரு செயல்ல் இறங்க வேண்டும்; அதில் துணிவோடு இறங்க வேண்டும். அதை விடுத்து அரைகுறை மனதோடு றங்கினால் வெற்றி கிட்டுவது கடினமே. உலகில் வெற்றிபெற்றவர்கள் துணிவை எப்போதும் துணை கொண்டே செயல் செய்து இருக்கிறர்கள் என்பதை நாம் நன்கு அறிய முடியும்.

ஒரு தொழிலை விட்டுப்புதியதொழிலுக்குப் போகிறோம். போவதற்கு முன் இருக்கின்ற தொழிலில் எந்த வகையிலும் முன்னேற வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னரே போகிறோம். புதிய தொழிலுக்குப் போன பிறகு, தொழிலும் புதிது என்ன நேருமோ என்று தயங்கித் தயங்கியே செய்து கொண்டிருந்தால் வெற்றி கிட்டுவது அரிது. எண்ணிய பின் துணிவதுதானே அறிவுடைமை.

ஒருவர் தமது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டலாமா? தண்ணீர் கிட்டுமா? கிட்டாவிட்டால் என்ன செய்வது? இப்பொழுது குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் அடுத்த தோட்டத்திற்கு அல்லவா சென்று எடுக்க வேண்டியுள்ளது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தக்கவரின் அறிவுரைக்குப் பின் ஒரு முடிவுக்கு வருகிறார். பக்கத்துத் தோட்டத்தில் எல்லாம் ஓரளவு தண்ணீர் இருப்பதால் நம் தோட்டத்திலும் நிலத்தடி நீர் இருக்கும் அல்லது தண்ணீரே கிடைக்கா விட்டாலும் நம் தோட்டத்தில் நிலத்தடியில் நீர் இல்லை என்பதையாவது தெரிந்து கொண்டால் இனி இந்த முயற்சியை, வேறு தொழிலை நாடலாம் என்ற முடிவுக்கு வருகிறார். நம்பிக்கையை முன் வைக்கிறார். இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் பரிசோதனை நடத்திப் பார்க்கிறார். அவர்களும் நீர் இருக்கலாம் என்கிறார்கள். குழாய்க் கிணறு போடுகிறார். வெற்றி கிட்டியது. அவரோடு சேர்ந்த பலர் இன்னும் சோதிடம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில், படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது, வேலையில் அமரும்போது, திருமணத்திற்குப் பெண்ணை முடிவு செய்யும்போது, நிரந்தரமான வேலையை விட்டுவிட்டுப் புதிய தொழிலை மேற்கொள்ளும்போது, ஒன்றில் முதலீடு செய்யும்போது இவ்வாறு பல்வேறு கட்டங்களில் நாம் முடிவு எடுக்க வேண்டி நேருகின்றது. ஒவ்வொன்றிலும் உள்ள நன்மைகளை வரிசைப்படுத்தி எண்ணி, எழுதிப் பார்த்துப் பின் எது நம் குறிக்கோளுக்கும் ஆர்வத்திற்கும் சரியானதாக உள்ளதோ அதைத் தேர்ந்து கொள்ள வேண்டும். அதற்குத் துணிச்சல் வேண்டும். தேர்ந்த பிறகு நன்மை வரினும் தீமையே வரினும் நிலை தடுமாறாமல், கலங்காமல் செயலில் நின்று நிதானித்து வெற்றி காண வேண்டும். துணிச்சலும் தொடர்ந்த உழைப்பும் உள்ளவர்களுக்கு அடுக்கடுக்காத் துன்பங்கள் வந்தாலும் அவை வலிவிழந்து போகும். துணிச்சலும் தொடர்ந்த உழைப்பும் எந்தத் தடையாக இருந்தாலும் அதனை வெற்றி கொண்டுவிடும்.

யாருக்குத் துணிச்சல் வரும்?

1. நன்மை வரினும் தீமைவரினும் ஏற்றுக்கொள்வது என்ற சமநிலை மனம் உள்ளவர்கட்குத் துணிச்சல் வரும்.

2. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பொதுத நலம் உடையவர்குத் துணிச்சல் வரும். தனக்கு என்ற தன்னலப் போக்கு உள்ளவர்களுக்குத் துணிச்சல் வராது. அச்சமே மேலோங்கி நிற்கும்.

3. உண்மை பேசுகின்றவர்களுக்கு, நேர்மையாக நடந்து கொள்கின்றவர்களுக்குத் துணிச்சல் வரும்.

4. நல்ல மனம் உடையவர்களுக்கும் தீமையைக் கண்டு மனம் கொதிக்கின்றவர்களுக்கும் துணிச்சல் வரும்.

5. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நன்மையைச் செய்வோம். நடப்பது நடக்கும் என்ற நல் உணர்வு உள்ளவர்களுக்குத் துணிச்சல் வரும்.

6. இயல்பாக இளைஞர்களுக்குத் துணிச்சல் வரும். அவர்கள் துணிச்சல் நெறிப்படுத்தப்படுமானால் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருநன்மை விளையும்.

எது துணிச்சல்?

பலர் துணிவு என்றால் நடைபெறாத ஒன்றை நடத்த இருக்கும் முயற்சி. தொடங்கும் செயல் என்று எண்ணுகிறார்கள். அது அவ்வாறு இல்லை. நடக்கின்ற செயல்களையே பலர் எடுத்துச் செய்வதில்லை. அதை அறிவோடும் தெளிவோடும் செயல் திறத்தோடும் செய்ய இறங்குவதும், செய்து அதில் வெற்றி காண முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்வதும், தோல்வியை ஏற்றுக் கொண்டு அதை ஒருபாடமாக்கி, அடுத்து வரும் செயல்களில் பயன்படுத்துவதும்தான் துணிவுடைய செயலாகும். பாதுகாப்பான வழியில் நடப்பது பெரிய காரியமல்ல. பாதுகாப்பான வழியில்லாதவர்கள், கரடு முரடான வழியில் நடக்க வேண்டியவர்கள்; எச்சரிக்கையோடும் நடக்க வேண்டும். முழுக் கவனத்தோடும் நடக்க வேண்டும். இதுதான் துணிவுடைமை. மாறாக இத்தகைய வழியில் நடக்கமாட்டேன் என்றால் அது அறியாமை தான். உங்கள் செயல்களில் இந்தக் கருத்தைப் பொருத்திப் பார்த்துச் செயல்படுங்கள்.

துணிச்சலால் என்ன நன்மை?

துணிச்சல் உள்ளவர்களை அச்சம் அணுகாது. துணிச்சல் உள்ளவர்கள் கவலப்பட மாட்டார்கள். சோர்வு அவர்களை அண்டாது. அவர்கள் செயல் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதுபோல் தெளிவாக இருக்கும். காந்தியடிகளின் துணிச்சலை எண்ணிப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் என்ன செய்தீர்கள்? அவற்றை எல்லாம் வரிசைப்படுத்தி எழுதிப்பாருங்கள். தயங்கித் தயங்கி எடுத்த முடிவுகளைவிட துணிந்து எடுத்த முடிவுகள் கூடுதல் வெற்றியை நல்கியிருக்கும் என்பதை உணர்வீர்கள். துணிவு நமக்கு இருக்க வேண்டிய பெருஞ்செல்வம். அதை நீங்கள் தேடித்தான் பெறவேண்டும் என்பதில்லை. அது ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆலவித்துப்போல் அமிழ்ந்து கிடக்கிறது. அதனை மரமாக வளர விடுவது உங்கள் கடமை.


Share
 

3 Comments

  1. rajesh says:

    வெரி nice ,…………………………

  2. kamaraj says:

    Oruvarai matrum ungal sinthanaiaku nandri aya

Leave a Reply to rajesh


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்