Home » Articles » ஆசிரியர் தந்த அதிசய விளக்கு

 
ஆசிரியர் தந்த அதிசய விளக்கு


admin
Author:

– டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

முன்னேற விரும்புவர்கள் முதலில் தங்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  தங்களிடம் மனம் என்ற ஒரு அலாவுதீனின் அற்புதவிளக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு விளக்கை எடுத்து எண்ணெய் ஊற்றி, திரி போட்டு,அதில் தீக்குச்சியைக் கொளுத்தி வைத்தால் தீபமாக எரும்;  வழி காட்டும்;  ஒளி பரப்பும்.

ஆனால் இந்த மனம் என்ற அலாவுதீனின் அற்புத விளக்கை எடுத்துத் துடைத்தல் போதும்; அதைத் தூசி தட்டினால் போதும். விளக்கு ஒளி வீசும்!  அவ்வளவு வல்லமை படைத்தது மனம்!

முதலில், நம்மிடம் எதிலாவது ஆர்வம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

எதையாவது அடையவோ – சாதிக்கவோ விரும்புகிறோமா என்பது தான கேள்வி. அப்படி ஒரு லட்சியம் பிடிபடும்போது அதில் நமக்கு உண்மையான ஈடுபாடு இருக்கிறதா என்பதுதான் இரண்டாவது கேள்வி.

ஒரு லட்சியம், ஒரு ஆசை;  ஒன்றை அடைய விரும்பும் நினைப்பு;  இரண்டாவது அதில் ஆர்வம்;  ஈடுபாடு;  அதை அடைய வேண்டுமென்ற இடைவிடாத துடிப்பு இந்த உள்மனத் தூண்டலைத் தான் – எள்ளார்வம் – என்கிறோம். லட்சியத்தை நோக்கிய வேகம் அது.

ஒருவர் ஒரு தொழிலில் வெற்றி பெறுவதைப் பார்க்கும்போது ஏன் நாமும் அப்படி செய்யக்கூடாது?  என்ற எண்ணம் ஏற்படுகிறது.  ஒரு மகத்தான மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது, நாளை நம்முடைய வரலாறும் அப்படி எழுதப்பட வேண்டும் என்ற சங்கற்பம் மனதில் எழுகிறது.

மலையேறுகிறோம்; நீந்துகிறோம்;  ஓட்டப்பந்தயத்தில், ஓடுகிறோம் – எல்லாமே ஜீவன் – தன் முழுத்திறமையை வெறிபடுத்திக்கொள்ளும் முயற்சிதான்.

இந்த துடிப்பு – இந்த உள்ளார்வம் – இயல்பாகவே எல்லோரிடமும் இருக்கிறது. அதில் பலரையும் முடக்கியிருப்பது நம்மால் முடியுமா என்கிற சந்தேகமும்  பயமும்தான். இதைக் கடந்து மேலே செல்ல நமது உள்ளார்வத்தை அதிகப்படுத்த வேண்டும். அதற்குப் பயற்சிகள் இருக்கின்றன.

இதோ ஒரு மளிகைக் கடைக்காரர். நினைவு தெரிந்தது முதல், உப்பு மிளகாய் புளி என்று விற்று வருகிறார். அவருக்கு ஏதோ ஒரு வருமானம் – வாழ்வு நடத்தப் போதுமான வருமானம் வருகிறது. அவருக்கு ஆசைதான்.  வருமானம் இன்னும் அதிகமாக வராதா என்று. ஆனால் வழிதான் தெரியவில்லை.

இதோ ஒரு மாணவன். நன்றாக படிக்கிறான். ஆனால் அதிக மார்க் வாங்க முடியவில்லை. ஏன் முடியவில்லை? என்ன செய்ய வேண்டும் நான்?என்று யோசிக்கிறான்.

இதோ ஒரு பெண்மனி.  பெரிய பொருளாதார நிபுணராக உலகம் மதிக்கும் ஒரு பேராசிரயராக வர வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்.  வழிதான் புரியவில்லை!

இவர்களிடம் லட்சியங்கள் இருக்கின்றன.

இவர்கள் தங்களது லட்சியங்களை அடைய முடியுமா?

முடியும்..

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அவர்களிடமுள்ள உள்ளார்வத்தை அதிகப்படுத்த வேண்டும். வலிமையுடையதாக ஆக்க வேண்டும்.

அதற்கு வழிமுறைகள் உள்ளவனா?

ஆம். இருக்கின்றன!

இதற்கான வழிமுறைகளையும், பயிற்சிகளையும் 25 ஆண்டுகள் ஆராய்ந்து சோதித்து, இது ஒரு அற்புதமான வழி என்று தெளிந்து உலகிற்கு அளித்தார் டேவிட் மெக்கிளல்லண்டு – ஹார்வர்டு பல்கலைக்கழக மனவியல் பேராசிரியர்.

முன்னேறும் துடிப்பு மிக்கவர்கள் எப்படிப்ட்ட சவால்களை லட்சியங்களை எடுத்துக்கொள்கிறார்கள்? பெரிய பெரிய சவால்களை எடுத்துக்கொள்வதற்குப் பதில் அவர்கள் அதிகம் சாதிக்கக்கூடிய சவால்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

பேராசிரியர் மெக்கிளல்லண்டு ஒரு ரப்பர் வளைய ஆட்டத்தை தொழிலதிபர்களிடம் கொடுத்து விளையாடச் சொன்னார்.

அவர், சற்று தூரத்தில் ஒரு குச்சியை நட்டுவிட்டு ரப்பர் வளையத்தைக் கொடுத்து அந்தக் குச்சிக்குள் விழுமாறு போடுங்கள் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

சிலர் அருகில் நின்றுகொண்டு எளிதாகத் தூக்கி எறிந்து வளையம் அக்குச்சியில் சேருமாறு செய்தனர்.  மற்றும் சிலர் வெகு தொலைவில் நின்றுகொண்டு தூக்கி எறிந்தனர்.  வளையம் குச்சிக்கு அப்பால் போய் விழுந்தது.

ஒரு சிலர் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டு வளையத்தை அக்குச்சிக்குள் போட முயன்றனர். அவர்கள் நின்ற தூரம் அருகிலுமில்லை. தொலைவிலுமில்லை.  வளையம் குச்சிக்குள் விழுகின்ற வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாக இருந்தது.  ஆனால் அதே சமயம் அப்படி விழாமல் போவதற்கான வாய்ப்பும் ஓரளவு இருந்தது. அதாவது, வெற்றியாளர்கள் (Risk) சவால்களை எடுக்கிறார்கள்.  அதில் தவறிப்போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வெற்றியடையும் வாய்ப்பு அதிகமாக உள்ள விஷயங்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆகவே, நாம் வெற்றியடைய வேண்டுமானால் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளவற்றை – சவாலும் சங்கடங்களும்- சோதனைகளும் குறைந்த ஒரு விஷயத்தைத்தான் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும்.

ஏன் அப்படி? என்று நீங்கள் கேட்கக்கூடும்.

வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும்போது வெற்றி கிட்டுகிறது.

ஒரு வெற்றி – அது சிறிதாகவே இருந்தாலும்கூட – அது தரும் மகிழ்வும் நிறைவும் இருக்கிறதே. அது பெரிய ஊன்றுகோல்;  அது பெரிய தூண்டல் தம்பீ!  முன்னே  போ! இதைப் போலவே எல்லாவற்றையும் நீ செய்துவிட முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் செயல். இதை ஆங்கிலத்தில் (Accomplishment Feed back) சாதனை தரும் உற்சாகம் என்பார்கள்.

ஒரு வெற்றியானது நம்மை உற்சாகப்படுத்தி மீண்டும் ஒரு புதிய வலிமையுடன் அதில் ஈடுபடுத்துகிறது. இதுதான் விஷயம்.

வெற்றியைப் போல, வெற்றிக்கு உதவுவது வேறெதுவும் இல்லை!  என்பது ஒரு ஆங்கில வாசகம்.

இரண்டாவதாக:  மனிதர்களைப் பற்றியும் சூழ்நிலையைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் உள்ளார்வத்தினை நாம் வலிமைப்படுத்தலாம்.

நாம் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம் என்றால் அது வெற்றிப் பாதையில் செல்வது போல கற்பனை செய்யுங்கள். சங்கடங்களையும் சோதனைகளையும் கடப்பது போல கற்பனை செய்யுங்கள். இனிமையாக, எளிதாக, ஆனந்தமாக அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடிவந்து நிற்பது போல கனவு காணுங்கள் – இப்படிச் சொல்கிறார் மெக்கிளல்லண்ட்.

ஒரு மனிதனிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்றால், அவருடன் பேசுவது போலவும் சுமுகமாக சிரித்துப் பழகுவது போலவும், அவர் நம் வேண்டுகோளுக்கு இசைவளிப்பது போலவும், மகிழ்வுடன் நாம் கைகுலுக்கி விடைபெறுவது போலவும் கற்பனை செய்யுங்கள் என்று கூறுகிறார் அவர்.

இந்தக் கற்பனைகள் நமது உள்ளார்வத்தை வலுப்படுத்துகின்றன.  சாதனையை – வெற்றியை – இக்கற்பனைகள் அருகில் கொண்டு வருகின்றன. வெற்றியை நிஜமாக்குகின்றன.

இது எப்படி சாத்தியமாகிறது?  என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் (Mental Reharsal) என்ற மனவியல் உண்மைப்படிதான்.

கூடைப்பந்து போட்டியில் விளையாட மூன்று குழுக்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.  முதல் குழுவிற்கு விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து ஆட்டப்பயிற்சி அளித்தார்கள்.  இரண்டாவது குழுவை உட்கார வைத்து கூடையில் பந்து  போடுவதுபோல் தினமும் கற்பனை செய்யுங்கள் என்ற மன ஒத்திகைப் பயிற்சியை அதே நேரத்திற்கு செய்யச் சொன்னார்கள். மூன்றாவது குழுவிற்கு எந்தவித பயிற்சியும் கொடுக்கவில்லை. மூன்றாவது குழு கூடைப்பந்து  போட்டியில் வெற்றி பெறவில்லை. இரண்டாவது குழுவும் முதல் குழுவும் ஆட்டத்தில் சம அளவில் நின்றன!

அதாவது மன ஒத்திகை, நிஜ ஒத்திகை அளவிற்குப் பலன் தருகிறது என்று கண்டார்கள்.

நாளைய நிஜங்களின் இன்றைய விதைகள்தான் கனவுகள்; கற்பனைகள்.

இந்தக் கற்பனை எங்கே நிகழ்கிறது? மதிய நேரத்தில் உணவு உண்டபின் ஒரு அரைமயக்கத் தூக்கம் இருக்கிறதே, அப்போது வருவதைத்தான் பகல்கனவு என்கிறோம். தனியே நாமாக உட்கார்ந்து கொண்டு நம் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென்று கற்பனை செய்வதும் பகல் கனவுதான்.

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப கற்பனையிலே கொண்டு வந்து மன ஒத்திகை செய்வதுதான் சாதனையின் முதல்படி; மிக எளிதான வழியும்கூட!

மூன்றாவதாக உங்களுக்குப் பிடித்த வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை முன் மாதிரியாகக் (Model) கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள்.  அப்படிப் படிக்கும்போது எங்காவது ஓரிடத்தில் அவரும் நம்மைப் போலத்தான்! என்ற எண்ணம் ஏற்பட்டு அது நம்மை அவருடன் ஐக்கியப்படுத்தும்.  அப்போது அவரைப்போல நாமும் வெற்றிடைய முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடும்.

அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவியிலிருந்த காலத்தில் கஷ்டமான முடிவெடுக்கும்போது பழைய  ஜனாதிபதிகளின் படங்களை மாட்டி இருக்கும் அறைக்குள் நுழைவாராம். நுழைந்து மன அளவில் அவர்களுடன் பேசுவாராம்.

உத்வேகமும் உற்சாகமும் பெறும் விஷயத்தில் வாழ்க்கை வரலாறு போன்று உதவக்கூடிய நூல்கள் வேறெதுவுமில்லை.

நாம் யாரை நமது குருவாக, ஆலோசகராக, ஞானத்தந்தையாக பாவிக்கிறோமோ அவருடைய குணங்கள் நம்மிடம் நம்மையறியாமல் வந்தடைகின்றன என்பது மனவியல் உண்மை.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய், நீ உன்னை வலிமையுடையன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே நீ ஆகிவிடுவாய் என்றுதானே சொன்னார் சுவாமி விவேகானந்தர்.

சமாதியாகிவிட்ட சித்தர்களும் யோகிகளும் தங்கள் சீடர்களிடம் என்ன சொல்லிவிட்டுப் போகிறார்கள்?  கஷ்டம் என்றால் – ஏதாவது தேவை என்றால், என்னை நினைத்துக்கொள்!  முன் மாதிரிகளுக்கிருக்கும் வலிமையைப் பாருங்கள்!

நான்காவதாக:  செக்குமாட்டு வாழ்வை உதறித் தள்ளுங்கள்.  சவால்களை நாடுங்கள், கஷ்டம் உண்டு;  நஷ்டம் ஏற்படலாம்;  எனினும் வெற்றிக்கான வாய்ப்பை நான் பார்க்கிறேன்! என்று சொல்லி துணிந்து செயலில் இறங்குங்கள்.  இதுதான் அவரது நான்காவது உபதேசம்.

சவால்களை மேற்கொள்ளும்போதுதான் நம்மிடமுள்ள முழுத்திறமையும் புடம்போடப்படுகிறது.  முழுத்திறமையும் வெளிவருகிறது.

புதிய சவால்களை மேற்கொண்டவர்களால்தான் உலகம் முன்னேறி இருக்கிறது. இருக்கிற இடத்திலேயே இருப்பேன்!  என்று எண்ணியவனா மாட்டு வண்டியை, சைக்கிளை, காரை, விமானத்தைக் கண்டுபிடித்தான்?

ஏன் கூடாது?  ஏன் அப்படிச் செய்ய முடியாது? என்று சவால்களை மேற்கொண்டவர்களால்தான் உலகம் உயர்ந்திருக்கிறது.

பயப்படாதீர்கள்!  எதையும் சமாளிக்கிற இயல்பு. இந்த ஜீவனுக்குள் இருக்கிறது. ஆகவே, கவலைப்ட வேண்டியதில்லை.

நடக்க கற்றுக்கொள்ளும் குழந்தைபோல முதலில் நாம் தடுமாறி விழ நேரிடும். ஆனாலும் ஒருநாள் விழுந்து எழுந்து நன்றாக நடக்கக் கற்றுக்கொள்வோம், ஓடக்  கற்றுக்கொள்வோம.

ஆகவே சவால்களை பொறுப்புகளை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை உங்களது பழக்கமாக நீங்கள் ஆசைப்படும் விஷயமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

இதைப்பல பயிற்சிகள் மூலம் ஒரு மூன்று வாரம் பாடம் சொல்லிக்கொடுத்தார் மெக்கிளல்லண்ட்.  இந்தப் பயிற்சி தந்த உந்துதலினால் ஹைதராபாத்திலிருந்த ஒரு சிறு வியாபாரி பெரிய பெயிண்ட் கம்பெனியின் தொழிலதிபராக மாறினார்.  இப்படி உலகம் பூராவிலும் இந்த அறிவும் பயிற்சியும் பிரமாதமான பலன்களைத் தந்தன.

ஒரு அதிசயமான திறவுகோலை நம் கையில்  கொடுக்கிறார் பேராசிரியர்.  பயிற்சி என்ற அந்தத் திறவுகோலை உபயோகித்து திறந்து திறந்து பூட்டுங்கள்.

சாதனைகளை நம்முடைய தக்க பயிற்சிகளைப் போல் நமக்கு உதவுவது வேறெதுவுமில்லை.

நன்றி: இராமகிருஷ்ண விஜயம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்