Home » Articles » நண்பருக்கு கடிதம்

 
நண்பருக்கு கடிதம்


சேகர் துல
Author:

அன்புள்ள கண்ணனுக்கு வணக்கம்,

உனது கண்ணீர் கடிதம் கிடைத்தது.  ஏன் கண் கலங்குகிறாய். உனக்கு என்ன வந்தது.  உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளைமறந்துவிட்டாயா?  நீ எதை கொண்டு வந்தாய் அதை இழந்ததாய் கவலைப்படுகிறாய்.  நீ இன்று பெற்றிருக்கும் பொருள் அனைத்தும் இங்கேயே இவ்வுலகிலேயே இருந்து எடுத்தது தான்.  ஆகவே எதற்கும் கவலை கொள்ள வேண்டாம்.

உனது தொழிலுக்கு போட்டியாக பலர் வந்து விட்டார்கள்.  அதனால் தொழில் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் என் கடனை அடைக்கமுடியவில்லை, தொழிலை விரிவுபடுத்த முடியவில்லை.  இன்னும் பல வகையில் தடங்கல்கள் ஏற்படுகிறது என்று கூறியிருந்தாய்.

அது உண்மைதான். இன்று எல்லா துறைகளுமே போட்டியில் தான் நடைபெறுகிறது. போட்டியில்லாவிட்டால் பொறுப்பு இருக்காது. போட்டி இல்லாவிட்டால் பொருளில் தரம் இருக்காது.  அதைவிட போட்டி இல்லாவிட்டால் தொழில் வளர்ச்சி இருக்காது. என்பதை மறந்து விடாதே!

உனது தோட்டத்தில் பயிர் செய்துள்ள வாழையை உற்றுக் கவனி. அருகருகில் இரண்டு மரங்கள் இருந்துவிட்டால் அதில் எது முதலில் நன்றாக வேர் பிடித்துள்ளதோ அதுவே நன்றாக வளரும்.  விரைவில் காய் பிடிக்கும்.  கூடவே அதுவே தன் பாதுகாப்பிற்கு தன் உறுதிப் பாட்டுக்கு சிறுசிறு கன்றுகளையும் சேர்த்துக்கொள்ளும்.  பின்னர் அதையும் தன்னைப்போல் வளர்ச்சி பெற துணை நிற்கும்.  வேர்களும் விரைந்து செல்லும்.

ஆகவே உனது தற்கால போட்டிநிலை கண்டு சற்றேனும் சளைக்கவேண்டாம். உனது தொழிலையும் மாற்றிக்கொள்ள வேண்டாம்.  நீ இன்று இருக்கும் தொழிலைச் சார்ந்த இன்னொன்றை ஆரம்பித்துக்கொள்.  அதனால் உனக்கு இன்னும் பயன் கூடும்.  பாதுகாப்பாகவும் இருக்கும்.

மேலும் இன்று இருக்கும் தொழிலில் எந்த வகையில் செலவுகளை குறைக்க முடியும்! விற்பனையை கூட்ட இன்னும் என்ன வழி உள்ளது என்பன போன்ற தொழில் சார்ந்த சிந்தனையிலேயே இரு. சரியான முடிவுக்கு வந்தவுடன் அதை உடனே செயல்படுத்து.  கூடவே உனது தொழில் நண்பர்களை நன்கு கவனித்துவா.  அவர்கள் வளர்ச்சி பெறுவது எதனால் என்பதை கண்டு பிடி. வெற்றி நிச்சயம். அப்போது உனக்கு இன்னும் பல வகையில் யோசனைகள் தோன்றும். வழிதானே பிறக்கும். புதிய பாதையும் அமையும்.

மிகுந்த தொழிலார்வம் கொண்டுள்ள கண்ணனே இன்றைய விளம்பர உலகில் பூக்கடைக்கும் இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்துவங்கி உள்ளனர். காய், கறி விற்பனைகள் இப்போதே இன்டர்நெட் மூலம் நடைபெறுகிறது.  ஆகவே உனது தொழிலைப் பற்றி உன்னால் முடிந்த அளவு விளம்பரம் செய்.

சமீபத்தில் ஒரு பெண் தொழிலதிபர் கூறுகிறார்.  வண்டிக்கு பெட்ரோல் போன்றது விளம்பரம். பெட்ரோல் இல்லா விட்டால் எப்படி வண்டி பாதியில் நின்று போகுமோ அதுபோல, எனது பொருள் எவ்வளவு தான் மார்க்கெட்டில் விற்பனையானாலும் விளம்பரத்தை நிறுத்திவிட்டால் விற்பனை சிறுமை ஆகி, பின்னர் சீர்கெட்டு நின்று விடும் என்றாராம்.  ஆகவே, தொடர்ந்து விளம்பரம் செய்ய முடிவு செய்.  உன்னால் முடிந்த அளவு உனக்கு தெரிந்த வழிகளில் விளம்பரம் செய்.

உனது தொழில் துறைமீது நம்பிக்கைவை.  நீ இந்த தொழிலை துவங்காது, இருந்தால் உன் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தாயானால் உனது போட்டியாளர் மீது பொறாமை ஏற்படாது.  பொருள் தந்து உதவச் சொல்லும் உன் மனம்.  நீயும் உனக்கு முன்னால் உனது நண்பன் வைத்திருக்கும் தொழிலை அல்லவா துவங்கினாய்.  அதனால் உனக்கு ஒன்றும் ஆகவில்லை.  உன் நண்பனுடைய வளர்ச்சியும் தடைபடவில்லை என்பதை மறந்துவிடாதே.

மனிதர்கள் அனைவருமே உன்னைப்போலத்தான்வாழத்துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதனாலேயே உனது தொழில் போலவே துவங்கி உன்னைப் போல் வீடும், காடும், காரும் வாங்க ஆசைப்படுகிறார்கள்.  ஆகவே அதை நினைத்து மகிழ்ச்சிபெரு. உனக்கு கூடுதல் வெற்றி கிடைக்கும்.
ஆகவே நடந்ததை மறந்து, இனி நடக்கப்போவதை எண்ணி உனது வேலையை துவங்கு.  ஓர் நொடி கூட வீண் செய்ய வேண்டாம்.  ஓர் வீண் பேச்சுக்கூட பேச வேண்டாம்.  விளையாட்டு விளையாடு. அதையும் விரைவான உனது தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமைத்துக்கொள்.

வெற்றி பெறுவாய், தன்னம்பிக்கையுடன் இரு.

இப்படிக்கு,
துல. சேகர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !