Home » Articles » ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி

 
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி


மெர்வின்
Author:

மெர்வின்

பெரும்பாலான பேரறிவாளர்களின் பேரேடுகளைப் புரட்டிப் பார்த்தால் வறுமையும் பொறுமையும்தான் அவர்களிடத்தில் அணிகலன்களா இருந்து வந்திருக்கிறது என்பது கல்லிலே செதுக்கப்பட்ட எழுத்தைப் போல் காட்சி அளிக்கும்.

இருட்டிலிருந்துதான் வெளிச்சத்தின் வழியைக் கண்டு பிடித்து அந்தப் பாதையிலேதான் பலரையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்தப் பாதையை நாமும் கடைப்பிடிக்க வேண்டமா?

என்னதான் துயரம் நேரிட்டாலும் அதற்காக நாம் அடிமைகளாகி விடுவதா? இந்தப் பரந்த உலகிலே பிறந்து தவழ்ந்து வளர்ந்து பெரும் புகழோடு காலத்தைக் கழித்தவர்களையெல்லாம் நம் கண்முன் நிறுத்தும்போது நம்மிடமுள்ள பல வீனமான எண்ணமெல்லாம் பறந்தோடிப் போய்விடும்.

நாமோ இப்படி எண்ணிப் பார்ப்பதில்லை, காலையில் மலர்ந்து, மாலையில் கருகிவிடும் மலரைப்போலவே நமது முன்னேற்றம் என்ற சொல்லானது மறைந்து விடுகிறது. காரணம் திடமான எண்ணத்தை இழந்து விடுவதுதான் ஹீக்கர் என்ற எழுத்தாளர் ஏழ்மையிலே பிறந்தார். சிறுவயதிலேயே அவரிடத்தில் மென்ற எண்ணம் எழுந்தது, படிக்க வேண்டும் மென்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதற்கேற்ற வசதியோ மிகவும் குறைவு.

ஆனால் ஆர்வம் மட்டும் கொஞ்சமும் அவரிடத்தில் குறையவில்லை, எப்படியாகினும் தாம் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பது மட்டும் இருந்து வந்தது. பள்ளிக்கூட தலைமையாசிரியரிடம் தான் பணம் கட்டிப் படிக்கும் அளவுக்கு வசதியற்றவன் என்று கூறினார்.

அதுகேட்ட அவர் தனக்குத் தெரிந்த நண்பரின் உதவியால் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் சேர்த்தார். தமது இருபத்து நான்கு வயதிற்குள்ளாக அந்தக் கல்லூரியிலேயே உள்ள இலக்கிய மன்றத்திற்குச் செயலாளராக விளங்கினார்.

பல எழுத்தாள நண்பர்களை அம்மன்றத்தின் சார்பாக சந்தித்தார். அதன் பிறகு அவரது லட்சியக் கனவுகள் நினைவாகி செயலாக்கம் பெற்றன. தளராத ஊக்கத்தால் உயரிய நூலை எழுதி முடித்தார்.

அந்த நூலைப் படித்த பலரும் அவருடைய நிரந்தர எழுத்திற்கு ஆக்கம் தேடும் அளவில் வாசகர்களாயினர் எப்படி வந்தது இது? சாதாரண மனிதனாகப் பிறந்த போதும், தன்னுடைய அயராத உழைப்பால் பலர் போற்றும் அறவில் பிரசித்திபெற்று விளங்கினார்.

சமுதாயமென்னும் குப்பையிலே மறைந்து கிடைக்கும் மாணிக்கமெல்லாம் அவர்களின் ஊக்கத்திற்கு ஏற்றபடிதான் எதிர் காலத்தில் பரிணமிக்கத் தொடங்குகின்றது. இதைதான் சாக்ரடீசு மலர்களைச் சுற்றி மனம் கமழ்வதைப் போலத்தான் செயற்கரிய செயல்களைச் சுற்றி புகழ் கமழ்கிறது என்கிறார்.

இது உண்மைதான், செயலுக்குத் தக்கவாறுதான் எந்த ஒரு மனிதனும் உலவுகிறான். உயர்ந்த எண்ணத்திற்கிடையேதான் உன்னதமான புகழ் பிரகாசிக்கத் தொடங்குகிறது. அந்தப் புகழை நாமும் அடைய வேண்டாமா?

அதற்கு நல்ல எண்ணம் மலர வேண்டும் தன்னம்பிக்கையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இடைவிடாத ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இம்மூன்றும்தான் நம்மை உயர்ந்தோனாக வல்லது. எதிர்ப்பையும் ஏளனத்தையும் எதிர்த்து நின்று போராடும் பொழுது வெற்றி பெற முடியும்.

வாழ்வில் வெற்றிபெற எண்ணும் நாம், அதனை எந்த விதமாக தொடங்குவது என்று ஆராயவேண்டியது மிகவும் முக்கியம். ஆராய்ந்தபின் சிந்தித்து மேற்கொள்கின்ற காரியத்தின் நிலைமை எதிர் காலத்தில் எப்படி அமையும் என்ற முன்னோக்கும் கண்ணோட்டம் வேண்டும்.

எண்ணுதல், எண்ணியதைக் கொண்டு சிந்தித்தல், சிந்தித்தைக் கொண்டு தெளிவு கொள்ளல், செயலில் ஈடுபடுதல், ஊக்கத்தைக் கைவிடாமல் உழைத்தல் இந்த ஐந்தும் வெற்றியின் அஸ்திவாரம் ஆகும்.

கிழிந்த ஆடையும், பகலுக்கு இருந்தால் இரவு சாப்பாடுக்கு வழியில்லாமல் இருந்தவர்கள்தான் வெற்றியில் மூழ்கி இருக்கிறார்கள். அரும்பாடுபட்டுத்தான் பலவின இயந்திரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஏழ்மையே தனக்குள்ள பரிசாகப் பெற்றவர்கள்தான் உயரிய அகராதியிலே இடம் பெற்றிருக்கிறார்கள். யாருமே வான வீதியிலிருந்து கீழே இறங்கவில்லை. எல்லாரும் இந்தப் பரந்த உலகத்தின் மண்ணிலே பிறந்துதான் வெற்றியை விண்ணில் மூட்டும்படி செயலாற்றி இருக்கிறார்கள் என்பதில் சிறுதும் ஐயம் இல்லை.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல பாதையைக் கடந்து தான் செல்ல வேண்டும். பாதையைக் கடக்காமல் அடுத்த ஊருக்குபோக முடியாது. வெற்றியின் நிலையும் இதைப் போன்றதுதான்.

வெற்றி என்பது இமயமலையைப் போன்றது. அதன் உச்சிக்குச் சென்றுவிட படாதபாடுகள் பட்டுத்தான் ஆகவேண்டும். பனிக்கட்டிகள் போன்ற பல எதிர்ப்புக்கள் அனுகனாலும் துன்பம் சூழ்ந்தாலும் அவைகளை எதிர்த்துப் போராடும் பொழுதுதான் வெற்றியை அடைய முடியும்.

வறுமை வந்தாலும், இருக்க இடமின்றிப் போனாலும் அதனைக் கண்டு அதைரியப்படாமல் பெரிய வெற்றியே அணுகிவர காத்திருக்கும் போது, இந்தச் சாதாரண தொல்களை எல்லாம் கண்டு பயப்படாலாமா? பயப்படக்கூடாது.

நம்மிடையே வாழ்ந்து மறைந்த பாரதியார் துன்பம் சூழ்ந்து கொண்டதற்காகச் சற்றேனும் கலங்கினாரா? இல்லவே இல்லை. மிக மிக எளிய வாழ்க்கையை பெரிய தெனக்க கண்டார் இறுதி வரையிலும் இதே நிலையில்தான் வாழ்ந்து காட்டினார். இத்தகைய உறுதி நம்முடைய உள்ளத்தில் உதயம் ஆக வேண்டமா?

இந்தியாவின் மீது படையெடுத்து அங்குள்ள பொருள்களை எல்லாம் கொண்டு வருவதே சரியென்று உறுதி கொண்டான் கஜினி முகம்மது. அவனுடைய எண்ணம் உடனே நிறைவேவிட்டதா? இல்லையே! பதினெட்டு முறை படையெடுத்தான். அதன் பிறகுதான் சோமநாதர் கோயிலில் நுழைந்து கொள்ளையடித்துப் பொருள்களைக் கவர்ந்து கொண்டு போக முடிந்தது.

மண்மேட்டுக்குள் மறைந்து விட்ட நாகரிகச் சின்னங்களைத் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்யும் அறிஞனைப் போலத்தான் மறைந்துகிடக்கும் வெற்றியை வெளியில் கொண்டுவரச் செய்வது நம்மிடமே உள்ளது.

முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வரும்போது சூழ்ச்சி, சுயநலம், ஆசை, சினம், கடுஞ்சொல், பொறாமைப்படுதல் போன்றவைகள் எதிர் நோக்கி வரலாம். இதனைப் பார்த்துப் பயந்து எடுத்த காரியத்தை விட்டு விடக் கூடாது.

இலட்சியத்திற்கு குறுக்கே எப்படிப்பட்ட தொல்லைகள் வந்தாலும் அவைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளவிட்டு வகுத்துக் கொண்ட பாதையில் செல்ல வேண்டும். இப்படி வந்தவர்கள்தான் இன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேறி இருப்பவர்கள்.

இலட்சியம் என்னும் விதையை மனமென்னும் நிலத்தில் தூவினால் அது வளரவும் தொடங்கிவிடும். அதற்கிடையில் தோன்றும் கள்ளிக் காளான்களைப் போன்ற பயமான மன அலைகளைக் கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதன்பின் வாழ்க்கை என்ற வயலில் வளர்ந்த கதிர் தலைவணங்கி வணக்கம் செய்யும்.

இலட்சியம் என்பது ஒளி போன்றது. அந்த ஒளியை அடைய இருட்டிலிருந்து செல்ல வேண்டும். செல்லும் போது கல்லும் முள்ளும் கண்ணாடித் துண்டுகளும் வழியில் உண்டு. அதையெல்லாம் தாண்டிச் செல்வதற்கு ஊக்கமும் உள்ளத்தில் உரமும் தேவை.

இதையெல்லாம் கடந்த செல்ல ஆர்வமின்றி இருந்தால் எதையும் நம் வாழ்க்கையில் சாதிக்க முடியாது. காயாகாமல் கனியாக முடியாதோ, கல்வியின்றி கற்றறிந்தோன் என்று கூற முடியாதோ அப்படித்தான் இதுவும்.

எந்த ஒரு கர்ம வீரனுக்கும் கொள்கையே பெரிது. அதற்காக அவசியமானால் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றார் காந்திஜி. அவரது அறிவிலிருந்து கருத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கொழுந்துவிட்டு எரிகின்ற லட்சியத்தை அடைய கடந்த காலத்திலே நழுவவிட்ட காரியங்களைச் செய்ய பழுதுபட்ட உள்ளத்தைப் பக்குவப்படுத்த விழித்தெழ வேண்டும். உழைப்பை பொறுத்து தான் உயர்வு இருக்கிறது.

இத்தனை நாட்கள் வீழ்ந்த கிடந்த நாம். இனிமேல் எப்படி வளமான வாழ்வை எட்டிப் பார்க்க முடியும் என்ற ஏக்கம் பிறக்கத் தேவையில்லை. கடந்ததைப் பற்றி எண்ண வேண்டாம் இனிமேலாவது ஊக்கத்தோடு குறிக்கோளை நோக்கிப் பாடுபட முனைந்தால் போதும்.

இலட்சியத்தின் பேரில் ஆர்வம் பிறக்கும். அந்த ஆர்வமே கஷ்டத்தை தாங்கிக்கொள்ள சக்தியைக் கொடுக்கும். அந்த சக்தியே லட்சியத்தை பெற்றுத்தரும் டிராய் நகரம் ஒரே நாளில் பிடிக்கப்படவில்லை. எத்தனேயோ நாட்களாகப் போரிட்ட பின்புதான் அதனைக் கைப்பற்ற முடிந்தது. எதனையும் உடனடியாக பெற்றுவிட முடியாது.

பல ஆண்டுகளின் கூட்டுத் தொகைதான்!

சிறந்த இலட்சியங்களே, மானிட ஜாதியின் மாபெரும் முயற்சிகளே! வீரத்தன்மைகளே, அஞ்சா நெஞ்சர்களின் அரிய செய்கைகளே! அஞ்சா நெஞ்சர்களின் அரிய செய்வகைகளே! நீங்கள் தான் என் கடவுள் என்கிறார் வால்ட் விட்மன்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment