Home » Articles » இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை

 
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை


ஆசிரியர் குழு
Author:

காலம் பேராற்றல் வாய்ந்தது. காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகின்றவர்களும் பேராற்றல் வாய்ந்தவர்களாக உயர்கிறார்கள்.


காலம் ஒரு நதிபோல முன்னோக்கி நடந்து கொண்டே இருக்கின்றது. இயங்கிக் கொண்டிருப்பதே காலத்தின் இயற்கை.

” காலம் ஒருபோதும் நிற்பதில்லை, அது , தான் நடந்து வந்த பாதையில் ஒருபோதும் திரும்பச் செல்வதுமில்லை ” ( Time never stops and never retraces its steps-Herbert casson )

நாம் இந்த உலகில் எத்தனைக் காலம், எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்தக் கணக்கு நம்மிடமில்லை. ஆனால் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்று விரும்புவது நம்மைப் பொறுத்தது.

நம் வாழ்நாளைக் கூட ஆண்டுகளாக் கருதாமல் நாட்கணக்கில் கணக்கட்டுப் பாருங்கள். காலம் பற்றிய சரியான உணர்வு மேலும் துல்லியமாகும். உலகின் சராசரி வாழ்நாள் இன்றைய கணக்குப்படு 77 ஆண்டுகள் தாம். இந்தியாவின் சராசரி வாழ்நாள் 56 ஆண்டுகள்.

நாம் உலக சராசரி ஆண்டைவிடச் சற்றுக் கூடுதலாக 80 ஆண்டுகள் வரை வாழ்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்படி விரும்புவதில் தவறே இல்லை. இது நியாயமான விருப்பமாகும். அதற்குரிய நாட்கள் 29,200. முப்பதாயிரம் நாட்கள் என்றே வைத்துக் கொள்வோம். ( நூறாண்டு வாழ விரும்புகின்றவர்களும் அதை நாட்கணக்கில் பார்த்தால் 36,500 நாட்கள் தாம் )

இதுவரை 20 ஆண்டுகளைக் கழித்த இளைஞர்கள் வாழ்நாளின் கால் பாகத்தை முடித்துக் கொண்டார்கள். 40 வயதுடையவர்கள் வாழ்நாளில் பாதியை முடித்துவிட்டார்கள்.

இப்போது 40 வயது உடையவர்களுக்கு இனி இருப்பதோ 15,000 நாட்கள்தாம். ( அவர்களை 80 ஆண்டு வரை உயிரோடு இருந்தால்.) கழிந்த 15,000 நாட்களில் செய்தது என்ன? இனிச் செய்ய வேண்டியது ‘ என்ன என்று எண்ணிப்பார்தால், நாம் இனி இருக்கின்ற நாட்களிலாவது விரைவாகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வு பிறக்கும். சாதனைகளை நிகழ்த்தவில்லையாமினும், அவரவர்களுக்கு உரிய கடமைகளையாவது செய்து முடிக்கவேண்டும் என்ற வேகம் பிறக்கும். வேண்டாத விவகாரங்களில் தலையிடாமல் நாம் செய்யவேண்டிய காரியங்களில் தீவிரமாக ஈடுபடும் ஆர்வம் பிறக்கும்.

இப்போது, இனி நீங்கள் வாழவிரும்புகிற நாட்களை உங்கள் விருப்பப்படி கணக்கிட்டுக் குறித்துக் கொள்ளுங்கள்,

இப்படி எண்ணிப்பாருங்களை ஏராளமான பணச் செலவு செய்து நியூயார்க் அல்லது லண்டன் அல்லது பாரீஸ் செல்கிறோம். இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு தங்கும் வாய்ப்புச் கிடைக்கின்றது. மீண்டும் அந்த நாட்டிற்கு வரும் வாய்ப்பே இல்லை. எப்படிச் செயல்படுவோம்?

அந்த இரண்டும் நாட்களையும் கொஞ்சமும் வீணக்காமல் கூடுமானவரை பார்க்கவேண்டிய இடங்களை பார்ப்பது, சந்திக்க வேண்டியவர்களைச் சந்திப்போது, வாங்கவேண்டிய பொருள்களை வாங்குவது, இப்படிச் சரியாகத் திட்டமிட்டு, ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் செயல்படுவோம் அல்லவா? அந்த வகையில்தான் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் எந்தப் பணியைச் செய்தாலும் ஒவ்வொரு நாளையும் ஒரு தேர்வு எழுதும் மாணவனைப் போலத் திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஒரு முறையே கிடைப்பது இந்த மனித வாழ்க்கை. இத்தகு வாழ்க்கையை நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்நாளை எவ்வளவு திறம்படப் பயன்படுத்த வேண்டும் ? ஒவ்வொரு வரும் தீவிரமாக எண்ணிப் பார்த்துச் செயல்படவேண்டும்.

நாம் பிறக்கும்போதே நம் வாழ்நாள் நிர்ணமிக்கப்பட்டுவிடுகிறது என்ற கருத்தை நாம் ஒத்துக்கொள்வதில்லை. இன்றைய அறிவியல் முறைப்படி நமது உணவுப் பழக்கங்கள், உடலைப் பேணும் முறை – தொழிலி முறை – சுற்றுப்புறச் சுழல் – சாலை விபத்துக்கள் முதல் வாழ்க்கை விபத்துக்கள் வரையான விபத்துக்கள் – இப்படி ஒரு மனிதனின் முடிவுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இத்தனைக்கும் மேல் பாதுகாப்பாக வாழ்ந்தாலும் முதுமையை – முடிவை – தவிர்க்க முடியாது.

உடல் நலத்தோடு – ஓடி ஆடி, நடையோடு – பிறருக்குப் பாரமாக இல்லாத வகையில் என்பது ஆண்டுகள் வரை வாழலாம். விதிவிலக்காச் சிலர் நூறு அல்லது அதற்கு மேலும் சில ஆண்டுகள் வரை கூட வாழலாம். ” நூறு ஆண்டு வாழ்க்கை ” முழுமையான வாழ்க்கை என்பது தமிழ் மரபு.

நூறாண்டு வாழ்ந்தாலே தூக்கத்தில் 50 ஆண்டுகள் போய்விடுகின்றன. இளமையில், முதுமையில், வாலிப விளையாட்டில், சென்றதை எல்லாம் கூட்டிக் கழித்தால் சாதனை மிகுந்த ஆண்டுகள் என்பவை ஒருவர் வாழ்வில் 15 முதல் 20 ஆண்டுகள் இருக்குமானால் அதுவே அதிகம் தான்.

இயற்கையின் முடிவுக்கு முன்னர் நாமே வாழ்நாளின் எல்லையை வகுத்துக்கொண்டு, அதற்கேற்ப நாம் செயல்படுவது தான் அறிவுடைமை.

நாம் வரையறுத்த நாளுக்கு முன்னரே பின்னரோ முடிவு எப்பொழுதும் வரலாம். அதுபற்றிக் கவலைப்படுவதில் பயனில்லை. எதற்கும் முடிவு. இறுதி என்பவை இயற்கையானது என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டும்.

சிலருடைய முடிவுக்கு வெறிப்படையான காரணம் காண இயலாது. ஆனால் ஏதோ ஓர் எதிர் விளைவினால்தான் அந்த முடிவு நேர்கிறது. என்பதை உணர்வது அவசியம்.

அவரவர் தங்கள் வாழ்நாளை விருப்பப்படி முடிவு செய்து அதற்கேற்ப உடல்நலமு பேணிப் பாதுக்கப்போடு வாழ்ந்து அதற்கு நமது கடமைகளை முடிக்க – சாதனைகளை நிகழ்த்த வேண்டும்.

நீங்கள் நூறாண்டு வாழ வரும்பினால் மகிழ்ச்சி. அதற்கு ஏற்ப நீங்கள் செயல்பட வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் போதும். விரைந்து செயல்படுவோம்.

மிகப் பெரியதொரு ஆலமரம். அதன் அடி மரத்தை ஒரு ரம்பம் போட்டு ஒரு நாளைக்கு ஒரே ஒர் அறுப்பு வீதம் அறுக்கிறார்கள், இப்படிச் செய்தால் 100 ஆண்டிகளில் அந்த மரத்தை அறுத்துச் சாய்த்துவிட முடியும்.

நம் வாழ்க்கையை ஒரு பெரிய ஆலமரம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். ஒரு நாள் என்பது அதன் அடி மரத்தில் ஒருமுறை அறுத்து முடித்துவிட்டதற்கு சமம். நாம் இதுவரைக் கழித்த நாட்கள் அளவிற்கு அடி மரத்தின் பகுதி அறுக்கப்பட்டு விட்டது என்பது பொருள். இது இடைவிடாது ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்ற செயல். ஏன் ? இன்றும் கூட ஒருமுறை அறுத்து முடித்தாயிற்று. நாளையும் அதற்கு மறுநாளும் அறுத்து முடித்தாய்விடும். இதுதான் நம் வாழ்நாளின் நிலை என்பதை அறியவேண்டும்.

இப்பொழுது உங்களுக்கு 30 ஆண்டுகளாயின் அந்த அடிமரத்தில் மூன்றில் ஒரு பங்கு அறுத்து முடித்தாய்விட்டது. 40 ஆண்டுகளாயின் பாதி மரத்திற்குப் பக்கமாக அறுத்துத் தள்ளியாகி விட்டது என்று பொருள்.

ஒரு ஈரானிய பழமொழி உண்டு.

” சேவல் விடியற்காலையில் எழுந்து கூவுகிறதே ! எதற்காகத் தெரியுமா? உன் வாழ்நாளில் மேலும் ஒரு நாள் முடிந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காகத்தான் ” ( The cock crows at early dawn tells us that one more day of our life has gone – Iraninan proverb ).

ஆதலின், இனி கழிந்ததற்கு இரங்காமல் எஞ்சி இருக்கும் ஆண்டுகளில் என்ன செய்யமுடியும் என்று பார்க்க வேண்டும் நாம் அடைய வேண்டிய இலட்சியத்திற்கு ஏற்ப, நமது இருக்கின்ற வாழ்நாளைக் கணக்கிட்டு – நேரத்தைக் கணக்கிட்டு உழைக்கவேணடும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )