Home » Articles » இதுவரை நாம் சாதித்தது என்ன?

 
இதுவரை நாம் சாதித்தது என்ன?


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர் இல.செ. கந்தசாமி.

இன்றோடு இந்த ஆண்டு முடிகின்றது என்று கருதிக் கொள்ளுங்கள் நாளை புத்தாண்டு தொடங்குகின்றது. இந்த ஆண்டிலும் ஏன் இத்தனை ஆண்டுகளாகவும் நாம் சாதித்தது. என்ன என்று ஒவ்வொருவரும் எண்ணிப் பார்ப்பதும், இதுவரை நேர்ந்துள்ள குறைகளைக் களைந்து நிறைகளைப் பெருக்கிக் கொள்வதும், வருங் காலத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதும், வருங் காலத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதும் பொறுப்புள்ள நல்ல குடிமக்களின் கடமையாகும்.

நம்மை நோக்கி நாமே

” நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்களா! உங்கள் சாதனைகள் என்ன? என்று மற்றவர்களைப் பார்த்துக் கேட்டே பழக்கப்பட்ட நாம். இப்பொதும் அதே கேள்வியை நம்மைப் பார்த்து நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. காரணம் எல்லோருக்கும் தங்களைத் தவிர மற்றவர்கள் மீது குறை சொல்லுவதே. தொழிலாகப் போய்விட்டதால், நாமும் பல சமயங்களில் அந்தத் தொழிலையே செய்வதால், அதுவும் உண்மையாக இருப்பதால், இந்தக் கேள்வி நம்மீதே திருப்பிவிடப்படுகிறது.

மானசாட்சியே நடுவர்

இந்தக் கேள்வி ஆளுகின்றவர்கள் முதற்கொண்டு ஆளப்படுகின்றவர்கள் வரை ஒவ்வொரு துறையினரும் ஏன் எல்லோரும் தங்களைப் பார்த்துத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இதற்கு எந்த அளவு விடை கிடைக்கின்றது என்பதையும், அதற்குரிய தீர்ப்பு என்ன என்பதையும் அவரவர்கள் மனசாட்சிகளையே நீதிபதிகளாக அமர்த்தித் தீர்ப்புச் சொல்ல வைக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்

நாம் அரசியலில் ஈடுபட்டுப் இருப்பவர்கள் என்றால் மக்களுக்காக நாம் ஆற்றிய தொண்டு என்ன? செய்த நன்மைகள் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும், அல்லது மக்கள் தொண்டர் என்ற போர்வையில் நாம் சேர்த்துக் கொண்டது எவ்வளவு? இந்தக் காரியம் முடியாது என்று தெரிந்தே எத்தனை பேருக்குப் பொய்யான நம்பிக்கைகள் கொடுத்து ஏமாற்றி இருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணிப் பார்த்து இனியேனும் முடிந்த அளவு பொதுமக்களுக்கான நன்மையைச் செய்வோம் என்ற முடிவுக்கு வரவேண்டும்.

அலுவலர்கள்

அரசியல்வாதிகள் தற்காலிகமானவர்கள், ஆனால் பெரிய அதிகாரிகளும் அதற்கும் கீழ் பணி புரியும் தலைமைச் செயலரிலிருந்து ஒரு பணியாள் வரை பல்வேறு துறையில் உள்ளொர் அனைவரும் பெரும்பாலும் நிரந்தரமாகப் பணியில் உள்ளவர்கள். அவர்களும் மக்களின் ஊழியர்களே, அவர்கள் தங்கள் கடமைகளைத் தாமதிக்காமல், வேண்டியவர், வேண்டாதவர் என்று வேறுபாடு காட்டாமல், சோம்பல் கொள்ளாமல், உரிய நேரத்தில் செய்திருந்தால், உரிய முடிவு எடுத்திருந்தால், எவ்வளவு பணிகள் ஒழுங்காக நடந்து முடிந்திருக்கும். அதனால் மக்கள் எந்த அளவு நன்மை அடைந்து இருப்பார்கள் என்று எண்ண்ப் பார்க்க வேண்டும். அப்படி அவரவர் பங்கில் செய்யத் தவறியதால், பொறுப்பைத் தட்டிக் கழித்ததால் ஏற்பட்ட இழப்புக்களையும் எண்ணிப் பார்த்து இனியேனும் விரைந்து, நேரிய முறையில் செயல்படத் தொடங்க வேண்டும்.

கல்வியாளர்கள்

ஒரு நாட்டிற்கு இன்றியமையாத முதலீடு கல்விக் கழகங்களும் அதில் பணிபுரியும் கல்வி அறிஞர்களும் அதில் பயிலும் மாணவர்களும் ஆவர். அவர்கள்தான் இன்றைய வித்துக்கள்; நாளைய கனிமரங்கள், ஆனால் இவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவரவர்களே எண்ணிப் பார்க்க வேண்டும். நமக்கென்ன போகிறது என்று நினைக்கின்ற கல்வியாளர்களும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்று நினைக்கின்ற இளைஞர்களும் – படிக்காமல் பெறும் பட்டங்களையும், அப்படிப்பெற்றும் அவை வேலையின்றி பயனற்றுப் போகின்ற நிலையினையும் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகள்தான் இப்படி போய்விட்டன. இனியேனும் பயனுள்ள கல்விக்கு, தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்விக்கு – வித்திடுவோம் கற்போரும் தங்களை தகுதி உடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுத் என்ற உணர்வினை மேற் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்கள்

ஒரு நாட்டின் முதுகெலும்பானவர்கள் தொழிலாளர்கள் தான், ஒரு நாடு வளம் பெற, வேளாண்மை முதலான பல்வேறு உற்பத்தித் தொழில்களும் முதன்மை பெற அந்த முதன்மையைப் பாதுகாக்க, உரிமை பெற பெற்றதைப்பேண தொழிலாளர்கள் உரிமைக்குரல் எழுப்பவும் வேண்டும். அதே நேரத்தில் சமுதாய நலன் கருதி பொருள் உற்பத்தியில் நாட்டம் செலுத்தவும் வேண்டும். கூட்டமாகக் கூடி நின்றால் மக்களாட்சியில் எதையும் சாதித்து விடலாம் என்ற மனப்போக்கு வளருமேயானால் அது நன்மை நாமே அழித்துக்கொள்ளும் செயலே ஆகும். அதனால் நாம் உழைத்தது எவ்வளவு, பெற்றது எவ்வளவு. நாம் இன்னும் இனியும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி தொழிலை. நிருவகிக்கின்ற நிறுவனங்களும் கணித்துப் பார்த்துக் கடமையாற்ற வேண்டும்.

இவை எல்லாம் சமுதாயத்தோடு இணைந்து செயல்பட வேண்டிய செயல்கள் – ஏன் செய்ய வில்லை? என்று யாரும் நேரடியாகக் கேட்க முடியாதவை. நாமே பொறுப்புணர்ச்சியோடு செய்ய வேண்டியவை.

பெற்றோர்கள்

இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து விட்டோம். இதுவரை நாம் சாதித்து என்ன என்று பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளத் தவறினால், அவர்களது பிள்ளைகளே அந்தக் கேள்வியைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள், அதனால் , பொருளாதார வகையில் பிள்ளைகளுக்கு, கல்வி, தொழில் பழக்கிய வகையில் – குடும்பத்தைப் பொறுப்பாக நடத்திய வகையில் – உறவு முறைகளைச் சீராக வைத்துக் கொண்டதில் – நல்ல குடிமகானக வாழ்ந்ததில் நாம் சாதித்தது என்ன? சாதிக்கத் தவறியது என்ன என்பதைக் கணக்கிட்டே பார்க்க வேண்டும். அதுவே வளர்ச்சிக்கு வழி.

வயதான காலத்தில் வருந்தி..

இளம் பெற்றோர்கள் இரண்டோடு நிறுத்திக் கொண்டு வரவுக்குத் தகுந்த செலவு செய்து, நேரிய வழியில் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வழி கண்டு. சமுதாய இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழ ஆண்டு தோறும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மாறாக பல பெற்றோர்கள் 55ஐயும் 60ஐயும் கடந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் வாழ்ந்த முறை சரியில்லை என்று கழிந்ததற்கு இரங்குகின்ற நிலையிலேயே உள்ளார்கள். அளவுக்கு விஞ்சிக் குழந்தைகளைப் பெற்றதால அவர்களுக்குத் திருமணமும் செய்து வைக்க முடியாத நிலையில், கவலையிலே மாண்டு போகிறார்கள். அவ்வப்பொழுது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் போகின்ற போக்கு சரிதானா என்று ஒரு சுய சோதனை செய்தே பார்க்க வேண்டும்.

மகனும் மகளும்

பதினைந்தையும் இருபதையும், இருபத்தி ஐந்தையும் கடந்த பிள்ளைகள் படிப்பவர்களாய் இருப்பின், நாம் நாள் தோறும் புதிதாகக் கற்றுக் கொண்டது என்ன? ஆண்டு தோறும் எந்த அளவில் அறிவில், பண்பில், தன்னம்பிக்கையில், பொறுப் புணர்ச்சியில் வளர்ந்துள்ளோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பிள்ளைகளின் ஒழுங்கான நடைமுறையகளும் முறையான படிப்புமே பெற்றோர்க்கு மகிழ்ச்சி தருவதாகும். பிள்ளைகள் தவறான பழக்கத்திற்கு ஆளாகும் போது, ஒரு பையன் சிகரெட்டில் நெருப்பைப் பற்ற வைக்கின்றான் என்றால் அது அவன் அன்னையின் அடி வயிற்றில் பற்றி எரியத் தொடங்கி விடுகின்றது என்பதைப் பிள்ளைகள் உணர வேண்டும்.

வேலைக்குப் போவோர்

பணியில் இருப்போரானால், ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் இளமையில் நேமும் சிரமமும் பார்க்காமல் கூடுதலாகப் பணிபுரிந்து எந்த அளவு நல்ல பெயரை ஈட்டிக் கொண்டுள்ளோம் என்று பார்க்க வேண்டும். இப் பெயர் வருங்கால வளர்ச்சிக்கு நாம் செய்யும் முதலீடு ஆகும். இளமை ஆடம்பரத்தை அதிகம் விரும்பும். இருப்பினும் எதிலும் ஒரு கட்பாடு தேவை. வருவாயில் செலவு எவ்வளவு, நமது செலவுகள் அவசியமானது தானா? அவசியமான செலவுகளைத்தான் செய்கிறோமா என்றும் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மால் குடும்பத்திற்கு எந்த அளவு நன்மை – எந்த அளவு தொல்லை எனபதையும் கணித்து இளமையின் வேகத்தை யார்; எது கேட்டாலும் எதிர்த்துப் பேசுகின்ற மன்ப்போக்கை – மாற்றி, இளமையினு ஆற்றலை வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும், அவர்களே எதிர் காலத்திலும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் விளங்குகிறார்கள்.

கணக்குப் பார்ப்போம்

இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒவ்வொரு தனிமனுதனும் வங்கியில் அன்றாடம் கணக்குப்பார்ப்பது போல் நாம் மாதந்தொறும் ஆண்டுதோறும் கணக்குப் பார்த்து வரவும் செலவும் செய்ததும் செய்யாத்தும் இது இது எனக் குறித்து முடிந்ததற்கு வருந்தாமல் இனி வருங்காலத்திலாவது இத்தகைய வருத்தம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற போக்கில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

திட்டமிடுவோம்

இத்தகைய முறையான வாழ்விற்கு ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட வேண்டும். இந்த ஆண்டில் இன்னின்ன செயல்களைச் செய்வோம் அதற்கான வழிமுறைகள் இன்ன இன்ன? அதற்காகும் முதலீடு இவ்வளவு, அதற்காகும் காலம் இத்தனை மாதங்கள் என்று திட்டங்கள் தீட்டிக் செயல்பட வேண்டும். சென்ற ஆண்டில் முடியாதவை, முன்றும் முடிக்க முடியாதவை இவை இவை, அதற்குரிய காரணங்கள் என்ன என்பன போன்றவற்றையும் எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

வளமும் மகிழ்ச்சியும்

மனித வாழ்வின் குறிக்கோள் வளமாகவும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்பதுதான். வளம் மட்டும் இருந்தால் மகிழ்ச்சி வந்துவிடும், மன நம்மதியோடு இருப்பதில்லை. மகிழ்ச்சியோடுருப்பவர்களில் பலர் மன நிம்மதியோடிருப்பவர்களில் பலர் வசதியாகவும் இல்லை. அதனால் வசதி குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு வாழ்வதே சீரிய வாழ்க்கை. அதோடு வாழ்க்கையை வசதியாக அமைத்துகொள்ள வேண்டியதும் ஒவ்வொரு மனிதனின் கடைமையுமாகும்.

கட்டுக்குள்

அத்தகைய மகிழ்ச்சியான, வசதியான, மன நிறைவான வாழ்வு மலர வேண்டுமானால், நாம் இதுவரை சாதித்தது என்ன என்பதை எந்த வயதினரும், எந்தத் தகுதியில் உள்ளவரும் மாதந்தோறும் ஆண்டுதோறும் எண்ணிப்பார்த்து குறை நிறைகளைக் கணக்கிட்டு நல்வழிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதுவே தனி மனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் நலம் பயக்கும் செயலாகும்.

இதுவரை நீங்கள் சாதித்தது என்ன என்று ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள். நீங்கள் சாதனையாளரா? அல்து சாதாரன மனிதரா? என்பது விளங்கும். இன்று முதலாவது, இந்த ஆண்டிலாவது புதிய வாழ்வைத் தொடங்குவோம்.

(டாக்டர் இல.சே.க.வின் சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் நூலிலிருந்து)

 

1 Comment

  1. anantharaman says:

    நன்றாக ulladu

Post a Comment