Home » Articles » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


admin
Author:

– டாக்டர் பெரு. மதியழகன்

கடுஞ்சொல் பேசாதீர்

பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் கடுஞ்சொற்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது. இன்றைக்கு இலக்கிய மேடைகளிலும், சங்கங்களிலும், சாதி கூட்டங்களிலும், அரசியல் மேடைகளிலும் கடுஞ்சொல் கணை தொடுக்கிறவர்கள் ஏராளம்.

“மேடைப் பேச்சில் எதிரிகளை பழித்துக் கேவலமாகவும் தரக்குறைவாகவம் புகார் கூறிப் பேசாதே! சாதாரண செயலை பெரிதுப் படுத்திக் கொண்டிருக்காதே!” என்கிறார் டிஸ்ராலி”

கடுமையான கண்டனங்கள் எதிராளிக்குத்தெரிவிக்க கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்பட்டால் அப்படி கண்டிப்பதுகூட ஓரிரு வினாடிகளே இருக்க வேண்டும்.அன்றி பேச்சு முழுவதும் கடுஞ்சொற்களஞ்சியமாகவும், ஆபாசக் குட்டையாகவும் அமைந்திருக்குமானால் விரைவில் அந்தப் பேச்சாளர் மதிப்பிழப்பார். அவர் சார்ந்துள்ள அமைப்பு சிறப்பு குன்றும்.

அண்மைக்காலமாக கருத்துக்களை சிந்தனைகளைச்சொல்வதைவிட தனி மனித துதிகளும், நகைச்சுவை என்ற பெயரால் தரந்தாழ்ந்த சுய விமர்சனங்களும் புனைக்கதைகளும் மிகுந்து, மேடைப் பேச்சின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. கடுமையாக காரசாரமாக பேசுவது என்பது வேறு! தரக்குறைவாக! ஆபாசமாக அருவருக்கத்தக்க தக்க முறையில் பேசுவது என்பது வேறு!

கடுஞ்சொல் பேசாமல் இன்சொல் பேசுவது மட்டுமல்ல. தனிவாழ்க்கையில் கூட அவர் ஒழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும். உயர்ந்த கருதுக்களை நேற்று பேசிய மனிதரை இன்று குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடக்கக் கண்டால் அவர் சொன்ன கருத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்படாது. புகை பிடிக்க்கூடாது என்று மாணவர் மத்தியில் பேசிய பேச்சாளர் புகைப்பதைப் பார்த்தால் மாணவர்களுகுக அவர் சொன்ன கருத்தில் பிடிப்பு ஏற்படாது. (புகை) பிடிக்கத்தான் தோன்றும். ஒன்றைப் பிறருக்குச் சொல்லும்போது கூட நாம் அதை கடைப்பிடிக்கிறோமா என்று பார்த்து பேச வேண்டும்.இதற்கு நபிகள் நாயகம் வாழ்வில் ஒருநிகழ்ச்சியைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சொல்வதைச் செய்வோம்

ஒருமுறை நபிகள் நாயகம் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கிழவி பையைக் கொண்டு வந்து முன்னே நிறுத்தினாள். என்ன என்றார்? இவன் சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள். நான் சொல்லி இவன் கேட்கவில்லை. அதற்காகத்தான் தங்களிடம் அழைத்து வந்தேன்” என்றாள். “அப்படியா” என்று சற்று எண்ணி, இன்னும் மூன்று நாட்கள் கழித்து வாருங்கள்”ப்ப என்றார். கிழவி பையனை அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

மூன்றாம் நாள் பல மைல்களுக்கு அப்பால் நபிகள் நாயகம் சொற்பொழிவாற்றுவதை அறிந்த பையனை அழைத்துக்கொண்டு போய் பழையபடி நின்றாள். “நீங்கள் யாரம்மா?” என்றார். “மூன்று நாளைக்கு முன்பே, இந்தப் பையன் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறான். கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள் என்று கேட்டேனே – நான்தான் என்றாள். “ஓ! அவனா? தம்பி! இனிமேல் நீ சர்க்கரை சாப்பிடாதே! போ” என்றார்.

அந்த அம்மாவுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இவ்வளவு தானா? இதைச் சொல்லவா மூன்றுநாள்? அதை அன்றைக்கே சொல்லி இருக்கலாமே என்று நினைத்தாள். உடனே “தாயே நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டும் சர்க்கரை சாப்பிடுகிறவன் அல்ல. நனும் அதிகமாகச் சர்க்கரை சாப்பிடுகிறவன்தான். முதல்நாள் விட முயன்றேன் முடியவில்லை. நற்று விடப் பார்த்தேன் பாதிதான் முடிந்தது. இன்றைக்கு காலையிலிருந்துதான் என்னால் விட முடிந்தது. சர்க்கரையே சாப்பிடுவதை விட முடியும் என்று அதன் பிறகுதான் பையனுக்கு நான் அறிவுரை சொல்ல தகுதி பெற முடிந்தது.” என்றார்.

எனவே பேச்சாளர்கள் செய்யக் கூடியதைப் பேச வேண்டும். பேசியதை அவர் முதலில் கடைப்படிக்கிறவராக இருக்க வேண்டும்.

தெரிந்ததைப் பேச வேண்டும்

தனக்குத் தெரிந்ததைப் பேச வேண்டும். தனக்குத் தெரிந்ததை எல்லாம் பேசிவிட முயலவும் கூடாது. அதைவிட தனக்குத் தெரியாத்தைப் பேசிவிட முயன்று இடறி விழுந்தவர்களும் உண்டு.

ஓர் அரசியல் கட்சிப் பேச்சாளர், “சீதையை மணக்க இராமன் அயோத்தியாபுரியில் ஜனகனின் வில்லை முறித்தான்” என்று பேசினார். அடுத்து எதிர்க் கட்சிப் பேச்சாளர் இவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு,

“பாவம் அந்தக் கட்சிப் பேச்சாளருக்கு ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா? அஸ்தினபுரியா? என்று கூடத் தெரியவில்லை” என்று ஏளனம் செய்தார்! மேடையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். அதற்குள் ஒரு நண்பர் குறுக்கிட்டு, “அய்யா! ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி’ என்று திருத்தினார். அத்துடன் விடவில்லை அந்தப் பேச்சாளர், “மன்னிக்கவும்! நான் இராமாயண ஞாபகத்தில் தவறாக்க் கூறிவிட்டேன்” என்று மக்களைப் பார்த்துச் சொன்னார். கூட்டத்தில் சிரிப்பொலி அடங்க நெடுநேரம் ஆனது.எதிர்க் கட்சிப் பேச்சளாரைக் கேலி செய்யப் போய் இவரே கேலிக்குரியவரானார். எனவே தெரிந்ததைப் பேசுவதே சிறப்பாகும்.

ஆரம்ப몮 பேச்சாளர்கள்

“குறைந்த நேரத்தில்நிறையப் பேச வேண்டும். நீண்ட நேரம் பேச வேண்டும், அடுத்து பெரிய கூட்டங்களில் பேச வேண்டும், கைதட்டல் பெற வேண்டும். மேடை ஏறி சற்றுப் பேசக் கற்றுக் கொண்டவுடனே ஆரம்பப் பேச்சாளர்கள் எதிர் பார்ப்பது இது தான் இது சரியல்ல.
கொடுக்கப்பட்ட நேரத்தில் எவ்வளவு கருத்துக்களைத் தெளிவாகச் சொல்ல முடியுமோ அதை மட்டுமே சொல்ல வேண்டும். நன்கு பேசி பயிற்சி பெற்ற பலரும், பாராட்டும்நிலை வரும் போது நீண்ட நேரம் பேச முயற்சிக்கலாம். அதே போல ஆரம்பத்திலேயே பெரிய கூட்டங்களில் பேச முயற்சிப்பதை விட சிறுசிறு கூட்டங்களில் பேசி பயிற்சி பெறுவதே சாலச் சிறந்தது. கைத்தட்டல் பெறுவதற்காகவே பேசுகிற பேச்சாளர்கள் இருக்கிறார்கள். பேச்சாளனுக்கு கைத்தட்டல் ஓர் உற்சாக மருந்து தான். ஆனால் அக்கைத்தட்டலை எதிர்பார்த்து பேசுகிற பேச்சாளன் பல நேரங்களில் சோர்ந்து போக நேரிடும்.

– உயர்ந்த கருத்துக்களை நறுக்கென சொல்லி கைத்தட்டல் பெறுவதுத ஒரு வகை.
– உணர்ச்சியைத் தூண்டும் படியாக சொல்லி கைத்தட்டல் பெறுவது இன்னொருவகை.

– நகைச்சுவையாய்ச் சொல்லி கைத் தட்டல் பெறுவது மற்றொருவகை.

நகைச்சுவை இயல்பாய் சொற்பொழிவின் ஓட்டத்தோடு கலந்திருக்க வேண்டும். கைத் தட்டல் பெற வேண்டும் என்பதற்காக பேச்சோடு தொடர்பில்லாதவற்றைச் சொல்லுவது சிறப்பான பேச்சாகாது.

தொடக்கக்காலப் பேச்சுகள் 2 அல்லது 3 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. பிறகு நன்கு பயிற்சி பெற்ற பிறகே நீண்ட நேரம் பேச முயற்சிக்க வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்