Home » Articles » தண்ணீரும் தத்துவமும்

 
தண்ணீரும் தத்துவமும்


உதயமூர்த்தி எம்.எஸ்
Author:

புத்தரின் உபதேசங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘புக்கியோ டெண்டா இயோகரய்’ என்கிற புத்த பிட்சு எழுதுகிறார் ஞானத்தெளிவைப் பெறும் மிக முக்கியமான வழி எந்த விசயத்திலும் அதன் கடைசி எல்லைக்குச் செல்லாமல் நடுப்பாதையில் நிற்பதுதான்.

கிரேக்க நாட்டு சாக்ரடீஸ் கூறியிருப்பது கூட ‘எல்லாம் அளவோடு’ என்பதுதான். சாப்பிடுவதில் ஒரு நிதானம்; ஒரு அளவு; பேசுவதில் ஒரு நிதானம்; ஒரு அளவு; ஒரு நடுநிலை; மனித உறவுகளில் ஒரு எல்லை; ஒரு நிதானம்; செல்வம் சேர்பதில் ஓடு ஓடென்று ஓடிக்கொண்டேயிருக்கலாமா? தேவையில்லை! படபடப்புதான் மிஞ்சும். அமைதி போய்விடும். போதும் என்ற திருப்தி தேவைக்கும் ஆசைக்கும் இடையே ஒரு கோடு. இது போதும். இதுவே ஏராளம் என்ற நடுநிலை.

அதே போன்று ஆன்மீகப்பாதையிலும் ஆன்மீக வளர்ச்சியிலும் ஆசை கொள்ளுங்கள். ஆனால் அதற்கு கடுந்தவம் இயற்ற வேண்டியதில்லை. கடுமையாக உழைத்து குண்டலினியை எழுப்பினால் அது திசைகெட்டும் போய்விடும். அது அதுவாக வரும். நீதானம், பொறுமை, அவசரமின்மை, இவைதான் தேவை.

உங்கள் சக்தியை கடையி எல்லைக்கு எடுத்துச் செல்லாதீர்கள்! மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடினால் மூச்சு நின்றுவிடக்கூடும். இந்த ஆன்மீக விதிகள் அன்றாட வாழவிலும் விஞ்ஞானத்திலும் வருகின்றன. மேற்கு நோக்கிப் பயணம் சென்றார் கொலம்பஸ், இந்தியாவைத் தேடி கடைசியில் கிழக்கு நோக்கி வந்தார். உலகம் உருண்டையாய் இருப்பது போல் இந்த பிரபஞ்சமே ஒரு உருண்டையாகத்தான் (Closed System) இருக்கிறது என்கிறது விஞ்ஞானம்.

வாழ்வைப் பார்த்தால் அதில் உயிர் என்ற மையம் இருக்கிறது. அதைச் சுற்றித்தான் பல திசைகளிலும் வாழ்வின் பல எல்லைகள் இருக்கின்றன. இந்த நடுப்புள்ளியை மறந்து நாம் எல்லைகளிலேயே நின்றோமானால் துன்பம்தான். எந்த ஒரு கோடிக்கு நாம் போக முயற்சித்தாலும் அங்கே செல்லும் நாம் மற்றொரு கோடிக்கு போகும்படி நேரிடும். அனுபவிக்கும்படி நேடும்.

வெறும் உடலின்பத்தையே நாடியவர்கள் எல்லாம் உடல் துன்பத்திலேயே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். அளவிற்கு மீறி சாப்பிட்டு ஆனந்தித்தவர்கள் சாப்பாட்டாலேயே செத்திருக்கிறார்கள். இதை சீன ஞானிகள் மிக அழகாகச் சொல்கிறார்கள். அவர்கள் இந்தச் சமநிலையைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். அன்றாட வாழ்வை விள்ள அவர்கள் அதிகம் உபயோகிக்கும் ஒரு உதாரணம் தண்ணீர்தான்.

தண்ணீர் அது செல்லும் பாதையில் கரடுமுரடான பாறைகள், குன்றுகள், பள்ளங்கள், மேடுகள் என்று பல இடங்களும் தடுமாறச் செய்கின்றன.

தண்ணீர் என்ன செய்கிறது?

மெதுவாக, முட்டாமல், மோதாமல், வளைந்து சென்று அதைச்சூழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பள்ளம் மேடுகள் எல்லாவற்றையும் மீறி சம நிலையில் வந்து நிற்கிறது.

எல்லா மேடு பள்ளங்களும் உள்ளே போய்விடுகின்றன. சமதளமாக தண்ணீர் அமைதியாக மேலே நிற்கிறது.

தண்ணீர் வலிமை கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக, சொட்டு சொட்டாக கீழே விழும் தண்ணீர் பாறைகளையும் கரைத்து விடும். பாறையிலும் பள்ளம் பண்ணவிடும். ஆனால் சிறுகச் சிறுகத்தான் அதைச் செய்கிறது.

அதேபோல் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் திறந்துவிடப்படும்போது, அபார சக்தியுடன் வெளிவருகிறது. தண்ணீர் வலிமை கொண்டது. பொறுமை கொண்டது. எனினும் சமாதானம் கொண்டது.

எனவேதான் தியானம் செய்பவர்களைப் பார்த்து அமைதியாக நிற்கும் ஏரியை மனக்கற்பனையில் கொண்டு வாருங்கள். மனம் அமைதி பெறும் என்கிறார்கள்.

தண்ணீர் தூய்மைப் படுத்துகிறது. ‘புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை நாம் பேசும் பேச்சில் காணப்படும்’. என்கிறார் திருவள்ளுவர்.

தண்ணீரே!

‘நீர்’ இல்லாவிட்டால் ‘நான்’ இல்லை! நீ தத்துவம் நிறைந்தவள்! அன்னை காவிரியாக, கங்கையாக, மகாந்தியாக, கோதாவரியாக, கிருஷ்ணாவாக, வைகையாக வந்து எங்களை வாழவைக்கிறாய்! தாயே நீ வா! உன்னைப் புரிந்துகொண்டு போற்றும் அறிவை எங்களுக்குக் கொடு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….