Home » Cover Story » உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?

 
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?


கந்தசாமி இல.செ
Author:

நம்மைப்பற்றிய சிந்தனை: ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப்பற்றிய சிந்தனை மிகவும் தேவை. தன்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் எந்த வகையில் செலவாகின்றது; மேலும் எப்படி சிறப்பாகப்பயன்படுத்தலாம். மேம்படுத்தலாம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனநிறைவு தரும் நாளே பயனுள்ள நான்: சிலர் சொல்வதுண்டு. இன்று ஒரு நாள் மொத்தமாக வீணாகி விட்டது என்று. இன்னும் சிலர், மிகவும் பயனுள்ள வகையில் இந்த நாள் கழிந்தது என்று கூறுவார்கள். பொழுதுபோக்கு என்றால் கூட அது மனநிறைவைத் தருமானால் அது பயனுள்ள நாள்தான். உலகளாவிய கருத்தரங்காக இருந்தாலோ பொருத்தமில்லாது இருந்தாலோ அதை நாம் வீணாக் கழிந்த பொழுதாகவே கருதுகின்றோம்.

ஒரு நாளை நான்காக பகுத்துக்கொள்வோம்: அதனால் ஒரு நாளில்நாம் எழுத்ததிலிருந்து காலை 4 மணி முதல் 9 மணி வரை. பின்னர் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை, 2 மணியிலிருந்து இரவு 5 மணி வரை, 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை என்று நான்கு பிரிவாக பிரித்துக் கொண்டு எந்தப் பிரிவு நேரம் அதிகம் பயன்படுகிறது? எந்தப் பிரிவு நேரம் அதிகம் வீணாகிறது என்று முதலில் கணிக்க வேண்டும். அதைச் சரி செய்ய வேண்டும்.

வீணாகும் நேரங்கள்: சிலர் காலை நேரத்தை அதிகம் வீணாக்குவார்கள். சிலர் முற்பகலை வீணாக்கி விடுவார்கள். வேறு சிலருக்கு மாலை நேரம் பயன்றறுக் கழியும். பெரும்பாலோருக்கு மாலை 5 மணியிலிருந்து படுக்கைக்குப் போகும் வரை நேரம் வீணாகவே கழிவதுண்டு.

இந்த மாதிரிப் பட்டியலைப் பார்த்து உங்கள் இன்றைய நடைமுறைப் பட்டியலை முதலில் எழுதுங்கள். அல்லது நேற்று எழுந்தத்து முதல் படுக்கைக்குச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொரு மணிக்கும் செயல்முறை எழுதுங்கள்.

நண்பர்கள்

மனம் சோர்வடையும் போதும் துன்பம் அடையும் போதும் அவற்றைப் பயிர்ந்துகொள்ள மனம் ஒப்பியவர்களை மட்டுமே தேடுகிறது. அவர்களே நல்ல நண்பர்கள்,. அவர்களே வாழ்க்கைக்குத் துணையானவர்கள்.

காலை

4 மணி – எழுதல்/பல் துலக்குதல்
4.30 – 5.30 – படித்தல்/ எழுதுதல்
5.30 – 6.30 – நடத்தல் / சிந்தித்தல் / செய்திதாள் பார்த்தல்
6.30 – 7.00 – காலைக்கடன் / குளியல்
7.00 – 8.00 – எழுத்துக்கணி/ தொழில் சார்ந்த பணிகள்
8.00 – 11.30 – அலுவலகம்
11.00 – 12.30 – பொதுமக்கள் சந்திப்பு ( அவரது சொந்த வேலை)
12.00 – 1.30 – மதிய உணவு / செய்தித்தாள் படித்தல்
1.30 – 5.00 – அலுவலகம்
5.00 – 6.00 – குடும்பப் பணிகள் / கடமைகளுக்கு சென்று வருதல்
6.30 – 7.00 – நடத்தல்
7.00 – 8.30 – நூலகம் / படித்தல் / எழுதுதல்
8.30 – 9.00 – டி.வி. பிற இதழ்கள்
10.00 – படுக்கைக்குச் செல்லுதல்

இந்த வகையில் உங்கள் அன்றாட நேரத்திற்கு ஒரு பட்டியல்போடுங்கள். இப்பொழுது உங்கள் நடைமுறையை அப்படியே எழுதுங்கள். பிறகு அதையே திருத்தி உங்கள் இலட்சியப் பட்டியலாக மாற்றிக் கொள்ளலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் அன்றாட நடைமுறைப் பட்டியல். இதுவே எல்லோருக்கும் பொருந்தாது. தொழிலுக்கு ஏற்பவே பட்டியல் அமையும். இன்றும் சில தொழில் அதிபர்கள் டாக்டர்கள் இந்தப் பட்டியலை விட அதி சிக்கனமாக நேரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஓரிரு இளம் டாக்டர்களை நான் அறிவேன். மீண்டும் மாலை 6 மணி தொடங்கினால் இரவு 11 மணிக்கும் மேலாகி விடுகிறது. அப்படி உழைப்பு – அத்தகையவர்கள் நேரம் மிகவும் பயனுள்ளதாக கழிகிறது.

சில தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர்கள் 17 மணி நேரமும், 18 மணி நேரம் கடுமையாக உழைக்கிறார்கள். இத்தகையவர்களுக்குச் செல்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் நேரத்தைச் செல்வமாக மதித்து போற்றுகிறார்கள். பயன் பெறுகின்றனர். வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். சிலர் சாதனையும் படைத்து விடுகின்றனர்.

ஆதலின் ஒவ்வொருவரும் அவரவர்கள் நேரத்தை அவரவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பிறர் நேரத்தையும் வீணாக்காதவாறு நம் வாழச் சற்றுக்கற்றுகொள்ள வேண்டும். அன்றாட வேலைகளைச்செய்து கொள்ளப் பழக வேண்டும்.

இந்தப் பட்டியலில் பொதுவாக இந்த கட்டுரையாசிரியரின் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை, சனி ஞாயிறுகளில் இலக்கிய நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் இருக்கும். நண்பர்களைச் சந்தித்தால் – குடும்பப்பணிகள் போன்றவை நடைபெறும். இதில் எந்த நேரத்தில் ஏதேனும் ஒன்று புதிராக வந்து சேர்ந்தாலும் மற்றொன்று பாதிக்கப்படும். வெளியூர் செல்ல வேண்டி இருப்பின் ஒரு நாள் நிகழ்ச்சி முழுமையாக பாதிக்கும். மீண்டும் மறுநாள் இயல்பான நடைமுறை தொடரும்.

காலையில் அலுவலகத்திற்கு பெரும் பதவியிலுள்ள சிறிது நேரம் பற்றிய பழக்கங்கள்: காலையில் அலுவலகத்திற்கு வரும் போதே சிறுதாளில் 1, 2, 3, என்றும் பத்தும் பதினைந்து பணிகளைக் குறித்துக் கொண்டு வருவார்கள். யார்யாரிடம் எந்த வேலை முடிய வேண்டுமோ அதைத் தொடர்ந்து (Follow up action) அந்த பணிகள் என்னவாயிற்று – என்று பார்த்து முடிப்பார்கள். நிர்வாகம் சீராக இருக்கும்.

பார்வையாளர்களுக்கு என்று நேரம் ஒதுங்கி அவர்களிடம் குறைவாகப் பேசுவார்கள். முடியும், முடியாது மன்னிக்கவும் என்று தெளிவாகத் தெரிவிப்பார்கள். அப்போதைக்கு அந்தப் பதிலால் வெறுப்பைப்பெற்றவர்களாக இருந்தாலும், உண்மைச் சொன்னார் என்ற பெயர் நிலைத்து நிற்கும்.

வேறு சிலர் பொய்யான நம்பிக்கையைக் கொடுத்து (False hope) செய்து விடுகிறேன் என்பார்கள். சொல்லும்போதே செய்ய முடியாது என்று தெரியும். இத்தகையவர்கள் பின்னாளல் மதிப்பிழந்து போவார்கள். பொய்யர்கள் என்ற பெயரே மிஞ்சி நிற்கும். இத்தகையவர்கள் தலைமைப் பதவிக்கு தகுதியில்லாதவர்கள்.

சிலர் எதுவும் சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடிய வேண்டும் என்று எண்ணுவார்கள். தங்களுக்காக யாரும் காத்திக்கொண்டருக்கக்கூடாது என்று கருதுவார்கள். அதன்படி நடப்பார்கள் இத்தகையவர்களையே சமுதாயம் மதிக்கிறது.

விரும்பத்தகாத ஒன்று: பார்வையாளர்களைச் சந்திக்கும் போது ஒரு மனித் துளியானாலும் அவர்கள்சொல்வதை பொறுமையாக்க் கேட்டு உடனே அதற்கான பதிலைச் சொல்லி அனுப்பிவிடுவதுதான் உயர்ந்த தன்மை. ஆனால் ஒரு சிலர் பார்வையாளரிடம் பேசிக்கொடே தங்கள் கடிதங்களைப் புரட்டுவார்கள். கடிதங்களுக்குக் கையெழுத்துப் போடுவார்கள். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இச்செயல் விரும்பத்தக்கதும் முறையும் அல்ல. சந்தித்தவர்க்கு இந்த அலுவலர் மீது சிறிதளவும் நம்பிக்கை பிறக்காது.

பெரியவர்கள் சிறியவர்கள் என்பதெல்லாம் ஒருவரை மதித்துப் போற்றுவதில் தான் அவர்தம் தன்மை அடங்கியிருக்கின்றது. ஆதலில் உங்கள் நேரத்தைப் பட்டியலிடுங்கள். அதில் எந்தெந்த பகுதி வீணாக கழிகிறது என்று பாருங்கள். அதைச் சரி செய்து பக்கத்திலேயே உங்கள் இலட்சியப் பட்டியலையும் தயாரியுங்கள். அதன்படி நடக்க முயற்சியுங்கள்.

முதலில் மூன்றை முறைப்படுத்துங்கள்: முதலில் காலையில் எழுவதை இரவு படுக்கைக்குப்போவதை முறைப்படுத்துங்கள். பிறகு எந்தெந்த நேரத்தில் அதிகம் பேசுகிறோம் என்பதை எண்ணிப்பார்த்துக் குறையுங்கள்.

பிறகு எந்த வேலையை எடுத்தாலும் அதை முடித்துவிடுங்கள். முடித்து விட்டுத்தான் மறுவேலை என்று முடிவு கொள்ளுங்கள். இந்த மூன்றும் செய்தால் கூட போதும். உங்கள் நேரம் உங்கள் கைவசம் ஆகும். நீங்கள் வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டுவது உறுதியாகிவிடும். நீங்கள் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவீர்கள்.

சுவாமி விவேகானந்தர் கூறுவதை எண்ணிப்பாருங்கள். ‘கடந்த காலத்தில் நாம் செய்து முடித்தவைகளைப் பொறுத்தே நிகழ்கால வாழக்கை அமைகிறது. நிகழ்காலத்தில் நாம் செய்து வருவதைப்பொறுத்தே நமது எதிர்கால வாழ்க்கை அமைகிறது.

உங்கள் எதிர்கால வாழ்க்கை வளம் பெற வேண்டுமானால் இன்றே – இப்பொழுதே உங்கள் நிகழ்கால வாழ்க்கையைச் செப்பனிடுங்கள்.

– டாக்டர் இல.செ.க. வின் “நேரமே நமது செல்வம்” என்ற நூலிலிருந்து


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1996

உங்கள் நெஞ்சம்
பெண்கள் நிலை உயரவேண்டுமானால்….
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்
நாவடக்கம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
நாட்டுக்கேற்ற விதி
ஆலோசனைப் பகுதி
சிந்தனைத்துளி
ஆலவிழுதுகள்
சிந்தனைத்துளி
எண்ணம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
பெண்களே!
நியாயம்
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?