Home » Cover Story » நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?

 
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?


கந்தசாமி இல.செ
Author:

காலம் சிறியது . நமது கனவுகளோ மிக நீண்டவை – மிக மிக நீண்டவை. பலர் கனவுகளோடேயே தங்களது வாழ்க்கைக் கழித்து விடுகின்றனர். சிலர் மட்டும் கனவுகளை நனவாக்கி அனுபவித்து மகிழ்கின்றனர்.

வாழ்க்கை என்பது வெறுங்கனவு மட்டும் அல்ல. நமது கனவுகளை நனவாக்க நாம் முயல்வதில்தான் அந்த முயற்சியில் தான் வரும். வெற்றி, தோல்விகளை ஏற்று நடப்பதில் தான், நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் பொருளே அடங்கி உள்ளது.

இத்தகைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு” அதில் தோல்வியைக் கண்டு துவளாமல் உள்ளவர்களைத் தான் நாம் நமது முன்னோடிகளாக வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். எதைக் கண்டாலும் அஞ்சி நடுங்குகின்றவர்களை நாம் முன்னோடிகளாக ஏற்றுக் கொள்வதில்லை.

அதனால் நமது கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் ஓர் உருவம் கொடுக்க வேண்டுமானால் நாம் நமது கற்பனையில் உருவாக்கிக் கொண்டுள்ள வாழ்வைப்போல அமைத்துக்கொள்ள வேண்டுமானால் இன்று நடைமுறையில் யார் அவ்வாறு இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களைப் போல் ஏன்? அவர்களைவிட மிகச் சிறந்து விளங்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள் என்னென்ன என்று சிந்தித்துச் செயல்படுவோமானால் நினைத்ததை முடிக்கலாம் – விரும்பியதை அடையலாம் என்பது – திண்ணம்.

எதைத் தேர்ந்தெடுப்பது?

நாம் எந்தத் துறையில் முன்னேற விரும்புகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதிலும் நமது நோக்கம் – முடிந்த அளவு என்ன என்பதைத் தெளிவாக திட்டவட்டமாக வரையறை செய்து கொள்ள வேண்டும்.

கல்வித்துறையா, தொழில் துறையா, அல்லது பொதுப்பணி அல்லது அரசு நிர்வாகத்தில் உயர்ந்த பதவியா? எதுவாக இருந்தாலும் அதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு எதையும் அடைய முடியாமல் போனதற்கு காரணம் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமையே அன்றியும் பலவற்றில் தலையிடுவதேயாகும்.

நமது பங்கு என்ன?

இவ்வாறு ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது கூட அதில் நமது ஆற்றல் எவ்வளவு? நமது அறிவு எத்தகையது? நமது மனத்திண்மை எத்தகையது – என்பதை அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். சொந்தத் தொழில் செய்வதாக இருந்தால் முயற்சியே முதல் மூலதனம் – சுற்றுச் சூழல் பொருளாதாரம் முதலியவை அடுத்தடுத்து இடம் பெற வேண்டியவை. அல்லது ஊதியத்திற்குச் செல்லும் பணியானால், அதிலும் கடுமையான உழைப்பு நேர்மை அவற்றைப் பயன்படுத்தினால் உடனடிப் பலனை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் நீண்ட காலத்தில் பெரும் நன்மை விளையும் என்பது திண்ணம்.

தயார்படுத்திக் கொள்க.

விருப்பமான தொழில் – அதில் நமக்குப்போதிய அறிவு இல்லை என்று எண்ணினால் சில காலம் செலவு செய்தேனும் ஓரளவு நுட்பங்களைத் தெரிந்துக்கொண்டு தொழிலில் இறங்கலாம். அதனால் தான் படிக்கும் காலத்தில் முழுமையாக படிப்பில் நேரத்தை ஈடுபடுத்த வேண்டும். பொதுக்காரியங்கள் எல்லாம் படித்த பிறகு வைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுரை கூறினார்கள். படிக்கும் போது பொதுக் காரியங்களில் ஈடுபட்டு படிப்பில் கோட்டை விட்டால் பின்னர் எதிர்கால வாழ்க்கை இருளடைந்து விடும் என்று மாணவர்களை எச்சரித்தார்கள். அதனால் முன்னேறத் துடிப்பவர்கள் அந்தந்த காலத்தில் அந்ததக் காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். முன்னர் தவறி இருந்தாலும் இனியேனும் பருவங்களைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய தெளிவும் துணிவும் இல்லாதவர்கள் வாழ்வில் முன்னேறுவது என்பது முயல் கொம்பே.

ஒன்றிற்கே முதன்மை

ஒருவர் தொழில் துறையில் முன்னேற விரும்புகிறார் எடுத்துக்காட்டாக மோட்டார் பழுது பார்க்கும் தொழில் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொழிலும் அவர் தனது நோக்கத்தை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஒன்று பணம் சேர்ப்பது அதனால் பெரிய தொழில் அதிபர் ஆவது. மற்றொன்று தொழில் துறையில் புதுமை கண்டு நல்ல பெயர் எடுப்பது. இதில் இவரது நோக்கம் என்ன? எதற்கு முதலிடம் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். நல்ல பெயர்தான் முக்கியம் என்றால் வருமானத்திற்கு இரண்டாவது இடம்தான். ஒரு சேர இரண்டும் வேண்டுமென்றால் தொழில் மந்தமாகத்தான் இருக்கும். இதைத் தெளிவு படுத்திக்கொண்டால் தோல்வியைக் குறைத்துக் கொள்ளலாம்.

நல்லவரா வல்லவரா?

இதேபோல் படித்த இளைஞர் அரசு நிறுவனத்தில் அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்றால் பெயர்தான் புகழ்தான் அவருக்கு முதன்மையான நோக்கம் என்றால் அவர் முதலில் விதிப்படி நடந்து மற்றவைகளை அடுத்த நிலையில் எதிர்பார்த்தால் புகழும் கிடைக்கும். வெற்றியும் கிடைக்கும். திறமையானவர் நேர்மையானவர் என்று பெயர் வாங்க வேண்டும். அதுதான் அவரது முதன்மையான நோக்கம் என்றால் எதிர்ப்புகளைப் பற்றியும் பழிப்புரைகளைப் பற்றியும் கவலைப்படாமல் நேர்மைக்கு முதலிடம் கொடுத்துச் செயல்படவேண்டும்.

இதேபோல் ஒவ்வொருவரும் அவரவர்கள் தேர்ந்த துறையில் நீங்கள் நல்லவராக விளங்க விரும்புகிறீர்களா? அல்லது வல்லவராக விளங்க விரும்புகிறீர்களா? ஒன்றில் 60% சதவீதமும் மற்றொன்றில் 40% சதவீதமும் தான் என்ற அடிப்படையில் முதன்மை கொடுத்துச் செயல்பட்டால் யாரையும் குறைகூற வேண்டியதில்லை. வளர்ந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் இந்தத்தெளிவை ஏற்படுத்திக்கொண்டே செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு குறிப்பு

இப்படி வெற்றி பெற்றவர்கள் சிலரை ஏன் பலரைப் பார்த்தால் தொடக்கத்தில் 40 ஆண்டுகள் வரை பொருளுக்கு முதன்மைக் கொடுத்துச் சேர்ந்த பிறகு 50, 55 வயதுக்கு மேல் புகழ் நாட்டத்தில் ஈடுபட்டு, தான தர்மங்கள், பொதுக்காரியங்கள் என்று ஈடுபடுவரையும் நாம் கண்டு இருக்கிறோம்.

ஆனால் இளைஞர்கள் தத்தம் பொருளாதார வளர்ச்சியில் 60 விழுக்காடும் பெயர் வளர்ச்சியில் 40 விழுக்காட்டு முறையினை தொண்டுக்குக் கூடுதலாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதுவே வெற்றிகரமான வாழ்க்கையாக அமையும். வசதியுள்ளவர்கள் தொடக்கத்திலிருந்தே தங்களுக்கு 40 விழுக்காடும் பெயருக்கும் புகழுக்கும் பிறருக்கும் 60 விழுக்காடும் செயல்படலாம்.

முன்னோடிகள்

இத்தகைய தெளிவுக்குப் பிறகு அவரவருக்குரிய அந்தந்த தொழில் தலைமை பெற்றவர்களின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மிக உயர்ந்தவர்கள் என்று இப்போது தோற்றமளிக்கின்றவர்கள் நடந்துவந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தால் அவர்கள் மேற்கொண்ட உழைப்பு, கடின முயற்சி புலனாகும். உலக அறிஞர் என்று போற்றப்படும் பெர்னாட்ஷா பல ஆண்டுகள் எழுதிக் குவித்த எழுத்துக்களை எந்தப் பத்திரிக்கையும் வெளியிடவில்லை. மாறாக திரும்பித் திரும்பியே வந்தன. தொழில் துறையில் முன்னேறிய பலர் இளமையில் உண்ண உணவின்றி நடைப்பாதையில் படுத்துறங்கிய வரலாறுகள் ஏராளம்.

அதனால் அவர்கள் வாழ்வில் அவர்கள் அனுபவித்த இன்னல்கள், தடைகள் ஏமாற்றங்கள், தோல்விகள் இத்தனைக்கும் இடையில் அவர்கள் மனம் தளராமல் செயலபட்ட விதம், கடின உழைப்பு, ஆகியவற்றையும் அறிந்து எதற்கும் கலங்காத மனம் கொண்டு செயல்பட்டால் நீங்கள் யாராக விரும்புகிறீர்களோ அவர்களாக ஆகலாம். அப்படி ஆக முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை நம் உள்மனத்திலிருந்து எழுந்தால் போதும் அவர்களாகவே ஆகலாம். காலத்தை வீணாக்காமல் நமது தொழிலில் கருத்தைச் செலுத்துவதே செய்ய வேண்டிய செயலாகும்.

தொடரும்…..

இல.செ. க. வின் இளைய தலைமுறைக்கு என்ற நூலிலிருந்து


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1996

உங்கள் நெஞ்சம்
தொழில் வளம் பெருக வேண்டுமானால்…
அறிவும் உணர்ச்சியும்
உற்சாகமுடன் வாழ வேண்டும்
செயல் வீரர்கள்!
எண்ணங்களும் வாழ்க்கையும்
கவிதை
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?
எண்ணம் (உள்ளத்தோடு உள்ளம்)
இல.செ.க. வின் சிந்தனைகள்