Home » Cover Story » மனச்சுமைகளை இறக்கி வைப்போம்

 
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்


இராமநாதன் கோ
Author:

மனச்சுமைகள் அதிகமாகி மன உளைச்சல் அடைந்தவர்கள், அதைக்குறைக்க நிறைய வழிகள் உண்டு. அவரவருக்கேற்ப ஆராய்ந்து தேர்ந்து, செயல்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம்.

அதற்கு முன் சற்று முன்னோக்கி செயல்படுவோம். நம் முன் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அவைகள் தீர்ந்துவிட்டால் எந்த வகையான மனநிலை உண்டாகுமோ, அந்த மனநிலை, சூழ்நிலையை கற்பனையில் உருவாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு தொழிலில் நட்ட மேற்பட்டு, மனஉளைச்சல் அடைந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த தொழில் நீங்கள் எதிர்பார்த்த அளவு வளர்ந்து, பெரும் லாபத்தில் செயல்பட்டால் எப்படி இருப்பீர்கள் என்பதை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

“தொழிலில் நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். உங்களிடம் சிறந்த பணியாளர்கள் உற்சாகத்துடன் வேலை செய்கிறார்கள். உங்கள் வருமானம் பன்மடங்கு பெருகி, கடனெல்லாம் தீர்ந்து, சேமிப்பில் கணிசமான அளவு பணம் இருக்கிறது.

மேலும் தொழிலை மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்”.

மேற்கூறிய அனைத்தும் நடக்கும்போது உங்கள் நடை, உடை, சொல், செயல் எப்படி இருக்குமோ, அதை இப்போதே இருப்பது போல எண்ணி செயல்பட்டால், நிச்சயம் அப்படியே நிறைவேறும். இது மனோதத்துவ முறையில் நிரூபிக்கப்பட்ட முறைகளில் ஒன்று.

இதில் முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், இதைச் செய்யும் போது முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

அதனால் மன உளைச்சல் தீர்ந்துவிட்ட மனோநிலையை எல்லா நேரத்திலும் மனதில் நிரப்புங்கள். மனச்சுமைகளை நீக்கிவிட்டதன் முதல் அறிகுறியும் முக்கிய அம்சமும் அதுதான்.

வழிமுறைகள்

மன உளைச்சல் அடைந்துவிட்டால்,

1. கவனத்தை திசை திருப்பும் வழிகளை கையாள வேண்டும். இதைத் தனி அத்தியாத்தில் பார்த்தோம்.

2. மனதை சுத்தமாக்குதல்

நடந்துவிட்ட கெட்ட சம்பவங்களை நீக்கி, பசுமையான நினைவுகளை மனதில் நிறுத்தி, நம்பிக்கையான எண்ணங்களை மேலும் புகுத்த வேண்டும்.

3. மனதை பக்குவப்படுத்தும் பயிற்சிகள்

  • யோகா
  • தியானம்
  • இறைவழிபாடு
  • மனநிலை, உடல்நிலை பாதிக்கப்பட்டவராயின், உடனடியாக மருத்துவ ஆலோசனை மூலம் சிகிச்சை பெறுதல்

மனதை சுத்தமாக்குதல்

முதலாவதாக கெட்ட நினைவுகளை முழுதும் அகற்றுவோம். உதாரணத்திற்கு, சாப்பிடும் அரிசியை உருவாக்குபவர்கள், நெற்பயிரை செழுமையாக வளரச் செய்ய, அவ்வப்போது நெற்பயிருடன் வளரும் தேவையில்லாத செடிகளை களைந்து எடுப்பார்கள். அப்போதுதான் சுத்தமான நெல்லை எதிர்பார்த்த அளவு அறுவடை செய்ய முடியும். அதேபோல் நம் வாழ்க்கையிலும் களையெடுக்க வேண்டிய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்திருக்கின்றன.

பள்ளியில் தவறு செய்ததற்காக பலர் முன்னிலையில் ஆசிரியர் திட்டியபோது ஏற்பட்ட கூச்சம், குற்றவுணர்வு, உறவினருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், எதிர் வீட்டாருடன் சண்டைபோடும் போது உணர்ச்சி பெருக்கில் அவர் கொட்டிய மனதை குத்தும் சொற்கள், கடன்களால் ஏற்பட்ட அவமானங்கள், நமக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள், நாம் தவறாக பேசியவைகள், செய்த செயல்கள் இப்படி எத்தனையோ ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கத்தான் செய்யும்.

இவைகள் எதுவாயினும் சரி, உடனே மனதிலிருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லையேல் இவைகள் ஒவ்வொன்றாக திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து மனம் உருகி அழுவோம்; அல்லது நமக்கு எதிராக செயல்பட்டவர்களை பழிவாங்க நினைத்து பொறாமையால் மனம் கொதிப்போம். அல்லது இப்படிப்பட்ட வாழ்க்கை நமக்கு அமைந்ததே என்ற உணர்வால் கூனிக் குறுகி நடப்போம்.

இரண்டாவதாக,

இதுபோன்ற கெட்ட நினைவுகளை நீக்கியதும் நமது மனதிற்குள் பசுமையான நினைவுகளை நிறைய புகுத்துவோம். உதாரணத்திற்கு, முதல் மதிப்பெண் பெற்றதும் பள்ளியில் எல்லா மாணவர் முன்னிலையில் தலைமையாசிரியர் தட்டிக்கொடுத்து பரிசளித்தது, உதவி செய்ததை பாராட்டி நண்பர்கள், உறவினர்கள் நமக்கு பாராட்டி நன்றி கூறிய சம்பவங்கள், சிக்கலான நேரங்களில் துணிச்சலாக முடிவெடுத்து வெற்றி பெற்றவைகள், விளையாட்டு போட்டியில் கடைசி நேரத்தில் கோல் (Goal) போட்டு வெற்றி பெற்றதும் அந்த அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது, இதுபோன்று நடந்த எத்தனையோ நல்ல சம்பவங்களை நினைவுபடுத்தி, சிறுதாளில் எழுதி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து, நினைவு கொணர்ந்தால் மனச்சுமைகள் குறைவதை உணரலாம். உற்சாகமும், பிடிப்பும் அதிகமாகும். நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உருவாகும்.

இதற்கு மேலும் ஒருபடி, நம்முடைய நல்ல நிலைக்கு நன்றி சொல்லுதல் (Count Your Blessings) ஆகும்.

மூன்றாவதாக,

நம் வாழ்க்கையை நம்பிக்கையான பாதையில் அமைக்கும் வண்ணம் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

நாம் செய்யும் தொழிலில் நமக்குள்ள உயர்ந்த வாய்ப்புக்கள், வருமானத்தில் கூடுதல் மேலும் முன்னேற வழிகள்.

எதிர்காலத்தில் நாம் வாழ விரும்பும் வசதியான வீடு, குடும்பத்திலுள்ளவர்களின் முன்னேற்றம், நமது நண்பர்கள் கூட்டம், சமுதாய அந்தஸ்து போன்ற ஒவ்வொன்றிலும் எந்தெந்த வகையில் உயர்வடைய வழிகள் உள்ளதோ அவைகளையெல்லாம் எழுதி இப்போதே அடைவதற்கான வழியை சிந்தித்து செயல்பட வேண்டும்.

அப்போது வாழ்க்கையில் உற்சாகம் மேலும் கூடும். நமது வாழ்க்கையில் சாதித்தவைகளைவிட இப்போது இருக்கும் நிலையை விட இனி உயர்வோம் என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கை நமக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆற்றலுடையது.

நாடு வளர்ச்சியடைய ஐந்தாண்டு திட்டங்களை தீட்டுகிறது. நிறுவனங்கள் மேலும் வளர அடுத்த பத்தாண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்குகின்றன. அதேபோல தனிமனிதனும் அடுத்த பத்தாண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்கி செயல்பட வேண்டும். அத்துடன் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை மனதில் உருவாக்க வேண்டும். இதுவரை பல சோதனைகளை சந்தித்திருந்தாலும் ‘இனிமேல்’ அதை மாற்ற முடியும்.

‘முடியாதது’ என்று சோர்வடைந்திருந்த செயல்கள் இருந்தாலும் ‘முடியும்’ என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.

எதிர்பார்த்து செயல்பட்ட செயல்களில் ஏமாற்றங்கள் உண்டாயிருந்தாலும் ‘அடுத்து’ வருவதில் திறமையுடன் செயல்படுவோம் என நம்ப வேண்டும்.

இந்த ‘இனிமேல்’ ‘அடுத்து’ ‘முடியும்’ என்ற சொற்களை நம்முடைய சொல், செயல் இவைகளில் எங்கெல்லாம் புகுத்த முடியுமோ, அங்கெல்லாம் நுழைத்து, நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

யோகப் பயிற்சி

மனதை தளர்வு நிலைக்கு கொண்டு செல்ல சிறந்த வழி இது (Relaxation). இதில் குறிப்பாக,

  • பத்மாசனம்
  • சாவாசனம்
  • பிராணயாமம்

இவை மூன்றும் மன உளைச்சலுள்ளவர்களுக்கு முறைப்படி செய்தால் சிறந்த சிகிச்சை முறையாகும்.

மேலும், இரத்த கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், வயிற்றுப்புண், இடுப்பு வலி, தலைவலி, தூக்கமின்மை போன்ற பல நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது. நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அளவை சீராக்குகிறது.

மனதை ஒரு முகப்படுத்துதல்

தனிமையில் அமர்ந்து கண்களை லேசாக மூடி, மனக்கண் மூலம் ஒரே பொருளை கவனித்தலே இதன் அடிப்படைத் தத்துவம்.

இதன் மூலம் கண்களில் பார்ப்பது, காதால் கேட்பது, நாக்கில் ருசிப்பது, தொடு உணர்ச்சி, மூக்கில் நுகர்வது போன்ற ஐந்து வகை உணர்வுகளையும் கட்டுப்படுத்துகிறோம். அப்போது மனம் எல்லா விருப்பு வெறுப்புகளையும் தாண்டி ஒரே நிலையில் அமைதியாகிறது.

இதை அதிக நேரம் செய்யும் அளவிற்கு அதிக பலன்களை எதிர்பார்க்கலாம். தியானம் போன்ற பயிற்சிகளின் மூலமும் இதுபோன்ற பலன்களைக் காணலாம்.

இறைவழிபாடு

நம்முடைய செயல்களுக்கு அப்பாற்பட்டு பிரபஞ்ச சக்தி – இயற்கை சக்தி இயங்குகிறது.

இதில் நமக்கு முழுமையான நம்பிக்கை உருவாகும்போது, நியாயமான எல்லா செயல்களுக்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று துணை இருக்கிறது என்ற மன அமைதி உருவாகும். மனச்சுமைகள் குறையும். ஆகவே தினமும் வீட்டிலோ அல்லது ஒரு கோவிலிலோ பிராத்தனை செய்தல் மனச்சுமைகளைக் குறைக்கும் வழிகளில் ஒன்று.

இதுநாள் வரை நாம் அனுபவித்த சிரமங்கள் சோதனைகளை நினைத்தே வாழ்க்கையை தொடர்ந்துவிடக்கூடாது.

இந்த நிமிடம்முதல் மன அமைதியான வாழ்க்கையை தொடர வேண்டும். சுமைகள் நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையைக் காணமுடியும்.

 

1 Comment

Post a Comment