Home » Cover Story » சிக்கனமும் சேமிப்பும்

 
சிக்கனமும் சேமிப்பும்


admin
Author:

ஒரு சிற்றுண்டிச் சாலையில் நான்கு பேரோடு தேநீர் அருந்தச் சென்றாலும் கையில் பத்து ரூபாய் இருந்தால் தான் நாம் முன்னின்று தேவையானதைக் கொண்டுவரச் சொல்லலாம். அருகில் உள்ள ஓர் ஊருக்குச் செல்லவ வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய் இருந்தால் தான் தைரியமாகச சென்று வரலாம். நான்கு பேரோடு இருக்கும்போது கையில் காசு இல்லையானால் நல்லதைக்கூட, செய்யவேண்டிய சிறு செலவைக்கூடச் செய்ய முடியாமல் பின்தங்கியே நிற்க வேண்டிவரும். நமக்குள்ளேயே ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை தோன்றி நான்கு பேருக்குமிடையே கலகலப்பாகப் பேசக்கூட முடியாது. அன்றாட நடைமுறை தொடங்கி வாழ்க்கை முழுதும் பொருளாதாரம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர்தல் வேண்டும்.

புகழா? பொருளா?

இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பலர், பொருளின் இன்றியமையாமையை உணராமல் இளமைக் காலத்தில் பொருளைச் சேர்க்காமல் நிற்பதோடு, புகழுக்கா இருக்கின்ற பொருளையும் செலவு செய்துவிட்டு துன்புறுவோர் பலர். பின்னர் 50க்கு மேல் போதிய பொருளாதாரம் இன்மையால் தனது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உரிய காலத்தில் திருமணம் செய்ய முடியாமல், காலந்தாழ்த்தியமையால் பிள்ளைகளுடைய வாழ்க்கையையும் வீணடித்து விடுவதை நாம் பார்த்து இருக்கின்றோம். இளமைக் காலத்தில் பொருள் தேடாமல் முதுமைக் காலத்தில் வருந்துவதில் பயனில்லை. சில வயதானவர்களைப் பாருங்கள். கிழிந்த வேட்டியோடு தெருவில் நடந்து போவார்கள். இவர்கள் வாழ்க்கையில் எதைச் சாதித்து இருப்பார்கள் என்று அடிக்கடி எண்ணிப் பார்ப்பது உண்டு. நம்மைப் பார்த்தும் பிறர் அப்படி நினைக்கக்கூடாது அல்லவா? இவ்வாறு தொடக்கத்தில் சிந்திக்காததனாலேயே பலருடைய வாழ்க்கை தோல்வியாக முடிந்து விடுகின்றது.

சிக்கனம்

முன்னேறத் துடிப்பவர்கள் தங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்து கொள்ள முடியவில்லையானால் அதுவே தங்கள் இலட்சியத்துக்குத் தடையாகிவிடும் என்பதை உணர்ந்து இரண்டு நடைமுறைகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ஒன்று சிக்கனம். இதுதான் நாம் முதலில் கையாள வேண்டிய நடைமுறை. இது நம்மைக் கட்டுப்படுத்துவதால் மட்டும் செய்யக்கூடியது. உழைப்பின்றிச் செய்ய முடிவது. நம்மால் உடனே முடிவது. நம்மால் உடனே நிறைவேற்றக்கூடிய ஒன்று. நாம் செய்கின்ற எந்தச் செலவும் நமக்கு அவசியமானது. தவிர்க்க முடியாதது என்று இருக்குமானால் மட்டும் செலவு செய்ய வேண்டும். வளர்ச்சி நோக்கிய செலவினங்களாகிய படிப்பிற்கு, தொழில் தொடங்குவதற்கு, நமது வாழ்க்கை முறைகளை எளிமையாக்கிக் கொள்ள கருவிகள், சாதனங்கள் வாங்குவதற்கு, செலவுகள் செய்தால் நமது நேரம் மீதியாகும். பொருளாதாரம் பெருகும் எனின் அதற்கான செலவினங்களைத் துணிந்து செய்யலாம். எந்தச் செலவினமும் ஆடம்பர நோக்குடையதாக இருத்தல் கூடாது என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொள்ள வேண்டும். ஆடம்பரம் புதிய புதிய செலவினங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். உணவு, உடை, மருத்துவம் முதலியவை வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்று செய்யப்படும் செலவினங்களாகும். இவ்வாறு இன்றியமையாத செலவினங்களை மட்டும் செய்ய இயல்பாகவே நமது வேண்டாத செலவுகள் குறையும். செலவைக் குறைப்பதே ஒருவகையில் சேமிப்பு தான். முதலில் இந்த நடைமுறையினை நாம் உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

சேமிக்கும் பழக்கம்

இரண்டாவது சேமிப்பு. சேமிக்கும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. நமது பண்டைய நடைமுறைப்படி 5ல் ஒரு பங்கு சேமிப்பு இருக்க வேண்டும் என்பார்கள். ஆயிரம் ரூபாய் வருமானம் என்றால் இருநூறு ரூபாய் சேமிப்பு. இன்றைய வாழ்க்கை முறையில் 10ல் ஒரு பங்கேனும் 100 ரூபாயாவது கட்டாயம் சேமிக்க வேண்டும். சேமிப்பு என்பது நமக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் ஒரு செயலாகும். கடன் வாங்காமல் இருப்பது கவலைகளைக் குறைக்கும். தன்மானத்தை வளர்க்கும். சேமிக்கத் தொடங்கும் ஒருவர் முதலில் கடன் வாங்குவதைத் தவிர்ப்பார். இருப்பதைக் கொண்டே தன் காரியத்தைச் செய்து முடித்துவிடப் பழகிக்கொள்வார். தொழில்முறையில் மிகப்பெரிய அளவில் கடன்வாங்கி முதலீடு செய்வது என்பது வேறு. அது பெருமைக்குரிய, துணிச்சல் மிக்க செயலாக இன்று கருதப்படுகிறது. நாம் சொல்வது அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கே கடன் வாங்கினால், அத்தகைய ஒரு வாழ்க்கையை நாம் திட்டமின்றி நடத்திக் கொண்டிருந்தால் நிச்சயமாக அது கேவலமே. தற்காலிகமாக அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படினும் விரைவில் அதை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்கியேனும் இந்தச் செலவு செய்வது நியாயம் தான் என்று நம் மனசாட்சி குரல் கொடுக்குமானால், அந்தச் செலவினங்களைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். மற்றபடி தவிர்த்தே விடவேண்டும். கடன் வாங்குவதால் நம்முடைய எழுச்சி குறையும். பின் நம் மீதே நமக்கு நம்பிக்கை குறைந்துவிடும். நம்பிக்கை குறைந்தால் நமது நெடுந்தூர நடைப்பயணம் என்றும் முடியாது. இதை முன்னேறத் துடிப்பவர்கள் ஓர் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.

தனியார் கடன்களைத் தவிர்க்க

கடன் வாங்கியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்படுமானால், தனியார் கடன்களைத் தவிர்த்து, அரசாங்கம், பொது நிறுவனம், வங்கிகள், போன்றவற்றில் கடன்களைப் பெறுவதையே மேற்கொள்ள வேண்டும். கடன் பெறுவதில் சிரமம் இருப்பினும், கடனைத் திரும்பப் பெறுவதில் சில அடிப்படை விதிமுறைகள் இருக்கின்றன. நிறுவனம்தான் நமக்குக் கடன் கொடுத்திருக்கிறதே ஒழிய தனிநபர் அல்ல. ஒருவர் மாறி இன்னொருவர் வருவார். அதனால் பெரிதும் நமக்கு மனச்சுமை நேராது. ஆனால் தனியாரிடம் என்றால் அவர்களோடு உறவுமுறை சரியாக இருக்கும்வரை சிக்கல்கள் எழாது. உறவுமுறையில் குறைநேர்ந்தால் சிக்கல்கள் பெரிதாகி, வாழ்க்கையில் நாம்கொண்ட குறிக்கோளைவிட்டு விட்டு யார் பெரியவர் என்று காட்டுவதிலேயே நம் திறமைகள் வீணடிக்கப்பட்டுவிடும். பலருடைய வாழ்க்கை இவ்வாறு திசைமாறிப் போனதை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படித் தனியார் கடன்வாங்கி, தகராறில் முடிந்ததை எண்ணிப்பார்த்து விழிப்புணர்ச்சி பெறுங்கள்.

நல்ல செயலுக்கும் நாலு காசு தேவை

இன்றைய உலகில் காசு இல்லாமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் கூடச் செய்ய இயலாது. நாம் நமது கொள்கைகளை நாலுபேர் மத்தியில் தைரியமாக எடுத்து வைக்கவும், ஏன் நாம் நிமிர்ந்து நடக்கவும் கூட நமக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது பொருளாதாரமே. பொருள் சேர்ப்பதுதான் குறிக்கோள் என்று இருப்பவர்கள் அதற்கான முழுநடைமுறைகளில் ஈடுபடலாம். ஆனால் எல்லாருடைய குறிக்கோளும் அதுவல்ல. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு பொருள் சேர்த்துக் கொள்வது உங்கள் குறிக்கோளை அடைய உறுதுணையாக இருக்கும்.

காலம் தாழ்த்தாதீர்கள். சிக்கனமாக இருங்கள். சேமிக்கப் பழகுங்கள். குறிக்கோளை அடையும் பயணத்தில் சிக்கனமும் சேமிப்பும் இரண்டும் இரு தண்டவாளங்கள்.

நன்றி: ‘முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்’ என்ற நூலிலிருந்து.

 

1 Comment

  1. c.mariselvi says:

    intha msg enakku mikavum painullathaka irunthathu thak u

Post a Comment


 

 


October 1993

அக்டோபர் 10
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்
ஆசிரியரின் டைரி குறிப்பு
நாமே புத்திசாலிகள்
சூப்பர் நினைவாற்றலுக்கு
சிக்கனமும் சேமிப்பும்