Home » Cover Story » சிந்தனையைத் தெளிவாக்கு

 
சிந்தனையைத் தெளிவாக்கு


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

மக்களை மக்களிலிருந்து வேறுபடுத்துவது, மக்களிடம் இல்லாத மக்களிடம் உள்ள ஆறாவது அறிவு. இந்த அறிவு பகுத்தறிவு எனப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவர்களில் இதனைச் சரிவரப் பயன்படுத்துபவர்கள் அறிவு உடையவர்களாகவும், இதனைப் பயன்படுத்தாதவர்கள் அறிவு இல்லாதவராகவும் கருதப்படுகின்றனர். மனிதன் என்றால் மனத்தை உடையவன். மனம் இருப்பதால் நினைக்கும் ஆற்றல் பெற்றன். மனத்தின்கண் எழுகின்ற செயலின் அடிப்படை நினைவு, எண்ணம் ஆகியவற்றின் வாயிலாகத் தோன்றுகிறது. எண்ணமும், நினைவும், சொல்லும் இவற்றின் விளைவாகச் செயலும் ஏற்படுவதற்கு மூலகாரணமாக அமைவது சிந்தனை.

சிந்தனை செய்பவர்கள் வந்திக்கப் பெறுவார்கள். சிந்தனை செய்யாதவர்கள் நிந்திக்கப் பெறுவார்கள். இவ்வுண்மையை நமது சான்றோர்கள் பல இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வாயிலாக மிக அழகாகவும் தெள்ளத் தெளிவுடனும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அறிவியல் துறை, அரசியல் துறை, ஆன்மீகத் துறை, கலைத்துறை, இலக்கியத் துறை ஆகிய எத்துறையினை எடுத்துக்கொண்டாலும், அத்துறைகளில் சிறந்த விற்பன்னர்களாகவும், நிபுணர்களாகவும் உலகில் தலைசிறந்து விளங்குபவர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கூர்ந்து நோக்குங்கால் ஓர் உண்மை புலப்படும். அஃதாவது, அவர்தம் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. அவர்களுடைய சிந்தனா சக்தியும், சிந்தனையின் வலிமையும் தான் என்பது.

எடுத்துக்காட்டாக, விஞ்ஞானி நியூட்டனை எடுத்துக்கொள்வோம். அவருக்கு முன் வந்தவர்கள், அவருடன் வாழ்ந்தவர்கள் அனைவரும் மரத்திலிருந்த பழம் தரையில் விழுவதையும், மேலே எறியப்பட்ட கல் போன்ற பொருள்கள் மீண்டும் தரைக்கு வருவதையும் கண்கூடாகக் கண்டு தானிருக்கிறார்கள். இருப்பினும் எப்படி நியூட்டன் மட்டும் ‘புவி ஈர்ப்புச் சக்தி’ என்று ஒன்று இருப்பதாகக் கண்டுபிடித்தார் என்பதை நாம் நினைத்த்துப் பார்ப்பதில்லை; ஆராய்வதில்லை; அவர் ஒருவர் தான் அதில் தீவிரச் சிந்தனையைச் செலுத்தினார். மேலே எறிந்த கல் ஏன் கீழே வருகிறது. எப்படி வருகிறது, எதனால் வருகிறது, ஏன் அது மேலேயே ஆகாயத்தில் அந்தரத்தில் நிற்பதில்லை என்ற வினாக்களை அவரே தொடுத்து, அவற்றிற்கான விடைகளைக் காண்பதில் தீவிரமாக ஈடுபட்டுச் சிந்தித்ததன் விளைவாகத்தான், அவரால் உலகிற்கு ஓர் அறிவியல் தத்துவத்தைத் தர முடிந்தது.

இதைப்போலவே, தான் உளநூல் வல்லுநர்களும், ஆன்மீகத் துறையில் ஈடுபட்டுள்ள பெரியோர்களும், ஞானிகளும் சிந்தனையில் சிறந்து விளங்கினர். இவ்வுலகம் யாரால் உண்டாக்கப்பட்டது? நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கு போகப் போகிறோம்? நான் என்பது யார்? கடவுள் என்பது என்ன? அவர் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் எங்கு, எவ்வாறு உள்ளார்? நாம் ஏன் பிறந்தோம்? நம்மால் இந்த உலகில் சாதிக்கப்படுவது யாது? நாம் நினைத்தால் நினைத்த இடத்தில் பிறக்க இயலுமா? பிறவி உண்டா? இல்லையா? இதுபோன்ற பல கேள்விக்கணைகளைத் தங்களுக்குள்ளேயே தொடுத்து, அதற்கான விடைகளைக் காண்பதற்காக அளவிடற்கரிய முயற்சியாக சிந்தனையை மேற்கொண்டிருந்தார்கள். அதன் விளைவாகத்தான் பல இலக்கியங்கள், ஆன்மீகத்துறையின் பாற்பட்ட பற்பல நூல்கள் ஆகியவை தோன்றின. தோற்றுவிக்கப்பட்டன. அவை யாவுமே, நம் மனத்தினை நாம் எவ்வாறு ஒருமைப்படுத்துவது என்பதைப்பற்றி மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்தியம்புகின்றன.

சிந்தனை ஒரு மனப்பயிற்சி

சிந்தனையை மேற்கொள்வதென்பது யாவர்க்கும் இயலும். இது ஒரு வகை மனப்பயிற்சியேயாகும். இன்று நாம் நூற்றாண்டு விழாக் கொண்டாடிப் பெருமைப்படுத்தும் பெரியாரவர்கள், சாக்ரடீஸிற்கும் உயர்ந்த, இதுவரை உலகம் கண்டிராத முறையில் தனிமனிதனாக நின்று ஒரு தலைசிறந்த பகுத்தறிவாளராகவும், சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார் என்றால், அதற்கு அடிப்படைக்காரணம் அவருடைய சிறந்த சிந்தனையே. அவருடைய கொள்கைகள் அனைத்தும் அவருடைய வளமான, வற்றாத ஆழமான சிந்தனை ஊற்றுக்களிலிருந்து வந்த அருவிகள் சிந்தனைப் பெட்டகத்திலிருந்து வந்த மணிகள்: சிந்தனை என்ற விளைநிலத்திலிருந்து வந்த சிறந்த பொறுக்கு வித்துக்கள்.

ஒன்று, இரண்டு…

எளியமுறையில் நாம் நமது சிந்தனைûய்த துவக்கினால், பிறகு நாளடைவில் அது தானே வலுப்பெற்று நன்மை பயக்கும். உதாரணமாக, நாம் சாதாரணமாக ஒன்று, இரண்டு என்று பத்து அல்லது பதினொன்றுவரை எண்ணுகிறோம் என்றால், அப்பொழுது ஒன்று என்று நினைக்கும்பொழுது சில சம்பந்தப்பட்ட எண்ணங்கள், நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்கலாம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’. ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய். நன்றும் இன்றே செய். இன்றும் இன்னே செய். இதுபோன்ற ஒன்றுடன் தொடர்புடைய பலவற்றைச் சிந்தித்துத் தெளிவு பெற வேண்டும். இரண்டு என்னும்பொழுது, ‘மணமக்கள் இருவர், இரட்டைக் குழந்தைகள் இராமசாமி முதலியார், இலட்சுமணசாமி முதலியார், அவர்களுடைய சிறப்புகள், இரண்டும் ஒன்றாக இணையும் வானும் நிலவும், மலரும் மணமும், நகமும் சதையும் போன்ற இன்னும் பிற. இறைவன் ஒன்றாக ஆணும் பெண்ணும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரனாக, உமையொருபாகனாக உள்ளான். ஓருருவத்தில் இரு பாலாக உள்ளான் போன்றவை நினைவில் நிழலாடுகின்றன.

மூன்று என்னும்பொழுது முக்கனி, முத்தமிழ், மூவர் தேவாரம், முப்பால், மூன்று முடிச்சு (திருமணம்) போன்றவை நினைவிற்கு வருகின்றன. நான்கு என்னும்பொழுது நாலடியார், நான்முகன் (பிரமன்), நான்கு வேதங்களாகிய ரிக், யஜுர், சாம, அதர்வண, நான்மறைகள் இது போன்றவை நினைவுக்கு வருகின்றன.

ஐந்தென்னும்பொழுது பஞ்ச பாண்டவர்கள், ஐங்கரனாகிய விநாயகக் கடவுள், ஐந்தெழுத்தாகிய பஞ்சாட்சலம், ஐந்து நதிகளாகிய பஞ்ச நதிகள், பஞ்ச சீலக் கொள்கைகள், ஐம்பெருங்காப்பியங்கள் இன்ன பிற.

ஆறு என்று எண்ணும் பொழுது ஆறுவகைச் சமயங்கள், ஆறுமுகக் கடவுள், ஆறுபடை வீடுகள், அறுசுவைகள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கிறோம். ஏழு கடல்கள், வானவில்லில் தோன்றும் ஏழு வர்ணங்கள், எழுநிலை மாடங்கள் போன்றவற்றை நினைவிற்குக் கொண்டு வரலாம். எட்டு என்பது எண் திசைகளை அதாவது எட்டு திசைகளைக் குறிக்கின்றது. எட்டாமிடத்துச் சனி, ஒரு ஆகிவராத எண்ணாகக் கருதப்படுகிறது. இருப்பினும் எட்டு என்றவுடன் கண்ணனின் பிறப்பு நினைவிற்கு வருகிறது. அவன் எட்டாவது குழந்தையாகப் பிறந்தானல்லவா?

ஒன்பது, நவக்கிரகங்களை, நவதானியங்களை, நவரசங்களையெல்லாம் குறிக்கின்றது. பத்து, ஆண்டவனின் பத்து அவதாரங்கள், பத்துத் தலை இராவணன், பதிற்றுப்பத்து, ஆகியவற்றையும், பதினொன்று திருமறைகள் பதினொன்றையும் குறிப்பாக உணர்த்துகின்றன.

எனவே மேற்கூறியவாறு ஏதேனும் ஒரு பொருளை நினைத்து, அதன் தொடர்பாக உள்ள பலவற்றையும் எண்ணித் தெளிவு பெறுதல், நினைவாற்றலைப் பெருக்குவதற்கும், மனத்தில் தெளிவும், திண்மையும் பெறுவதற்கும், சிந்தனையைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கும் பெரிதும் உதவும். இம்முறையிலான மனப்பயிற்சியைக் குழந்தைகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர் அனைவரும் மேற்கொள்வதன் மூலம், சிந்தனையில் சிறப்புறுவதற்கும், அதன் மூலம் நல்ல செயலாற்றல் புரிவதற்கும் அவர்கட்கு உறுதுணை செய்யும். இதனையே ‘சிந்தையைத் தெளிவாக்கு’ எனப் பாடினார் பாரதியார்.

 

1 Comment

  1. V.Thirumalaisamy says:

    ஒன்றே செய் – ஒன்றும் நன்றே செய் நன்றும் இன்றே செய் – இன்றும் இன்னே செய் – ஐயா, மேற்கண்ட பாடல் யார் இயற்றியது? எந்த நூலில்?

Post a Comment


 

 


September 1993

தொலைபேசியில் நாம்…
சிந்தனையைத் தெளிவாக்கு
நெஞ்சோடு நெஞ்சம்
மனோபாவங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?