Home » Cover Story » சாதனையாளர்களின் மூன்று குணங்கள்

 
சாதனையாளர்களின் மூன்று குணங்கள்


இராமநாதன் கோ
Author:

சாதனையாளர்களின் 3 குணங்கள்

வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது எல்லோருடைய மனதின் தாகம் எனலாம்.

படிப்பதில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பலர், வாழ்க்கையில் சாதனையாளர்களாக முடிவதில்லை.

கடினமாக உழைக்கும் பலர் பெரியதாக எதையும் சாதிக்காமல் அப்படியே வாழ்கிறார்கள்.

பணவசதி படைத்தவர்களில் பலரும் சாதனைகளில் பின்தங்கி விடுகிறார்கள்.

அப்படியாயின், சாதனையாளர் ஆவதற்குத் தேவையான மூலக்காரணங்களைப்பற்றிய தெளிவு தேவை.

பொதுவாக, சாதனையாளராவதற்கு, மூலமாக விளங்குவது:

1. எண்ணங்கள்
2. சொற்கள்
3. செயல்கள்

இம்மூன்றையும் சரிவர செயலாக்கும்போது சாதனையாளர் உருவாகிறார்.

எண்ணங்கள்

எண்ணங்களை உருவாக்குவது மனமே. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகை மனங்கள் உண்டு. ஒன்று வெளிமனம் (Conscious mind); மற்றொன்று உள்மனம் அல்லது ஆழ்மனம் (Subconscious mind).

பிறரிடம் உரையாடும்போது, வெளிமனம் தான் செயல்படுகிறது.

நம்முடைய சொற்கள், செயல்கள் மற்றும் தோற்றம் எல்லாம் உள் மனத்தின் பிரதிபலிப்பு எனலாம். நம் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும், அதனால் உண்டான பிரதிகிரியை (Reaction)களும், பதிவேடுகளாக உள்மனதில் அமைகின்றன. அவைகளுக்கேற்ப நம் எண்ணங்கள் உருவாகின்றன.

மனத்தின் சக்தி மிக அபூர்வமானது. அதில் நம்பிக்கையான ஆக்க பூர்வ எண்ணங்களை புகுத்தி நடைமுறைப்படுத்தினால், பிரமிக்கத்தக்க பலன்களை உருவாக்கலாம். அதைவிடுத்து, எதிர்மறை எண்ணங்களர் (பயம், கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை) நிரப்பி செயல்படும்போது உண்டாகும் விளைவுகள் சாதனைகளின் தடைகளாகின்றன.

உதாரணத்திற்கு, ஒரு விபத்து நடந்தது என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியில் சென்ற கணவனுக்கு அந்த விபத்து நடந்தது போல, அடிபட்ட அவன் இரத்த வெள்ளத்தில் உயிர் ஊசலாடுவது போல, அதை பிணமாக ஆம்புலன்ஸில் கொண்டுவந்து தம் முன் வைப்பதுபோல ஒரு மனைவி எல்லா கற்பனைகளையும் கூட்டி, வெளியில் சென்ற கணவனை புதைக்குழி வரை கற்பனையில் பய உணர்வினால் பார்க்கிறாள்.

தான் காதலித்த பெண், சிறு விஷயத்திற்காக கோபித்தவுடன் காதலே அழிந்துவிட்டது போல, அதனால் தற்கொலை செய்து கொள்வது போல எதையெதையோ கற்பனை செய்கிறான். அதன் விளைவாக நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான். பிறகு, அதை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகும்போது, அதே பெண்ணிடம் குற்றவாளியாக நிற்கிறான்.

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படும்போது சாதனைகள் தடைபடுகின்றன.

அதனால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் ‘பெரிய சாதனையாளர் இப்படியெல்லாம் நினைப்பாரா?’ என்ற கேள்வியை கோட்டு அவைகளை உடனே அப்புறப்படுத்துதல் அவசியம். அதன்பின் நம்பிக்கை எண்ணங்களை புகுத்தி, சிந்தனை செய்தால், தெளிவான எண்ணங்கள் உருவாகும். சாதனையாளர்களின் முதல் வழி அதுதான்.

சொற்கள்

நாம் பேசும் சொற்கள் தான் நம் மனத்தின் வெளிப்பாடு எனலாம்.

பலர், சில சொற்களை பேசியதால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர், பேச வேண்டிய நேரத்தில் பேசாததால் பாதிக்கப்படுகிறார்கள். ஆக பேசுவதற்கு அளவுகோல் தான் என்ன?

நாம் எதை நினைக்கிறோமோ, எதை விரும்புகிறோமோ அதையெல்லாம் பேசலாம். அதுதான் சுதந்திர மனப்பான்மை அதில் முக்கியமென்னவெனில் சொற்கள் நல்லவைகளாக அமைய வேண்டும். மற்றவரின் நியாய உரிமைகளை பாதிப்பதாக இருக்கக்கூடாது. இதுதான் அதன் அளவுகோல்.

பொதுவாக மனிதர்கள், தாம் விரும்புவதையெல்லாம் சொல்பவர்கள், எல்லாரிடத்திலும் தம் கருத்தை கூறுபவர்கள், பிறருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, தன் விருப்பு வெறுப்புகளை வெளிகாட்டுபவர்கள், பிரச்சினைகளே இதில் தான் ஆரம்பமாகிறது. ஏனெனில் பிறரும் இதே மனப்பான்மையைத் தான் கொண்டிருக்கிறார்கள். அதனால் சொற்களால் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வருகிறது.

சாதனையாளர்கள் சொற்களை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

அதனால் நாம் பேசும்போது நல்ல விஷயங்களை தேர்ந்து பேச வேண்டும். உதாரணத்திற்கு ஆக்கபூர்வமான வார்த்தைகளை அடிக்கடி புகுத்த வேண்டும். இதுவரை எதை பேசியிருந்தாலும், இனிமேல் “முடியாது, இல்லை” என்று சொற்களைத் தவிர்த்து “முடியும், அடுத்து” என்ற நம்பிக்கை வார்த்தைகளை எல்லா இடங்களிலும் எல்லா நிலையிலும் பயன்படுத்த வேண்டும்.

எல்லா சூழ்நிலைகளிலும் நல்ல சொற்கள் உரையாடல்களாக அமைய பார்த்துக் கொள்ளல் அவசியம்.

செயல்கள்

எந்த மனிதராயினும், எத்தகைய திட்டமாயிருப்பினும் இறுதியில் சாதனையாளராக உருவாக்குவது அவருடைய செயல்கள் தான்.

சிலர் எல்லா விவரங்களையும் தெரிந்திருப்பார்கள். ஆனால் செயல்படுத்துவதில் திறமை குறைந்திருப்பார்கள்.

சிலர் புதிய திட்டங்களைத் தொடங்குவார்கள். தடைகள் தோன்றினால், தளர்வடைந்து அத்துடன் நின்றுவிடுவார்கள். சாலையில் பயணம் செய்யும்போது வழி அடைக்கப்பட்டிருந்தால், மாற்று வழியை தேடுகிறோம். குறிக்கோளை செயல்படுத்தும்போது, தடைகள் வரும்போது மாற்று வழிகளை ஆராய்வதுதான் விவேகம்.

இன்னும் சிலர் செயலை செய்ய தொடங்கிவிட்டு, கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு, என்ன குறிக்கோள் என்பதை மறந்து எதையெதையோ செய்து கொண்டிருப்பார்கள்.

சாதனையாளராவதென்றால், எந்த செயலை செய்யும்போதும் ஒரு முக்கிய கேள்வியை எல்லா நேரமும் கேட்டுக் கொண்டே செயல்பட வேண்டும். “இந்த செயல் நம்முடைய குறிக்கோளை அடைய உதவுமா?” என்பதுதான். ஆம் என்றால் தொடரலாம்.

செயலில் இறங்கும்போது ஒவ்வொரு படியாக செயல்படலாம். அதற்காக தாமதிக்கவோ தள்ளிப்போடவோ வேண்டியதில்லை. பெரும் அடுக்குமாடி கட்டிடங்களும் ஒவ்வொரு செங்கற்களாக கட்டப்பட்டது தான். பெரிய நிறுவனங்களும் சிறிய அளவில் தோன்றி வளர்ந்தவைகள் தான். எந்த சாதனைகளும் திடீரென முனைத்துவிடுவதில்லை.

ஆகவே, நல்லெண்ணங்கள், நல்ல சொற்கள், திறமையான செயல்கள் இவைகளே சாதனையாளர்களின் முக்கிய குணங்கள்.

டாக்டர் ஜி. ராமனாதன்

“நமக்குள் நடக்கிறது”

· இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 தடவை வீதம் ஒரு நாளுக்கு சுமார் 1 லட்சம் முறை சுருங்கி விரிகிறது. உணர்ச்சி வயப்பட்டு செயல்பட்டால் மேலும் பல்லாயிரக்கணக்கில் அதிகமாகத் துடிக்கும். சிலருக்கு 2 லட்சத்தையே தாண்டிவிடும். இவ்வளவு வேகமகா துடிப்பதால் அதிக சக்தி தேவைப்படுகிறது. இதய தசைகள் பழுதடைகின்றன.
· நிமிடத்திற்கு 18 முறை நுரையீரல் சுருங்கி விரிகிறது. ஒரு நாளுக்கு சமார் 25,000 தடவைகள் இவ்வாறு நடக்கிறது.
· நமது மூளையில் பல்லாயிர கோடிக்கணக்கில் நரம்பு அணுக்கள் உள்ளன. மிகவும் புத்திசாலியானவர்கள் கூட பத்தில் ஒரு பங்கைத்தான் உபயோகிக்கிறார்கள்.
· உடலின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ.
சிஸ்டாலிக் 120 மி.மீ (இதயம் சுருங்கும்போது)
டாஸ்டாலிக் 80 மி.மீ (இதயம் விரியும்போது)
இந்த அளவு, வயது, எடை மற்றும் ஆண், பெண், இவைகளைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.
· உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 216
· தினந்தோறும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு ஸ்பூன் உப்பைப்போட்டு வாய் கொப்பளித்துவிட்டு படுத்தால் அடிக்கடி ‘டான்சிலைடிஸ்’ வருதல், தொண்டை வலி, போன்றவைகளை பெரும்பாலும் தவிர்க்கலாம்.

உங்கள் பக்கம்

டாக்டர் இல.செ.க. அவர்கள் முன்பு அன்னபூர்ணாவில் நடத்திவந்த சொற்பொழிவுகளும், கலந்துரையாடல்களும் நடைமுறை வாழ்க்கைக்கு பெருத்த பயன்தந்தது. அதை தொடர்ந்து நடத்த முடியுமாயின் அதற்கான பொருட்செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

R. Krishnasamy
Head Master
N.G.H.G. Hr. Sec. School, Pollachi

தங்களது உதவிக்கு நன்றி, கருத்தரங்கின் பயன் தாங்கள் கூறியது போல் இருக்க வேண்டும். கூடிய விரைவில் நாங்கள் நல்லதை செய்வோம்.

தன்னம்பிக்கை புதுப்பொலிவுடன் வருவது குறித்து பெருத்த மகிழ்ச்சி. நாளைய சமுதாயத்தை நம்மால் முடிந்த மட்டும் நல்வழிப்படுத்துவோம். பேராசிரியரின் எண்ணங்கள் உண்மையாக உறுதி ஏற்போம்.

கவிஞர் ஆர். ரத்தினசாமி, M.Sc., B.Ed.
மு.ஏ.மு. அரசு மேனிலைப்பள்ளி
புளியம்பட்டி 638459
உற்சாகமூட்டும் தங்களுக்கு நன்றி!

தற்கால இளைஞர்களை இயக்குபவர்களில் பெரும்பாலோர் எல்லாம் சுயநலத்திற்காக இயக்கி தங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு அவர்களை செயலிழக்கச் செய்துவிடுகிறார்கள். அவர்களை விழிப்படைய செய்யும் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

என். சுதர்சன்
The Professional Couriers
வேதாரண்யம்-614810

தங்கள் கருத்தை மன்றங்களிலும், கட்சிகளிலும் முழுநேர ஊழியர்களாக இருக்கும் நண்பர்கள் சிந்திப்பார்களாக. அவர்களுக்கு முன் இருந்தவர்களது வாழ்க்கையை சற்று ஆராய்வார்களாக.

“மாதம் ஒரு நூல்” என்ற தலைப்பில் மு.வ.வின் நூல் 90’பிப்ரவரி இதழில் வந்தது. அத்திட்டத்தைத் தொடர்வது சிறப்பாக இருக்கும்.

– கே. சுவாமிநாதன்
3/313, காந்திபுரம்
பழனி-624615

வரும் இதழ்களில் தொடர்வோம்

விவேகானந்தரின் அறிவுரைகள்

  • “நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகி விடுவாய்”
  • “இல்லை என்று ஒரு போதும் சொல்லாதேÐ என்னால் இயலாது என்று ஒருபோதும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லாத வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ”
  • “பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக, வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றி போதிப்பாயாக”
  • “இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்”
  • “தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்”
  • “மனது அதிகமாக ஒருமுகப்படப்பட அதன் ஆற்றல் அதிகமாக ஒரே இடத்தில் செலுத்தப்படுகிறது. இதுதான் மனதில் ஆற்றலைப் பற்றிய இரகசியமாகும்”

தன்னம்பிக்கையின் உதயம்!

வையகத்தை
ஒளிமயமாக்க
வானில் சூரியனின் உதயம்!

நறுமணம்
எத்திசையிலும் கமழ
மண்ணில் மலர்களின் உதயம்Ð

இலட்சியத்தை
சாதிப்பதற்காக
பூமியில் நமது உதயம்Ð

இளைஞர்களை
செயல்படுத்துவதற்கே
தரணியில் தன்னம்பிக்கையின்
உதயம்Ð

பி.எ.ன். இலட்சுமணன்
கொங்கரை

டாக்டர் இல.செ.க. வின் பாதையில்

நண்பர்களே… “நட்புக் கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்புக்கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் நிற்கவும்” என்கிறார் சாக்ரடீஸ்.

நட்பு என்பது மனிதர்களுக்கிடையே அமையும் உறவுப்பாலம். இந்தப் பாலம் சரியானதாகவும், உறுதியானதாகவும் இருந்தால் துன்பக் கடலை கடந்துவிடலாம்Ð

‘நட்பு’ என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் என்று இருக்கக்கூடாது.

நண்பர்கள் ஒன்று சேர்ந்து நல்ல எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். ஒருவர் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்வு காணலாம். ஏன்? நான்கு நண்பர்கள் ஒன்றுகூடி ஒரு தொழிலைத் தொடங்க முற்படலாம்.

தொழிலைத் தொடங்கும் நண்பர்கள் சில கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். இது கூட்டு முயற்சி. ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது’ என்பது பழமொழி. எத்தனையோ கூட்டாளிகள் ஒற்றுமையில்லாமல் பொருள், புகழ் இழந்து அழிந்து போயிருக்கிறார்கள். நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் ஒருவர் முன் மற்றொருவர் நிற்க முடியாத அளவிற்கு வெறுத்து பிரிகிறார்கள். இந்த சிக்கலை தீர்த்துக்கொள்ள நாம் ஒரு தீர்மானம் செய்து கொள்ளலாம்.

நான்கு பேர் சேர்ந்து இத்தனை மாதங்கள் அல்லது இத்தனை ஆண்டுகள் மட்டும் கூட்டாக இருந்து தொழிலை செய்வதாக முடிவு எடுத்துக்கொள்ளலாம். பின்பு அனைவரும் உண்மையாக இருப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கடும் உழைப்போடும் மனத்தூய்மையோடும் செயல்பட்டு, தொழிலை மேற்கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலம் முடிந்துவிட்டது. ஆனாலும் ஒற்றுமை நீடிக்கிறது. தொழிலும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் மீண்டும் கூட்டாகவே செயல்படலாம்.

“தனது வளர்ச்சியை தடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலைக்குள் யாரும் தானாகவே தன்னைப்புகுத்திக் கொள்ளக்கூடாது” என்கிறார் அறிஞர் மார்ட்டன் நான்கு பேர் சேர்ந்து செயல்படும்போதுதான் நன்மை என்றிருக்கும்போது, நாம் ஏன் பிரிய வேண்டும்Ð

தூய்மையான உள்ளங்களும், கடும்பும், திட்டமிட்ட செயல்களும் சேரும்போது வாழ்க்கையில் வெற்றிÐ வெற்றிÐÐ வெற்றிÐÐÐ தான்

-கோவை பாலா

பிரச்சனையா? உங்களுக்கா?

நடைமுறையில் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பவர்கள் மற்றவர்களைவிட சற்று உயரவே இருப்பார்கள். இவர்களையும் சமயத்தில் சிக்கல்கள் சோம்ப செய்து விடுகிறது. நன்றாக சிந்தித்துப் பாருங்கள். சிக்கல்களுக்கான காரணங்கள் என்ன? சிக்கல்களை வேறுபாடு செய்து பாருங்கள். உறுதியாக அனைவருமே அனைத்துவகை சிக்கல்களையும் என்றேனும் ஒருநாள் சந்தித்திருப்போம். கீழே எழுதிப் பாருங்கள்.

1.
2.
3.

உங்களது இன்றைய சிக்கல்களையும் எழுதி வையுங்கள். அதற்கான அடிப்படைக் காரணங்கள் மூன்று. இதனை சரியாக ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சிக்கல்கள் இருக்கும். இதில் ஆசைகளால் வந்த சிக்கல்களை சேர்க்க வேண்டாம். அவைகளுக்குக் காரணம் சுயநலம். அதிக சுயநலம். இதை பொருத்தமட்டில் சுயநலத்தை விடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் விட்டாக இருக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

சிக்கலுக்கான அடிப்படை மூன்று காரணங்கள். தன் உடல் நலம் குறித்து, பொருளாதாரம் குறித்து, உறவு குறித்து ஏறக்குறைய அனைத்து சிக்கல்களும் இதனுள் அடங்கும். தங்களது சிக்கல்களை இம்மூன்று தலைப்பின் கீழ் எழுதுங்கள். சற்று தெளிவு பெற இயலும். அதன் பின் ஒவ்வொன்றாக கழிக்கத் துவங்குங்கள். முக்கியச் சிக்கல்களை தெளிவாக உணர்வீர்கள்.

உங்கள் சிக்கல்களை நீங்கள் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். உதவியை நாடாதீர். அப்படியே உதவி கிடைத்தாலும் ஒருமுறை, இருமுறை கிடைக்கக்கூடும். அதன்பின் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டியது தான். எதையும் விரைந்து ஆராய்ந்து முடிவெடுங்கள், செயல்படுங்கள். ஒன்றன் பின் ஒன்றாக களைவது உங்கள் சுமையை குறைக்கும். உற்சாகமும் ஊட்டும்.
-க.க.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1993

சாதனையாளர்களின் மூன்று குணங்கள்
பிரச்சனையா உங்களுக்கா?
டாக்டர் இல.செ.க. பாதையில்
தன்னம்பிக்கையின் உதயம்
விவேகானந்தரின் அறிவுரைகள்
உங்கள் பக்கம்
சாதனையாளர்களின் 3 குணங்கள்
சிந்தனைகள் மலர்க!
சாதனையாளர்களின் மூன்று குணங்கள்