Home » Cover Story » உங்கள் இலச்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி?

 
உங்கள் இலச்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி?


கந்தசாமி இல.செ
Author:

உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி (Goal Setting)

இலட்சியங்களைப் பற்றிய பொதுத்தன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். தனக்கு என்று வரும்போது, அதைத் துல்லியமாக ஆராய்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்.

  • நமத இலட்சியம் நமது திறமைக்கும் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
  • நமக்குத் தொடர்பே இல்லாத துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

இந்த இரண்டு கருத்துக்களையும் நம் இலட்சியத் தேர்வுக்கு அடிப்படை விதிகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை

நாம் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்தை நாம் அடைந்துவிட முடியும் என்பதில் முதலில் நமக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும். அந்த நம்பிக்கை தொடர்ந்து இருக்க வேண்டும். நம் உள்ளுணர்வு சொல்லும் இந்த நம்பிக்கையே அடிப்படை மூலதனமாகும். இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் பிறகு எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் நம் இலட்சியத்தை நாம் நிறைவேற்றி விடலாம். ஒரு வயதானவர் பழனிமலை மீது ஏறுகிறார். அவர் சென்று அடைவாரா என்பதில் நமக்கு சந்தேகமாக இருக்கிறது அவ்வளவு தளர்ச்சி. ஆனால் அவர் உள்ளத்தில் அசாத்தியமான நம்பிக்கை. நான் நடந்தே சென்று உச்சியை அடைவேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும்போது நமக்கும் கூட நம்பிக்கை பிறக்கிறது. அவர் உறுதியாக உச்சியை அடைந்துவிடுவார் என்று அத்தகைய நம்பிக்கை நம் முன் பிறக்க வேண்டும். அதை நாம் வளர்க்க வேண்டும்.

எது முக்கியம்

இலட்சியத்தை நம்பினால் மட்டும் போதாது. நம் வாழ்வில் எது முக்கியம்? பதவி உயர்வா? பொருளாதாரம் சேர்ப்பதா? புகழை அடைவதா? குடும்பத்தை மேன்மைக்குக் கொண்டு வருவதா? நாட்டுக்கு உழைப்பதா? அல்லது நம் உடல் நலனுக்கு முதன்மை கொடுப்பதா? இப்படி ஒரு மனிதருக்கு பல்வேறு பணிகள் இருக்கின்றன. அதுவே உயர்ந்த எல்லையை அடையும்போது இலட்சியமாகக் கருதப்பட்டு விடுகின்றன. ஒரு மனிதனுக்கு எல்லாம் தேவைதான். ஆனால் இத்தனையும் எடுத்துச் சுமந்து கொண்டு ஒருவன் நெடுந்தூரம் நடக்க முடியாது. அதனால் வாழ்வில் அவரவர்க்கு எது முக்கியம் எது முதன்மையானது என்று அதை மட்டும் தேர்ந்து கொண்டு மற்றவைகளுக்கு இரண்டாவது, மூன்றாவது நான்காவது இடம் கொடுத்து வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரச் சிக்கல் உள்ளவர்கள் அதற்கு முதன்மை கொடுத்து அதனைச் சேர்க்க வேண்டும். எல்லா வசதிகளும் இருக்கின்றவர்கள் தங்களால் முடியாத படிப்பை தங்கள் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும். தேசத் தொண்டே முதன்மை என்று கருதுகின்றவர்கள் தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் காந்தி ஆக வேண்டுமா? அல்லது நேரு ஆக வேண்டுமா? அல்லது டாடா பிர்லா ஆக வேண்டுமா? முடிவு செய்யுங்கள் முதன்மை கொடுத்துச் செயல்படுங்கள். அறிவு இல்லாதவர்கள் வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினம்.

தடைகளை கணக்கிடுங்கள்

உங்கள் இலட்சியப் பாதையில் விரைந்து நடக்க முடியாதபடி தடையாக இருக்கின்றவற்றை பட்டியலிட்டு வரிசைப்படுத்துங்கள். ஒட்டு மொத்தமாக எண்ணிப்பார்த்தால் இமயமலை அளவு தடை இருப்பது போல் தோன்றலாம். ஆனால் எழுதிப்பார்த்தால் 4, 5 எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும். பிறகு ஒவ்வொன்றிற்கும் விடை கண்டு விடலாம். சிலவற்றிற்கு தக்கவரை நாடி சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வளர்த்தவர்கள் முன்னேறியவர்கள் இந்தமுறையைப் பின்பற்றுகிறார்கள் வெற்றி பெறுகிறார்கள்.

தானே ஒரு தடையாக இருப்பது

சிலரது முன்னேற்றத்திற்கு அவர்களே தடையாக இருப்பார்கள் உரிய நேரத்தில் எழுந்திருப்பது அலுவலகம் அல்லது தொழிலுக்கு உரிய வேகத்தில் செல்வது. அவசியமானவர்களிடம் மட்டும் பேசுவது. அவசியமான சந்திப்புக்களை மட்டும் மேற்கொள்வது. வேகத்தை வீணாக்காமை போன்ற நல்ல பண்பு உள்ளவர்கள் விரைவில் இலட்சியத்தை அடைய வாய்ப்பு அதிகம் உண்டு. இதற்கு மாறாக எதையும் காலங்கடந்து செய்தல் வீண் பேச்சு வீண் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொழுது போக்குவது இப்படி உள்ளவர்கள் அவர்களே தங்களுக்குத் தடைவிதித்துக் கொள்கிறார்கள். நீங்கள் இவற்றிலிருந்து உறுதியோடும் கட்டுப்பாட்டோடும் இருந்து விடுதலை பெறுங்கள். நேரத்தை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் கூட பாதி வெற்றியை எடுத்த எடுப்பிலேயே அடைந்துவிடலாம். இந்தத் தடையைத்தான் முதலில் களைய வேண்டும்.

நாம் 50 விழுக்காடு ததடையில்லாதவர்களாக இருந்தால் அடுத்த 50 விழுக்காட்டை எளிதில் வென்று விடலாம். நம் தொழிலுக்கு நம் முயற்சி அக்கம் பக்கம் உள்ளவர்கள் அல்லது அரசாங்கம் அல்லது சமுதாயம் தடையாக தோன்றலாம். அவற்றை வல்லுநர்கள் கொண்டு பொறுமையாக அலசி ஆராய்ந்து போக்கிக் கொள்ளலாம். உலகில் எந்த தடையையும் போக்கி விடலாம். அதற்கு விடாமுயற்சியும், பொறுமையும் அதற்காகச் சற்றே காத்திருப்பதும் அவசியமாகும். ஒரு தன்னம்பிக்கை மிகுந்த கவிஞர் எழுதினார். ‘தண்ணீரைக்கூட சல்லடையால் அள்ளலாம் அது உரையும் வரைக் காத்திருந்தால்’ ‘முடியாது’ என்றசொல்லை அகராதியிலிருந்தே எடுத்துவிட வேண்டும் என்று சொன்ன நெப்போலியனின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையை எண்ணிப்பாருங்கள். முயற்சி – முயற்சி – அதுதானே வெற்றியை நல்குகிறது.

முடியுமானால்

முடிந்தால் சொல்கிறேன். முடியுமானால் செய்கிறேன் என்ற நிலையே நம் இலச்சியத் தெளிவில் இருக்கக்கூடாது. முடியும் என்றுதான் எடுக்க வேண்டும். முழு மனதோடு அதி தீவிர தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். இது முடியாது என்று தெரிந்தால் அதைவிட்டு விடுவது மிகவும் நல்லது. ஒரு இலட்சியத்தை எடுக்கும் முன் ஆயிரம் முறை சிந்திக்கலாம். விட்டும் விடலாம். ஆனால் அலசி ஆராய்ந்து எடுத்துவிட்ட பின் வாழ்வும் சாவும் அதில் தான் என்ற இலட்சிய தாகத்தோடு இலட்சிய வெறியோடு செயல்பட வேண்டும் வழ வழ என்று செயல்படுவது கூடாது அது இலட்சியத்தை அடையும் வழியும் அல்ல. இனி நம் வாழ்வில் இரண்டே நிலைதான் இருக்க முடியும், முடியாது என்பது தான். இதில் நில்லுங்கள் வெற்றி உறுதி.

உங்கள் இலட்சியத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவே பல சமயங்களில் நாமே துன்பத்தை விலைக்கு வாங்கிக் கொண்டது போலாகும். சிலர் நண்ர்பகள் போல இருப்பார்கள். ஆனால் நம் வளர்ச்சியை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எல்லாம் வெளிப்படையான பகைவர்களைக் காட்டிலும் கொடியவர்கள். நமக்கு உண்மையான நண்பர்கள் என்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலராகத்தான் இருக்க முடியும். அவர்களிலும் உண்மையாக நம் வளர்ச்சியை விரும்புகின்றர்வளிடம் மட்டும் சொன்னால் போதும் மற்றவர்களிடம் சொல்லத் தேவையில்லை. அது நண்பர்களிடம் உண்மையை மறைப்பது ஆகாது. அந்த செய்தியைச் சொல்ல இன்னும் காலம் கனிய வில்லை என்பது பொருள்.

செயலே முக்கியம்

இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ள நாம் இதுவரை செய்து முடித்துள்ள செயல்கள் அதற்கு எடுத்துக் கொண்ட கால அளவு போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து நம் செயல் திறனை நாமே மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இப்போது எடுத்துக் கொண்டுள்ள இலட்சியத்தை கொடுத்துள்ள கால அளவில் அடைய முடியும். அவ்வப்போது கணித்து பார்க்காத பணிகள் பெரும்பாலும் இரண்டு மடங்கு காலத்தை எடுத்துக் கொள்கின்றன. சில பணிகள் முற்றுப் பெறுவதும் இல்லை. அதனால் கால அடிப்படையிலான (Time oriented) முடிவு அடிப்படையிலான (Result oriented) செயல்கள் வெற்றியை நல்குகின்றன என்று சிந்தித்தோம் என்பது முக்கியம் ஆதலின் உங்களால் முடிந்த மட்டும் செயல்படுங்கள்.

உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ள சில குறிப்புகள்

  • உங்கள் அறிவில் ஆற்றல் திறமையில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் இலட்சியத்திற்கு கால அளவு கொடுங்கள். 10 ஆண்டுகள் என்றால் முதல் இரண்டு ஆண்டில் செய்ய வேண்டுவது என்ன என்று 10 ஆண்டுகளுக்கும் அட்டவணை தயாரியுங்கள். மூன்று நான்கு காலகட்டமாக பிரித்துக் கொண்டு செயல்படுங்கள்.
  • உங்கள் இலட்சியம் இது தான் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் இலட்சியத்தின் முடிவில் நீங்கள் அடையப்போகும் உயர்நிலையை துல்லியமாக மனக்கண்முன் காணுங்கள்.

· உங்கள் மாபெரும் இலட்சியத்தை அடைய, அந்த நெடும் பாதையில் எவ்வளவு தூரம் தினம் தினம் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை செல்ல முடியும் என்பதைத் தினம் தினம் சிறிது நேரமாவது எண்ணிப் பாருங்கள்.

· உங்கள் இலட்சியத்தைப் போலவே அதற்குரிய தடைகளையும் எண்ணிப்பார்த்து முதலில் மனத்தளவில் பிறகு செயலளவில் களையும் படி அமைத்துக் கொள்ளுங்கள்.

· உங்களை மிகச்சிறந்த ஒழுக்கச் சீலராக கட்டுப்பாடு உடையவராக இலட்சியத்தை நோக்கிச் செல்பவராக அன்றாட கடமைகளின் மூலம் உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • உங்கள் இலட்சியத்தை அடைந்துவிட முடியும் என்றும் நீங்கள் முதலில் நம்புங்கள். அந்த நம்பிக்கை வளரும் வகையில் உங்கள் இலட்சிய பாதையில் சிறுசிறு முன்னேற்றங்களைக் காணுங்கள்.
  • உங்கள் இலட்சியத்தை அதன் முடிவான வெற்றியை உங்கள் மனக்கண் காணுங்கள். இந்த இலட்சிய தரிசனம் நாம் செய்ய வேண்டிய பணிகளை விரைவுபடுத்தும்.

இந்த வகையில் உங்கள் இலட்சியத்தை அமைத்துக் கொள்ளுங்கள் சரியான திட்டமே சரியான அமைப்பே பாதி வெற்றி அதுவே முதல் வெற்றியும் கூட.

உங்கள் இலட்சியத்தை அடைவது எப்படி? (Goal Reaching)

இதுவரை கருத்துக்களாகக் கற்றுக்கொண்டோம். ஆனால் இந்தப் பகுதி நடைமுறைப்படுத்த வேண்டிய பகுதிய இதைக்கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. உடனே நடைமுறைக்கும் கொண்டுவர வேண்டும்.

ஒவ்வொருநாளும் செயல்பட வேண்டும்

நாம் எடுத்துக்கொண்ட இலட்சியத்தை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். 2 ஆண்டுகளுக்கு 24 மாதங்கள் 104 வாரங்கள் 730 நாட்கள் இந்த 730 நாட்களும் நாம் செயல்பட்டாக வேண்டும். நம்முடைய இலட்சியத்திற்காக இன்று நாம் என்னென்ன செய்தோம் என்பதை ஒவ்வொருநாளும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கணிப்பு ஏதோ அன்றாட கணக்கிற்காக அல்லாமல் உள்ளுணர்வோடு உண்மையாகச் செயல்பட வேண்டும். இதுவே இலட்சியத்தை நோக்கிச் செல்லும் இலட்சியத்தை அடைவதற்கான முதல் வழி. இதனையே உளவியல் வல்லுநர்கள் Achievement Feedback என்று குறிப்பிடுகிறார்கள்.

நானறிந்த தொழில் அதிபர் ஒருவர் குடிப்பழக்கம் உடையவர். அந்த ஒரு கெட்ட பழக்கமே அவருடைய சமுதாயத்தை பெரிதும் குறைந்துவிட்டதோடு தொழிற்சாலையில் வேலை செய்கின்றவர்களையும் கட்டுப்படுத்த முடியாத நிலûக்கு ஆளாகியபோதுதான் அவருக்கு ஞான உதயம் பிறந்தது. குடியை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். 100 நாட்களுக்குள் முழுக்க முழுக்க குடியை நிறுத்துவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார். தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டார். தவறியும் மீண்டும் குடிப்பதில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இறுதியில் அவர் வெற்றி பெற்றார். மீண்டும் பழைய நிலைமைக்கு உயர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது வெற்றிக்குக் காரணம் மனதாரக் குடியை விட்டுவிட வேண்டும் என்று எண்ணியது. இரண்டாவது ஒவ்வொரு நாளாக வெற்றி பெற்றது. இன்று வெற்றிகரமான 5வது நாள் என்று சொல்லும்போது அவரது மனஉறுதியை வெளிப்படையாகக் காணமுடிந்தது. நல்லதை அடைய வேண்டுமானாலும் கெட்டதை விடவேண்டுமானாலும் ஒவ்வொரு நாளும் விடாப்பிடியாக இருந்து நாள்தோறும் நமக்குள் ஒரு போராட்டம் நடத்தியே ஆக வேண்டும். உடல் எடையை குறைப்பவர்கள், ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், படிப்பில் முதன்மை பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் இப்படி ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுபவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாக முன்னேறுகிறார்கள். அண்மையில் கால் ஒடிந்துபோன 60 வயதான ஒரு பெரியவரிடம் அந்த டாக்டர் சொன்னார், ‘இனி நீங்கள் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாது’ என்று, அந்தப் பெரியவர் அப்பொழுதே மனதில் உறுதி பூண்டாராம் ஊன்றுகோல் இல்லாமல் நடந்தே தீருவேன் என்று, அவரது கால் கூடி ஓரிரு மாதங்கள் மட்டும் அவருக்கு ஊன்றுகோல் தேவைப்பட்டது.

இந்தியாவின் கல்வி நிலை

இந்தியாவில் 1991ம் ஆண்டின் கணக்குப்படி 843930861 பேர்கள் உள்ளனர் (சுமார் 85 கோடி). இதில் ஆண்கள் 437592979 (சுமார் 44 கோடி). பெண்கள் 406332932 (41 கோடி) உள்ளனர்.

இந்திய நாட்டில் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து படித்தவர்கள் 1991ம் ஆண்டின் கணக்குப்படி 52.11 விழுக்காடு ஆகும். இதில் ஆண்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் 62.86 விழுக்காட்டினரும் பெண்களை மட்டும் எடுத்துக் கொண்டால் 39.42 விழுக்காட்டினரும் உள்ளனர்.

இந்தியாவில் 1901 முதல் 1991 வரை ஆண் பெண்களில் படித்தவர்களின் விபரம்:

ஆண்டு விழுக்காடு ஆண்கள் பெண்கள்
1901 5.35 9.83 0.60
1911 5.92 10.56 1.05
1921 7.16 12.21 1.81
1931 9.50 15.59 2.93
1941 16.10 24.90 7.30
1951 16.67 24.95 7.93
1961 24.02 34.44 12.95
1971 29.45 39.45 18.69
1981 36.17 46.74 24.88
1991 52.11 68.86 39.42

விடுதலை பெற்றபோது 1947ல் இந்திய அளவில் நாம் 16 விழுக்காடுதான் படித்தவர்களாக இருந்தோம். 45 ஆண்டுகளில் நாம் 54 விழுக்காட்டை எட்டிப்பிடித்துள்ளோம். ஆனால் 110 கோடி உள்ள சீனாவில் 70 விழுக்காட்டினர் படித்தவர்கள் உள்ளார்கள். கல்விக்கு முதன்மையளித்து அறியாமையைப் போக்கினால் பல்வேறு சிக்கல்கள் தீரும் என்பதை அரசியல் தலைவர்கள் எண்ண வேண்டும்.


Share
 

5 Comments

Post a Comment


 

 


June 1992

உங்கள் இலச்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி?