Home » Articles » மன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…

 
மன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…


கந்தசாமி இல.செ
Author:

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள்கைப்பட வேண்டும். – பாரதி.

படுத்துக் கிடந்தது போதும். எழுந்து நில்!
நெஞ்சை உயர்த்தி, நிமிர்ந்து நில்!
பழத்தைச் சாறு பிழிவது போல கைகளை இறுக்கி மூடு!
நறநறவென்று பற்களைக் கடி!
எடுத்ததை முடித்தே தீருவேன் என முடிவு செய்!
நினைதததை அடைய முடியும் என நம்பிக்கை கொள்!
எட்டி நட! விரைந்து செல்!
பேசாதே! செய்!
விளக்கம் கூறாதே! விரைந்து செயல்படு!
மன உறுதி என்றால் என்ன கேட்பவர்க்குப் பதில் சொல்லாதே!
நீயே பதிலாக இரு! உன் செயலே பதிலாக இருக்கட்டும்.

மன உறுதியால்

“மன உறுதி உடையவர்கள் நினைத்ததை நினைத்தபடி அடையமுடியும்
மன அமைதியைப் பொறுத்தே உங்கள் செயல் உறுதி அமைகிறது
மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை
மன உறுதி உடையவர்களால்தான் பிறர்க்கு உதவ முடிகிறது.
மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கி விடுகிறது;

இந்தக் கருத்துக்களை உங்கள் வாழ்க்கையோடு உரைத்துப் பாருங்கள்.

இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு உங்கள் மன உறுதியே காரணம். இது வரை ஏற்பட்ட தொல்லைகளுக்கு உங்களிடத்தில் மன உறுதி இல்லாமையே காரணம்.

மன உறுதியை ஒருக்காலும் தளர விடாதீர்கள்:

மன உறுதி தளர்ந்தால் – எவ்வளவு திறமை இருந்தாலும் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் அது பயன்றறதாகிவிடும். எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க நேரிடும். எடுத்ததெல்லாம் தோல்வியில் முடியும்.

மன உறுதி தளர்ந்த மனிதன் குனிந்தே நடப்பான்; வழியைவிட்டு ஒதுங்கியே நடப்பான்.

ஒதுங்கி நடக்க நடக்க, உலகம் ஒதுக்கி வைத்துவிடும்.

உடலுக்கு உயிர் போன்றது; வெற்றி வாழ்க்கைக்கு மன உறுதி.

மன உறுதியை யாரும் வெளியிலிருந்து பெறுவதில்லை. மன உறுதியை நம்முள் இருந்தேதான் நாம் பெற வேண்டும். நாமேதாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சிலிர்த்து எழுந்து, நம்மை நாம்தான் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எழுந்து நில்லுங்கள். இன்று முதல் விரைந்து செயல்படுங்கள்.

விருப்பம் – வழிமுறை- மன உறுதி

‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ – உண்மைதான்.

மனம் என்றால் என்ன? விரும்ப ‘இதை’ அடைய வேண்டும் என்ற நியாயமான ஆசை.

அந்த விருப்பம்தான் – மார்க்கத்தை அடையக்கூடிய வழிமுறையைக் காட்டுகிறது.

ஆசையும் அடையக்கூடிய வழிமுறையும் ஒன்று சேரும்போது மன உறுதி உண்டாகிறது.

மன உறுதி தளர்வது ஏன்?

மன உறுதியுடன் நீங்கள் செய்து முடித்த சில செயல்களை எண்ணிப் பாருங்கள். விருப்பம் வழிமுறைகளும் எவ்வாறு இணைந்து செயல்பட்டன என்பது விளங்கும்.

பத்துக் காரணங்களைக் கூறலாம். இவற்றில் எதனால் உங்கள் மன உறுதி தளர்ந்தது என்று நுணுகி ஆராய்ந்த அதனை நீக்குங்கள்.ஒரு தாளை எடுங்கள். ஒவ்வொரு காரணமாக எழுதுங்கள். உங்களைப் பாதிப்பது எது என்று கண்டறியுங்கள். அதை நீக்குவதற்குரிய வழிமுறையைக் கடைப்பிடியுங்கள்.

1. பாச உணர்வு

பாசம் – அன்பு – உணர்வு பூர்வமானது; அறிவுக்கும் அப்பாற்பட்டது. சிலர் தாம் வளர்க்கும் நாய்க்குட்டிமீது அன்பைப் பொழிவார்கள். சிலர் தம் மக்கள் மீது, சிலர் தங்கள் மனைவியின் மீது, சிலர் தங்கள் பக்கத்து வீட்டுப் பெண்கள் மீது, இப்படிப் பாசம் – அன்பு மிகும்போது – தான் கொண்ட கொள்கையில் மனம் தளர்வார்கள். இந்த அன்புடையவர்களுக்காக இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். இதனால் நடைமுறை வாழ்க்கையில் முறை பிறழ்வார்கள். பிறர் கண்ணுக்கு இவர்கள் செய்கின்ற தவறுகள் தெளிவாகத் தெரியும். ஆனால் இவர்களால் திட்டப்படி எதையும் செய்ய இயலாது. இறுதியில் தோல்வியைத் தழுவுவார்கள். முறையான அன்பு மன உறுதியை வளர்க்கும். முறை பிறழ்ந்த அன்பு மன உறுதியைத்தான் குலைக்கும்.

“அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பதுதான், இதற்கு அளவுகோல். அன்பு செலுத்துவதில் கூட வரம்பு மீறினால் அளவுக்கு மிஞ்சினால் – அன்பு செலுத்துகின்றவர்கள் மட்டுமின்றி அன்பு செலுத்தப்படுகின்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

சில குடும்பங்களில் அன்பு என்ற பெயரில் கட்டுப்பாடு அற்றுத் திரியும் இளைஞர்களைக் காண முடியும். இதனால் குடும்பமே தளர்ச்சி கொள்கிறது. கட்டுப்பாடாக இல்லாத பெற்றோர்களால் குடும்பத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது கடினமாகும்.

சில நிர்வாகத்தில் கூட, மனிதாபிமானம் என்ற பெயரில் கட்டுப்பாடான நிர்வாகம் நடைபெறாதபோது, உரியவர்கள் மனத்தளர்ச்சி கொள்வார்கள். இவர்கள் கடமை உணர்வுக்கும் மனிதாபிமானத்திற்கும் வேறுபாடு அறியாது மயங்குகின்றவர்கள்.

தன் பெண் புகுந்த வீட்டில் துன்புறுகிறாள் என்று சொல்லப்படும்போது பெற்றோர்கள் மனந்தளர்கிறார்கள். தங்களது மகளின் பழக்கவழக்கங்கள் ஒரு காரணமாக இருக்கும் என்பது தெரிந்தால் கூட அன்பு கண்ணை மறைத்து விடுகிறது.

உண்மையை உணராத போதும் உண்மையை ஏற்றுக்கொள்ளாதபோதும் மனத் தளர்ச்சி ஏற்படும்.

அளவான அன்பு, தேவையான கட்டுப்பாடு, காலப்போக்கில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை, விளைவுகளை ஏற்றுக் கொள்ளுதல் இவைதாம் பாசத்தால் ஏற்படும் தளர்வுகளுக்கு மாற்று மருந்தாகும்.

(தொடரும்)


Share
 

5 Comments

  1. senthil says:

    ithuvum enaku porunthum

  2. Theenathayalan.T says:

    supper sir

  3. noor says:

    arumai…….!

  4. jayakumar says:

    மன உறுதி
    மனித உறுதி (உரிமை)

  5. Radhika says:

    arputham sir

Post a Comment


 

 


October 1991

சிந்தனைகள்
மன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…
மன அமைதி… மன உறுதி…
"மனசே சரியில்லை"