Home » Cover Story » யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?

 
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?


செயந்தி இரா
Author:

பழைய கருத்துக்கள், பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து காலத்தைப் பொறுத்து புதுப்புதுச் சிந்தனைகள் பிறப்பதைப்போன்றே, நமக்கு முன்பு தோன்றி வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நேரடி முன்னுதாரணமாகவோ, மறைமுகமான வழிகளிலோ பயனளிக்கிறது என்பது உண்மை. புதுத்துறை, புதிய தொழில், புதிய செயல்பாடு ஆகியவற்றை நாம் தொடங்கும்போது, இவை நாம் போக இருக்கும் வழியை நெறிப்படுத்தப் பெரிதும் உதவுகிறது. சின்னச் சின்ன தடைகள் கூடப் பல சமயங்களில் நம்மைச் சிறைப்படுத்திவிடும் தருணங்களில் அத்தகைய மனிதரும் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் பெரிதும் கைகொடுக்கின்றன. மேலும், அக்கரை மட்டுமே பச்சையல்ல; இக்கரையும் தான். எங்கிருந்தாலும் நம் சிந்தனை; செயல்பாடுகளுக்குத் தகுந்தாற்போல் நம் வளர்ச்சி இருந்துகொண்டு தானிருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

ஏதேனும் ஒருவகையில் தம் முழு மதிப்பை உலகுக்கு நிலைநாட்ட வேண்டும். அதன் பயனைப் பிறருக்கும் அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை மனதில் உருவாக்கி வளர்த்து அதற்காகவே வாழ்ந்து வருபவர்கள் பலர். அவர்களுள் சிலர் தம்மை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், தமக்கு அடுத்த தலைமுறையின் வாழ்க்கையிலும் அக்கறை கொண்டு தம்மால் முடிந்த வகையில், பல்கலைக் கழகங்களிலும், பொது நிறுவனங்களிலும், நேரடியாகவோ, பொதுவாகவோ செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வாழும் அத்தகைய மனிதர்களைத் ‘தன்னம்பிக்கை’ வாயிலாகத் தெரிந்து கொண்டு வருகிறோம். ஆயிரமாயிரம் மைல்களுக்குக்கப்பால் வாழ்ந்தாலும் இந்தியப் பண்பாட்டை மறக்காமல் அருமையான தமிழில் பேசி, மகிழ்ந்து வருபவர்கள் நமக்கு அந்நிய மண்ணில் பெருமை சேர்க்கிறார்கள்.

ஒன்றைச் செய்ய வேண்டும்; ஒன்றும் நன்றே செய்ய வேண்டும்; நன்றும் இக்கணமே செய்ய வேண்டும் என்ற அசைக்க முடியாத கொள்கை இங்கு ஒருவருக்கு உண்டு. அவர்தான் அரிஹரன். அவரைப் பலர் பலவிதமாகப் பாராட்டினாலும் அவை அனைத்தும் உண்மையே என்பது அவருடன் பழகுபவருக்குப் புரியும்.

நம்மில் பலரைப் போலவே முயன்று படித்து 23 – 24 வயதில் பொறியியல் படிப்பை முடித்த சில மாதங்கள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பணியாற்றினார். பின்னர் மத்திய பொதுப்பணித்துறையில் பணியாற்றினார். பின்னர் மத்திய பொதுப்பணித்துறை மற்றும் இந்திய தொழில் நுட்பக்கழகம் ஆகியவற்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

பொதுவாக, வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்தாலும், உள்மனதில் தன்னால் இன்னும் பல சிறப்பான செயல்களைச் செய்ய முடியுமென்ற ஓர் நினைப்பு உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆறு மாத காலத்தில் ஒரு இரவு தன் இராஜினாமாக் கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு தனக்குச் சில நாட்கள் கனடாவின் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த முன்னவர் படிப்பு அழைப்பை ஏற்றுக்கொள்ள கனடா பயணமானார். அவருக்கு மனைவியுடன் இரண்டு பெண்குழந்தைகளையும் தனியாக விட்டுப்போகிறோம் என்ற மன உணர்ச்சி இருந்தாலும் தன்னால் முடியும் என்ற ஒரே ஒரு நம்பிக்கை கை கொடுத்தது.

இன்று போலல்லாமல் விசா விதிமுறைகள் நெறிப்படுத்தப்படாத காலம். கனடா என்பது ஆர்க்டிக் பகுதி எஸ்கிமோக்கள் வாழுமிடம் என்பதுபோல் அனைவரது எண்ணம். எல்லாமே புதிய புரியாத புதிர்; ஒரு வழியாகக் கனடா வந்து சேர்ந்தார். நேரடியாகத் தம் பேராசிரியடம் சென்று தம் வரவைத் தெரிவித்தார். அவரும் மிகுந்த அக்கறையுடன் இவருக்கு உதவினார். பி.எச்.டி. குறித்து எந்த உதவியைப் பெறவும், அவருக்கிருந்த நண்பர்கள் மிகச்சிலர்; அவர்களும் புதியவர்கள்; ஒவ்வொரு விதமாகச் சொல்லியது அத்தனை உதவிகரமாக இல்லை. மேல்நாட்டுக் கவர்ச்சிகளில் மயங்காமல் ஒரே குறிக்கோளுடன் மிகச் சிக்கனமாக வாழ்க்கை நடத்தியதால் ஒரு வருடத்திற்குள் ஒரு வழியாகத் தம் குடும்பத்தை அவரால் கனடாவுக்கு அழைத்துக்கொள்ள முடிந்தது.

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 16 மணி நேரம் மாணவனாகவும், 8 மணி நேரத்தில் குடும்பத் தலைவனாகவும் இருப்பது எல்லா வகையிலும் சற்றே கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று அவருடைய புகழின் நிழலையே தன்னுடையதாக்கிக் கொண்டு மகிழும் மனைவிக்கு இருப்பதை வைத்துக்கொண்டு அன்பான குடும்ப வாழ்க்கையையும் சூழலையும் கொடுக்கத் தெரிந்தது, முடிந்தது. அதனால் வழக்கத்திற்கு முன்பாகவே இரண்டரை வருடங்களிலே பி.எச்.டி. படிப்பு முடித்து, உடன் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது.

அப்போது பிரச்சினைகள் கனடாவின் பொருளாதார நிலைமை சற்றுச்சரிய ஆரம்பித்ததால் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. அதற்குப்பின் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள். இசை விழாக்கள், பாரதி விழா மற்றும் பல பொது நிகழ்ச்சிகளில் ஈடுபாடு, உலகின் பல நாடுகளுக்குச் சென்று வருவது, பணி புரிவது இப்படிப் பல அனுபவங்கள்.

இவற்றையெல்லாம் கடந்த, இன்றும் ஒரு சிறிய மாணவனுக்குரிய உற்சாகத்துடன் இருக்கும் அவர் ஒன்றை நினைவு கூறுகிறார். If X or Y can do it; Why not I?. அதாவது யாரோ இங்கும் அங்கும் செய்ய முடியுமென்றால் ஏன் என்னால் மட்டும் முடியாது? அருமையான அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் கூற்று.

ஒரு நிமிடம் சிந்திப்போம். இத்தனை நாட்கள், நம் தோல்விகளுக்கு நம் பெற்றோரையும் மற்றவரையும் குறை கூறிக்கொண்டிருந்தோமே அதை நிறுத்துவோம். நமக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். நாம் நாமாகவே இருந்து அதை எப்படி அடைய வேண்டும் என்று சிந்திப்போம்; நாம் எதிர்நோக்கும் ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கும் சக்தியை வளர்த்துக்கொள்வோம். நம் முயற்சிகளைப் பணமோ, வேறு எந்த சின்ன தடைகளோ சிறைப்படுத்தாது.

அப்படி ஒரு மன உந்துதல் (Initilative) இருந்தால், நமக்கு அக்கரை மட்டுமல்ல, இக்கரையும் வளர்ச்சியையும் வளத்தையும் கொடுக்கும் பச்சைதான்Ð

இரா. செயந்தி, கனடா

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை