Home » Articles » அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை

 
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை


செயந்தி இரா
Author:

கைடு போஸ்ட்ஸ் (guide posts) என்னும் பத்திரிகை இன்று அமெரிக்காவில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள் வணிகர்கள், பெண்கள், முதியவர்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை வெற்றிப்பாதையில் அமைக்க உதவிவரும் அருமையான பணியைக் கடந்த பல ஆண்டுகளாகவே ஆற்றிவருகிறது.

அண்மையில் இதன் சிறு இணைப்பாக பிளஸ்(Plus) என்னும் சிறு வெளியீடும் வெளியாகிறது. இதன் ஆசிரியர் டாக்டர் நார்மன் வின்ஸென்ட் பீல். மனக்கண்ணால் உருவப்படுத்துதல் (imaging) என்னும் அடிப்படைத் தத்துவத்தின் மூலம் நாம் நினைத்த செயல்களில் எட்டவிரும்பும் நிலையை அடைய முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தி வருகிறார்.

ஓராண்டுக் குழந்தையான தன்னம்பிக்கைக்குப் பிறந்தநாள் பரிசாக நம் எண்ணங்களையும் ஒத்துழைப்பையும் அளிக்கவிரும்பும் நமக்கு கைடு போஸ்ட்ஸ் வளர்ந்த கதை (Stroy of guide posts magazine) புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கப் போவது உறுதி!

சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்குக்கு அருகில் பாலிங் என்னும் சிறு கிராமத்தில் ஒரு பலசரக்குக் கடையின் முகப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது நான்கு அறிஞர்கள் லௌவல் தாமஸ், எட்டி ரிக்கன்பெக்கர், பிரான்சு ரிக்கி, ரேமண்ட் தார்ன்பெர்க் ஆகியோரால் ஒரு சிறிய அறையில் தோற்றுவிக்கப்பட்டதுதான் கைடு போஸ்ட்ஸ்!

ஒரு வாடகை மேசை நாற்காலி மற்றும் டைப்ரைட்டர் கொண்ட அந்தப் பத்திரிக்கை அலுவலகத்தில் செய்திகளை எழுது வரிசைப் படுத்துவது ஆசிரியரான டாக்டர் பீலினின் வேலை! மிகவும் குறைந்த முதலீட்டுத் தொகையான 100 டாலருடன் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் தெளிவான சிந்தனை ஆகியவையே அதன் மூலதனம்! சில மாதங்களில் 25,000 சந்தாதாரர்கள் சேர்ந்தனர். அதன் எதிர்காலம் நம்பிக்கையைத் தந்தது. அப்போதுதான் அந்த விபத்து நடந்தது!

திடீரென்று ஒருநாள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அந்தச் சிறுஅறை சாம்பலாகியது. ஏராளமான, அச்சான பிரதிகளுடன் சந்தாதாரர் பட்டியலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக பட்டியலின் ஒரு கூடக் கிடைக்கவில்லை.

அந்த துக்கமான நேரத்திலும் லௌவல் தாமஸ் வானொலியில் இந்தச் செய்தியை ஒலிபரப்ப ஏற்பாடு செய்தார். அதன் மூலம் பழைய புதிய சந்தாதார்ரகள் 30,000 பேர் மீண்டும் கிடைத்தனர். சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40,000ஐ எட்டியபோது செலவும் ஏறிக்கொண்டே சென்றது. அதிக எண்ணிக்கையில் பல நல்ல செய்திகளை மக்களிடம் பரப்பும் எண்ணத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் பணநெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. ஒருகுறிப்பிட்ட நிலையில், அதனை நடத்தவே முடியாது என்று முடிவு செய்து அதனைத் தீர்மானம் செய்யும்பொருட்டு, அதன் நிர்வாகக் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கைடு போஸ்ட்ஸ் நிர்வாகத்தின் பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வகைக்குப் பல புள்ளிக்கணக்குகளைக் கொடுத்து இனிமேல் இதனை நடத்த முடியாது என்ற கருத்தை நிலை நாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் கணீரென்று ஒரு பெண்மணி 5 நிமிட அவகாசம் கேட்டுக் கொண்டே பேசமுற்பட்டார்.

டெஸ்ஸி டர்லக் (Tessie Derlack) என்னும் அந்த அம்மையார் ஆரம்ப காலத்தில் 2000 டாலர் நன்கொடை வழங்கிய காரணத்தாலேயே அங்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த முறையும் நன்கொடை அறிவிப்பதற்காகத்தான் அவர் பேசுகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ பிளாடோவின் ஒரு கருத்தைச்சொல்லி தன் பேச்சை ஆரம்பித்தார் உங்கள் சிந்தனையை எப்போதும் முடியும் என்ற அடிப்படையில் செலுத்தினால் அவற்றாலேயே நம்மால் முடியாதது என்று நினைத்தவற்றைக் கூட சரியாக நடத்த முடியும் (Take charge of your thoughts you can do what you with them) அதனால் இது வரை பேசிய கருத்துக்களை நாம் மறந்து விட்டு, முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்கத் தொடங்குவோம். இல்லை என்ற சொல்லைச் சில காலத்திற்கு மறப்போம். வளர்ச்சி, வெற்றி என்பதையே மனதில் உருவப்படுத்துவோம். முதில் சந்தாதாரர் எண்ணிக்கை இருபது லட்சம் என்று கொள்ளுங்கள். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்வோம். நம்முடைய இலட்சியத்தைப் பெரிதாக அமைத்துக் கொண்டு அதனை எட்டும் வகைகளை ஆராய்ந்தால் பல பயனுள்ள வழிகள் புலப்படும் என்றார்.

முதலில் ஒருவரையொருவர் ஒருவித சந்தேகத்துடன் பார்த்துக் கொண்ட அனைவருக்கும் ஒரு சில நிமிடங்களிலேயே புதுத்தெளிவு பிறந்த உணர்வு ஏற்பட்டது. அந்த அறையில் புது உற்சாகம், தெம்பு நிறைந்த மகிழ்ச்சி நிலவியது. ஆயிரமாயிரம் டாலர் நன்கொடை செய்ய முடியாததை அந்தப் பெணமணியின் சில சொற்கள் செய்து விட்டன. ஆம்! அன்றிலிருந்து இன்றுவரை கைடுபோஸ்ட்ஸின் வரலாற்றில் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று டாக்டர் பீல் எழுதுகிறார்.

இன்று கைடு போஸ்ட்ஸின் அலுவலகம் பௌண்ட்டேஷன் ஃபார் கிறிஸ்டியன் லிவிங் (Foundation for Christian Living) என்ற பெயரில் கம்பீரமான , பெரிய அமைப்பாக நியூயார்க் நகரை அலங்கரிக்கிறது. நாள்தோறும் அங்கு பயிலும் மக்களுகும் நடைபெறும் கூட்டங்களுக்கும் அளவே இல்லை.

நாமும் அத்தகைய நிலையை எட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஆனால் அதற்கு நம்மிடம் தேவைப்படும் மாற்றங்கள் ஏராளம். முதலில் நம்மை நாம் வளர்த்துக் கொள்ளும் வகையினை அறிவோம். திட்டங்கள் தீட்டிச் செயல்படுவோம். அதற்கு நாம் தன்னம்பிக்கையைப் பயன்படுத்துவோம்! பின் தன்னம்பிக்கை தானாகவே வளர்ந்து செழிக்கும்!

கனடாவிலிருந்து இரா. ஜெயந்தி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1991

உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
திருமணமும் மருத்துவ சோதிடமும்
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்