Home » Cover Story » தன்னம்பிக்கை    சமுதாய – அறிவியல் இலக்கியத் திங்களிதழ்

 
தன்னம்பிக்கை    சமுதாய – அறிவியல் இலக்கியத் திங்களிதழ்


கந்தசாமி இல.செ
Author:

தலைப்பு : தன்னம்பிக்கையை வளர்த்திட
இடம் : அன்னபூர்ணா கலையரங்கம்
ஆர்.எஸ். புரம், கோவை 2
நாள் : 6.1.1991 ஞாயிறு காலை 10.00 முதல் 12.00 வரை
உரை : டாக்டர் இல.செ. கந்தசாமி

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி
“அட, மண்ணில் தெரியுது வானம்”
“சூரிய நடிகரும் சந்திர நடிகையும் பல்லவப் பெயர் கொண்ட ஹோட்டலில் போண்டா சாப்பிட்டார்கள் ‘Guess what is the alme master’ இது போன்ற நாட்டுக்குத் தேவையான விஷயங்களை அறிந்து கொள்ளாமல் தன் முன்னேற்றம், தன்னம்பிக்கை என்று அலையும் இளைஞர்களே, உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இதோ ஒரு எளிதான வழி.
மாபெரும் திட்டங்கள் வகுப்பது ஒரு புறம் இருக்கட்டும். தினமும் சில எளிதான இலக்குகளை Easy Targets குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய பொழுது சாய்வதற்குமுன் இதைச்செய்து முடித்துவிடுவேன் என்ற முனைப்புடன் செயலாற்றுங்கள்.
‘அட! நம்மால் நினைத்ததைச் செய்து முடிக்க முடிகிறதேÐ என்ற நம்பிக்கை உற்சாக ஊற்று உங்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுவதை உணர்வீர்கள்.
தினமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர, உங்கள் வாழ்வின் உயர் லட்சியத்தை Life Project அடையும் நோக்கில், 10 பணிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படியும் அன்றைய பொழுதிற்குள் செய்து முடிக்க உறுதியுடன் செயல்படுங்கள். இரவு படுக்கும் முன் எவ்வளவு தூரம் நம் பணிகளை முடித்திருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து பாருங்கள். விகடனின் விமர்சனக் குழு மார்க் போடுவதûப் போல இது போன்ற தினசரி மதிப்பீடு ‘Self-assessment’ நீங்கள் உங்கள் நேரான பாதையை விட்டுவிலகாமல், உங்களைக் காப்பாற்றும், ஒரே வெட்டில் மரம் வீழ்ந்து விடுவதில்லை.
நீண்ட தூரங்களையும் ஒவ்வொரு மைலாகத்தான் கடக்க வேண்டும். நம் இலட்சிய மாளிகையை அடைய ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து, நேரான பாதையில் நடை போடுவோம். சிறுசிறு வெற்றிகளையும் கொண்டாடும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம்.
சிந்தனையில் தெளிவும், செயலாற்றுவதில் உறுதியும் இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.
    டாக்டர் விஜய்

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
‘இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சில தனித்தன்மை வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு. அவ்வாறாயின் அந்த பண்புகள் என்னென்ன? அந்தப் பண்புகளை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இத்தகைய படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பினையாகும்.
அமெரிக்காவிலுள்ள “காலப்” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் “முக்கியமான இவர்கள் யார்?” என்ற நூலிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் (இவர்கள் என்ற நூல் அமெரிக்காவில் முக்கியமானவர்களின் பட்டியல் நூலாகும்). பொருளாதாரம், சமூக அந்தஸ்து என்ற அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. இவர்களது துறையில் இவர்கள் செய்துள்ள அண்மைக்காலச் சாதனைகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களைத் துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவற்றுள் முதன்மையான ஐந்து பண்புகள் வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. நடைமுறை அறிவு
சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள். நடைமுறை அறிவு தேவை என்பதையும் குறித்து இருந்தார்கள். அதில் 61 விழுக்காட்டினர் இந்த நடைமுறை அறிவுதான் தங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதையும் குறித்து இருந்தார்கள்.
நடைமுறை அறிவு என்பது அன்றாட நடவடிக்கைகளில் நடைமுறைக்கு ஒத்த தீர்வுகளை வழங்குவதாகும். குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தொடர்பில்லாத மற்ற கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியான தீர்வு காண்பதாகும்.
ஒரு எண்ணெய் நிறுவனத் தலைவர் இந்த நடைமுறை அறிவைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது “எளிய அணுகுமுறை தான்” வெற்றிக்கு முக்கியமாக வேண்டப்படும் திறமையாகும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். நிறுவனத்திற்கான கூட்டங்களை நடத்துவது, வாடிக்கையாளர்களைச் சந்திப்பது போன்ற அன்றாட நிறுவனச் செயல்முறைகளில் சிக்கலான அல்லது ஆடம்பரமான நடைமுறைகளைத் தவிர்த்து எளியமுறையில் அணுகுவதுதான் மிகவும் முக்கியம் என்பது அவரது அனுபவமாகும்.
நடைமுறை அறிவு என்பது பிறவியிலிருந்தே வருவதா அல்லது நாமாக வளர்த்துக் கொள்ள முடிவதா என்றால் – நாமாக வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இதற்குரிய பதில்.
இளமையில் கல்விக்கூடங்களில் விவாதங்கள் நடத்துவதன் மூலமும் வாழ்க்கையில் மற்றவர்களின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் நமது சொந்தத் தவறுகளிலிருந்தும் நாம் பெற்ற அனுபவங்கள் மூலமும் வளாத்துக் கொள்ள இயலும் என்பதுதான் பல்வேறு சாதனையாளர்களின் கருத்தாக இருந்தன.
2. தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல்
நடைமுறை அறிவுக்கு அடுத்த இடத்தைப் பெறுவது ஒருவர் தான் எடுத்துக் கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுவதாகும். சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதனை முக்கியப் பண்பாகக் கருதுகின்றனர்.
எண்ணெய் வயல்களில் வேலை செய்ததும் எண்ணெய் கிணறுகளின் மீது உட்கார்ந்து கொண்டு கூர்ந்து கவனித்து நேரடி அனுபவம் பெற்றதுமே தனது வெற்றிக்குக் காரணம் என்று ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் வள நிறுவனத் தலைவர் கூறுகிறார். குறிப்பாக மேலாளராக பணிபுரியச் செல்கின்றவர்கள் அவர்கள் தொழில் பற்றிய பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும். புகைப்படக் கருவி எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து செயல்படுவதே எனது வெற்றியின் இரகசியம் என்கிறார் புகழ்வாய்ந்த ஒரு புகைப்படக்காரர். எல்லாவற்றிற்கும் மேலாக நாமாகக் கற்கும் அனுபவக் கல்விதான் நமது வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.
நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய மிகத் தெளிவான அறிவும் முடியாத நமது பணிகளை வீட்டில் செய்து கொள்வதும் வெற்றிக்குப் பெரிதும் உதவியான செயலாகவும் இருக்கும். ஒருமுறை ஒரு துறையில் பெற்ற உயர்தரமான அறிவு போதுமானது என்று சிலர் கருதுகிறார்கள். அறிவும் ஆராய்ச்சியும் நாளும் வளர்ந்து வருகிறது. ஆகையால் கல்வி அறிவு என்பது தொடர்ந்து கற்றுத் தெளிய வேண்டிய ஒன்றாகும். வெற்றி பெற விரும்புவோர் அவர்கள் துறையில் தொடர்ந்து அறிவைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. தன்னம்பிக்கை
மிகச்சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான் தங்கள் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.
தன்னம்பிக்கை என்பது நாம் எப்படி உணர்கிறோம் அல்லது எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்து ஏற்படுவதல்ல. தீர்மானமான முடிவுடன், ஒரு செயலை எப்படித் துணிவுடன் முனைந்து செய்கிறோம் என்பதைப் பொறுத்தே தன்னம்பிக்கை அமைகிறது. மன உறுதியும் குறிக்கோளை உருவாக்கிக் கொள்வதும் தன்னம்பிக்கையின் உள்ளார்ந்த இரு கூறுகளாகும்.
மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வாழ்வில் தெளிவான குறிக்கோள் உடையவர்கள் என்பதைத் தெரிவித்தனர். இவர்களில் பாதிப்பேருக்கு மேல் நேரில் சந்தித்தபொழுது மன உறுதிக்கு முதலிடம் அளித்தனர். மற்ற திறமைகளைக் காட்டிலும் மன உறுதியானது தானியங்கி போலச் செயல்பட வைக்கிறது என்று குறிப்பிட்டனர்.
வெற்றி பெறுவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் தைரியமும் தேவையான அளவு நேரமும் உழைப்பதற்குரிய உடல் வலிமையும் தேவை என்பது சாதனையாளர்களின் கருத்தாக அமைந்தன.
4. புத்திசாலித்தனம்
வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் கடினமான கருத்துக்களைக் கூட சுலபமாகப் புரிந்து கொண்டு தெளிவாக அலசி ஆராய்ந்து விரைவான முடிவு எடுப்பதற்குப் புத்திசாலித்தனம் பெரிதும் பயன்படுகிறது. 43 விழுக்காட்டினர் புத்திசாலித்தனம் முக்கியமான காரணம் என்றும் 52 விழுக்காட்டினர் இது மிகவும் தேவை என்றும் குறிப்பிட்டனர். புத்திசாலித்தனத்திற்கும் மேலாக விரிவான சொல்வளம், நிறையப்படிக்கும் பழக்கம், அதே போல் எழுதும் பழக்கம் ஆகியவையும் இன்றியமையாதது என்ற கருத்தும் கணிப்பில் தெரிய வந்தது. இந்தச் சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 19 புத்தகங்கள் படிக்கிறார்கள். மேலும் எதற்கு ஏன் என்ற ஆராய்ச்சி மனமும் பரந்துபட்ட ஆர்வமும் வெற்றிக்கு அடிப்படையான செய்திகளாகும் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களாகும்.
5. எடுத்த செயலை முடிக்கும் திறன்
நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை முடிக்கும் தங்களின் தனித்திறனே காரணம் என்று குறிப்பிட்டனர். தங்கள் தனித்திறமைக்கு அனைவரையும் அனைத்துச் செல்லும் பண்பு, தாமே வேலை செய்யும் மனப்பான்மை தொழில் கவனத்தோடு கூடிய ஈடுபாடும் ஆகிய மூன்றுமே வெற்றிக்குக் காரணமாகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் உண்மையாகவும் கடினமாகவும் தொடர்ந்தும் விடாப்பிடியாகவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாய் இருந்தது என்பதை ஓர் இயற்பியல் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
நடைமுறை அறிவு, துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகள் மட்டுமன்றி தலைமைத் தன்மை, ஆக்கபூர்வமான சிந்தனைத்திறன் மற்ற மனிதர்களோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் இணக்கமான உறவு சில வேளைகளில் சிறிதளவு அதிர்ஷ்டமும் தேவையானதாகும்.
இருப்பினும் மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகளும் சாதனை நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டோமானால் நாம் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவது உறுதி.
நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்டு

அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
கைடு போஸ்ட்ஸ் (Guide posts) என்னும் பத்திரிக்கை இன்று அமெரிக்காவில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், பெண்கள், முதியவர்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை வெற்றிப்பாதையில் அமைக்க உதவிவரும் அருமையான பணியைக் கடந்த பல ஆண்டுகளாகவே ஆற்றிவருகிறது.
அண்மையில் இதன் சிறு இணைப்பான பிளஸ் (Plus) என்னும் சிறு வெளியீடும் வெளியாகிறது. இதன் ஆசிரியர் டாக்டர் நார்மன் வின்ஸென்ட் பீல். மனக்கண்ணால் உருவப்படுத்துதல் (imaging) என்னும் அடிப்படைத் தத்துவத்தின் மூலம் நாம் நினைத்த செயல்களில் எட்டவிரும்பும் நிலையை அடைய முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தி வருகிறார்.
ஓராண்டு குழந்தையான தன்னம்பிக்கைக்குப் பிறந்தநாள் பரிசாக நம் எண்ணங்களையும் ஒத்துழைப்பையும் அளிக்கவிருக்கும் நமக்கு கைடு போஸ்ட்ஸ் வளர்ந்த கதை (Story of guide posts magazine) புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கப் போவது உறுதிÐ
சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கு அருகில் பாலிங் என்னும் சிறு கிராமத்தில் ஒரு பலசரக்குக் கடையின் முகப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது நான்கு அறிஞர்கள் லௌவல் தாமஸ், எட்டி ரிக்கன்பெக்கர், பிரான்சு ரிக்கி, ரேமண்ட் தார்ன்பெர்க் ஆகியோரால் ஒரு சிறிய அறையில் தோற்றுவிக்கப்பட்டதுதான் கைடு போஸ்ட்ஸ்Ð
ஒரு வாடகை மேசை நாற்காலி மற்றும் டைப்ரைட்டர் கொண்ட அந்தப் பத்திரிக்கை அலுவலகத்தில் செய்திகளை எழுதி வரிசைப்படுத்துவது ஆசிரியரான டாக்டர் பீலினின் வேலைÐ மிகவும் குறைந்த முதலீட்டுத் தொகையான 100 டாலருடன் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் தெளிவான சிந்தனை ஆகியவையே அதன் மூலதனம்Ð சில மாதங்களில் 25,000 சந்தாதாரர்கள் சேர்ந்தனர். அதன் எதிர்காலம் நம்பிக்கையைத் தந்தது. அப்போதுதான் அந்த விபத்து நடந்தது.
திடீரென்று ஒருநாள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அந்தச் சிறு அறை சாம்பலாகியது. ஏராளமான, அச்சான பிரதிகளுடன் சந்தாதாரர் பட்டியலும் எரிந்தவிட்டது. துரதிஷ்டவசமாக பட்டியலின் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை.
அந்தத் துக்கமான நேரத்திலும், லௌவல் தாமஸ் வானொலியில் இந்தச் செய்தியை ஒலிபரப்ப ஏற்பாடு செய்தார். அதன் மூலம் பழைய புதிய சந்தாதாரர்கள் 30,000 பேர் மீண்டும் கிடைத்தனர். சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40,000ஐ எட்டியபோது செலவும் ஏறிக்கொண்டே சென்றது. அதிக எண்ணிக்கையில் பல நல்ல செய்திகளை மக்களிடம் பரப்பும் எண்ணத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் பணநெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட நிலையில் அதனை நடத்தவே முடியாது என்று முடிவு செய்து அதனைத் தீர்மானம் செய்யும்பொருட்டு, அதன் நிர்வாகக் குழுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கைடு போஸ்ட்ஸ் நிர்வாகத்தின் பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வகைக்குப் பல புள்ளிக்கணக்குகளைக் கொடுத்து இனிமேல் இதனை நடத்த முடியாது என்ற கருத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையில் கணீரென்று ஒரு பெண்மணி 5 நிமிட அவகாசம் கேட்டுக் கொண்டு பேசமுற்பட்டார்.
டெஸ்ஸி டர்லக் (Tessie Derlack) என்னும் அந்த அம்மையார் ஆரம்ப காலத்தில் 2000 டாலர் நன்கொடை வழங்கிய காரணத்தாலேயே அங்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த முறையும் நன்கொடை அறிவிப்பதற்காகத் தான் அவர் பேசுகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ பிளாடோவின் ஒரு கருத்தைச் சொல்லி தன் பேச்சை ஆரம்பித்தார். உங்கள் சிந்தனையை எப்போதும் முடியும் என்ற அடிப்படையில் செலுத்தினால் அவற்றாலேயே நம்மால் முடியாதது என்று நினைத்தவற்றைக் கூட சரியாக நடத்த முடியும் (Take charge of your thoughts you can do what you with them) அதனால் இதுவரை பேசிய கருத்துக்களை நாம் மறந்துவிட்டு, முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்கத் தொடங்குவோம். இல்லை என்ற சொல்லை உருவகப்படுத்துவோம். முதலில் சந்தாதாரர் எண்ணிக்கை இருபது லட்சம் என்று கொள்ளுங்கள். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்வோம். நம்முடைய இலட்சியத்தைப் பெரிதாக அமைத்துக் கொண்டு அதனை எட்டும் வகைகளை ஆராய்ந்தால் பல பயனுள்ள வழிகள் புலப்படும் என்றார்.
முதலில் ஒருவரையொருவர் ஒருவித சந்தேகத்துடன் பார்த்துக் கொண்ட அனைவருக்கும் ஒருசில நிமிடங்களிலேயே புதுத்தெளிவு பிறந்த உணர்வு ஏற்பட்டது. அந்த அறையில் புது உற்சாகம், தெம்பு நிறைந்த மகிழ்ச்சி நிலவியது. ஆயிரமாயிரம் டாலர் நன்கொடை செய்ய முடியாததை அந்தப் பெண்மணியின் சில சொற்கள் செய்துவிட்டன. ஆம்Ð அன்றிலிருந்து இன்றுவரை கைடு போஸ்ட்ஸின் வரலாற்றில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டாக்டர் பீல் எழுதுகிறார்.
இன்று கைடு போஸ்ட்ஸின் அலுவலகம் பௌண்ட்டேஷன் ஃபார் சிறிஸ்டியன் லிவிங் (Foundation for Christian Living) என்ற பெயரில் கம்பீரமான பெரிய அமைப்பாக நியூயார்க் நகரை அலங்கரிக்கிறது. நாள்தோறும் அங்கு பயிலும் மக்களுக்கும் நடைபெறும் கூட்டங்களுக்கும் அளவே இல்லை.
நாமும் அத்தகைய நிலையை எட்டும்நாள் வெகுதூரத்தில் இல்லை. ஆனால் அதற்கு நம்மிடம் தேவைப்படும் மாற்றங்கள் ஏராளம். முதலில் நம்மை நாம் வளர்த்துக் கொள்ளும் வகையினை அறிவோம். திட்டங்கள் தீட்டிச் செயல்படுவோம். அதற்கு நாம் தன்னம்பிக்கையைப் பயன்படுத்துவோம்Ð பின் தன்னம்பிக்கை தானாகவே வளர்ந்து செழிக்கும்Ð
-கனடாவிலிருந்து இரா. ஜெயந்தி
திருமணமும் மருத்துவ சோதிடமும்
ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணமும், குழந்தை பெறுதலும் முக்கியத்துவமான நிகழ்ச்சிகளாகும். திருமணம் என்றவுடன் பல்வேறு விவரங்களையும் மணமக்களின் பொருத்தங்களையும் ஆராய்ந்து செயல்படுகிறோம். மருத்துவ முறையில் சில அம்சங்களைப் பின்பற்றினால் அது மேலும் சிறப்பான பொருத்தமாக அமையும்.
இரத்தவகை (Blood Grouping and Typing)
நமது இரத்தத்தை A, B, O, AB என்ற வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை மேலும் Rh பாஸிடிவ் (Rh Positive) அல்லது Rh நெகடிவ் (Rh Negative) எனப் பிரிக்கப்படுகிறது. நம்மில் பெரும்பாலோர் Rh பாஸிடிவ்வாகத்தான் இருப்போம். பெற்றோரில் தந்தை Rh பாஸிடிவ்வாகவும் தாய் Rh நெகடிவ்வாகவும் இருந்து பிறக்கும் குழந்தை Rh பாஸிடிவாக இருந்துவிட்டால் அந்தக்குழந்தை பிறக்கும்போதே காமாலை ஏற்பட்டு இறக்க நேரிடலாம் அல்லது கருவிலேயே வளர்ச்சி தடைபட வாய்ப்புண்டு. அதை அடுத்துப் பிறக்கின்ற குழந்தைக்கும் இந்த பாதிப்பு உண்டாகும். இதை Rh IMCOMPATABILITY என்கிறோம்.
இன்றைய மருத்துவத்தில் இதைச் சரிபடுத்த ANTI D-IMMUNO-GLOBIN என்ற மருந்தை தாய்க்கு செலுத்தி, இதை முழுதும் சரிப்படுத்திவிடலாம். இருப்பினும் திருமணத்தைப் பற்றி எத்தனையோ விவரங்களை பேசும் நாம் மணமகனும் மணமகளும் Rh பாஸிடிவ் அல்லது Rh நெகடிவ் என்பதைப் பேச்சுவாக்கில் கேட்டு அந்தப் பொருத்தத்தையும் செய்தால் இதைத் தடுத்துவிடலாம்.

உறவுமுறைத் திருமணங்கள் (CONSANGUINOUS MARRIAGE)
நமது நாட்டில் நெருங்கிய உறவினர்களுக்குத் திருமணம் செய்து கொள்வது தொன்றுதொட்டு வந்துள்ள பழக்கமாகும். அதுவும் இரத்த சம்பந்த உறவுகளில் (தமக்கையின் மகளை) திருமணம் செய்தல் ஒரு முறையாக கையாளப்படுகிறது. மருத்துவமுறையில் இதுபோன்று உறவு முறையில் திருமணம் செய்தவர்கட்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவியிலேயே நோய்கள் உண்டாகும் நோய்கள் (Congenital diseases) மூளை வளர்ச்சி குன்றியிருத்தல், காது கேளாமை, இதயத்தில் துவாரம் போன்றவைகள் வர வாய்ப்புண்டு. இந்நோய்கள் வர வேறு பல காரணங்கள் உண்டு. அக்காரணங்கள் இல்லாதபோது உறவு முறையில் திருமணம் செய்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உறவு முறையில்லாத (unrelated) திருமணங்களினால் பிறக்கும் குழந்தைகளைவிடக் கணிசமான சதவீதம் அதிகம் இந்நோய்கள் வருவதாக கணக்கீடுகள் காட்டுகின்றன.
காவிரிநீர் வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
வாஷிங்டன் நவம்பர் 19 இந்தியாவில் காவிரி, மகாநதி முதலிய பல நதிகளின் நீர் பயன்படுத்தப்படாமல் வீணே கடலில் சென்று கலப்பதைத் தடுப்பதற்குத் தக்க யோசனைகளைக் கூறுவதற்கு அமெரிக்காவில் வாழும் இந்திய என்ஜினியர்கள் முன் வந்துள்ளனர்.
நதி நீர் நிர்வாகம் சரியான வகையில் இல்லாததால்தான் தென்னிந்தியாவில் ஏராளமான அளவுக்கு நதி நீர் வீணாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தடுப்பதற்கு நதி நிர்வாகத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதற்கு தயார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்காக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நதி நீர் நிர்வாகத் துறைகளில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் எஞ்சினியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இக்குழுவின் தலைவர் எம். நாகராஜூ தெரிவித்தார்.
இந்தியாவில் ஓடும் நதிகளின் நீரில் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதர நீர் அனைத்தும் கடலில் கலந்து வீணாகிவிடுகின்றது. இந்த நிலைமை மட்டும் தலைகீழாக மாறினால் இந்தியா உலகின் உணவுக் களஞ்சியமாகத் திகழும் என்று அவர் குறிப்பிட்டார்.
தென்னிந்திய நதிகளின் நீர் நிர்வாகத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட தொழில் நுட்பக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கார்னகி மெல்லான பல்கலைக்கழகத்தில் செயற்கை அறிவூட்டல் துறையின் தலைவராக உள்ள ராஜ்ரெட்டி இக்குழுவிற்குத் தலைவராக இருப்பார் என்று அவர் சொன்னார். இத்திட்டத்திற்கான தகவல்களைத் திரட்டும் பணியிலும் அவர் உதவுவார் என்றும் நாகராஜூ தெரிவித்தார். மிக்ஷிகனைத் தலைமையிடமாகக் கொண்ட கங்கை காவிரி பாகீரதி டிரஸ்ட் என்னும் சேவை அமைப்பின் ஆதரவுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
உதயப்பூர் ஏரியை ஆழப்படுத்தும் பணியில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு உதவுவதற்கும் இந்த டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. இந்த ஏரியானது ஆழப்படுத்தப்பட்டால் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான நீரை அங்கே தேக்கி வைக்க முடியும் என்று நாகராஜூ தெரிவித்தார்.
நன்றி: தினமணி 20.11.1990
உலகம் ஒரு குடும்பம் ஆக வேண்டும்
– டாக்டர் மு. அறம்

இன்றைய பொருளாதாரம் உலகளாவிய நிலையில் அமைந்துள்ளது. ஆகவே, உலக சமுதாயம், தேசிய சமுதாயம் ஆகியவற்றிற்கிடையே நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டுவிட்டன. இந்தியா போன்ற பெரிய, பரந்த நாட்டில் தேசியப் பொருளாதாரத்திற்கும் மாநிலப் பொருளாதாரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு.
ஒரு முனையில் ஊராட்சி. இன்னொரு முனையில் உலக ஆட்சி. இவ்விரு முனைகளுக்கிடையே மாவட்ட ஆட்சி, மாநில ஆட்சி, தேசிய ஆட்சி ஆகிய மூன்று நிலைகள் உள்ளன. வளர்ச்சித் துறையின் எந்த அம்சத்தையும் எடுத்துக் கொள்வோம். வேளாண்மை, தொழில், கல்வி, சுகாதாரம், ஒவ்வொரு துறைக்கும் இன்று உலக அளவில் நிறுவனங்கள் உள்ளன. தேசிய நிலையில் நிறுவனங்கள் அது போலவே மாநில நிலையிலும் நிறுவனங்கள் உள்ளன.
குடும்பமுறை
சமுதாயத்தின் இயல்பான மூல உறுப்பு குடும்பம். இந்திய சமுதாயத்தின் சிறப்பு இக்குடும்ப அமைப்பு இன்றும் உறுதியாக உள்ளது என்பதே. அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் குடும்ப அமைப்பு வலுவற்றுப் போய்விட்டது. இதனால் புதிய பிரச்சினைகள் அங்கே தோன்றியுள்ளன. இது நமக்கு எச்சரிக்கை. மேலை முறையைக் கண் மூடிப்பின்பற்றுவோர் கவனிக்கவும்.
குடும்பத்தின் சிறப்பு என்ன? குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர். ஒருவருக்கு இன்பம் வந்தால் எல்லோரும் இன்பம் கொள்கின்றனர். ஒருவருக்குத் துன்பம் வந்தால் எல்லோருக்கும் துன்பம். குடும்பத்தில் மூன்று தலைமுறைகள் சேர்ந்து வாழ்கின்றனர். குடும்பம் ஓர் அன்பு அமைப்பு. சமுதாயமும் ஓர் அன்பு அமைப்பாக மாற வேண்டும்.
குடும்பங்களின் கூட்டு கிராமம். ஆங்கிலத்தில் சொன்னால் ‘Federation of families’ கிராமம் ஒரு பெருங்குடும்பம், ஒரு கிராமம் குடும்ப முறையில் இயங்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை ‘Familial Principle’ என்று சொல்கிறோம்.
குடும்ப முறையை நாம் கடைப்பிடித்தால் ஊர்ச்சமுதாயத்தில் ஒற்றுமை உண்டாகும் கூட்டுறவு வளரும். எல்லோரும் சேர்ந்து முன்னேற நல்ல சூழ்நிலை உருவாகும். இதுவே இந்திய நாகரிகம், தமிழ் நாகரிகம்.
‘வாசுதேவ குடும்பகம்’
இந்தக் குடும்பமுறை ஊரோடு நிற்பதல்ல. மாவட்டமும் ஒரு குடும்பம்போல் ஆக வேண்டும். இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மாநிலமும் ஒரு குடும்பம்போல் இயங்கவேண்டும். நாடும் அப்படியே, உலகமும் ஒரு குடும்பம். வாசு தேவ குடும்பகம் என்பது வடமொழியில் உள்ள அழகான தொடர்.
ஆன்மீகநோக்கம்
மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இது அடிப்படையான கேள்வி. இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை தர வேண்டும். நமது நாகரிகம் சொல்வது வாழ்க்கையின் நோக்கம் மெய்க்காட்சி அல்லது தெய்வ தரிசனம்.
மேலைச் சமுதாயத்தில் வாழ்க்கையின் இறுதி நோக்கம் பற்றிய தெளிவு இல்லை. அங்கு உண்மையை நாடுதல் இல்லாமல் இல்லை. அதன் நல்ல வடிவம் மேலை நாட்டு அறிவியல். ஆனால், மேலை நாகரிகத்தில் உலகாயுதம் மண்டிக்கிடப்பதால் அங்கு வன்முறையும் போரும் மிகுந்துள்ளன. மேலை நோய் நம்மையும் பிடித்துள்ளது. ஆகவே, வன்முறைக் கிளர்ச்சி இங்கும் மிகுந்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி
நம் நாடு அரசியல் விடுதலை பெற்ற பிறகு நாம் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளோம். வேளாண் துறையில் பெரும் வெற்றி கிட்டியுள்ளது. உணவுத்தானிய உற்பத்தி 5 கோடி டன்னிலிருந்து 18 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. தன் நிறைவு, ஏற்றுமதி ஆற்றல் நமக்கு வந்துள்ளன. இது மாபெரும் வெற்றி. இதுபோல தொழில் துறையிலும் நாம் பெரும் வெற்றி பெற்றுள்ளோம்.
ஆனால், நாட்டில் அமைதி இல்லை. கலவரமும் போராட்டமும் பெருகி வருகின்றன. இதற்குக் காரணம், நாம் மேலைநாட்டு முறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது.
எட்டாவது திட்டம்
எட்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தில் ‘வேலை உரிமை’ (Right to Work) கொடுக்கப்படுகிறது. இது ஓர் அடிப்படை உரிமை (Fundamental Right) ஆகும் என்று கூறப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், வேலை உரிமையை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா என்பது அறிஞர்கள் கேட்கும் கேள்வி. வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமை என்று பிரகடனம் செய்தால் மட்டும் போதாது
வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்பது எளிதல்ல. கடினம். ஆனால், எது முடியுமென்றால் ஒரு குடும்பத்தில் ஒருவனுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது.
ஊராட்சி
இந்தப் பொறுப்பை ஊராட்சியிடம் கொடுக்க வேண்டும். அரசு மட்டும் இதைச் சாதிக்க முடியாது. அரசு ஊராட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஊராட்சிக்குத் தேவையான நிதியையும் அதிகாரத்தையும் கொடுத்துவிட வேண்டும்.
ஆகவே பரவல்முறை ஆட்சி தேவை. இதையே மகாத்மா காந்தி வற்புறுத்திக் கூறினார். எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறையும் இதனை வற்புறுத்தியது. இதை நாம் வரவேற்போம்.
எட்டாவது திட்ட அணுகுமுறை பஞ்சாயத்து ஆட்சியைக் கொண்டுவர அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று கூறுகிறது. இதனை உடனடியாக, கால தாமதம் செய்யாது செய்ய வேண்டும்.
மலிவு மது
மனித மேம்பாட்டிற்குக் கல்வியும் கலையும் தேவை. மனிதமேம்பாட்டிற்குத் தடையாக இருப்பவை மதுவும், போதைப் பொருளும், கல்வி மூலமாக கலை மூலமாக மனித மனம் வளரும். ஆனால், மதுவின் மூலமும் போதைப்பொருளின் மூலமும் மனம் குழப்பமுறும். வலுவிழக்கும். மதுவினால் குடும்பம் கவலையுறும்.
திருவள்ளுவர் முதல் பல பேரறிஞர்கள் மதுவைக் கண்டித்திருக்கிறார்கள். திருவள்ளுவர் வழியைப் பின்பற்றுகின்ற தமிழக அரசு ‘மலிவு மது’ பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாண்புமிகு முதல்வர் இது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
போதைப்பொருள் இன்னொரு பெரிய ஆபத்து. இது உலகம் எங்கும் பரவிவரும் சமூக நோய். இதையும் ஒழிக்க வேண்டும்.
நன்றி: சர்வோதயம் அக்’ 1990


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1990

தன்னம்பிக்கை    சமுதாய – அறிவியல் இலக்கியத் திங்களிதழ்