உலகில் பல்வேறு நாடுகள் அமைதியை இழந்து நிற்பதை எண்ணி வருந்திக் கொண்டிருந்த நமக்கு, நமது இந்திய நாட்டுச் சிக்கல்களே – தீர்க்க முடியாத நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றது.
ஜாதி மத இனக்கலவரங்கள், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கின்ற வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றன.
அரசு உடைமைகளை – தனியார் உடமைகளை நாசப்படுத்தி நாட்டிறகு அழிவைத் தேடுகின்றன.
தனியார் துறை வேலை நிறுத்தங்களால் பொதுமக்கள் படும் தொல்லைகள் கணக்கில் அடங்கா.
இந்திய நாட்டின் ஒருநாள் உழைப்பு வீணாகிறது. இந்திய நாட்டின் வரவு செலவு திட்டப்படி இந்திய அரசுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு நேர்கிறது.
தனியார் துறையைக் கணக்கிட்டால் குறைந்தது இதைப் போல் பத்து மடங்கு இருக்கும். ஆக ஒரு நாள் வேலை நிறுத்தம் என்றால் சுமார் 2000 கோடி ரூபாய் நாட்டின் வருமானத்தில் நட்டமேற்படுகிறது.
உழைக்கும் வாய்ப்பின்றி மனித உழைப்பும் எந்திரங்கள் உழைப்பும் வீணாகின்றன. இதனால் நம் நாட்டின் வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது.
காரணம்
இவற்றிற்கெல்லாம் அரசியல் இலாபம் கருதிச் செய்கின்ற செயல்களும் மக்களின் வாக்குச் சீட்டை மனதில் கொண்டு இயற்றும் சட்ட திட்டங்களுமே அடிப்படைக் காரணமாகும்.
தீர்வுகள்
இதற்கு மக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கின்ற உயர்ந்த மனப்பான்மையை பெற வேண்டும். சாதி மத இன வேறுபாடுகளைக் களையும் வகையில் இந்திய நாட்டில் உள்ள அனைவர்க்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
நாட்டின் நலன் கருதாத- நாற்காலிகளை ஒன்றையே பெரிதாகக் கருதி நல்லவர்கள் போல் நடிக்கின்ற பெரிய மனிதர்களை கட்சி வேறுபாடு கருதாமல் பொது வாழ்வில் அனுமதிக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.
தன்னம்பிக்கை வாசகர்கள் இது பற்றிச் சிந்தித்துத் தங்களால் ஆன நற்பணிகளில் ஈடுபடுவார்களாக.
-ஆசிரியர் குழு

November 1990











No comments
Be the first one to leave a comment.