Home » Cover Story » நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை

 
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை


சந்திரசேகரன் ச
Author:

(உழவர்களுக்கு உயிரான செய்தி)

தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையில் நிலவியல் ஆய்வாளர்கள் மூலம் நவீன விஞ்ஞான கருவிகளைக்கொண்டு நிலத்தடி நீர் வளத்தை அறியும் திட்டம் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நவீன முறையில், நிலவியல் ஆய்வாளர், நிலத்தை நில பௌதீக முறையில் ஆய்வு செய்து, நிலத்தடி நீர்வளம் எவ்வாறு உள்ளதென கணக்கிடுகிறார்.

நிலவியல் ஆய்வாளர் நிலத்தை ஆய்வு செயது அந்த இடத்தில் உள்ள பாறை வகைகள், அதன் அமைப்புகள், கடினத்தன்மை, பாறைகளில் உள்ள பிளவுகள் போன்றவற்றைக் கணிக்கிறார். மேலும், அருகில் உள்ள குளம், ஆறு, வாய்க்கால் இவற்றின் அமைப்பை ஆராய்ந்து நீர் சுரக்கும் வாய்ப்புகள் பற்றி ஆராய்கிறார். அதன் பின் நில பௌதீக முறையில் ஆய்வை மேற்கொள்ளுகிறார்.

நில பௌதீக ஆய்விற்கு “ரெஸிஸ்டிவிடி மீட்டர்” என்ற கருவி உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியில் ஒரு நேர்கோட்டில் நான்கு கடப்பாறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கப்படுகிறது. இவைகள் ஒயர் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டருடன் இணைக்கப்படுகின்றன. சி1, சி2 எனக் குறிப்பிட்டுள்ள இரண்டு எலக்ட்ரோடு மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் மின்சாரம் மின் அலைகளாக பாறைகளின் வழியாக, பாறையின் தன்மை, அதன் அமைப்பு, பாறைகளிலுள்ள பிளவுகள் இவற்றின் தன்மைக்கேற்ப பாய்ந்து மின் எதிர்ப்பு ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு ஏற்படும் மாறுதல் பாறைக்குள் அடிக்கப்பட்டுள்ள பி1, பி2 என்று எலக்ரோடுகள் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டரில் அளவிடப்படுகிறது. பி1,பி2 எலட்ரோடுகளுக்கு இடைப்பட்டுள்ள தூரம் எவ்வளவோ அந்த அளவு ஆழத்தில் உள்ள படிவங்கள், பாறைகளின் மின் எதிர்ப்பு சக்தி ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்த இடைவெளி தூரம் 2 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை வேறுபடும்.

இந்த நவீன முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நிலத்திற்கு அடியில் உள்ள படிவப் பாறை, கடினப் பாறை, மணல் பகுதி ஆகியவற்றை அறிய முடியும். மேலும் நிலத்திற்கடியில் எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் என்பதையும் நீரின் தன்மையையும் ஓரளவு கணிக்க இயலும்.

மேற்படி முறை கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக வேளாண்மைபொறியியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் ஆகியவை அமைக்க தேர்வு செய்யப்பட்டு, கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆய்வுக்குப் பிறகு மேற்கொள்ளும் கணக்கின்படி நிலத்தடி நீர் வளம் இல்லாமல் இருக்கும் நிலத்தைப் பற்றியும் அந்தந்த விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டு கிணறு அமைப்பதால் பயன் ஏற்படாது என்பதைக் கூறி பணமும், காலமும் விரயமாவது தடுக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி பணிகள் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர்களிலும் இயங்கும் வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் அலுவலகத்தால் புவியியல் நிபுணர் மூலம் மேற்கொள்ளப்ப்டுகிறது. இதற்காக ஆய்வுக் கட்டணம் விவசாயப்பணிகளுக்காக ரூ. 200 வீதமும், விவசாயம் அல்லாத பிற பணிகளுக்கு ரூ. 400 வீதமும் வசூலிக்கப்படுகிறது.

மேற்படி பணிகள் மிகவும் வெற்றிகரமாக வருவதால் விவசாயிகள் மிகவும் ஆர்வமுடன் இக்கருவிகளைப் பயன்படுத்த விண்ணப்பங்கள் அளித்து முன்பதிவு செய்துவருகிறார்கள். ஆய்வு, முன்னுரிமைப்படியே மேற்கொள்ளப்படும். ஆகவே விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப திட்டமிட்டு முன்கூடியே தங்கள் மாவட்டத்திலுள்ள செயற்பொறியாளர் (வே. பொ) அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் விரும்பும் நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள இயலும்.

ச. சந்திரசேகரன்
உதவி செயற் பொறியாளர் (வே.பொ)
கோவை-2

என். பழனிசாமி
செயற்பொறியாளர் (வே.பொ)
கோவை-3

ச.தா. பத்மநாபன்
கண்காணிப்புப் பொறியாளர் (வே,பொ) கோவை-2


Share
 

3 Comments

  1. KANNAN.N says:

    மிகவும் பயனுள்ள தகவல்

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி