Home » Cover Story » பதினெட்டே முன் வருக!

 
பதினெட்டே முன் வருக!


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர். இல. செ. கந்தசாமி எம்.ஏ. பிச்.டி.,

ஜனநாயக நாட்டில் ஆளுகின்ற தன்மை திட்டங்களை நிறைவேற்றுகின்ற செயல் திறன் – அதன் அளவு – பெறுகின்ற பயன், அதனால் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற உயர்வு தாழ்வு – ஆகிய இவற்றை சரியாக மதிப்பிட்ட அறிவாளிகள் பேசாமல் இருந்து விடுவார்களானால் நிச்சயமாக ஜனநாயகம் பாழ்பட்டுப்போய்விடும்.
-அறிஞர் அண்ணா.

இளைய தலைமுறையே! இனிய பதினெட்டே வணக்கம்!

இன்று முதல் நீ நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தகுதியைப் பெற்றுவிட்டாய். 5 வயதில் பள்ளிக்கூடம் சென்றாய் 12 ஆண்டுகள் பள்ளியில் கற்றாய். 18 – வயதில் கல்லூரியி நுழைந்தாய். இந்த ஆண்டு உனக்கு 19 தொடங்குகிறது.

18 முடிந்ததும் உனக்கு ஒரு தனித்தகுதி வந்துவிட்டது. அதுதான் வாக்குரிமையைப் பயன்படுத்தி இந்த நாட்டை ஆளும் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தகுதி. இந்தத் தகுதியை நீ கற்ற அறிவின் துணைகொண்டு சரியாகப் பயன்படுத்துவாய் என்றாலும் சற்றே எச்சரிக்கையோடு எண்ணி செயல்படவேண்டியது உனது கடமை என்பதால், இதனை எழுதுகிறேன். இப்படி எழுத வேண்டியது என் போன்றோரது பொறுப்பாகிறது.

நம் இந்திய நாடு 1947-ல் விடுதலை பெற்ற இன்று 42 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏழு பொதுத்தேர்தல்களை நாம் பார்த்துவிட்டோம். எட்டாவது பொதுதேர்தலை சந்திக்க இருக்கிறோம். பல்வேற துறைகளில் நாம் வளர்ந்து இருந்தாலும் இன்னும் சில அடிப்படையான தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறோம் என்பதுதான் உண்மைநிலை.

வறுமை

அடிப்படைத் தேவையான உணவே நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்னும் தேவையான அளவிற்கு கிடைத்தப்பாடில்லை. ஏன் பல கிராமங்களில் இன்னும் சரியான குடி தண்ணீருக்குக் கூட வழியில்லை. நம் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 30 கோடிமக்கள் ஒருவேளை உணவுக்கு வழியின்றி வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்க்கிறார்கள்.

அறியாமை

கல்வியை பரப்புவது ஒன்றால்தான் சாதி – மத இன வேறுபாடுகளை, வறுமை அறியாமை கொடுமைகளை களைய முடியும் என்று நமது தலைவர்கள் அறிந்திருந்திருந்தாலும் இன்னும் கல்விக்குச் சரியான முதன்மையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகப்படியாக, கையெழுத்து மட்டுமே போட தெரிந்தவர்களை எல்லாம் சேர்ந்து கணக்கிட்டுக் கொண்டாலும் 40 விழுக்காட்டிற்கு மேல் இல்லை நமது 80 கோடி மக்கள் தொகையில் ஆண்களில் 20 கோடியும், பெண்களில் 10 கோடியும்தான் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

படிக்காதவர்கள் எண்ணிக்கை 50 கோடி

நம் நாட்டில் உள்ள படிக்காதவர்கள் தொகையில் கணக்கிட்டால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் 70 விழுக்காடு படித்து இருக்கிறார்கள். இன்று 500 கோடி உலக மக்கள் தொகை. அதில் 150 கோடி பேர் படிக்கவில்லை. அந்த 150 கோடியில் இந்தியாவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் பெருக்கம்

நம் நாட்டில் மக்கள் பெருக்கம் ஆண்டு தோறும் ஒரு புதிய ஆஸ்திரேலியா கண்டம் என்ற வகையில் கூடிக்கொண்டே போகின்றது. இப்போது 80 கோடியாக இருக்கின்ற நாம் 2000 – ல் 97 கோடியாக உயர்ந்து விடுவோம் என்ற நிலையில் உள்ளோம்.

வேலையில்லா திண்டாட்டம்

நம் நாட்டின் படித்த இளைஞர்கள் மட்டும் 2 கோடி பேருக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். அதில் உயர்கல்வி கற்றவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இன்று இந்திய நாட்டின் தனி நபர் வருமானமே தினம் 10 ரூபாய்க்கும் குறைவு. ஆனால் ஒவ்வொரு இந்தியனிலும் சுமத்தப்பட்டுள்ள கடனோ 3,000 ரூபாய். நம் கடனை தீர்த்துக் கொள்ள மட்டும் நாம் ஓராண்டு முழுவதும் உழைத்தாக வேண்டும் என்பதை நீ உணர்ந்து கொள். இதுதான் இந்தியக் குடிமகனின் பொருளாதார நிலை. இதிலிருந்து நாம் மீண்டாக வேண்டும்.

சாதிமத வேறுபாடு

நாட்டின் ஆங்காங்கே சாதி, மத இனகலவரங்கள் தோன்றியவண்ணம இருக்கின்றன. அதைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு மாறாக, தினம் தினம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளையே கேட்கிறோம். பார்க்கிறோம், படிக்கின்றோம்.

இயற்கை வளங்கள் வீணாகின்றன

நம் நாடு வேளாண்மை நாடு என்பதை நீ அறிவாய். வேளாண்மைக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர் என்பதை குழந்தையும் அறியும். நம் நாட்டில் பல மாநிலங்களில் நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கடலில் கலந்து வீணாகின்றது. பல மாநிலங்களில் வேளாண்மைக்கு நீரில்லை. நாடு முழுமையும் உள்ள நதிகளை- கங்கையையும், காவிரியையும் ஒன்றாக இணைத்திருந்தால் வேளாண்மை செழிக்கும். வேலை வாய்ப்பு பெருகும். 70 விழுக்காடு மக்கள் செய்யும் தொழிலால் நாடே உயர்வு பெறும். ஆனால் 42 ஆண்டுகளாக நம்மை நாமே ஆட்சி செய்தும் நதிகளை இணைத்து பாசனத்திறகு வழி செய்ய தவறி விட்டோம். இந்த நிலையில்தான் நீ நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்.

நம் தலைவர்களைப் பற்றிக் கேள்விபட்டு இருப்பாய் என்றாலும் இப்போது நீயே தேர்ந்தெடுக்கும் பொறுப்புக்கு ஆளாகி உள்ளாய். அதனால் சில நெறிமுறைகளை எண்ணிப் பார்த்து, அத்தகைய தலைவர்களைத் தேர்ந்து எடுப்பதில் கவனம் செலுத்து. முடிவு உன்னுடையதாகவே இருக்கட்டும்.

1. இன்று நாட்டில் மொத்தம் 207 கட்சிகள் உள்ளன. 110 கட்சிகளை இப்படி புற்றீசல்போல் கட்சிகள் பெருகுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. ஆனால் கட்சிகளை விடுத்து எந்த கட்சியாக இருப்பினும் தேர்தலில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று உனக்கு தெரிந்த அளவில் கணித்து ஒரு முடிவுக்கு வந்து அவர்களை தேர்ந்தெடு.

2. ஒழுக்கமில்லாதவர்கள் கொள்ளையடித்து பணம் சேர்த்தவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் பதவியே குறிக்கோளாக கொண்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை புறக்கணித்து விடு.

நாட்டின் நன்மையில் அக்கரை கொண்டு தொலை நோக்கு பார்வை உள்ள நபர்களை நிறுத்தினால்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ஓர் எண்ணத்தை கட்சித் தலைவர்களும் ஆளுகின்றவர்களும் உணரும் வகையில் உனது தேர்வு இருக்க வேண்டும்.

3. நாட்டின் பொருளாதாரம் வளர்கின்ற வகையில் தொழில்களைப் பெருக்கி வேலை வாய்ப்பை உருவாக்கி, உழைத்து வாழும் சமுதாயத்தை உருவாக்காமல் மானியம் என்றும் சலுகை என்றும் நாற்காலிகளை தக்க வைத்து கொள்ளும் எந்த வாக்குறுதிகளையும் நடவடிக்கைகளையும் கண்டு நீ மயங்கிவிடாதே. இவைகள் நிரந்தர தீர்வல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சலுகைகள், இனாம்கள் என்ற பெயரால் சோம்பல் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கி வருகிறோம் என்பதை எண்ணிப்பார்.

யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே, தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற நிலையில் உனது தேர்வு அமைய வேண்டும். பொதுவாகவே தவறான வழியில் வசதியை பெருக்கிக் கொண்டவர்கள் ‘அரசியல்’ என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு தண்டனையிலிருது தப்பித்து விடுகிறார்கள் என்பதை நீ கவனித்தில் கொள்.

நாளைய உலகம் உனது கையில் தான் உள்ளது. உன்னைப்போல் உள்ள ஒவ்வொரு சகோதர, சகோதரியின் கையில்தான் உள்ளது. இளமைக்கு வலிமை அதிகம். இளமைதூய்மை நிறைந்தது. நீங்கள் ஒன்று திரண்டால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கி விடலாம். நம் நாட்டில் அஸ்ஸாமில் இந்த மாற்றத்தைக் கண்டிருக்கிறாய். அண்மையில் சைனாவில் நடந்த நிகழ்ச்சிகளையும் நீ அறிவாய். உலகம் இனி இளைஞர்கள் கையில் அதனால் உனக்குப் பொறுப்புகளும் அதிகம்.

5. சாதி என்றும், மதம் என்றும் இனம் என்றும் இரகசியமாக உறவு கொண்டாடி வருகின்ற புனிதர்களை நீ புறக்கணித்து விடு. குறுகிய மனப்பான்மை உள்ள இவர்களால் ஒரு நன்மையும் விளையாது. ஒதுக்கிவிடு இவர்களை உலகம் ஒன்று என்ற விரிந்த பார்வையில் உன்னை வளர்த்துக்கொள்.

6. ஆடம்பர வளைவுகள், தலைவர்களின் கட்-அவுட்கள், வண்ண வண்ண சுவரொட்டிகள் ஆகியவற்றிற்காகச் செய்யும் ஆடம்பரச் செலவுகளை எண்ணிப்பார் – இந்தப் பணம் ஏது? எங்கிருந்து வந்தது? எப்படி சம்பாதித்தார்கள்? எளிமையாக இருப்பவர்களை – மக்களை நேசிப்பவர்களைத் தேர்ந்தெடு.

7. மது பானங்கள், லாட்டரி சீட்டுகள், போதையூட்டும் திரைப்படங்கள் இவற்றின் மூலம்தான் நாட்டுக்கு வருமானம் என்று எண்ணுகின்ற – அவற்றை பரப்புகின்ற – பாராட்டுகின்ற மனப்பான்மை உள்ள தலைவர்களை ஒதுக்கி விடு. கடந்த 40 ஆண்டுகளில் – ஆண்டுக்கு – ஆண்டு இத்தீமைகளால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம் நாட்டின் பண்பாட்டையே இழந்து வருகிறோம் என்பதை கவனத்தில் வை.

8. மேலும் உனக்கு ஒரு கடமை இருக்கின்றது. படிக்காத, பாமர மக்களைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்குகிறார்கள். கிராமங்களில்தான் இது அதிகம். நீ கிராமங்களுக்கு செல் – நீ படித்தவன் – உண்மை நிலையை விளக்கு – பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை எடுத்துச்சொல்.

9. ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒருவர் வாக்கு போடாவிட்டாலும் ஒன்றும் பாதிப்பு நேர்ந்துவிடாது என்று மட்டும் எண்ணிவிடாதே. குறிப்பாக படித்தவர்களில் பலர் வாக்குப் போடப்போவதில்லை. விவரம் அறிந்தவர்கள்தாம் போடுகிறார்கள். அதனால் முடிவுகள் தவறாகவே வருகின்றன. இனி நிலைமை அப்படி இருத்தல் கூடாது. நீ மட்டுமல்ல உன் வீட்டில் உள்ள அமைரையும் வாக்குப்போடும்படிச் செய், வாக்கு போடாதவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்தை அரசுக்கு உரிய வாய்ப்பு நேரும்போது எடுத்துச் சொல்லத் தவறாதே.

சிந்தி செயல்படு – நேர்மைக்கு அழிவில்லை. தற்காலிக தோல்விகளை பற்றிக் கவலைப்படாதே; நிரந்தர வெற்றிக்கு – நிரந்தர நன்மைக்கு பாடுபடு, நாளைய இந்தியா உன் கையில்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1989

சிந்தனைகள்:
யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே..!!
நீ நீயாக இரு
பெண்ணே இனியாவது…
பதினெட்டே முன் வருக!
நேருவின் நெஞ்சம் கவர்ந்த கவிதை…
இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்