Home » Post » சித்திரைக் கனி

 
சித்திரைக் கனி


admin
Author:

‘எல்லாம் ஒரு நம்பிக்கைதான்’ யாரோ இருவர் தெருவில் பேசிக்கொண்டு சென்றார்கள்.
நம்பிக்கையே இழந்து விட்டிருந்த எனக்கு அந்தச் சொற்கள் ஊமைக் காயத்திற்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.
மேகம் குளிர்ந்தால் மழைத்துளி விழுவதுபோல் அந்தச் சொற்களைக் கேட்டு என் இதயம் குளிரவும் கண்கள் துளிர்த்தன, கண்ணிமைகள் நனைந்து போயின.
என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ‘சே, சே! எதற்காகப் போகிறோம் என்று கூட இல்லாமல் இப்படிச் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தால்?”
என்னைத் திடப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டேன்.
‘நாளைக்கு வாம்மா பார்க்கலாம்’ என்றார்கள்.
இரண்டு நாட்களாகவே இது பற்றித் தீவிரமாகச் சிந்தித்து, என்ன கேட்பார்கள், எப்படி நடத்துவார்கள், என்றெல்லாம் எண்ணி எண்ணி விடையும் தயாரித்துக் கொண்டு சென்றால். . .
அதுவும் எவ்வளவு தூரம்? ஒரு கோடியிலிருந்து மறுகோடி; பத்து மைலுக்கும் மேல் இருக்கும். இரண்டு பஸ்கள் மாற வேண்டி இருந்தது.
டவுன் பஸ்ஸில் முண்டியடித்துக்கொண்டு இடம் பிடித்து ஒவ்வொரு ஸ்டாப்பிலும் ஏறி இறங்கும் பலரிடமும் இடிபட்டு, வேண்டுமென்றே இடிக்க வரும், ‘பெரிய மனிதர்களுக்கு’ப் படாமல் ஒதுங்கி . . . அப்பப்பா!
அதற்கு மேலும் நெடுந்தூரம் நடந்துசென்றேன். அந்த வாட்ச்மேன் கேட்ட தேவை இல்லாத கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லி, உள்ளே இருந்து வந்த வேலைக்காரனுக்கும் பணிவாகச் சொல்லி அனுப்பி . . . நெடு நேரம் காத்திருந்த பிறகு . . .
‘நாளைக்கு வாம்மா பார்க்கலாம்’ என்றார்கள். வந்த வேகத்திலேயே திரும்பி விட்டேன்.
இது எனக்குப் புதிதல்ல. ஓராண்டு காலமாகப் பல இடங்களில் வேலை தேடி அலைந்தவள்தானே. இதெல்லாம் எனக்குச் சாதாரணமாகப் போய்விட்டது.
வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் என் தந்தைக்கு என்ன சொல்வது? என் இரண்டு தங்கைகளையும் எப்படித் தேற்றுவது?
வழியெல்லாம் என் நினைவுகள் என்னை அலைக்கழித்தன. என் தந்தை நன்றாக இருக்கும் வரை எனக்கு இந்த உலகமே இனிமையுடையதாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருந்தாலும் அவர் எங்கட்கு எந்தக் குறையும் வைக்கவில்லை.
அப்பாவுக்கு ஒரு கையும் காலும் விளங்காமல் போன போது, பொறுப்பெல்லாம் என் தலைமேல் விழுந்தது. அப்பாவுக்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி எண்ணியே அம்மா எங்களை அனாதையாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
நோய்க்கு உரிய காரணத்தைக் கண்டு அதற்கு மருத்துவம் செய்யாமல் ‘நமக்கு இந்தக் கதி நேர நாம் முன் சென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ? என்றே அடிக்கடிச் சொல்வார்கள்.
ஒன்றும் முடியாதபோது விதி என்று நம்மை நாமே பழித்துக் கொள்வதைவிட வேறு என்ன செய்யமுடியும்?
அம்மா இறந்தபோது நான் எம்.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு என்னால் மனம் ஒன்றிப் படிக்க முடியவில்லை. இறுதித் தேர்வும் வந்தது. அதில் சாதாரணமான தேர்ச்சி மட்டுமே பெற்றேன். அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்துப் போட்டியிட்டு வேலைபெறும் அளவுக்கு என் மதிப்பெண்கள் மிகுதியாக இல்லை. அந்தக் குறையைச் சரிக்கட்ட எங்களிடம் பணமும் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த வழியில் செல்ல எங்கள் மனமும் இடந்தராது. உண்மைக்குத் துன்பத்தைத் தவிர வேறு எது பரிசாகக் கிடைக்கும்?
என்னோடு பொருளாதாரம் பயின்ற அகல்யா எப்போதும் என்னைவிடக் குறைந்த மதிப்பெண்கள்தான் பெறுவாள். ஆனால் இறுதித் தேர்வில் மட்டும் முதல் வகுப்புப் பெற்றிருந்தாள். எல்லாருக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. மற்றவர்களின் ஆச்சரியம் அவளை என்ன செய்யும்? அவள் இன்று ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பயிற்சியும் பெறுகிறாள்.
அவள் தந்தை நீதிபதியாக இருந்தவர். ஆனால் என் தந்தை? ஆசிரியராக இருந்து ஓய்வுபெறும் முன்பே உடல் நலம் இல்லாமல் போனவர். அதுவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர். அவர் எங்கள் மூவரையும் படிக்க வைத்ததே பெரிய சாதனை.
நான்காவதும் ஒரு குழந்தை – பெண் குழந்தை பிறந்தது என் அன்னைக்கு. நல்லவேளை, பிறந்ததும் அது மறைந்து விட்டது. இல்லாவிட்டால் அதுவும் எங்களோடு சேர்ந்து அல்லல்பட நேரிட்டிருக்கும்.
என் மூச்சுப் பெருமூச்சாக வெளிவந்தது. பஸ் ஸ்டாப்பில் அரை மணிநேரம் நின்ற பிறகும் இன்னும் பஸ் வரவில்லை. பத்து வயதிருக்கும் ஒரு பையன் ‘அக்கா மணி என்ன?’ என்று கேட்டான். இந்த நாட்டில் எல்லோரும் கடிகாரம் அணிந்து இருப்பார்கள் என்பது அவன் நினைப்புப் போலும்.
அவனைப் பார்த்தபோது, ‘எங்கள் பெயர் விளங்க ஓர் ஆண் மகன் வேண்டுமென்று விரும்பியே, இப்படி இரண்டு மூன்று நான்கு என்று ஆகிவிட்டது’ என்று அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.
இந்த ‘வாரிசு’ ஆசைக்கெல்லாம் ஒரு விடிவு காணாத வரை விதியின் ஆட்சியிலிருந்து யாரும் விடுபட முடியாது என்று எண்ணியது என் மனம்.
வீடு வந்து சேர்ந்தபோது அப்பா வேப்பமரத்தடியில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தார். தங்கைகள் தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் இறைத்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
நல்ல வேளையாக அந்த வீடு மட்டும் எங்களுக்குச் சொந்தமாக இருந்தது. நாங்கள் நால்வரும் தனி உலகமாகவே இருந்தோம். இல்லை, தனி உலகமாக ஆக்கப்பட்டு இருந்தோம். ஏழைகளை யார் நேசிக்கிறார்கள்? ஆனால் நாங்கள் நால்வரும் ஓருயிராகவே வாழ்ந்தோம். ஒருவர் கண்ணில் நீர் நிறைந்தால் மற்ற மூவர் கண்ணிலும் நீர் வழியும்.
“என்னம்மா ஆயிற்று?” என்றார் அப்பா.
“நாளையிலிருந்து வரச் சொன்னார்கள்” என்றேன்.
நான் பொய் சொல்லும் வழக்கம் இல்லாதவள்தான். அப்பா வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாதவர், இன்றேனும் மகிழ்ச்சயிôக இருக்கட்டுமே என்றுதான் சொன்னேன். எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றதும் முயன்று எழுந்து உட்கார்ந்தார்.
“விரைவில் குணம் அடைந்து விடுவேன் அம்மா” என்றார்.
‘நம்பிக்கை தரும் வார்த்தைகளைவிடச் சிறந்த மருந்து ஏது?’ தங்கைகள் இருவரும் என் அருகில் ஓடி வந்தார்கள். பெரியவள் கண்களில் மளமளவென்று கண்ணீர் பெருக் கெடுத்தது.
“ஏனம்மா” என்றேன். அவளால் ஒன்றும் பேசமுடிய வில்லை. அவள் முதுகில் தட்டிக் கொடுத்து “நமக்கும் காலம் வரும் கவலைப்படாதே!” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டடேன். அவள் ஏன் அழுதாள்? இப்படி நான் அலையும்படி நேரிட்டு விட்டதே என்றா?
பஸ் ஸ்டாப்பில் என்னைப் போல் எத்தனைப் பெண்களைப் பார்த்தேன். பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்கள்தான். நடுத்தரக் குடும்பங்களில் பெண்ணாகப் பிறந்தவர்கள் வேறு என்ன செய்ய முடியும்? ஏதேனும் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும்.
வேலைக்குச் சென்றதும் என் தந்தையைக் குணப்படுத்து வதே என் முதல் வேலை என்று எண்ணினேன்.
தங்கை என் வாயில் சர்க்கரை கொண்டு வந்து போட்டாள். அவளோடு சேர்ந்து நானும் மகிழ்ந்தேன்.
பொய்யானதைச் செய்கிறோமே என்று என் மனசாட்சி உறுத்தியது. இப்படித்தான் பலரும் ஆகியிருப்பார்களோ! முதலில் மனசாட்சி உறுத்தியிருக்கும்! பிறகு அதன் உறுத்தலைத் தாங்க முடியாமல்தான் அதனை விரட்டி விடுகிறார்களோ?
எனக்கல்லவா தெரியும், ‘நாளைக்கு வாம்மா பார்க்கலாம்’ என்று என்னைப் பார்த்தும் பார்க்காமலே வீட்டின் உள்ளிருந்து கொண்டே சொன்னது.
அந்த அம்மையார் அம்மாவுக்குத் தெரிந்தவர்கள். ஓரிருமுறை அம்மாவையும் என்னையும் கடைத் தெருவில் பார்த்துப் பேசி இருக்கிறார்கள். அண்மையில் பார்த்தபோது அவர்களாகக் காரை நிறுத்தி, ‘எங்கே அம்மா? நீ மட்டும் தனியாகப் போகிறாய்?” என்றார்கள்.
நடந்ததைச் சொன்னபோது மிகவும் வருந்தினார்கள். தங்கள் முகவரியைக் கொடுத்து ‘நாளை மறுநாள் வீட்டுக்கு வா, ஐயாவிடம் சொல்லி மில்லில் ஏதேனும் ஒரு வேலை போட்டுத்தரச் சொல்கிறேன், என்றார்கள்.
ஆனால், வீட்டுக்குப் போனபோது?
தூரத்தில் இருந்து பார்க்கும்போது மலை பசுமை போர்த்து எவ்வளவு அழகாகக் காட்சி அளிக்கிறது! அதையே அண்மையில் வைத்துப் பார்க்கும்போது கல்லும் முள்ளும் மரமும் செடியும் குண்டும் குழியுமாகத் தெரிகிறது அல்லவா? மனிதர்களும் அப்படித்தான். தூரத்துப் பார்வைக்கு அன்புடையவர்கள்போல் இருப்பவர்களிடம் அருகில் சென்று பழகினால் அவர்களது அன்பற்ற நிலை தெளிவாகி விடுகிறது. இவர்களும் அப்படித்தானோ?
என் எண்ண ஓட்டத்தைத் தடை செய்யும் வகையில், “நாளைக்கு அந்த மஞ்சள் நிறப்புடவையைக் கட்டிக் கொண்டு செல். அது உனக்கு நன்றாக இருக்கும்” என்றாள் சிறிய தங்கை. என்ன பேதை நெஞ்சம்?
என் தாய் போனபோதே துள்ளித்திரியும் பருவ உணர்ச்சிகள் எல்லாம் என்னிடமிருந்து போய்விட்டன. என் தந்தையைக் காணும் போதெல்லாம் இந்த இருபத் திரண்டிலேயே அறுபத்திரண்டுக்குரிய விரக்தி உணர்வும் தோன்றிவிட்டது.
அப்பாவுக்கு இந்த நிலை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அப்பா படுத்த பிறகு சம்பளமும் நின்றுவிட்டது. ஏதோ அது இது என்று சேர்த்து வைத்ததில் கடன் வாங்கி அந்த ஓராண்டையும் ஓட்டினார்கள். அடுத்த ஆண்டில் அம்மாவும் போய்விட்டார்கள். ‘தாயோடு அறுசுவை உண்டிபோம்’ என்று படித்திருக்கிறேன். ஆனால் எங்கட்கு உணவுக்கே திண்டாடும் நிலையும் வந்துவிட்டது.


Share
 

3 Comments

  1. jagadeesh says:

    “oru pennaaaga neengal patathai apadiye oru GENTS aaga naanum anupavithu kondu thaan irukkiren pa”

  2. vijayalakshmi says:

    arumai………..

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை