Home » Post » இந்தியாவிற்குள் அந்நியர்கள் வரவு

 
இந்தியாவிற்குள் அந்நியர்கள் வரவு


செல்வராஜ் P.S.K
Author:

கி.பி.16ஆம் நூற்றாண்டு. ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்ட சமயம். தொழிற்சாலைகள் பெருமளவில் தோன்றின. அவைகள், ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன.உற்பத்தி பொருட்களை உள்நாட்டில் விற்றால் அதிக லாபம் அடைய முடியாது என கருதிய சிலநாடுகள் அவற்றை வெளிநாடுகளில் சந்தைப் படுத்தி நாட்டில் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்ய நாட்டம் கொண்டன. அவ்வாறு, வியாபார நோக்கத்தில் நம்நாட்டிற்கு போட்டி போட்டுக் கொண்டு வந்தவர்கள் பிரெஞ்சுகாரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் ஆவர். கீழ்திசையில் இந்தியா இருந்தமையால் தத்தம் நாட்டு பெயர்களுடன் நிறுவனத்தின் பெயரையும் இணைத்து கிழக்கு இந்திய கம்பெனி என்று பெயர் சூட்டிக்கொண்டனர். வியாபார நோக்கில் இந்தியாவிற்குள் நுழைந்த அந்நியர் தங்களுக்குள் போட்டிகளை வளர்த்துச் சண்டையிட்டுக் கொண்டனர். தங்கள் சண்டையில் இந்தியாவிலுள்ள மன்னர்களையும், நவாப்களையும் ஈடுபடுத்தினர். வியாபாரத்திற்காக ஆரம்பித்த அவர்களின் சண்டை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மாறியது.அந்நிய நாட்டினர் நம் நாட்டிற்குள் நுழைந்து, நம் மண்ணிலேயே யார் ஆள்வது என்று சண்டையிட்டுக் கொண்டது விசித்திரமானது மட்டுமல்ல, வேடிக்கையானதும் ஆகும். இவர்களின் சண்டையை நம் நாட்டிலிருந்த சில மன்னர்கள் வேடிக்கை பார்த்தனர். சிலர் யாராவது ஓர் அந்நியருடன் சேர்ந்து சண்டையிட்டனர்.அவர்களுக்குள் நடந்த ஆதிக்கப்போட்டியில் ஆங்கிலேயருக்கே இறுதி வெற்றி கிடைத்தது. மற்ற அந்நியர்களை வீழ்த்திய ஆங்கிலேயர் இந்திய மக்களையும் அடிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தங்களுக்கு அடங்க மறுத்தவர்களைக் கடுமையாக அடக்கினர், கொன்றனர்.

இந்தியாவில் அன்று 600க்கும் அதிகமான சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுள் பல ஆங்கிலேயருக்குப் பணிந்தன. சில எதிர்ப்புக் குரலை எழுப்பின. பாரதத்தில் தமிழ் நாட்டில்தான், ஆங்கிலேயருக்கு எதிரான வீர முழக்கம் முதலில் எழுந்தது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து கொங்குநாட்டு பாளையக்காரனான அஞ்சாநெஞ்சன் மாவீரன் தீரன் சின்னமலை வீறு கொண்டு கொதித்தெழுந்தான். இந்தியத் திருநாட்டை சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த வரலாறு ஆங்கிலேயருக்கு உண்டு. ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன் மொகலாய மன்னர்கள் இந்தியாவையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். கடைசியாக ஆண்ட மொகலாய மன்னர் ஔரங்கசீப் நீண்ட காலம் ஆட்சி புரிந்து சாதனை படைத்தவராவர். இவர்களுக்குப் பின் போர்த்துக்கீசியரான வாஸ்கோடகாமா 1498ல் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து டச்சுக்காரர்களும், 1600-ல் ஆங்கிலேயரும் வியாபார நோக்கில் இந்தியாவிற்குள் நுழைந்தனர். 1664-ல் பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி பிரெஞ்சுக்காரரால் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட வியாபாரப் போட்டி இந்திய மண்ணைப் பிடிப்பதிலும் ஏற்பட்டது. இந்த மோதலில் இறுதியாக ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களுமே களத்தில் இருந்தனர். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவிட இராபர்ட் கிளைவும், பிரெஞ்சு கம்பெனி சார்பில் டூயூப்ளேவும் பெரும் பங்கு வகித்தனர். உலகெங்கும் பல கண்டங்களில் நாடுகளைப் பிடித்துக் காலனி ஆதிக்கத்தை விதைத்த ஐரோப்பியர்கள் இந்தியாவிலும் தமது நோக்கத்தை அடைய கடுமையாக முயற்சித்தனர். அதற்கான செயல்களில் இறங்கினர். இந்தியாவில் கி.பி. 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிலிருந்து அந்நியர்கள் வருகை புரிந்தனர். வாய்ப்புத் தேடினர். நம் தேசத்தை நன்கு மோப்பமிட்டனர். இந்தியர்களை நாடி பிடித்துப் பார்த்தனர். நட்பை நாடி, நம் நாடி அறிந்தனர். அந்நியர்களுக்குள் ஏற்பட்ட, இந்திய மண்ணைக் கைப்பற்றும் போட்டியில் அனைவருமே தலைமை தாங்கினாலும் ஆங்கிலேயர்களே ஆதிக்கம் செலுத்தி முன்னிலை வகித்தனர். நம் நாட்டு மன்னர்களுக்குள், பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்டிருந்த போட்டியையும், உட்பூசல்களையும், கருத்து வேறுபாடுகளையும், ஒற்றுமையின்மையையும், தகவல் தொடர்பின்மையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முதலிலில் படைபலம், இரண்டாவது வரி வசூலிலிக்கும் உரிமை, மூன்றாவது அரண்மனைகளை ஆட்சி பீடங்களை, கோட்டைகளை, அரசு நிர்வாகக் கட்டிடங்களைக் கைப்பற்றுதல் என்று படிப்படியாக பயமில்லாமல் செயலிலில் இறங்கினர். மக்களின் – மன்னர்களின் ஒற்றுமை – அறியாமை போன்றவைகளை சோதித்துப் பார்த்த வெளிநாட்டவர்கள் அது தனக்கு சாதகமாக அமைந்திருந்ததால் இந்தியாவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களும் போட்டி போட்டு இந்தியாவில் உள்ள சிற்றரசுகளைக் கவிழ்த்து நாட்டைப் பிடித்து வந்தார்கள். இந்தியத் திருநாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்கில் உள்ள மன்னர்களின் ஆட்சி உட்பட நாட்டின் பெரும் பகுதியை ஆங்கிலேயர்கள் பிடித்துக் கொண்டே வந்தார்கள். ஆர்க்காடு நவாபின் துணை கொண்டு, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றனர். நாளுக்கு நாள் ஆங்கிலேயரின் அதிகாரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. வரி கட்டாயமாக்கப்பட்டது. அந்நிய நாட்டுக்காரன் நம்மை ஆள்வதா? அவனுக்கு வரி கொடுக்க நாம் அடிமைகளா? என்று. ஆங்கிலேயரை ஆவேசத்துடன் எதிர்த்த பாளையக்காரனாக சின்னமலை உதயமானான்.
ஆங்கிலப்படையில் கமாண்டராக இருந்த மருதநாயகம் என்ற யூசுப்கான் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டான். காலப் போக்கில் ஆங்கிலேயரை எதிர்த்தான் மருதநாயகம். தங்களை எதிர்த்த காரணத்திற்காக முதல் ஆளாக மருதநாயகத்தை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அதைத் தொடர்ந்து வரி கொடுக்க மறுத்த சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாதரையும் ஆங்கிலேயர் சுட்டுக்கொன்றனர். முத்துவடுகநாதரின் மனைவி வீரமங்கை வேலுநாச்சியார் ஹைதர் அலியின் துணையுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். அதன்பின் முத்துவடுகநாதரின் படையில் இருந்த மருது சகோதரர்கள் சிவகெங்கையை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு ஆளான வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். திப்புவின் வீரமரணத்திற்குப் பின் 1801-ஆம் ஆண்டு மருது சகோதரர்களும் ஊமத்துரையும் தூக்கிலிடப்பட்டனர்.

வரலாற்றுச் செய்தியில் இடம் பெறாத பல வீரர்கள், தளபதிகள், பாளையக்காரர்கள் தங்கள் இன்னுயிரை இந்திய விடுதலைக்காகத் தியாகம் செய்தனர். கர்நாடகாவில் அய்தர் அலிலி, திப்பு சுல்தான், கிட்டூர் ராணி சென்னம்மா, தூண்டாஜிவாக், கேரளாவில் தளவாய் வேலுத்தம்பி, பலிலியத் அச்சன், பழசி ராஜா, ஆந்திராவில் நரசிம்ம ராஜுலு ஆகிய தென்னிந்திய வீரர்கள் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தனர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை